உன் பாட்டு என் பெயரில் இருக்கக் கூடாதா?

"மணப்பாறை மாடுகட்டி மாயவரம் ஏருபூட்டி' - என்ற "மக்களைப் பெற்ற மகராசி' படத்தில் இடம் பெற்ற இப்பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான பாடல். இதை எழுதியவரும் மருதகாசிதான்
உன் பாட்டு என் பெயரில் இருக்கக் கூடாதா?

ஆனந்தத் தேன்காற்று  தாலாட்டுதே-11

"ஊருக்கு உழைப்பவன்' படத்தில் "பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்' என்ற எனது பாடல் புலமைப்பித்தன் பெயரிலும், புலமைப்பித்தன் எழுதிய "அழகெனும் ஓவியம் இங்கே - உனை எழுதிய ரவிவர்மன் எங்கே?' என்ற பாடல் என் பெயரிலும் இசைத் தட்டில் தவறாக இடம் பெற்று விட்டது.  படம் வெளிவந்த நேரத்தில் வீனஸ் பிக்சர்ஸ்" நிறுவனத்திலிருந்து பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்" என்ற பாடல் முத்துலிங்கம் எழுதியது. அவர் பெயரிலேயே அந்தப் பாடலை ஒலிபரப்புங்கள் என்று வானொலி நிலையத்திற்குக் கடிதம் கொடுத்திருந்தார்கள். குறிப்பிட்ட சில காலம் வரை என் பெயரைச் சொன்னார்கள். அதன் பிறகு என் பெயருக்குப் பதிலாக புலமைப்பித்தன் பெயரையும் அவரது பெயரைச் சொல்ல வேண்டிய பாடலில் எனது பெயரையும் தவறாகச் சொல்லிவந்தார்கள். இதை வானொலி நிலையத்தில் கூறி மாற்றச் சொன்னேன். இப்போது எப்படிச் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.

நான் சிங்கப்பூருக்குச் சென்றபோது அங்கும் இதேபோல் இந்தப் பாடலில் பிரச்னை இருந்தது. என் பெயரை அந்தப் பாட்டில் குறிப்பிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அவர்களும் மாற்றிக் கொண்டார்கள்.

அதுபோல் இளையராஜா இசையில் கே.பாலசந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த "உன்னால் முடியும் தம்பி' என்ற படத்தில்,
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது...
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது...
என்று ஒரு பாடல் நான் எழுதியிருந்தேன். இசைத்தட்டில் கங்கை அமரன் எழுதியது என்று தவறாகப் போடப்பட்டுவிட்டது. கங்கை அமரன் அந்தப் படத்தில் பாடலே எழுதவில்லை. எப்படி அவர் பெயர் அதில் இடம் பெற்றது என்றும் தெரியவில்லை. நானே வானொலி நிலையம் சென்று இசைத்தட்டில் உள்ள தவற்றைத் திருத்தி என் பெயரை எழுதச் சொன்னேன். அதன் பிறகு என் பெயர்தான் சொல்லி வருகிறார்கள். அதற்கு நன்றி.

நான் சிங்கப்பூர் சென்றிருந்தபோது சிங்கப்பூர் வானொலியில் என்னைப் பேட்டியெடுத்தார்கள். அங்கும் இந்தப் பாடல் கங்கை அமரன் பெயரில் இருந்தது. அதையும் அங்கு மாற்றினேன். இப்படிச் சில கவிஞர்கள் பாடல் வேறு சில கவிஞர்கள் பெயரில் இன்னும் ஒலிபரப்பப்பட்டு வருகிறது.

இப்படித்தான் சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரித்த "செங்கோட்டை' என்ற படத்தில் வித்யாசாகர் இசையில் "பூமியே பூமியே பூமழை நான் தூவவா' என்றொரு பாடல் எழுதியிருந்தேன். படத்தின் டைட்டிலில் மட்டும் என் பெயர் இருக்கிறது. கேசட்டில் என் பெயரே இல்லை. இது கம்பெனிக்காரர்கள் செய்த தவறு. 

இதுபோல் "குமரிப் பெண்ணின் உள்ளத்திலே' என்ற படத்தில் நான் எழுதிய பாடல் வாலி பெயரிலும் வாலி எழுதிய பாடல் என் பெயரிலும் தவறுதலாக இடம் பெற்றிருக்கிறது. ரிக்கார்டு கம்பெனிக் காரர்களின் கவனக் குறைவுதான் இதற்குக் காரணம்.

மேலும் வாலி எழுதிய பாடல்களைக் கண்ணதாசன் பாடலென்றும் கண்ணதாசனின் பாடல்களை வாலி எழுதியதென்றும் பலர் தவறாகச் சொல்லி வருகிறார்கள்.

