'சாமீ, எங்கம்மா பாசாகணும். நிறைய மார்க் வாங்கணும்'

முதலில் ஒரு ஃப்ளாஷ்பேக் - கொஞ்சமாக(?) என் வாழ்கையை ரீவைண்ட் செய்து பார்த்தால்,
'சாமீ, எங்கம்மா பாசாகணும். நிறைய மார்க் வாங்கணும்'

முதலில் ஒரு ஃப்ளாஷ்பேக் - கொஞ்சமாக(?) என் வாழ்கையை ரீவைண்ட் செய்து பார்த்தால், குழந்தைப் பருவம் முழுவதுமே டீச்சர் விளையாட்டைத்தான் விளையாடிக் கொண்டிருப்பேன். ஆனால், பிறகெப்படியோ திசைமாறிப்போய் அதையும் தூக்கிப்போட்டுவிட்டு ரெண்டு குழந்தைகளுக்கும் ஹோம் வொர்க் எழுதிக் கொண்டிருந்தாலும், மனதில் இருக்கும் சாக்பீஸ் துகள்கள் மட்டும் உதிர்ந்தபாடில்லை. சரிதான் என்று கனவை விரிவாக்கி, விரிவுரையாளர் ஆகலாம் என்று பொறியியல் முதுகலைப் பட்டப் படிப்பைப் பகுதி நேரமாக, வார இறுதியில் படிக்க ஆரம்பித்தாயிற்று. இந்த இரண்டு வருடங்களில், 'சாமீ, எங்கம்மா பாசாகணும். நிறைய மார்க் வாங்கணும்' போன்ற பின் நவீனத்துவமான வேண்டுதல் எல்லாம் எங்கள் வீட்டுக் கடவுளுக்குப் பழகிவிட்டிருக்கும்.

என் வகுப்பில் முக்கால்வாசிப் பேர் திருமணமானவர்கள். ஏற்கெனவே வேலையிலும் இருப்பவர்கள். ஆகையால், எந்த சீரியஸ்னஸும் இல்லாமல் க்ளாசுக்கு ஜாலியாக பிக்னிக் போலப் போய் வருவதுவரை சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால், படிப்பு அவ்வளவு சுலபமாக இல்லை. குழந்தைகளை இரவில் பல் தேய்க்க வைப்பதை விட சிரமமாயிருக்கிறது. வகுப்பில் அமர்ந்து, 'பால் காய்ச்சினோமே ஃப்ரிட்ஜில் வைத்தோமா, குழந்தைகள் சரியாக சாப்பிட்டிருக்குமா, மழை வந்தால் துணி காய்கிறதே; எடுத்து வைப்பார்களா?' என்று மனம் வேறு கணக்குப் போடுகிறது. இன்னும் வகுப்பு நடக்கும்போது நோட்டு புத்தகத்தில் கோலம் வரைந்து தருவது, ரெஸிபி மாற்றிக் கொள்வது எல்லாம் தனி அழிச்சாட்டியங்கள்.

இதாவது பரவாயில்லை என நினைக்க வைக்கும் பரீட்சைகள். அதென்னவோ வருடம் பூராவும் கல்லூரிக்குப் போனாலும், பரீட்சைகள் தான், யுகம் யுகமாய்ப் படிப்பது÷ பான்ற ஆயாசத்தைத் தருகின்றன. எத்தனை அறிவாளியாக இருந்தாலும், பரீட்சை பிடிக்க அவருக்கு ஒரே காரணம்தான் இருக்க முடியும். அது கடைசிநாள் கிடைக்கப்போகும் நாளை முதல் விடுமுறை மனநிலைதான்.
எல்லாப் பல்கலைக்கழகத்தையும்போல என்னுடையதும் வேண்டுமென்றே எனக்கு சம்பந்தமேயில்லாத துறையைச் சேர்ந்த ஒருவரைத்தான் பெஞ்சில் எனக்கருகே அமர்த்துகிறது. சிலர், சப்ஜெடாக 4, 5 பதில்களைப் படித்த வந்து, கேள்வித்தாள் தருமுன்பே எழுத ஆரம்பித்து வினாத்தாளை விட அதிகமாக திகிலூட்டுகிறார்கள்.

