ஒடிசி நடனத்தில் ஜங்கிள் புக்!

ரூட்யார்ட் கிப்லிங் 124 ஆண்டுகளுக்கு முன் குழந்தைகளுக்காக எழுதிய உலக பிரசித்திப் பெற்ற

ரூட்யார்ட் கிப்லிங் 124 ஆண்டுகளுக்கு முன் குழந்தைகளுக்காக எழுதிய உலக பிரசித்திப் பெற்ற கதை 'ஜங்கிள்புக்'. இக்கதை பெங்களூரைச் சேர்ந்த தேவ்ஜனி சென் (52) என்பவர் மூலம், ஒடிசி நடன பாணியில் நாட்டிய நாடகமாக அரங்கேறியுள்ளது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி கார்ட்டூன், அனிமேஷன் மூவி, ஆக்ஷன் மூவி என பல வகையில் பார்த்து ரசிக்கும் 'ஜங்கிள் புக்' கதை தேவ்ஜனிசென் முயற்சியால், நாட்டிய நாடகமாக உருவாகி, இந்தியாவின் பல நகரங்களில் மேடையேறி மக்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

1980-ஆம் ஆண்டு முதல் கட்டாக், புவனேஷ்வர், கொல்கத்தா போன்ற நகரங்களில் பெற்றோருடன் வசித்தபோதே தேவ்ஜனி சென், காலஞ்சென்ற ஒடிசி நடன குரு கேளுசரண் மகோபத்ராவிடம் நடனம் பயின்றுள்ளார். 2003-ஆம் ஆண்டு பெங்களூரில் ஒடிசி நடன பள்ளியை தொடங்கியபோது, முழு அளவில் நடந்த ஸ்மிருதி நந்தன் கலாசார மையத்துடன் இணைந்து, 7 மாணவிகளுடன் நடனப்பள்ளியை தொடங்கினார். இன்று 55 மாணவிகளுடன் பெங்களூரில் இந்திரா நகர் மற்றும் இந்திய அறிவியல் கழகம் ஆகிய இரு இடங்களில் கிளைகளாக இந்த நடனப்பள்ளி வரிவடைந்துள்ளது. ஜங்கிள் புக் கதையை நாட்டிய நாடகமாக தேர்ந்தெடுக்க என்ன காரணம் என்பதை தேவ்ஜனி சென் விளக்குகிறார்:

'கொல்கத்தாவில் வசித்தபோது நான்காவது படிக்கும்போதே நான் பரதம், மணிப்புரி, கதக் ஆகிய நடனங்களை பயிலத் தொடங்கினேன். ஆனால் பிற்காலத்தில் நான் நடனத்தையே தொழிலாக கருதுவேன் என்று நினைத்ததில்லை. மும்பையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்ப ஊழியராக பணியாற்றி வந்தேன். பல ஆண்டுகளாகியும் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்காது என்று தெரிந்ததால், வேலையை விட்டுவிட்டு நடனத்துறையில் முழு ஈடுபாட்டை காட்டினேன். பெங்களூரு வந்த பிறகு நடனப்பள்ளியொன்றை தொடங்கி பயிற்சியளிக்க தொடங்கினேன். அப்போதுதான் ஜங்கிள் புக் பற்றிய நினைவு வந்தது. இந்த கதை உலகம் முழுவதும் பல மொழிகளில் அனைவருக்கும் தெரிந்த கதைதான். பசுமை நிறைந்த காட்டில் வசிக்கும் மௌகிலி என்ற சிறுவனை, கருணை உள்ளம் கொண்ட ஓநாய் தாயன்புடன் கவனித்துக் கொள்வதும், காட்டினுள் வழி காட்டும் வயதான கரடியும் எப்படி அந்த சிறுவனை பாதுகாக்கின்றன என்பதை அறியும்போது, கூடவே நட்பு, வீர செயல்கள் அனைத்தும் அந்த கதையில் அடங்கியிருப்பது தெரிந்தது. இந்த கதை மூலம் குழந்தைகள் வன்முறைக்கு ஆளாவதை தடுக்கவும், பாதுகாப்பு குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முடியுமென என் மனதில் தோன்றியது.

ஒடிசி நடனத்தில் புதுமையை புகுத்த வேண்டுமென்று நினைத்த எனக்கு ஜங்கிள் புக் கதையை நாட்டிய நாடகமாக்க நினைத்தேன். அதே சமயம் அன்னதா பட் நாயக் என்ற புல்லாங்குழல் இசைக் கலைஞர் எனக்கு அறிமுகமானார். ஒடிசி நடன அடிப்படையில் நான் வடிவமைத்த மேடை கதைக்கு ஏற்றபடி முழுமையாக இசையமைத்து கொடுத்தார். இந்த நாட்டிய நாடகத்தில் 35 மாணவிகளை பயன்படுத்தியுள்ளேன்.

ஒடிசியில் ஆண் நடன கலைஞர்களையும் சேர்ப்பதன் மூலம் ஒடிசி நடனத்தை மேம்படுத்த நினைத்தேன். இதற்கு ஒத்துழைப்பு தர ருத்ராக்ஷயா பவுண்டேஷன் முன் வந்தது. ஒடிசி நடனத்தில் 'தாண்டவம்' என்ற பிரிவுக்கு மட்டும் ஆண் நடன கலைஞர்கள் பங்கேற்கின்றனர். இதுவும் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

நம் நாட்டில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குழந்தைகள் வன்கொடுமைக்கு ஆளாவது குறித்தும், பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு புனர்வாழ்வு கொடுக்கவும் தன்னார்வ தொண்டு நிறுவனமான ஃபெயித் பவுண்டேஷனுடன் கைகோர்ப்பதென தீர்மானித்தேன். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி, நிதியுதவி அளிக்க போதுமான நிதிவசதி இல்லை என தெரிந்தது. மேலும் பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகளின் பெற்றோரும் தங்கள் உரிமைகளை உணர்ந்து புகார் அளிக்க தயங்குவதும் தெரிந்தது. இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நினைத்தேன். இதற்காகவே ஜங்கிள் புக் கதையை நாட்டிய நாடகமாக அரங்கேற்றி, அதன்மூலம் கிடைக்கும் தொகையை ஃபெயித் பவுண்டேஷனுக்கு கொடுத்து வருகிறேன். இந்த நடன நிகழ்ச்சியின் மூலம் நான் வெளிப்படுத்தும் கருத்துகள் நிகழ்ச்சியைப் பார்க்கும் மக்கள் மனதில் நிச்சயம் பதியுமென நினைக்கிறேன்'' என்றார் தேவ்ஜனி சென்.

நிகழ்ச்சிகள் நடத்தியதில் வசூலாகும் தொகையை அறக்கட்டளைகளுக்கு கொடுத்து உதவுவது தேவ்ஜனி சென்னுக்கு புதிதல்ல.

2014-ஆம் ஆண்டு நடத்திய நிகழ்ச்சியில் வசூலான தொகையை அப்படியே பெங்களூரில் உள்ள முதியோர் இல்லத்திற்கு கொடுத்து உதவினார். இதே போன்று இவரது குரு கேளுசரண் மகோபத்ராவின் பத்தாவது நினைவு நாளான்று, புவனேஸ்வரில் உள்ள அவரது குழுவினர் அனைவரையும் பெங்களுருக்கு வரவழைத்து நிகழ்ச்சிகளை நடத்தி வசூலான தொகை அனைத்தையும் மூத்த குடிமக்களுக்காக உதவி வரும் ஆஷ்வாசன் பவுண்டேஷனுக்கு கொடுத்து உதவியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com