த்ரில் விளையாட்டா? திகில் விளையாட்டா? அநியாயமாக இளம்பெண்ணின் உயிரைப் பறித்த ‘கோ கார்ட்’ ரேஸ்கார்!

எந்தெந்த இடங்களில் எல்லாம் பாதுகாப்பு விஷயத்தில் மனிதர்கள் மேலும் கவனமாக இருந்தாக வேண்டும் என்பதை புனித் தனது உயிரைக் கொடுத்து நமக்குப் பாடம் கற்பித்திருக்கிறார்.
த்ரில் விளையாட்டா? திகில் விளையாட்டா? அநியாயமாக இளம்பெண்ணின் உயிரைப் பறித்த ‘கோ கார்ட்’ ரேஸ்கார்!

மரணத்தில் கொடிய மரணம் நாம் எதிர்பார்த்திராத ஒரு சந்தோஷமான தருணத்தில் விசுக்கென மரண பயத்தை அணு, அணுவாக அனுபவித்து நமது ப்ரியத்துக்குரியவர்களின் கண் முன்னால் ஏதிலிகளைப் போல மரணிப்பது தான்! இந்த ஹரியானா இளம்பெண்ணின் துர்மரணம் அப்படிப்பட்ட மரணங்களில் ஒன்று. 

கடந்த புதனன்று தனது 2 வயது மகன், கணவர் அமர்தீப் சிங், நேசத்துக்குரிய அம்மா, மற்றும் உறவினர்கள் சிலருடன் விடுமுறையைக் கொண்டாட பிஞ்ஞோரில் இருக்கும்  பொழுதுபோக்குப் பூங்கா (அம்யூஸ்மெண்ட் பார்க்) ஒன்றுக்கு சென்ற 28 வயது புனித் கெளர் அறிந்திருக்க மாட்டார் தனக்காக அங்கே மரணம் காத்திருப்பதை! 

இங்கே நம்மூர் பொழுதுபோக்குப் பூங்காக்களில் நீங்கள் பார்த்திருப்பீர்களே சிறுவர்கள் மற்றும் பெரியவர்களும் கூட தாங்களே இயக்கிக் கொள்ளத் தக்க வகையில் அமைந்த குட்டிக் குட்டி  ரேஸ் கார்கள் போன்ற கோ கார்ட் விளையாட்டுகளை. அதைப் போன்ற ஆனால் தானியங்கி ரேஸ்கார் விளையாட்டை விளையாடலாம் என முடிவு செய்த புனித்தும் அவரது கணவரும் ஒரு கோ கார்ட்டில் ஏறிக் கொண்டனர். 

புனித்தின் 2 வயது மகன் மற்றும் அம்மாவுக்காக ஒரு கோ கார்ட், மீதமுள்ள உறவினர்களுக்காக 1 கோ கார்ட்  என மொத்தம் 6 இருக்கைகளைப் பதிவு செய்து கொண்டு குதூகலமான மனநிலையுடன் அதில் ஏறி அமர்ந்து விளையாடத் தொடங்கினர். இந்த வகை ரேஸ்கார்களில் விளையாட தற்காப்புக்கென அதற்கெனத் தனியாக ஹெல்மெட் அணிய வேண்டுமென்பது விதிமுறைகளில் ஒன்று. புனித்தும் அவரைச் சேர்ந்தவர்களும் கூட அணிந்து கொண்டு தான் விளையாடியதாகக் கூறப்படுகிறது. 

ஆனால், புனித், தனது கூந்தலை சுதந்திரமாகப் பறக்க விட்டுக் கொண்டு (லூஸ் ஹேர்) கோ கார்ட் விளையாட்டில் ஈடுபட்டதால் 2 ஆம் சுற்றில் அவரது கூந்தல் கோ கார்ட்டின் பின் சக்கரங்களில் சிக்கிக் கொண்டு ஷண நேரத்தில் அவரது தலைமுடி தோலோடு உறியத் தொடங்கியது. அருகில் அமர்ந்திருந்த அவரது கணவருக்கு மனைவியின் திடீர் மரண ஓலம் கேட்டதே தவிர, எதற்காக அவர் அப்படி அலறுகிறார் என்பதை அவர் கண்டுணரவே சில நொடிகள் தேவைப்பட்டிருக்கின்றன. ஆனால் எல்லாம் காலம் கடந்த சுதாரிப்புகள். சக்கரங்களில் சிக்கி நன்றாகச் சுற்றிக் கொண்ட கூந்தலை பிரித்தெடுக்க முடியாமல் அப்படியே கூந்தலை வெட்டி நீக்கி விட்டு மண்டையோட்டில் உறிந்த தோலினாலான ரத்தக் காயங்களுடன் மருத்துவமனைக்கு விரைந்த போதும் பாவம் புனித்தைக் காப்பாற்ற இயலவில்லை. அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இது நிச்சயம் கோரமான மரணம் தான். எந்தெந்த இடங்களில் எல்லாம் பாதுகாப்பு விஷயத்தில் மனிதர்கள் மேலும் கவனமாக இருந்தாக வேண்டும் என்பதை புனித் தனது உயிரைக் கொடுத்து நமக்குப் பாடம் கற்பித்திருக்கிறார்.

