இன்று நமது தேசத்தின் பிரச்னையே இது தான்!

நெட்டிசன்களின் கவனத்துக்கு
இன்று நமது தேசத்தின் பிரச்னையே இது தான்!

வலைதளத்திலிருந்து...
பாரதியின் படைப்புகளில் என்னை மிகவும் ஈர்த்தவற்றில் ஒன்று அவனது "புதிய ஆத்திச்சூடி'. வாமனன் போல் இரண்டு வார்த்தைகளில் உலகளந்திருப்பான். இரண்டு அடிகளில் குறள் சொன்ன வள்ளுவனே கூட கொஞ்சம் பொறாமை கொள்ள வேண்டி வரும் இவனது இந்த படைப்பைப் படிக்க நேர்ந்தால்.
உதாரணமாக... 

'ரெளத்திரம் பழகு' - மேலோட்டமாகப் பார்த்தால் அநீதிகளூக்கு எதிராக சினம் கொள் என சொல்வதாகவே புரியும். ஆனால் அது சரியாகப் படவில்லை எனக்கு.
ஏனென்றால் அவன் ரெளத்திரம் கொள் என சொல்லவில்லை. மாறாக, ரெளத்திரம் பழகு என்கிறான். பழகுதல் என்பது தெரிந்து கொள்ளுதல், பக்குவப்படுதல், தேர்ச்சி கொள்ளுதல் போன்ற அர்த்தங்களை உள்ளடக்கியதாகும்.

உளியின் வலி தாங்கும் கற்களே சிலையாவது போல் தன் ரெளத்திரத்தைத் தனக்குள் அடைகாக்க தெரிந்தவனே வாழ்வில் தான் கொண்ட இலக்கை சென்று அடைகிறான். ஏனென்றால், ரெளத்திரம் என்பது தீக்குச்சியின் முனையில் தோன்றும் நெருப்பைப் போன்றது. அதை காட்டுத் தீ போல் பரவவிட்டு அழிவையும் ஏற்படுத்தலாம்; அதேநேரத்தில் அதை சரியாக அடைகாத்து சரியான வகையில் பயன்படுத்தினால் இரும்பையும் உருக்கலாம். இன்று நமது தேசத்தின் பிரச்னையே இது தான். இளைய தலைமுறையினர் ரெளத்திரம் கொள்கிறார்களே தவிர, ரெளத்திரம் பழகவில்லை.

முக நூலிலிருந்து....
* கச்சேரிகளை
யாரைவிடவும் 
மகிழ்ந்து, ரசித்து,
கொண்டாடுபவர்கள்... 
அநேகமாக தபேலா 
மற்றும் மிருதங்கம்
வாசிப்பவர்களாகத்தான் 
இருக்கும்.
- இரா எட்வின்

* மகாத்மா ஆகும் சபலத்தில்,
கடந்த ஒரு வாரமாக
வேர்க்கடலை தவிர்த்து 
வேறு எதுவும் உண்பதில்லை.
- முத்துராமலிங்கம்

* நமது ஊர்...
யார் யாரோ 
வாழ்கிறார்கள்,
நம்மைத் தவிர.
- ஞான பாலன்

* ஓயாமல் 
தழுவிக் கொள்ளும்
அலையென நான்...
ஒரு போதும் 
கையணைக்காத 
கரையென நீ.
- வைகை சுரேஷ்

* குற்றம் சாட்டுவதில் முந்திக் கொள்பவரே நிரபராதி என்றொரு மூட நம்பிக்கையும் நம்மிடையே நிலவுகிறது.
- பரிமேலழகன் பரி

சுட்டுரையிலிருந்து...
கல்யாண மண்டபத்தில்
சாப்பிடச் செல்லும்போது
"நீங்க யாரு?'' 
எனக் கேட்ட ஒருவரிடம்...
தான் யார் என்று நிரூபிக்க,
தன்னுடைய 
ஆதார் கார்டை எடுக்க
வீட்டுக்குக் கிளம்பினார்,
சர்தார் ஜி. 
- மதுரை ஜின்னா

* முட்டாளை முட்டாள் என்று சொல்லுங்கள். கோபம் வரும்.
அதுவே அறிவாளியை முட்டாள் என்று சொன்னால், 
அமைதியாகக் கடந்து போய்விடுவார்.
- இராதாகிருஷ்ணன்

* சிறகுகள் 
தேவையில்லை...
கூண்டுக்குள் 
அடைபட்ட 
பறவைக்கு. 
- உஷா/தமிழச்சி

* வெட்டியா இருக்கிறதுஅசிங்கம் இல்ல பிரதர்...வீட்ல சொல்ற வேலையைக் கூட செய்யாம இருக்கிறதுதான் அசிங்கம்...
- சோழ நாட்டு விவசாயி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com