கோழியைத் தப்ப வைத்த சிறுவனுக்கு ஒரு கூடை ஸ்மைலி பார்சல்!

இந்த வீடியோவைப் பாருங்கள் கொலையிலிருந்து விடுதலையாவது அந்தக் கோழி மட்டுமல்ல, பார்த்துக் கொண்டிருக்கும் நமது மனங்களும் தான்.
கோழியைத் தப்ப வைத்த சிறுவனுக்கு ஒரு கூடை ஸ்மைலி பார்சல்!

நீங்கள் அசைவப் பிரியராக இருக்கலாம். ஆனால் உங்களையும் இந்த வீடியோ நெகிழச் செய்யலாம். மொழி புரியாவிட்டாலும், அந்தச் சிறுவனின் செய்கை போதும் புரியாததைப் புரிய வைக்க, மனதில் பதிய வைக்க. உலகம் முழுதும் குழந்தைகள் அப்பழுக்கற்ற மனிதாபிமான சிந்தனையுடன் தங்களுக்கே உரிய இரக்க குணத்துடனும் தான் படைக்கப் படுகிறார்கள். பின்பு அவர்களுக்குள் குரூரத்தையும், தந்திரத்தையும் விதைப்பது நாம் வாழும் சூழலும், சூழலின் காரணிகளான சக மனிதர்களும் தான். 

இந்த வீடியோவைப் பாருங்கள் கொலையிலிருந்து விடுதலையாவது அந்தக் கோழி மட்டுமல்ல, பார்த்துக் கொண்டிருக்கும் நமது மனங்களும் தான்.

கோழி அடித்துச் சாப்பிடுவது குற்றம் என அசைவ உணவுப் பிரியர்களைக் குற்ற உணர்வு கொள்ளச் செய்வதல்ல இந்த வீடியோவின் நோக்கம். தான் வளர்த்த கோழியை  தப்புவித்து விடுதலை அடையச் செய்த பின் அந்தச் சிறுவனின் நடையில் தெரியும் நிம்மதியைப் பகிர்வதே பிரதான நோக்கம்.

நம்மில் பலருக்கும் இப்படியான ஒரு அனுபவம் நேர்ந்திருக்கலாம். காதுகுத்து, முடி இறக்குதல், வேண்டுதல் என நேர்த்திக் கடனுக்கென வீட்டில் ஆட்டுக்கிடாயோ, கோழியோ, சேவலோ வளர்த்து அதை விழா நாளன்று வெட்டுப்படப் பறிகொடுத்து... ஏன் அதை நாமே ரசிக்க முடியாமல், ருசிக்க முடியாமல் அந்த நாளில் மட்டுமேனும் வளர்த்த பிரியத்தை தவிர்க்க முடியாமல் அசைவம் தவிர்த்து உண்ட அனுபவம் நம்மில் யாரேனும் ஒருவருக்காவது நிச்சயம் இருந்திருக்கக் கூடும். அந்த ஈரமனதின் வலி அறியச் செய்ய இந்த வீடியோ ஒன்று போதும்.

வீடியோ தரவிறக்க முடியாதவர்களுக்கு... அது எந்த ஊர், எந்த நாடு எனத் தெரியவில்லை. ஆனால், நம்மூரைப் போலத்தான் ஒரு இஸ்லாமிய மனிதர் வீட்டில் அசைவம் சாப்பிட ஆசைப்பட்டு கோழி அடித்துச் சாப்பிடும் நோக்கில் கோழியையும், கத்தியையும் தூக்கிக் கொண்டு வீட்டின் கொல்லைப்புறத்துக்குச் செல்கிறார். அவரைப் பின் தொடர்ந்து செல்லும் குட்டிப் பையன் அந்த மனிதரின் கையில் உயிர் விடக் காத்திருக்கும் கோழியை அடம்பிடித்து, அழுது கூப்பாடு போட்டு, அவரது கையிலிருக்கும் கத்தியைப் பிடிங்கிக் கொண்டு ஓடி என அழுது மாய்மாலம் செய்து கடைசியில் எப்பாடுபட்டாவது அந்தக் கோழியைக் காப்பாற்றித் தப்பிக்கச் செய்து விடுகிறான். இது தான் அந்த வீடியோ காட்சி. சொல்லப்போனால், அந்தச் சிறுவன் அறியாது அந்த மனிதர் மறுநாளே அந்தக் கோழியை மீண்டும் அடித்துச் சுவை மிகுந்த சிக்கன் பிரியாணியாகவும், கிரேவியாகவும், வறுவலாகவும் மாற்றி இருக்கலாம். அதல்ல விஷயம். அந்தச் சிறுவனின் பரிசுத்தமான மனம். தான் வளர்த்த கோழியைத் தான் காண கொலை செய்ய அனுமதிக்காத அந்தப் பிரியம் கலந்த  மனிதாபிமானம். அந்தக் குழந்தைமை அது தான் இந்த இடத்தில் பேசப்படத் தக்க விஷயம். வீடியோவைப் பார்த்தால் உங்களுக்கும் கூட பாராட்டத் தோன்றலாம். இந்தச் சிறுவனின் மனம் உலக மக்கள் அனைவருக்கும் வாய்த்திருப்பின் போர்கள் எதற்கு? மனிதனை மனிதன் கொன்று தின்னும் பகைமை எதற்கு? எதைச் செய்வதற்கு முன்பும் கொஞ்சமே கொஞ்சம் மனிதாபிமானம் மட்டும் இருந்து விட்டால் பிறகு எல்லோரும் இன்புற்று இருக்கலாமே!

கோழியைத் தப்ப வைத்த சிறுவனுக்கு ஒரு கூடை ஸ்மைலி பார்சல்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com