வாலி எழுதிய சில பாடல்களைக் கண்ணதாசன் பாடல் என்று பலர் சொல்வது போல் மருதகாசி எழுதிய சில தத்துவப் பாடல்களையும் கண்ணதாசன் எழுதியது என்று சிலர் சிறப்பித்து சில இதழ்களில் எழுதியுள்ளனர். அதில் ஒன்று.
முதல் என்பது தொடக்கம்
முடிவென்பது அடக்கம்
விடைஎன்பது விளக்கம்
விதிஎன்பது என்ன?
உறவென்பது பெருக்கல்
பிரிவென்பது கழித்தல்
வழிஎன்பது வகுத்தல்
வாழ்வென்பது என்ன?
இது "பூவும் பொட்டும்' என்ற படத்தில் மருதகாசி எழுதிய பாடல். இது கண்ணதாசன் எழுதியது என்று ஒரு நண்பர் ஒரு சிற்றிதழில் எழுதியிருந்தார். கண்ணதாசனைத் தவிர வேறு கவிஞர்கள் யாரும் சிறப்பாக எழுத மாட்டார்கள் என்பது அந்த நண்பரின் நம்பிக்கைபோலும்.

பானுமதி, கே.ஏ. தங்கவேலு நடித்த "ரம்பையின் காதல்' என்ற படத்தில் "சமரசம் உலாவும் இடமே... நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே' என்ற தத்துவப் பாடல் மருதகாசி எழுதியது. இது பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதியதாகத் தவறாக அவர் பாடல் தொகுப்பில் முதல் பதிப்பில் இடம் பெற்றிருந்தது.

"மணப்பாறை மாடுகட்டி மாயவரம் ஏருபூட்டி' - என்ற "மக்களைப் பெற்ற மகராசி' படத்தில் இடம் பெற்ற இப்பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான பாடல். இதை எழுதியவரும் மருதகாசிதான். இதுவும் பட்டுக்கோட்டையின் பாடல் தொகுப்பில் இருந்தது.

நான் சில கூட்டங்களில் இதைப் பற்றிப் பேசியிருக்கிறேன். "சினிமா எக்ஸ்பிரஸ்' பத்திரிகையில் எழுதிய கட்டுரையிலும் குறிப்பிட்டிருக்கிறேன். அதற்குப் பிறகு வந்த பதிப்புகளில் அந்தத் தவறு திருத்தப்பட்டிருக்கிறது.

"புதையல்' படத்தில் வருகிற "விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே' என்ற பாடலும் "தங்க மோகனத் தாமரையே' என்ற பாடலும் ஆத்மநாதன் எழுதியது. இது பட்டுக்கோட்டையின் பாடல் தொகுப்பில் முதல் பதிப்பில் இடம் பெற்று அதன் பிறகு திருத்தப்பட்டது.
அதுபோல் "இரும்புத்திரை' என்ற படத்தில் 
ஏரைப் புடிச்சவரும் இங்கிலீசுப் படிச்சவரும்
ஏழை பணக் காரரெல்லாம் ஒண்ணுங்க ஒண்ணுங்க ஒண்ணுங்க 
- இப்ப
எல்லாரும் சமத்துவம் எண்ணுங்க எண்ணுங்க எண்ணுங்க
உள்ள நேரம் டூட்டிக்குமேல் ஒருநிமிஷம் ஆச்சுனாலும்
ஓவர்டைம் கொடுக்கச் சொல்லி ஆர்டரு ஆர்டரு ஆர்டரு 
- இந்த
உளவு நல்லாத் தெரிஞ்சவரு லீடரு லீடரு லீடரு...
என்ற பாடல் கொத்தமங்கலம் சுப்பு எழுதியது. அதுவும் பட்டுக்கோட்டை தொகுப்பில் தவறாக இடம் பெற்றிருந்தது. இப்போது திருத்தப்பட்டுவிட்டது. இதற்கெல்லாம் காரணம் அந்தப் பாடல்களைத் தொகுத்தவர்களின் கவனக் குறைவுதான். வேறெதுவும் இல்லை. 

ஏன், நான் எழுதிய "காஞ்சிப்பட்டுடுத்தி கஸ்தூரிப் பொட்டுவைத்து' என்ற பாடல் வாலி எழுதியதாக "வாலி ஆயிரம்' பாடல் தொகுப்பிலே தவறாக இடம் பெற்றிருக்கிறது. ராஜ் டி.வி. நடத்திய வாலி தலைமையில் நடைபெற்ற ஒரு கவியரங்கில் நான் பாடும்போது  இந்தத் தவற்றைச் சுட்டிக் காட்டினேன். உடனே அண்ணன் வாலி, "உன் பாட்டு என் பெயரில் இருக்கக் கூடாதா?' என்று அவருக்கே உரிய நகைச்சுவை பாணியில் உரிமையோடு கேட்டார்.

