பிரபல ரொமான்டிக் எழுத்தாளர் யத்தனபூடி சுலோசன ராணி காலமானார்!

தெலுங்கில் சுலோசன ராணி மைல்ட்டான ரொமாண்டிக் நாவல்கள் எழுதுவதில் புகழ்பெற்ற எழுத்தாளராக விளங்கினார். இவரது ஸ்டைலில் தமிழில் எழுதிக் கொண்டிருந்த இவரது சமகால தமிழ் எழுத்தாளர்கள் எனில் அநுத்தமாவையும்
பிரபல ரொமான்டிக் எழுத்தாளர் யத்தனபூடி சுலோசன ராணி காலமானார்!

தமிழ் வாசகர்களுக்கும் கூட யத்தனபூடி சுலோச்சன ராணியின் பெயர் பரிச்சயமானதாகவே இருக்கக் கூடும். இவரது பல நாவல்கள் தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப் பட்டுள்ளமையை அரசு நூலக அடுக்குகளில் காண முடியும். 1960 களில் எழுதத் தொடங்கிய யத்தனபூடி சுலோசனராணி பிறந்தது பழைய ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின், கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த காஸா எனும் குக்கிராமத்தில். திருமணமாகி ஹைதராபாத் வந்த பிறகே இவரது எழுத்துலகப் பணி தொடங்கியது. இவரது பல தெலுங்கு நாவல்கள் கெளரி கிருபானந்தன் என்பவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

முள்பாதை, சொப்பன சுந்தரி, சினேகிதியே, அமூல்யா, மெளனராகம், நிவேதிதா, புஷ்பாஞ்சலி, இதயவாசல் உள்ளிட்டவை அவற்றுள் சில...

அவரது தெலுங்கு நாவல்களைப் பட்டியலிட்டால் அவற்றில் 16 க்கும் மேற்பட்டவை திரைப்படங்களாக உருமாறியிருக்கின்றன. அவற்றுள் பிரபலமானவைகளைப் பட்டியலிட்டால், மீனா, ஜீவன தரங்குலு, செக்ரெட்டரி, ராதா கிருஷ்ணா, அக்னிப் பூ, சாந்தி ப்ரியா, பிரேம லேகலு, பங்காரு கலலு, ஜெய் ஜவான், ஆத்ம கெளரவம், கிரிஜா கல்யாணம் உள்ளிட்ட திரைப்படங்கள் என்றென்றும் சினிமா ரசிகர்களால் மறக்க இயலாதவை.  இந்த நாவல்கள் அனைத்தும் திரைப்படங்களாக வெற்றி பெற்றதற்கு காரணம் சுலோசன ராணியின் நாவல் நாயகர்களைத் திரையில் பிரதிபலித்தவர்களாக இருந்தவர்கள் அந்நாளைய தெலுங்கு ரொமாண்டிக் ஐகான்களாகக் கருதப்பட்ட நாகேஸ்வரராவும், சோபன்பாபுவும், முரளிமனோகரும் தான்.

இதுவரை சுமார் 40 க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியவரான சுலோசன ராணி அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் தனது மகளது இல்லத்தில் ஞாயிறன்று இரவு ஹார்ட் அட்டாக்கில் காலமானார்.

இவரது எழுத்தில் முதல்முறையாக திரைப்படமான நாவலென்றால் அது சதுவுகுன்ன அம்மாயிலு(படித்த பெண்) எனும் நாவலே.

தெலுங்கில் சுலோசன ராணி மைல்ட்டான ரொமாண்டிக் நாவல்கள் எழுதுவதில் புகழ்பெற்ற எழுத்தாளராக விளங்கினார். இவரது ஸ்டைலில் தமிழில் எழுதிக் கொண்டிருந்த இவரது சமகால தமிழ் எழுத்தாளர்கள் எனில் அநுத்தமாவையும், ரமணி சந்திரனையும் குறிப்பிடலாம். பெரும்பாலும் அநுத்தமா & ரமணிசந்திரன் தேர்ந்தெடுக்கும் கதைக்களங்களை ஒத்தே சுலோசன ராணியின் கதைகளும் இருந்தன. சுலோசன ராணியின் கதைகளின் அடிப்படை மத்திய தரக் குடும்பத்தின் அன்றாடப் பிரச்னைகள் சார்ந்ததாகவே இருந்தன. அவற்றிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வந்து சாதிக்கிறார்கள் என்பதை ரொமான்ஸும், ஹீரோயிஸமும் தடவிய வார்த்தைகளில் விவரிப்பதில் அவர் வல்லவர். 

