கடந்த 4 ஆண்டுகளில் சீறிப் பாய்ந்த பப் கலாச்சார எழுச்சி! மீள முடியாமல் தவிக்கும் பெங்களூரு டெக்கிகள்!

இந்தக் கலாச்சாரம் நமது இந்தியப் பண்பாட்டுக்கும், குடும்ப அமைப்புகளுக்கும் கேடு உண்டாக்கக் கூடியது என்று நம்பும் பட்சத்தில் மாநில அரசுகள் புதிய பப்களுக்கான லைசென்ஸ் வழங்கப்படுவதைத் தடுத்திருக்க வேண்டும
கடந்த 4 ஆண்டுகளில் சீறிப் பாய்ந்த பப் கலாச்சார எழுச்சி! மீள முடியாமல் தவிக்கும் பெங்களூரு டெக்கிகள்!

கடந்த நான்காண்டுகளுக்குள் பெங்களூருவில் தொடர்ந்து அதிகரித்து வரும் பப்களின் எண்ணிக்கையைக் கேட்டால் அசந்து போவீர்கள். பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த நிலையைக் காட்டிலும் கடந்த நான்காண்டுகளுக்கும் மட்டுமெ 50% எழுச்சியைக் கண்டிருக்கிறது பெங்களூரு பப் கலாச்சாரம். பெங்களூருவில் பன்னாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க அதற்கேற்றாற் போல பப்களுக்கான லைசென்ஸ்களும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இதனால் ஈர்க்கப்படும் நகரத்து இளைஞர்களும், இளைஞிகளும் குடும்பத்தினர் முன்னிலையில் குடிப்பது, புகைப்பது மாதிரியான புதியதொரு கலாச்சாரத்தை தங்களது வீடுகளில் அரங்கேற்ற முயற்சிக்கின்றனர். இதனால் சமூகத்தின் கலாச்சாரமும், பண்பாடும் சீர்கெடுகிறது.

பெங்களூரில் பப்புக்கு சென்று கூத்தடிக்க விரும்பாத இளைஞர்களை இன்றைய தேதிக்கு விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த அளவுக்கு பப் கலாச்சாரம் என்பது அங்கு இளைஞர்களின் வாழ்வை அடியோடு சீரழித்து வருகிறது. ஆனால், பன்னாட்டு நிறுவனங்களின் அளவிட முடியாத வேலைப்பளுவை நிர்பந்தத்தின் பேரில் ஏற்றுக் கொண்டாக வேண்டிய நிலையிலிருக்கும் இன்றைய இளைஞர்கள் அங்கே உண்டாகும் மன அழுத்தத்தை ஆற்றிக் கொள்ளும் இடமாக பப்களை நம்பத் தொடங்கி விட்டார்கள். அதனால் வார இறுதிகளில் பப்புக்குச் செல்வது அவர்களுக்கு தவிர்க்க முடியாத பழக்கமாகி விடுகிறது. முதலில் பழக்கத்தின் காரணமாகச் செல்பவர்கள் பிறகு அது தரும் கட்டற்ற சுதந்திரத்தை அனுபவித்த பின் அதற்கு அடிமையாகி விடுகிறார்கள்.

இந்தக் கலாச்சாரம் நமது இந்தியப் பண்பாட்டுக்கும், குடும்ப அமைப்புகளுக்கும் கேடு உண்டாக்கக் கூடியது என்று நம்பும் பட்சத்தில் மாநில அரசுகள் புதிய பப்களுக்கான லைசென்ஸ் வழங்கப்படுவதைத் தடுத்திருக்க வேண்டும். அரசுகள் அதைச் செய்யத் தவறியதால் இன்று பப்புக்குச் செல்லும் தம்பதியினரின் வீடுகளில் வளரும் குழந்தைகளில் கூட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் வண்ணம் அந்தக் கலாச்சாரம் தனது விஷப் பற்களைக் காட்டத் தொடங்கியுள்ளது. ஆனால் இது இந்த நாட்டு இளைஞர்களின் விருப்பத்தின் பேரில் அல்ல. பன்னாட்டு நிறுவனங்கள் வலிந்து உண்டாக்கும் மன அழுத்தத்தை போக்கிக் கொள்ளும் முயற்சியாகவே பப்களை அணுகுகிறார்கள் இளைஞர்கள். இந்திய இளைஞர்களை அவர்களது விருப்பத்தின் பேரில் அல்லாது தவிர்க்க முடியாத மன அழுத்தம் மற்றும் வேலைப்பளுவின் காரணமாக அதைத் தணித்துக் கொள்ள தன்னை நோக்கி ஈர்க்கும் இந்த பப் கலாச்சார எழுச்சியை அடக்க வேண்டியது யார் பொறுப்பு?!

வேலைக்காகவும், கல்விக்காகவும் பெங்களூரு போன்ற தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த நகரங்களுக்கு இடம்பெயரும் இளைய சமுதாயத்தினர் இந்த பப் கலாச்சாரத்தில் சிக்கி தேனில் சிக்கிய ஈக்களாக மூச்சுத் திணறி விடுபட முடியாமல் தவிக்கும் அவலத்தை தொடர்ந்து இந்த அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருக்கப் போகின்றனவா? இந்தியப் பண்பாட்டை சீரழிக்கவென்றே உண்டாக்கப் பட்ட இது போன்ற பப்களுக்கு லைசென்ஸ் அளிக்காமல் தவிர்த்தாலே போதும் மற்றதனைத்தும் தானே அடங்கி விடுமே! என்று கொதிக்கிறார்கள் பப் கலாச்சாரத்துக்கு எதிரான தன்னார்வலர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள்.

பெங்களூரு சாமான்ய மக்களின் இந்தக் கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் கவனிக்குமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com