பரிட்சை ஹாலில் ஒருமுறை, அருகில் அமர்ந்திருந்த அங்கிள், ஸ்...ஸ்ஸ் என்கிறார். குழம்பி மெல்ல திரும்பிப் பார்த்தால், ஸ்கேல் தாங்க என்கிறார். பிறகு பென்சில், பின் ஏரேசர், கால்குலேட்டர் எனக் கேட்கத் துவங்குகிறார். தன் சரீரத்தைத் தூக்கி வந்து எக்ஸாம் ஹாலில் வைத்திருப்பதே, இந்தக் கல்லூரிக்குச் செய்யும் ஆகப் பெரிய உபகாரம் என்று நினைத்திருப்பார் போலும். என் பொருட்கள் அனைத்தையும் நான் சைகையால் திரும்பி வாங்குவதற்குள், சூப்பர்வைசரின் பார்வை என்னிடம் 'இதெல்லாம் வீட்டிலிருந்து எடுத்து வந்து தொலைத்தால்தான் என்ன' என்கிறது.. தேவுடா..

பரீட்சை ஹாலில் இது போன்ற இம்சைகளை எந்த ஆணுக்காவது பெண்கள் தந்திருக்கிறார்களா? மொத்தமாக ஸ்கெட்ச பெண் 24 கலர்களில் வருகிறது என்றால், அத்தனையும் எடுத்து வ்நது பெஞ்சில் பரப்புகிறார் ஒரு அம்மணி. அதில் ஒன்று, டுர்ர் என்ற என்னிடம் ஓடிவந்து விடுகிறது. அவசரமாகப் பேனா எடுத்து எழுதத் துவங்கினால், மெஜந்தா கலரில் பட்டையாகப் பேப்பரில் பரவுகிறது. அதைவிட, அந்த அம்மணி கேட்காமல் எடுத்ததற்காக என்னை முறைக்கும் போது, ஸ்கெட்ச் பென்னால் கண்ணைத் குத்த வேண்டும் போல ஆசை எழுந்து அடங்கும்.

மற்றொருமுறை பரீட்சை, ஃபுளூ ரசன்ட் கலரில் ஜீன்ஸ் அணிந்து, தலை முடி, நடவுக்க காத்திருக்கும் நாற்று போல குத்திட்டு நிற்க, ஒர வானர வீரன் அருகில் அமர்ந்திருந்தான். கையில் கேள்விதாள் வந்ததுதான் தாமதம், வாலாட்ட, சாரி.. காலாட்ட ஆரம்பித்துவிட்டான். பையன் பெரிய தையல்காரனாய் வந்திருக்க வேண்டியது. விதி எஞ்சினியரிங் சேர்ந்து பரிட்சை ஹாலில் காலாட்ட வைத்துவிட்டது. மொத்த பெஞ்சும் வைப்ரேஷன் மோடில் இருக்க. எழுத்துக்கள் நாலு மணி மார்கழிக் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தன. இவன் காலிரண்டையும் ஒரு பெல்ட்டு மூலம் இணைத்து, மோட்டார் கனெக்ஷன் தந்து, மின்சாரம் தயாரித்தால் ஒரு மின்விசிறியையாவது சுழல விடலாம் என்பதாக யோசிக்கத் துவங்குகிறேன். மிகுந்த பிரயத்தனப்பட்டு, மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தைப் பாதியிலேயே கைவிட்டு விட்ட மீதிப் பரிட்சையை எழுத வேண்டியதாகிறது. ஒரு முறை என் அருகில் சுவரோரமாக அமர்ந்திருந்த பையனை நம்பி ஐந்து, ஆறு பேர் பரிட்சை எழுத வந்திருந்தார்கள். அவனோ யாரையும் திரும்பியே பார்க்காமல் எழுதிக் கொண்டிருக்க, எனக்கு யார் யாரோ விட்டெறிந்த ரப்பர், குட்டிப் பென்சில், பேப்பர் ராக்கெட் எல்லாவற்றினாலும் அடி கிடைத்திருக்கிறது.

எது எப்படியோ, கடைசியாகப் பரிட்சை எப்படி இருந்தாலும், எப்படி எழுதியிருக்க என்று நண்பர்கள் கேட்டால் சுமாரா என்றும், வீட்டில் உள்ளவர்கள் கேட்டால் நல்லா என்றும் சொல்லக் கற்றுக் கொண்டிருக்கிறேன். ஏனென்றால், மற்ற எல்லா பதில்களும் அவர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்து விடுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com