2018 புத்தாண்டு எங்கு முதலில் பிறந்தது தெரியுமா? புத்தாண்டின் வரலாறு!

2018-ம் ஆண்டு முதன் முதலில் பிறந்த இடம் சாமோவோ மற்றும் கிறிஸ்துமஸ் தீவு / கிரிபேட்டி.
2018 புத்தாண்டு எங்கு முதலில் பிறந்தது தெரியுமா? புத்தாண்டின் வரலாறு!

2018-ம் ஆண்டு முதன் முதலில் பிறந்த இடம் சாமோவோ மற்றும் கிறிஸ்துமஸ் தீவு / கிரிபேட்டி. அங்கு இந்திய நேரப்படி டிசம்பர் 31, மாலை 3:30 மணிக்கே புத்தாண்டு பிறந்துவிட்டது.

போலவே கடைசியாக பிறக்கும் இடம் அமெரிக்காவிலுள்ள பேக்கர்ஸ் தீவு மற்றும் ஹோவர்ட் தீவுகள். அங்கு இந்திய நேரப்படி ஜனவரி 1 மாலை 5:30 மணிக்குத்தான் புத்தாண்டு பிறக்கவிருக்கிறதாம்.

ஆங்கில புத்தாண்டின் வரலாறு

எல்லையற்றது காலம். ஆயினும் உலகில் வாழும் மக்கள் ஏதாவது ஒரு எல்லைக்குள் கட்டுப்பட்டு வாழ வேண்டியுள்ளது. அதற்காகவே காலக் கணக்கீடுகள் உருவாக்கப்பட்டன.

பாரத காலக் கணக்கீடு 

காலத்தைக் கணக்கிடும் முறைகள் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கியதற்கு இந்தியாவின் பண்டைய இலக்கியமான வேதங்களில் சான்றுகள் உள்ளன. இந்தியாவில் காலத்தை கல்பம், மன்வந்திரம், யுகம், ஆண்டு, அயனம், ருது, மாதம், வாரம், நாள், மணி, நாழிகை, விநாடி என்று பல கூறுகளாக நமது முன்னோர் வகுத்திருந்தனர்.

நாடு நெடுகிலும் இப்போதும் புழக்கத்தில் இருக்கும் பஞ்சாங்கத்தின் வயது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். பஞ்சாங்கமே நமது நாட்டில் நாள்காட்டியாக இருந்துவந்துள்ளது.  அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்படாத காலத்திலேயே வாய்மொழி மனன முறையில் பஞ்சாங்கத் தகவல்கள் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன.

ரோமன் காலண்டர் 

ஆனால் உலக அளவில் நாள்காட்டி முறை முதன்முதலில் ரோமப் பேரரசில் உருவானதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் அதைக் கடைபிடித்ததாலும், ஐரோப்பிய நாடுகளின் காலனி ஆதிக்கம் உலகம் முழுவதும் பரவியதாலும் இக்கருத்து உருவாகியிருக்க வேண்டும்.

ஆனால், ரோமப் பேரரசு காலத்தைய ரோமன் காலண்டரின் துவக்கம் கி.மு. 700 மட்டுமே. அதற்குப் பின் ஜூலியஸ் சீஸரால் சீர்திருத்தப்பட்ட ஜூலியன் காலண்டரின் துவக்க ஆண்டு கி.மு. 45. அதற்கு இணையான விக்கிரமாதித்திய சகாப்தம் (கி.மு. 57), சாலிவாகன சகாப்தம் (கி.பி. 78) போன்றவை இந்தியாவிலும் இருந்துள்ளன. இந்து வானவியலின்படி கலியுகம் துவங்கி இதுவரை 5,116 ஆண்டுகள் (கி.மு. 3102) ஆகியுள்ளதாக நமது பஞ்சாங்கங்கள் கூறுகின்றன.

