மனத்தை நெகிழ வைக்கும் செயலைச் செய்த மகளைப் பார்த்து மகிழ்ந்த தாய் செய்த சேவை!

அந்த நிகழ்ச்சி  மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால்,  முதலாவதாக வந்த  நானும் பிரபலமானேன்.  
மனத்தை நெகிழ வைக்கும் செயலைச் செய்த மகளைப் பார்த்து மகிழ்ந்த தாய் செய்த சேவை!

சென்னையைச் சேர்ந்த கீதா ஸ்ரீதர்  திருமணமானதும் மும்பை வாசியானார்.  இன்று 'உணவக  வட்டத்தில்' பிரபலம். பல்வேறு உணவு விடுதிகளின்  உணவுவகைகள் தரம், சுவை குறித்து நிர்ணயம் செய்யும் அளவுக்கு சமையலில்  அறிவும் அனுபவமும் கீதாவிடம் உள்ளது.  சமையல் குறித்தும் தனது வலைதள பக்கத்தில் தொடர்ந்து எழுதி அவருக்கென்று ஒரு வாசக வட்டத்தை உருவாகியிருப்பவர். சென்னைக்கு மாதம் ஒரு முறை உணவுகளின் தரம், சுவை குறித்து பல உணவகங்களுக்கு  வந்து செல்பவர். தனது  வெற்றிப்  பயணம் குறித்து  கீதா மனம் திறக்கிறார்:

திருமணம் நடந்தது 1993 - ல். மும்பைக்கு சென்றதும்,  கணவர் வீட்டிற்கு அருகில் இருக்கும்  பள்ளியில் கணினி ஆசிரியையாக  வேலை கிடைத்தது. மும்பை நகரின்  இயந்திரமய வாழ்க்கையின்  முக்கிய அம்சமான  பரபரப்பு  என்னையும்  தொத்திக் கொண்டது.  வீட்டுப் பொறுப்பு, பணிப் பொறுப்பு என்று நானும்  இயந்திரமாக இயங்கத் தொடங்கினேன். இரண்டு மகள்களுக்குப் பிறகு அவர்களைக் கவனிக்கும் பொறுப்பும் வந்து சேர்ந்தது.

வாழ்க்கை இலக்கின்றி போய்க் கொண்டிருந்தது. என் இளைய மகள் சாரதாவுக்கு அப்போது எட்டு வயது. சாரதாவுக்குத் தயிர்சாதம் அறவே  பிடிக்காது. ஒரு ஞாயிற்றுக்கிழமை, என் கணவர் தயிர்சாதம் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும்'  என்று  வற்புறுத்தினார்.   

சரி.. நான்  நீங்க  சொல்ற மாதிரி சாப்பிடுகிறேன்.. அதே மாதிரி நான்  கேட்பதற்கும் ஓகே  சொல்ல வேண்டும்..   இதற்கு  சம்மதம் என்றால் நான் தயிர்  சாதம் சாப்பிடுகிறேன் என்றாள்.  நாங்களும்  சரி என்றோம். சாரதா தயங்கித் தயங்கி கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டு தீர்த்ததும் 'எனக்கு என்ன வேண்டுமென்று  கேட்கவா’ என்றாள்.   சரி.. கேள்’ என்றோம்.

'நான் மொட்டை அடித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்' என்றாள். நாங்கள் அதிர்ச்சியில் வெலவெலத்துப் போனோம். உனக்கென்ன பயித்தியமா... அடர்ந்து  நீண்டிருக்கும் கூந்தலை  யாராவது   வேண்டாமென்று  சொல்வார்களா'  என்று  கண்டித்தேன். 'மொட்டையடிப்பது எனக்குத்தானே..  நீங்கதானே   சொன்னீங்க, நான்  என்ன கேட்டாலும்  ஒத்துக் கொள்வோம் என்று என்று பிடிவாதம்  பிடித்தாள்.  குழந்தை என்பதால் விரைவில்  கூந்தல் வளர்ந்துவிடும் என்று  ஆசுவாசப்படுத்திக் கொண்டு அரைகுறை மனதுடன்  அவளது  கூந்தலை மொட்டை அடித்து நீக்கினோம்.  ஏன்  மொட்டையடிக்க  முடிவு செய்தாள் என்று  அப்போது கேட்கத் தோன்றவில்லை.

