குழந்தைகள் அப்பா சாயலில் பிறந்தால், ரொம்ப ஹெல்த்தியா இருக்குமாம்?!

குழந்தை அப்பாவின் சாயலில் பிறந்தால், உளவியல் ரீதியாக குழந்தைக்கும், அப்பாவுக்குமான பாசப்பிணைப்பு இறுகி... அப்பாக்கள், தங்கள் குழந்தைகளுடன் செலவளிக்கும் நேரம் அதிகரிக்கிறதாம்
குழந்தைகள் அப்பா சாயலில் பிறந்தால், ரொம்ப ஹெல்த்தியா இருக்குமாம்?!

குழந்தை அம்மா சாயல்ல இருக்கா? அப்பா சாயல்ல இருக்கா? எல்லா குடும்பங்களிலும், குழந்தை பிறந்தால் போதும், உடனே உறவினர்களிடையே எழும்பக் கூடிய முதல் கேள்வியே இது தான். குழந்தை அம்மா சாயலிலும் இல்லாமல், அப்பா சாயலிலும் இல்லாமல் முற்றிலும் சம்மந்தா சம்மந்தமில்லாமல் அதன் பெற்றோரும், பாட்டி, தாத்தாக்களுமே பார்த்தேயிராத அந்தக் குடும்பத்தின் மூன்று தலைமுறைகளுக்கு முந்தைய பூட்டன், பூட்டி சாயலில் கூட பிறந்திருக்கலாம். அதெல்லாம் அந்தக் குழந்தையின் ஜீன் அமைப்பைப் பொறுத்தது. பிறக்கும் குழந்தைகளின் சாயலைத் தீர்மானிப்பது எதுவென்று கண்டுபிடிக்கக் கூடிய அளவுக்கு நமது அறிவியல் இன்னமும் வளர்ந்திருப்பதாகத் தெரியவில்லை. அப்படித் தெரிந்து விட்டால் பிறகு நமக்குப் பிடித்தமான சாயலில் குழந்தைகளை உருவாக்கக் கூட நாம் தயங்க மாட்டோம். அந்த அளவுக்கு பிறக்கும் குழந்தையின் சாயல் குறித்தான எதிர்பார்ப்புகள் நமக்கு அதிகம்.

இப்படியிருக்கையில் நியூயார்க்கில் இருக்கும் பிங்காம்ப்டன் பல்கலைக்கழக மருத்துவத்துறை பேராசிரியர்களால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் முடிவில், பிறக்கும் குழந்தைகள், தங்களது அப்பாவின் சாயலில் இருந்தால் அந்தக் குழந்தைகளின் உடல்நலம் குழந்தையின் ஒரு வயதுக்குள்ளாகவே மிக ஆரோக்யமானதாக மேம்பாடடைந்து விடுகிறது என்பதைக் கண்டறிந்து ஆய்வுக்கட்டுரை முடிவை சமர்பித்திருக்கிறார்கள். 

குழந்தை அப்பாவின் சாயலில் பிறந்தால், உளவியல் ரீதியாக குழந்தைக்கும், அப்பாவுக்குமான பாசப்பிணைப்பு இறுகி... அப்பாக்கள், தங்கள் குழந்தைகளுடன் செலவளிக்கும் நேரம் அதிகரிக்கிறதாம். இதனால் குழந்தையின் உடலில் நலம் தரும் ஹார்மோன்களின் சுரப்பு அதிகரித்து அதன் உடல் ஆரோக்யம் மேம்படுகிறது என பிங்ஹாம்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் சாலமன் போல்ஷெக் சுமார் 715 குடும்பங்களின் பெற்றோர் மற்றும் குழந்தைகளிடையே நடத்திய ஆய்வின் முடிவில் நிரூபித்திருக்கிறார்.

இந்த ஆய்வின் அடிப்படை நோக்கமே, குழந்தை வளர்ப்பில் தந்தையின் முக்கியத்துவத்தை உணர்த்துவது தான்.

இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே, சமையல் பொறுப்பு எப்படி அம்மாக்களுடையதாக ஆக்கப்பட்டதோ அதே விதமாக குழந்தை வளர்ப்பு என்பதும் ஒட்டுமொத்தமாகப் பெண்களின் தலையில் மட்டுமே சுமத்தப்பட்ட பொறுப்பு என்ற நிலையே இப்போதும் பெரும்பாலான இடங்களில் நீடிக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். அம்மாவினுடைய அருகாமை மட்டுமல்ல அப்பாவினுடைய அருகாமையில் அதிக நேரம் வளரக் கூடிய வாய்ப்புகள் கொண்ட குழந்தைகள் உடலளவில் மட்டுமல்ல மனதளவிலும் மிகுந்த ஆரோக்யமானவர்களாக வளர்கிறார்கள் என்பது இந்த ஆய்வின் மூலமாக மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

Image credit: News18.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com