இவரைக் கட்டிப்பிடிச்சது ஒரு குத்தம்னு சொல்லி இளம்பெண்ணை அரெஸ்ட் பண்ணிட்டாங்களே!

பாடிக் கொண்டிருந்தவர் வேறு யாருமல்ல. ‘தி கிரேட் ப்ரின்ஸ் ஆஃப் அராபிய இசை’ எனக் கொண்டாடப்படும் மஜித் அல் மொஹாந்திஸ். இவரது இசைக்கு அடிமையாகத அராபியர்களே இல்லை
இவரைக் கட்டிப்பிடிச்சது ஒரு குத்தம்னு சொல்லி இளம்பெண்ணை அரெஸ்ட் பண்ணிட்டாங்களே!

இந்தக் கதை நம்மூரில் நடக்குமா? அதான் இல்லை. இது நடந்திருப்பது செளதி அரேபியாவில். கடந்த வெள்ளியன்று செளதி அரேபியாவின் மேற்குப் புறத்தில் அமைந்திருக்கும் தைஃப் எனுமிடத்தில் இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. பாடிக் கொண்டிருந்தவர் வேறு யாருமல்ல. ‘தி கிரேட் ப்ரின்ஸ் ஆஃப் அராபிய இசை’ எனக் கொண்டாடப்படும் மஜித் அல் மொஹாந்திஸ். இவரது இசைக்கு அடிமையாகத அராபியர்களே இல்லை எனும் விதத்தில் மொஹாந்திஸ் அந்நாட்டில் பெருவாரியான ரசிகர், ரசிகைகளைத் தன் இசையால் ஈர்த்திருந்தார். 

செளதியில் பெண்களுக்கான கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப் பட்டுக் கொண்டிருந்தாலும் இன்னும் சில கட்டுப்பெட்டித்தனங்கள் இல்லாமலில்லை. பொது இடங்களில், விழாக்களிலோ, அல்லது இசை நிகழ்ச்சிகளிலோ, பார்ட்டிகளிலோ கலந்து கொள்ளும் பெண்கள் இப்போதும் கூட தங்களுக்கு உறவினரல்லாதா அந்நிய ஆண்களுடன் பழகவோ, அருகில் சென்று பேசவோ கூடாது. அது அராபிய பெண்களுக்கான சட்டத்தின் அடிப்படையில் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுகிறது. இப்படியான சூழலில் வெள்ளியன்று அராபிய இசைக்கலைஞர் மஜித் அல் மொஹாந்திஸ் மேடையில் பாடிக் கொண்டிருக்கையில் திடீரென துள்ளிக் குதித்தவாறு அவரருகே சென்ற இளம்பெண்ணொருவர் உற்சாக மிகுதியில் அவரைக் கட்டிப் பிடித்தார். இதைக் கண்டு அதிர்ந்த செளதி போலீஸார் அந்தப் பெண்ணை உடனடியாக அவ்விடத்தில் இருந்து அகற்றி கைது செய்து அழைத்துச் சென்றனர். இத்தனைக்கும் அப்பெண் யாரென்பது குறித்த அடையாளங்கள் எதுவும் தெரியாத வகையில் அராபிய முறைப்படி தலை முழுதாக மூடும் விதத்தில் உடை அணிந்திருந்தார். அவரது கண்கள் மட்டுமே வெளியில் தெரிந்தன. 

அதிர்ச்சியளிக்கும் விதத்தில் இளம்பெண்ணொருவர் தன்னை இசை மேடையில் கட்டிப் பிடித்துப் பாராட்டிய இளம்பெண்ணை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்ற பின் பாடகர் மஜித் அல் மொஹாந்திஸ் மீண்டும் தனது இசைச்சேவையைத் தொடர்ந்தார்.

செளதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் வழிகாட்டுதலின் பேரில் அந்நாட்டில் பெண்களுக்காக கட்டுப்பாடுகள் பரவலாகக் குறைந்துள்ளன.

கடந்தாண்டு செளதி பெண்கள் இசை நிகழ்ச்சிகள் மற்றும் கால்பந்து விளையாட்டு போன்ற பொது நிகழ்ச்சிகளைக் காணப் பல்லாண்டுகளாக நிலவி வந்த தடை நீக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. அது மட்டுமல்ல பெண் இசைக்கலைஞர்கள் பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடையும் கூட கடந்த டிசம்பரில் தான் நீக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. அப்படி செளதியில் இசை நிகழ்ச்சி நடத்திய முதல் பெண் பாடகியாக அறியப்படுபவர் லெபனீஸ் ஸ்டார் ஹிபா தவாஜி. கடந்த மாதத்தில் இருந்து பெண்கள் வாகனம் ஓட்ட விதிக்கப் பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டது.

ஆயினும்... செளதியில் இன்னமும் பெண்களுக்கான முழு சமூக விடுதலை கிடைத்து விட்டதென்று சொல்ல முடியாது. அதற்கொரு உதாரணம் தான் மேலே விவரிக்கப்பட்டுள்ளது.

இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளில் சாதாரண டி வி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்கும் நடிகர்களும், பொது மக்களும் கூட தாங்கள் ரசிக்கும் மேதைகளைக் கட்டிப் பிடித்து பாராட்ட நினைப்பது இங்கே அப்படியொன்றும் கைது செய்யத்தக்க அளவிலான பெரிய குற்றமாக அணுகப்படாத நிலையில் மனம் கவர்ந்த பாடகரைப் பாராட்டும் விதமாக கட்டிப் பிடித்த இளம்பெண்ணொருவர் செளதியில் கைது செய்யப்பட்டிருப்பது தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அதிசயம் தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com