நானும் "இருக்கலாம்' என்று சிரித்துக் கொண்டே சொன்னேன். திரைப்படக் கவிஞர்களில் என் குடும்பத்தின் மூத்த அண்ணனாக நான் நெருங்கிப் பழகிய ஒரே கவிஞர் அண்ணன் வாலிதான். அவர் பாடல்களைப் பற்றியெல்லாம் பின்னால் சொல்லவிருக்கிறேன்.

இது இப்படியென்றால் பல்லவி மட்டும் ஒரு கவிஞர் எழுதி சரணத்தை வேறொரு கவிஞர் எழுதி கடைசியில் பல்லவி எழுதிய கவிஞர் பெயரிலே வெளிவந்த பாடல்கள் சிலவுண்டு.
"ரத்தக்கண்ணீர்' படத்தில் நடிகை எம்.என்.ராஜம் ஆடுகின்ற காட்சிக்கு ஒரு பாடல்.
ஆளை ஆளைப் பார்க்கிறார்
ஆளை ஆளைப் பார்க்கிறார்
ஆட்டத்தைப் பார்த்திடாமல்
ஆளை ஆளைப் பார்க்கிறார்
இந்தப் பல்லவியை எழுதியவர் உடுமலை நாராயணகவி. இது இந்தி மெட்டுக்கு எழுதிய பாடல். இந்தப் படத்திற்கு இசை அமைத்தவர் இசைச் சித்தர் சி.எஸ். ஜெயராமன். பின்னணி இசையமைத்தவர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி.
பல்லவிக்குப் பிறகு சரணம் அவருக்கு சரியாக வரவில்லை. அதனால் மருதகாசியை அழைத்து சரணத்தை எழுத வைத்தார்கள் கவிராயருடைய சம்மதத்துடன்.
சிகரெட்டை ஊதித் தள்ளி
சேர்மீது துள்ளித் துள்ளி
சிநேகிதர் தம்மைக் கிள்ளி
சிரிக்கிறார் ஏதோ சொல்லி
சிங்காரம் பண்ணுறார்
அங்கொரு ரொக்கப்புள்ளி
கல்யாண ஆசையாலே கண்ணைக் கண்ணைக் காட்டுகிறார்...
இப்படி மூன்று சரணங்கள் மருதகாசி எழுதினார். இது நாராயணகவி பெயரில் தான் வரும். அந்த அளவுக்கு அவர்கள் இருவருக்கும் ஒரு ஈடுபாடு.

கவிராயருக்கு மருதகாசி சீடரைப் போன்றவர். அதனால் எதுவாக இருந்தாலும் தான் எழுத வேண்டிய பாடல் சரியாக வரவில்லையென்றால் மருதகாசியைத் தான் எழுத அழைப்பார். இதை மருதகாசி அண்ணன் என்னிடம் சொல்லியிருக்கிறார். இதுபோல் எம்.ஜி.ஆர். பானுமதி நடித்த "அலிபாபாவும் நாற்பது திருடர்களும்' என்ற படத்தில் பாடல் எழுதுவதற்கு மாடர்ன் தியேட்டர்ஸார் உடுமலை நாராயணகவியை அழைத்தபோது, எழுதி டியூன்பண்ண வேண்டிய பாடல் எத்தனை? மெட்டுக்கு எழுத வேண்டிய பாடல் எத்தனையென்று கேட்டிருக்கிறார்.

மாடர்ன் தியேட்டர்ஸில் பெரும்பாலும் இந்திப் பட மெட்டுக்களைத்தான் பயன்படுத்துவார்கள். அதனால் கவிராயர் அப்படிக் கேட்டிருக்கிறார். எழுதி இசையமைக்க வேண்டிய பாடல் இரண்டு. மற்றைய பாடல்கள் எல்லாம் மெட்டுக்குத்தான் எழுத வேண்டியிருக்கும் என்றார்கள். 

மெட்டுக்கு எழுத வேண்டிய பாடல்களை மருதகாசியை வைத்து எழுதுங்கள். எழுதி இசையமைக்க வேண்டிய பாடல்களை நான் எழுதுகிறேன் என்று மருதகாசியையும் கூட்டிப் போயிருக்கிறார். கடைசியில் உடுமலையார் எழுதிய பாடல் அதில் இடம் பெறாமல் எல்லாப் பாடல்களையும் மருதகாசியே எழுதினார். அதில் எல்லாப் பாடல்களுமே பிரபலமான பாடல்கள். இந்தப் படத்திற்கு வசனம் எழுதியவர் ஏ.எல். நாராயணன். எம்.ஜி.ஆர். படத்திற்கு ஏ.எல். நாராயணன் வசனம் எழுதிய முதல் படம் 
இதுதான்.
(இன்னும் தவழும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com