மறுநாள் எனக்கு  ஓர்  ஆச்சரியம் காத்திருந்தது.  பள்ளி  வளாகத்திற்குள்   சாரதா  இன்னொரு மாணவனின்  தோளில்  கை போட்டவாறு நடந்து  சென்றதை நான் பார்த்தேன். அவனும்  மொட்டை அடித்திருந்தான்.  சரி.. வீட்டில் போய் விசாரிப்போம் என்று  இருந்து விட்டேன்.

அப்போது பியூன்.. என்னைப் பார்க்க ஒரு பெண்மணி வந்திருக்கிறார்  என்று சொன்னதும்  வரவேற்பு அறைக்குச் சென்றேன்.  அங்கே காத்திருந்த  அந்தப் பெண்மணி சாரதாவின்  பள்ளித் தோழனான ஹரிஷின் அம்மா என்று அறிமுகம் செய்து கொண்டார்.  சில நாட்களாக  ஹரிஷ்  வகுப்பிற்கு வரவில்லை.  சாரதா  கிளாஸ் லீடர்  என்பதால்  ஹரிஷின்  அம்மாவிடம்  ஹரிஷ்  'ஏன் வகுப்பிற்கு  வருவதில்லை'  என்று விசாரித்திருக்கிறாள். அதற்கு 'ஹரிஷுக்கு ரத்தப் புற்று நோய். அவனுக்குத் தரப்படும் மருந்துகள் காரணமாக அவனது தலைமுடி கொட்டிவிட்டது. இருந்த சில முடியையும் மொட்டை  அடித்து நீக்கி விட்டார்கள். பள்ளிக்கு  மொட்டைத்  தலையுடன் வந்தால் சக  தோழர்கள்  கேலி கிண்டல் செய்வார்கள்  என்பதால்  வகுப்பிற்கு வரத்   தயங்குகிறான்'  என்று  சொல்ல...  

'அவ்வளவுதானா.. அதற்கு  நான் ஒரு  தீர்வு வைத்திருக்கிறேன்.. இன்று வெள்ளிக்கு கிழமை. வரும் திங்கள் அன்று ஹரிஷை  பள்ளிக்கு  அனுப்பி வையுங்கள்.. யாரும்  கேலி செய்ய மாட்டார்கள்'  என்று சொல்லியிருக்கிறாள்.   ஹரிஷுக்குத்   துணையாக   தானும் மொட்டை  அடித்துக் கொண்டாள்.  ஹரிஷ் பள்ளிக்கு வந்த போது.. 'நீயும்  மொட்டை.. நானும்  மொட்டை... யார்  நம்மை கேலி   செய்கிறார்கள் என்று பார்ப்போம்' என்று சொன்னவாறே ஹரிஷின் தோளில் கைபோட்டு வகுப்பிற்கு  அழைத்துச் சென்றாள். அந்த காட்சியைத்தான்   நான் பார்த்தேன்.  உண்மை தெரிந்ததும் நெகிழ்ந்து போனேன்.  தோழனுக்காக அழகான கூந்தலைத் தியாகம் செய்யத் துணிந்த என் மகளை நினைத்து  பெருமை அடைந்தேன்.

