பக்கத்து விட்டு பொறாமைக்காரன்!

ஜப்பானில் சிறு கிராமமொன்றில் வசித்துவந்த குழந்தையில்லாத வயோதிக தம்பதியினர், தங்களுடைய நாயை மிகவும் செல்லமாக வளர்த்து வந்தனர்.
பக்கத்து விட்டு பொறாமைக்காரன்!

ஜப்பானில் சிறு கிராமமொன்றில் வசித்து வந்த குழந்தையில்லாத வயோதிக தம்பதியினர், தங்களுடைய நாயை மிகவும் செல்லமாக வளர்த்து வந்தனர்.

ஒரு நாள் அவர்கள் வீட்டுத் தோட்டத்திலிருந்த மரங்களில் ஒரு குறிப்பிட்ட மரத்தின் கீழ் நாய் சுற்றிச் சுற்றி வட்டமடித்தது. இதைக் கண்டு ஆச்சரியமடைந்த வயோதிகர், ஒரு மண் வெட்டியை எடுத்து வந்து அந்த இடத்தைத் தோண்டத் துவங்கினார். சிறிது நேரத்தில் பூமிக்கு அடியில் தங்க காசுகள் நிறைந்த பெட்டியொன்றை கண்டெடுத்தார். திடீரென கிடைத்த அந்த புதையலால் வயோதிக நம்பதியர் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

நாய் மூலம் இவர்களுக்கு புதையல் கிடைத்த விஷயம் வெளியில் பரவியது. பக்கத்து வீட்டுக்காரனுக்கோ ஒரே ஆச்சரியம். அந்த வயோதிகரிடம் சென்று, உங்களுடைய நாயை சில நாள்களுக்கு எனக்கு கொடுங்கள். என்னுடைய தோட்டத்திலும் ஏதாவது புதையல் இருக்கிறதா என்பதை கண்டுபிடித்துக் கொடுக்குமல்லவா? என்று சொன்னான். வயோதிகருக்கு நாயை அவனிடம் கொடுக்க விருப்பமில்லை. இருந்தாலும் தொடர்ந்து வற்புறுத்தி கேட்கவே, போனால் போகிறதென்று நாயை கொடுக்க ஒப்புக் கொண்டார்.

நாயை வாங்கிக் கொண்டு சென்ற பக்கத்து வீட்டுக்காரன், நாயை தோட்டத்தில் உலவ விட்டான். வெகு நேரமாகியும் தோட்டம் முழுவதும் சுற்றிச் சுற்றி வந்த நாய், இரவு நேரமானதும் தூங்குவதற்கு முன் ஒரு மரத்தின் கீழ் கால்களால் பிறண்டத் தொடங்கியது. அதற்காகவே காத்திருந்த பேராசைக்கார பக்கத்து வீட்டுக்காரன் அவசரமாக மண் வெட்டியைக் கொண்டு வந்து மரத்தின் கீழ் தோண்டத் தொடங்கினான். நாற்றமடித்த சில எலும்புத் துண்டுகள் மட்டுமே கிடைத்தன. இதனால் கோபமடைந்தவன் கையிலிருந்த மண்வெட்டியை நாயின் மீது வீசி எறிந்தான். அடிபட்ட நாய் சுருண்டு விழுந்து இறந்தது.

நாய் இறந்தது கண்டு தங்களுடைய வருத்தத்தை கட்டுப்படுத்த முடியாத அந்த தம்பதியர், செல்லப் பிராணியின் உடலை தங்கள் தோட்டத்திலிருந்த அத்திமரத்தின் கீழ் புதைத்தனர். அன்றிரவு வயோதிகரின் கனவில் வந்த நாய், தன்னை புதைத்து வைத்த இடத்தில் உள்ள மரத்தைத் துண்டுத் துண்டாக வெட்டி முழுமையாக எரித்து அதன் சாம்பலை சேகரித்து வைத்துக் கொள்ளும்படி கூறியது. மறுநாள் காலை அந்த கிராமத்திற்கு வருகை தரும் யுத்தக் கடவுள் டைமியோ மீது அந்த சாம்பலை தூவும்படி கூறியது.

நாய் கனவில் கூறியபடியே மரத்தை வெட்டி. எரித்து சாம்பலை சேகரித்த வயோதிகர், யுத்தக் கடவுள் டைமியோ வரும் வழியில் கையில் சாம்பலுடன் காத்திருந்தார். அவர் அருகில் வந்தவுடன் கையிலிருந்த சாம்பலை ஊதி காற்றில் பறக்க விட்டார். என்ன ஆச்சரியம். சாம்பல் அனைத்தும் நூற்றுக் கணக்கான செர்ரி மலர்களாக மாறி யுத்தக் கடவுள் மீது பொழிந்தன. இதனால் மனங்குளிர்ந்த யுத்தக் கடவுள் அந்த வயோதிகருக்கு ஏராளமான பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

இதையறிந்த பக்கத்துவீட்டு பொறாமைக்காரன், உடனே வீட்டிற்குள் ஓடிச் சென்று அடுப்படியில் இருந்த சாம்பலை கைநிறைய அள்ளி வந்து யுத்தக் கடவுள் மீது ஊதினான். அந்த கரிச் சாம்பல் கண்களில் பட்டு எரிச்சலினால் கண்களை திறக்க முடியாமல் வலியால் டைமியோ துடித்தார். இதைக் கண்ட அவரது படைவீரர்கள் பக்கத்து வீட்டுக்காரனை பிடித்துச் சென்று ஓர் இருட்டுக் குகையில் அடைத்தனர். பேராசைக்காரனான அவன் நீண்ட காலம் தன் வாழ்நாளை அந்த இருட்டுக் குகைக் குள்ளேயே கழிக்க வேண்டியதாயிற்று. வயோதிக தம்பதியினரோ தங்கள் வாழ்நாள் முழுவதும் ஆடம்பரமாக வாழ்ந்தனர்.
 -அ.குமார் 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com