இப்படித்தான் யத்தனபூடி சுலோசன ராணி ஆந்திரத்தின் இதயம் கவர்ந்த பெண் எழுத்தாளர்களில் ஒருவரானார்.

சுலோசனாராணி தமது எழுத்துப் பணிக்கு தூண்டுதலாக அமைந்த சம்பவமாக நினைவுகூர்வது மறைந்த பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ், சாவித்ரி நடித்த ‘தோடி கோடலு’ எனும் திரைப்படப் பாடலொன்றை.

‘காருலோ சிகருகெல்லி’ எனத்தொடங்கும் அந்தப் பாடலில் நாகேஸ்வரராவ், ‘ ஒரு அழகான சேலை அணிந்திருக்கும் பெண்ணே உனக்குத் தெரியுமா, இந்த அழகின் பின்னிருக்கும் சிரமம்? இத்தனை அழகான சேலையை நெசவு செய்ய ஒரு நெசவாளி எத்தனை கடினமான முயற்சியைச் செய்திருப்பான் என்று, இப்படித்தான் ஒவ்வொரு அழகான விஷயத்தின் பின்னும் ஒரு அருமையான கடின முயற்சியும் உழைப்பும் இருக்கும்’ என்று பாடுவார். 

இந்தப் பாடலைக் கேட்ட பிறகு அதுவரை திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளைப் பெற்ற பிறகு அவர்களை வளர்ப்பதும், குடும்பத்தைக் கவனிப்பதும் ஒழிந்த நேரத்தில் கதைப் புத்தகங்கள் படிப்பதும், பூக்களைத் தொடுப்பதும் தான் தனது வேலையாக இருக்கப் போகிறது என்று நினைத்துச் சுகமான நினைவுகளில் மூழ்கியிருந்த சுலோசன ராணிக்கு,  இல்லை தனது வேலை அது மட்டுமல்ல என்று புரிந்ததாகக் கூறுகிறார். 

சுலோசனராணி திருமணமாகி முதன்முதலில் ஹைதராபாத் வந்த போது அங்கு அப்போது ஒரு அழகான குளிர்காலம் தொடங்கியிருந்தது.  ஹைதராபாத் நகரமே மிக அழகாகப் பரிசுத்தமாகக் காட்சியளித்தது. அந்தக் கணமே சுலோசனராணி தான், பிறந்து வளர்ந்த மிகச்சிறிய கிராமத்துக்கு ஒப்பாக ஹைதராபாத்தையும் நேசிக்கத் தொடங்கி விட்டதாகக் கூறுகிறார். தன்னிடம் இதுநாள் வரை 

‘நீங்கள் யாரையாவது காதலித்திருக்கிறீர்களா?’ என்றொரு கேள்வியை யாருமே கேட்டதில்லை. ஒருவேளை, தான் திருமணமானவள் என்பதற்காக அந்தக் கேள்வியைக் கேட்கும் எண்ணம் யாருக்கும் வராமலிருந்திருக்கலாம். ஆனால், இப்போது சொல்கிறேன், கேட்டுக் கொள்ளுங்கள். நான் ஹைதராபாத் நகரைக் காதலித்தேன். இப்போதும் தான். இந்த நகரம் என்னை முழுமையாக வசீகரித்துக் கொண்டது. என்று சிரிக்கும் சுலோசனராணி அதன் பிறகு தான் சிறுகதைகளும், நாவல்களும் எழுதத் தொடங்கியதாகக் கூறுகிறார்.

அவர் ஹைதராபாத் வந்த சில காலங்களுக்குள்ளாக தெலுங்குப் பட உலகமும் மொத்தமாக மதராஸில் இருந்து ஹைதராபாத்துக்கு இடம் பெயர்ந்தது. தான் திரையில் பார்த்து ரசித்த தன் ஹீரோவுக்கே கதை எழுதும் பாக்யமும் அவருக்குக் கிடைத்தது. 

அப்படித்தான் அக்கினேனி நாகேஸ்வர ராவ் யத்தனபூடி சுலோசன ராணியின் ‘செக்ரெட்டரி’ என்ற கதையின் நாயகனானார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com