அந்த நிகழ்ச்சி எனக்குள்ளும் தாக்கத்தை ஏற்படுத்த, புற்று நோயாளிகளுக்கு நாமும்  ஏதாவது  செய்ய  வேண்டும்  என்று முடிவெடுத்தேன். மும்பை  டாடா  புற்று நோய் மருத்துவமனையில் உள்ள  நோயாளிகளுக்கு  இலவசமாக  உணவு சேமித்து வழங்கத் தொடங்கினேன். பல நோயாளிகளுக்கு  பண உதவியும் செய்தேன்.  என்னைப்  பார்த்த பலரும் இப்படி உதவி செய்யத் தொடங்கினார்கள். நான் உணவு  தயாரித்து  வழங்குவதை  தொடர்ந்து செய்து கொண்டிருந்தேன்.  இப்படி  பிறருக்கு சமையல் செய்ய  ஆரம்பித்தது, என்னை மும்பையில் சமையல் போட்டிகளில் கலந்து கொள்ளச் செய்தது. தொடர்ந்து மும்பையில்  டிவி சானல்கள் நடத்தும் சமையல் போட்டிகளிலும் கலந்து கொண்டேன்.   'மாஸ்டர் செஃப்' நிகழ்ச்சி சீஸன்  நான்கிற்கான  இருபதாயிரம்  போட்டியாளர்களின்  நிகழ்ச்சியில் கலந்து கொள்ள என்னையும் தேர்ந்தெடுத்தார்கள். நிகழ்ச்சி ஒளிபரப்பாகி இறுதி எபிசோடில் என்னை  முதலாவதாகத்   தேர்ந்தெடுத்தார்கள். அந்த நிகழ்ச்சி  மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால்,  முதலாவதாக வந்த  நானும் பிரபலமானேன்.  

எனது சமையலுக்கு  கிடைத்த  அங்கீகாரம்  என்னை  www.indianfoodexpress.in என்ற  blog தொடங்க  வைத்தது.  வீட்டில் சமைக்கும்  உணவு வகைகளை  படம் பிடித்து  எனது வலைதளத்தில் பதிவு செய்தேன்.  சில நாட்களில்   எனது வலைதளப்  பக்கத்தை விரும்புகிறவர்கள்,  தொடர்பவர்கள்  எண்ணிக்கை  ஒரு லட்சத்தைத்  தொட்டது.    blog பிரபலமாகி அதன் மூலம் மாதம்  ஐம்பதாயிரம்  வருமானம் கிடைக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மும்பை சென்னை  நகரங்களில்  பிரபலமான  உணவுச்சாலைகளின்  உணவுவகைகள்  சுவை, தரம்  குறித்து விமர்சனம்  செய்யத் தொடங்கி...  அது சென்னைக்கும்  பரவியுள்ளது.  எனது பட்டியலில் சுமார்  ஆயிரம்  உணவகங்கள்  இருக்கின்றன.  இந்த  உணவகங்களில்  தினமும்  மிச்சமாகும் உணவுவகைகளை  உணவில்லாமல் கஷ்டப்படுகிறவர்களுக்கு வழங்க  ஆவன செய்திருக்கிறேன்.    

'உணவு வங்கி'  என்று  நண்பர்களுடன் சேர்ந்து தொடங்கி,  வாரம் ஒருமுறை ஐம்பது பேருக்கு  உணவு தயாரித்து வழங்கி வருகிறேன். பார்வையில்லாத குழந்தைகள்   தேர்வுகள் எழுதும் போது  அவர்கள் சொல்லும் பதிலை  விடைத்தாளில் எழுதிக் கொடுத்து உதவுகிறேன். பாடம் சொல்லிக்  கொடுக்கிறேன்.  ஆட்டிசம்,  மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்குச் சமையல்  செய்வது எப்படி  என்று சொல்லிக் கொடுத்து வருகிறேன்.  இத்தனை வேலைகளையும் வீட்டுப் பொறுப்புடன் சேர்ந்து எப்படி செய்ய முடிகிறது  என்று கேட்காதவர்கள் இல்லை. செய்யும் வேலைகள்  நமக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் தந்தால்  நிச்சயமாக  எத்தனை வேலைகள் தலைக்கு மேல் இருந்தாலும் வெற்றிகரமாக  செய்து முடிக்கலாம்.  என்னைப் பார்த்து நியூசிலாந்தில் இருக்கும் மூத்த மகள் தனது சம்பளத்தில் முப்பது சதவீதத்தை  நான் செய்யும்  உதவிகளுக்காக தர முன் வந்திருக்கிறாள். இரண்டாவது மகள் சாரதா டாக்டருக்குப் படித்துக் கொண்டிருக்கிறாள்' என்கிறார்  கீதா ஸ்ரீதர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com