பொழுதுபோக்குப் பூங்காக்களில் இம்மாதிரியான விளையாட்டுகள் தரும் த்ரில் அனுபவத்துக்காகவும், குழந்தைத்தனமான சந்தோஷத்துக்காகவுமே மக்கள் இதில் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர். ஆனால் அந்த ஆர்வமே அவர்களது உயிரைப் பலிவாங்கக் கூடுமெனில் தவறு யாருடையது?! புனித் விஷயத்தை எடுத்துக் கொண்டால் அவர் மேலும் ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டும் என்பதைத் தவிர அவர் பக்கத்து தவறு என இதில் எதைச் சுட்டிக் காட்ட முடியும்? அவர் இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதை உணர்வுடன் இருந்திருந்தால் இப்போது 2 வயது மகனை விட்டுவிட்டு அற்ப ஆயுளில் மரணித்திருக்கத் தேவை இல்லை. உயிர்ப்பலி நேர்ந்திராமல் தவிர்த்திருக்கலாம்.

அதோடு கூட, சம்பவம் நடந்த அந்தப் பொழுதுபோக்குப் பூங்கா நிர்வாகம் இதை முற்றிலுமாக ஒரு விபத்து என்று கூறி தப்பிக்க நினைப்பதும் தவறு.
இது விபத்தாகவே இருந்தாலும், தன்னை நம்பி ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து விடுமுறைக் கொண்டாட்டங்களை அனுபவிக்க வரும் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிருடன் விளையாடத் தக்க வகையிலான இம்மாதிரியான பாதுகாப்பற்ற விளையாட்டுகளை எல்லாம் அவர்கள் ஏன் அனுமதிக்க வேண்டும்? என்பது முதல் கேள்வி; அப்படியே அனுமதித்தார்கள் எனில், இந்த விளையாட்டால், இன்னின்ன பாதகங்கள் வரலாம் என முன்கூட்டியே அனுமானித்து, அத்தகைய பாதகங்களோ அல்லது விபத்துக்களோ நேர்ந்தால் பாதிக்கப்பட்டவர்களை போர்க்கால அவசர நடவடிக்கை எடுத்து உடனடியாக காப்பாற்றத் தோதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் தயார் நிலையில் வைத்திராதது யாருடைய குற்றம்?!

நாளை வழக்குப் பதிந்து பாதிக்கப்பட்டவர்கள் நிர்வாகத்திடம் இருந்து இழப்பீடு பெற்றுக் கொள்ள சட்டத்தில் வழி இருக்கலாம். ஆனால் ஒரு உயிர் பறிபோனதை யாராலும் மாற்றவோ, மறுக்கவோ முடியாதே. இம்மாதிரியான அசம்பாவிதங்கள் எப்போதாவது தானே நடக்கின்றன என மெத்தனமாக விட்டு விடத் தக்க விஷயமல்ல இது?! 

சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு தனியார் பொழுது போக்குப் பூங்காவின் ஜெயண்ட் வீல் எனும் ராட்சத ராட்டினத்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட் உடல் சிதறு உயிரிழந்தார் இளம்பெண் ஒருவர். அங்கே மட்டுமல்ல இதே போல சில மாதங்களுக்கு முன்பு இதே வட இந்திய மாநிலங்கள் ஒன்றில் விடுமுறை தினமொன்றில் சந்தோஷமாக மனைவி மற்றும் இரு குழந்தைகள் சகிதம் ரோப்காரில் சென்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் 100 அடிக்கும் அதிகமான உயரத்தில் இருந்து புயல் காற்று வீசியதால் மரம் சரிந்து ரோப்காரில் மோத அப்படியே குடும்பத்துடன் தூக்கி எறியப்பட்டு சிதறி அநியாயமாக மரணித்தார். ஆகவே மக்கள் நலனில் அக்கறையில்லாது வெறுமே வருமானத்தை அதிகரிப்பதை மட்டுமே முழு நோக்கமாகக் கொண்டு இயங்கும், இயக்கப்படும் இம்மாதிரியான பொழுதுபோக்குப் பூங்காக்களின் மீது அரசு உடனடியாகக் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து அவர்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும். அரசே ஏற்று நடத்தும் பூங்காக்கள் எனில் இதில் அரசும் ஒரு குற்றவாளி தான். எனவே மக்களின் பாதுகாப்புக்கு எந்த வகையிலும் பொறுப்பேற்காத, உத்திரவாதமளிக்காத இப்படியான பொழுது போக்குப் பூங்காக்களை ரத்து செய்து விட்டு அந்த இடங்களில் பறவைகள் சரணாலயம் அல்லது உயிரியல் பூங்காக்களை இயக்கும் தீர்மானங்களை நிறைவேற்றலாம். அல்லது குறைந்த பட்சம் இம்மாதிரியான ஆபத்தான விளையாட்டுக்களையாவது தடை செய்யக் கோரலாம். ஏனெனில் எந்த வகையிலும் இது ஜீரணித்துக் கொள்ளத் தக்க மரணம் அல்ல என்பதால்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com