கிரிகோரியன் காலண்டர் 

அந்தந்த நாட்டு மக்களின் நம்பிக்கை, மதம், பாரம்பரியம் ஆகியவற்றின் அடிப்படையில், உலக அளவில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு வகையில் நாள்காட்டியைக் கடைபிடித்து வந்துள்ளது. இந்தியாவிலும் கூட பல்வேறு பிரதேசங்களில் பல வகையான ஆண்டுத் துவக்கங்கள் அனுசரிக்கப்படுகின்றன.

ஆனால் உலக அளவில் பொதுவான நாள்காட்டியின் தேவை உணரப்பட்டபோது உருவானது தான் தற்போது நாம் பயன்படுத்தும் ஆங்கில நாள்காட்டி என்று அழைக்கப்படும் ‘கிரிகோரியன் காலண்டர்’.

அதற்கு முன்னர் ஆண்டின் துவக்கம் மார்ச் 1, மார்ச் 25, ஈஸ்டர், செப்டம்பர் 1, செப்டம்பர் 25 எனப் பலவகையாக உலகத்தில் அனுசரிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய எழுச்சியின் போது, பக்கத்துப் பக்கத்து நாடுகளில் நிலவிய கால வேறுபாடுகளால் குழப்பம் ஏற்பட்டபோது, பொதுவான நாள்காட்டியின் தேவை உணரப்பட்டது.

1582-ல் கத்தோலிக்க மதகுருவாக இருந்த போப் 13-வது கிரிகோரியால் அறிமுகப்படுத்தப்பட்டதே தற்போது வழக்கத்தில் உள்ள நாள்காட்டி ஆகும். அவரது பெயரே புதிய காலண்டருக்கு சூட்டப்பட்டது.

இதனை வடிவமைத்தவர் ஜெர்மனியைச் சேர்ந்த ஜெசூட் பாதிரியாரான வானியல் மேதை கிறிஸ்டோபர் கிளாவியஸ். இதில் தான் ஜனவரி 1 முதல் துவங்கும் தற்போதைய நாள்காட்டி முறை அறிமுகமானது.

எல்லா நாளும் புதிய நாளே

இவ்வாறு தான் நாம் பயன்படுத்தும் சர்வதேச நாள்காட்டி உருவானது. இதன் துவக்கமாக ஜனவரி 1 இருப்பதால், இந்நாளை புத்தாண்டின் துவக்கமாக உலகம் கொண்டாடுகிறது.

இதுவரையிலான வாழ்விலிருந்து புதிய வாழ்வுக்கு வாய்ப்பு உருவாவதாக ஓர் நம்பிக்கையை உருவகமாக ஏற்படுத்துகிறது புத்தாண்டு. எனவே தான் இந்நாள் கொண்டாட்டத்துக்கு உரியதாகிறது.

ஆனால், கதிரவன் மறைந்து மீண்டும் உதிக்கும்போது உருவாகும் ஒவ்வொரு நாளும் நமக்கு புதிய நாளே. உண்மையில், நமது காலம் ஒவ்வொரு நாளும் கழிவதைக் குறிப்பிட்டு எச்சரிக்கிறது நாள்காட்டி. எனவே, வரும் நாட்களை மதிப்புள்ளதாக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

மது அருந்துவதும், நள்ளிரவு 12.00 மணிக்கு ஆரவார இரைச்சலுடன் அதிவேகமாக வாகனம் ஓட்டுவதும் தான் புத்தாண்டு என்ற மாயை சமீபகாலமாக நம்மிடையே பரவி வருகிறது. மறுநாள் விடியாமல் போகாதா என்று பட்டினியால் ஏங்கும் பல கோடிப் பேர் வாழும் உலகில் இத்தகைய கொண்டாட்டங்களைப் போல பொருளற்ற செயல் வேறில்லை.

புத்தாண்டு என்பது கேளிக்கைகளில் ஈடுபடுவதற்கான தருணம் மட்டுமல்ல, நம்மை நாமே மறுவிசாரணை செய்து கொள்வதற்கான தருணமும் கூட. வரக்கூடிய 2018-ஆம் ஆண்டேனும் நம்மை புதிய மனிதர்களாக்கட்டும்.

நன்றி - வ.மு.முரளி (தினமணி (வேலூர்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com