சொந்தக் கையெழுத்தில் தினமணிக்கு ஒரு கடிதம் எழுதுங்கள்... உங்கள் மனம் திறந்து!

சொந்தக் கையெழுத்தில் தினமணிக்கு ஒரு கடிதம் எழுதுங்கள்... உங்கள் மனம் திறந்து!

இன்று தேசிய கையெழுத்து தினம்... ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 23 ஆம் தேதி, தேசிய கையெழுத்து தினமாகக் கொண்டாடப்படுகிறது.

கையெழுத்து தலையெழுத்தை நிர்ணயிக்கும் என்பார்கள்... ஆனால் இன்று பலரும் கையெழுத்தை மறந்தே போவார்கள் போலிருக்கிறது. ஸ்மார்ட் ஃபோன் முதல் லேப் டாப் வரை விரல்களால் டைப் செய்தால் போதும் பேனாக்களோ, பென்சில்களோ, விதவிதமான நிறங்களில் மைக்கூடுகளோ தேவையே இல்லை என்றாகி விட்டது. அதற்காக கைகளால் எழுதுவதை நாம் முற்றிலும் மறந்து விடக் கூடாதில்லையா?!

இன்று தேசிய கையெழுத்து தினம்... 

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 23 ஆம் தேதி, தேசிய கையெழுத்து தினமாகக் கொண்டாடப்படுகிறது.

எழுதுகோள் மற்றும் கையெழுத்துக் கருவிகளான பேனா, பென்சில் உற்பத்தியாளர்கள் சங்கத்தினரின் முயற்சியால் கையால் எழுதும் திறனை மேம்படுத்தும் விதமாக 1977 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தேசிய கையெழுத்து தினம் அனுசரிக்கப்படுகிறது. அவர்களது நோக்கம் கையெழுத்துப் பழக்கத்தை முன்னெடுப்பது மட்டுமல்ல பேனா, பென்சில், காகிதங்கள் போன்ற கையெழுத்துக்கு உதவக்கூடிய பொருட்களின் உற்பத்தி சரியாமல் பார்த்துக் கொள்வதும் தான். இன்றைய நாட்களில் பள்ளிகளிலும், அரசாங்க அலுவலகங்களிலும் மட்டுமே இன்னமும் கையெழுத்துப் பழக்கம் இறவாமல் இருக்கிறது. பிற இடங்களில் எல்லாம் கணினி மயமாகி விட்டது. எனவே ஆண்டு தோறும் ஜனவரி 23 ஆம் தேதியை தேசிய கையெழுத்து தினமாக அறிவித்து விழா கொண்டாடுகிறார்கள்.

ஜனவரி 23 ஆம் தேதியை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் எனில், இந்திய சுதந்திர பிரகடனத்தில் முதல் கையெழுத்திட்ட பிரிட்டிஷ்காரர் ஜான் ஹான்காக்கின் பிறந்த தினம் ஜனவரி 23. எனவே அந்நாளையே தேசியக் கையெழுத்து தினமாக அறிவித்து அவரது அந்த மகத்தான செயலுக்கு பெருமை செய்திருக்கிறது இந்தியா!

கடந்தாண்டு அக்டோபரில் சர்வதேச தபால் தினத்தை முன்னிட்டு, தினமணி வாசகர்களுக்கு ஒரு போட்டி வைத்திருந்தோம். அந்தப் போட்டியின் நோக்கம் கையால் கடிதம் எழுதும் முறையை ஊக்குவிக்கும் முயற்சியாக இருந்தது. அதன்படி வாசகர்களில் எவரேனும் ஆர்வத்துடன் தங்களுக்குப் பிரியமான உறவினர்கள் அல்லது நண்பர்களுக்கு சொந்தக் கையெழுத்தில் கடிதம் எழுதி அதை பிரதி எடுத்து வைத்துக் கொண்டு ஒரிஜினலை உரியவர்களுக்கு அனுப்பி விட்டு, பிரதியை தினமணி இணையதளத்துக்கு அனுப்பினால் சிறந்த கடிதங்களை சிறப்புக் கட்டுரை பிரிவில் பிரசுரிப்பதாக வாக்களித்திருந்தோம். அதன்படி எங்களுக்கு வந்த சிறந்த கடிதப் பிரதிகளை சிறப்புக் கட்டுரைப் பிரிவிலும், லைஃப்ஸ்டைல்  ஸ்பெஷல் பிரிவிலும் பிரசுரித்திருந்தோம். வாசகர்களிடையே இந்த அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு இருந்தது. 

இன்றைய கணினி யுகத்தில் கையால் கடிதம் எழுதும் முறையே அருகி வரும் வேலையில் இம்மாதிரியான முன்னெடுப்புகளும், முயற்சிகளும் மீண்டும் நமது கையழுத்துப் பழக்கங்களை மீட்டெடுக்க பெரிதும் உதவலாம். நிச்சயம் பலருக்கும் அது சந்தோசமான விஷயமாக இருக்கும் என்பதால் மீண்டும் அதே மாதிரியானதொரு வாய்ப்பை தினமணி தன் வாசகர்களுக்கு இம்முறையும் அளிக்க முன் வருகிறது.  ஏனெனில், அன்பையும், பாசத்தையும், ப்ரியத்தையும் பரிமாறிக் கொள்ளும் வழிமுறைகளில் கடிதங்களைப் போல இன்பம் தரக்கூடிய பிறிதொன்று இன்னும் இந்த உலகத்தில் தோன்றவில்லை என்பதால் :)

வாசகர்களில் கையால் கடிதம் எழுதும் ஆசையும், ஆர்வமும் மிக்கவர்கள் மேலே குறிப்பிட்டவாறு தங்களது உறவினர்களுக்கோ, முன்னாள் ஆசிரியர்களுக்கோ, நண்பர்களுக்கோ, குழந்தைகளுக்கோ, மனைவிக்கோ அல்லது தினமணிக்கோ எவருக்காயினும் சொந்தக் கையெழுத்தில் கடிதம் எழுதி உறவினர் கடிதங்களில் ஒரிஜினலை அவர்களுக்கு அனுப்பி விட்டு, பிரதியை எங்களுக்கு அனுப்புங்கள். தினமணிக்கு எழுதுகிறீர்கள் என்றால் அதை அப்படியே எங்கள் முகவரிக்கு அனுப்பலாம். இம்முறை எங்களுக்கு அனுப்பும் போது நீங்கள் தபாலில் மட்டும் தான் அனுப்ப வேண்டும் என்பதில்லை. பிரதியை மின்னஞ்சலிலும் அனுப்பலாம்.

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: dinamani.readers@gmail.com

தபாலில் அனுப்ப வேண்டிய முகவரி:

எக்ஸ்பிரஸ் கார்டன், 
29, 2 - வது பிரதான சாலை, 
அம்பத்தூர் தொழிற்பேட்டை, சென்னை - 600058

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com