உங்களாலும் முடியும்! நம்புங்கள்

சென்னை வள்ளுவர்கோட்டத்தை அடுத்து அமைந்துள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் அளித்து வரும்
உங்களாலும் முடியும்! நம்புங்கள்

சென்னை வள்ளுவர் கோட்டத்தை அடுத்து அமைந்துள்ளது அன்னை தெரசா மகளிர் வளாகம். அங்கு 'மாடித் தோட்ட  பயிற்சி'யை சுயஉதவிக் குழு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த வகையில், அங்கு மாடித் தோட்ட பயிற்சி பெற்று, தற்போது மாடி தோட்ட பயிற்றுநர்களாக மாறியிருக்கின்றனர் 'மாடித் தோட்ட தொழிற் குழு' அமைப்பினர்களான  ரேவதி, ஸ்ரீமதி, புனிதா, காஞ்சனா  ஆகிய நால்வர். அவர்களில் ரேவதி  நம்மிடம் பகிர்ந்து கொண்டவை: நாங்கள் நால்வரும் அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள். கடந்த 12 ஆண்டுகளாக ஒவ்வொருவரும் தனித்தனியாக சுயஉதவிக்குழுவை நடத்தி வருகிறோம். சமீபத்தில் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் மாடித் தோட்ட பயிற்சி அளிப்பதை அறிந்து நாங்கள் நால்வரும்  பயிற்சி பெறலாம் என்று முடிவு செய்து வந்தோம்.

15 நாள் பயிற்சி, அந்த பதினைந்து நாளும் நாங்கள் மகளிர் வளாகத்திலேயே தங்கி பயிற்சி பெற்றோம்.  பின்னர் பயிற்சி முடிந்து திரும்பியதும். அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது.  மாடித்தோட்டம்  பயிற்சி பெற்ற எங்களுக்கு  வேலை வாய்ப்பும் அவர்களே ஏற்படுத்தி தந்தார்கள்.  

இதன் மூலம் கிருஷ்ணசாமி கல்லூரியில் முதன்முதலில்  காய்கறி, கீரை பயிர்களை  25 கூடைகளில் அமைத்து தந்தோம்.   நாங்கள்  அமைத்த பயிர்கள் செழித்து வளர ஆரம்பித்தது. இதனால் கல்லூரி முதல்வர், தனது  வீட்டில் அமைத்து தரும்படி கேட்டார்.  அதன்பிறகு கிண்டி என்யூஎல்எம் அலுவலகம், மகேஸ்வரி ஐஏஎஸ் அம்மாவின் வீடு என ஒவ்வொரு ஆர்டராக வரத் தொடங்கின. பெரும்பாலும்  அரசு அலுவலகங்கள், அரசு பள்ளிகள் என அரசு சார்ந்த இடங்களில்தான் வாய்ப்புகள் வந்தன.  நாங்கள் நன்றாக மாடித்தோட்டம் அமைத்து கொடுக்க  தொடங்கியதும்.   வங்கியில் லோன் பெற்று  மேலும் விரிவு படுத்த  தொடங்கியுள்ளோம்.  தற்போது  நால்வரும் சேர்ந்து  எங்களுக்கென ’மாடித் தோட்ட தொழிற்குழு'  என அமைப்பை உருவாக்கி அதன்மூலம் மாடித்தோட்டம் அமைத்து தருகிறோம். 

நவம்பர் மாதம்தான்  பயிற்சியைப் பெற்றோம். அதற்குள் 300 கூடைகளுக்கு மேல் அமைத்துக் கொடுத்துவிட்டோம். தற்போது,  அன்னை தெரசா வளாகத்தில் பயிற்சி பெற வருபவர்களுக்கு எங்களை பயிற்சி ஆசிரியராகவும் நியமித்திருக்கிறார்கள். இதுவரை 22 பேருக்கு நாங்கள் பயிற்சியும்  அளித்துள்ளோம்.   

சென்னையில் சிறந்த முறையில் மாடித் தோட்டம் அமைத்து கொடுத்ததற்காகவும், சிறந்த  பயிற்றுனர்களாகவும்   எங்களைத் தேர்வு செய்து மகளிர் வளாகத்தின் மூலம் பரிசு அளித்துள்ளனர். மாடித் தோட்டம் அமைப்பதற்கான அனைத்து உபகரணங்களையும் நாங்களே எடுத்துச் சென்றுவிடுவோம்.  இது நம்மால்  முடியுமா?  என்ற தயக்கத்துடன் களமிறங்கிய எங்களுக்கு  முயன்றால்  நிச்சயம் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது'' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com