உங்கள் வீட்டு கொலு ஜொலி ஜொலிக்க வேண்டுமா?

கொலுப் படிகளை ஒற்றைப் படையில் 3,5,7 என்று அமைத்து பொம்மைகளை அழகாக அடுக்க வேண்டும்.
உங்கள் வீட்டு கொலு ஜொலி ஜொலிக்க வேண்டுமா?

கொலுப் படிகளை ஒற்றைப் படையில் 3,5,7 என்று அமைத்து பொம்மைகளை அழகாக அடுக்க வேண்டும். படிகளில் பொம்மைகள் வைத்தபிறகு அவற்றுக்கு தெய்வாம்சம் வந்துவிடும். அதனால் வைத்தபின் எடுப்பதோ, இடம் மாற்றி வைப்பதோ கூடாது.

கொலு படிகளுக்கு வெள்ளை நிற துணியைவிட அடர் நிறமுள்ள துணிகளை விரித்தால் பீங்கான் கண்ணாடி பொம்மைகள் பளிச்சென்று தெரியும்.

கொலுப் படிகளின் பின்புறமுள்ள சுவரில் அழகான பெரிய பளபளக்கும் சுவாமி படங்களை மாட்டினால் தெய்வீகம் கமழும்.

கொலுப் படிகளின் அடியில் தினமும் அழகான வண்ணக்கோலங்கள் போட்டால் அழகும் தெய்வீகமும் இணைந்திருக்கும்.

தரையில் ஒரு விரிப்பைப் போட்டு அதில் மணல் பரப்பினால் கொலு முடிந்ததும் சுத்தம் செய்வது சுலபம்.

குழிவான தட்டுகள், கிண்ணங்களில் நீர் நிரப்பி சிறு குளங்களை உருவாக்கலாம். 

கொலு முடிந்தபின் பொம்மைகளை உள்ளே எடுத்து வைக்கும்போது அவற்றை பருத்தித் துணி அல்லது செய்தித் தாள்களில் சுற்றி வைக்க வேண்டும்.

பாலியெஸ்டர் உடைகள் அல்லது பாலிதீன் கவர்களில் வைத்தால் காற்றோட்டமின்றி பொம்மைகளின் நிறம் மங்கி விடும்.

கொலு வைத்துள்ள அறையில் ஜிகினாத்தாள்களை மாலைகளாக தொங்கவிட்டால் அறையே பளபளக்கும்.
- ஆர். ராமலட்சுமி

விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோயில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும்.

ஈசனும், அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை 9 நாட்களும் கண்டால் நவராத்திரி பூஜை செய்தபலன் கிடைக்கும்.

விஜயதசமி தினத்தன்று ஸ்ரீஆயுர் தேவியை போற்றி வழிபட வேண்டும். இதுதான் நவராத்திரி பூஜையின் நிறைவான பூஜையாகும்.

நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும்.

நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபட்டால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.

நவராத்திரி நாட்களில் சுண்ணாம்பு மாவினால் கோலம் போடக்கூடாது. அரிசி மாவைப் பயன்படுத்திதான் கோலமிட வேண்டும். அவ்வாறு செய்வதால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். சுண்ணாம்பு மாவு பயன்படுத்தினாலோ, எதிர்மறையான விளைவுகளே உருவாகும்.

ஒன்பது நாட்களிலும் தேவியாக பாவித்துத் துதிக்க, நமக்குச் சொந்தமல்லாத, பிறர் வீட்டுக் குழந்தையையே அழைத்து வந்து உபசரிக்க வேண்டும். நம் வீட்டு அல்லது நம் உறவினர்களின் குழந்தைகளை தேர்ந்தெடுப்பது கூடாது.

தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கலப் பொருட்களை (மஞ்சள், குங்குமம், வளையல்,ரிப்பன் போன்றவை) ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும்.

தான தர்மங்கள்தான் நவராத்திரி பூஜைகளை நிறைவு செய்ய உதவிகின்றன. ஆகவே நவராத்திரியில் தானமளிப்பதே மிகமிக முக்கியம்.

கன்னிப் பெண்களுக்குப் புதிய ஆடை முதலியவை பரிசாக அளிக்கப்படவேண்டும் என்பது நவராத்திரி விழாவின் முக்கிய அம்சமாகும்.

சரஸ்வதி பூஜை என்ன கிழமையானாலும் கடலை சுண்டல் எதுவும் செய்ய முடியாதவர்கள் பழங்கள் கொடுக்கலாம்.

நவதானியச் சுண்டல் நவக்கிரக நாயகர்களைத் திருப்திப்படுத்தும். கோள்களால் வரக்கூடிய துன்பங்களைத் தடுக்கும்.

நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும்.

நவராத்திரி விரதம் இருப்பவர்கள் தரையில் தான் படுத்து தூங்க வேண்டும்.

அம்பிகை சங்கீதப் பிரியை. எனவே நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாட்டாவது பாட வேண்டும்.

நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால் அம்பாள் மனமகிழ்ந்து வருவார்.

நவராத்திரி 9 நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும்.

கொலு வைத்திருப்பவர்கள் அதன் முன் நவக்கிரக கோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும்.

நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

நவராத்திரி தொடர்பான சுலோகம் மந்திரம் தெரியவில்லையா? கவலை படாதீர்கள் "ஓம் ஸ்ரீ லலிதா தேவியே நம' என்பதை 108 தடவை சொன்னாலே போதும். உரிய பலன் கிடைக்கும்.
- கவிதா பாலாஜிகணேஷ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com