முதல்வர் நாற்காலிக்கு ஒரு கால் பட்டுக்கோட்டையார்!

இதுவரை தமிழ் சினிமாவுக்கு 720 பேர் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள் என்றாலும் ஒரு சில கவிஞர்களின் பெயர்தான் எல்லாருக்கும் தெரிந்த பெயராக இருக்கும்.
முதல்வர் நாற்காலிக்கு ஒரு கால் பட்டுக்கோட்டையார்!

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 19

சில வாரங்களுக்கு முன் நான் எழுதிய கட்டுரையொன்றில், இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் "சக்கரவர்த்தி திருமகள்' படத்திற்காக ஒரு பாடலைப் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்திடம் காத்திருந்து எழுதி வாங்கினார் என்று குறிப்பிட்டிருந்தேன்.
அந்தப் பாடல் 
பொறக்கும்போது பொறந்த குணம்
போகப் போக மாறுது - எல்லாம்
இருக்கும் போது பிரிந்த குணம்
இறக்கும் போது சேருது 
- என்ற பாடலாகும்.
"சங்கத்துப் புலவர் முதல் தங்கத் தோடா பொற்பதக்கம் வங்கத்துப் பொன்னாடை பரிசளித்தார்' என்று நான் குறிப்பிட்ட பாடல் பட்டுக்கோட்டை எழுதியதல்ல - உரையாடல் ஆசிரியர் ஏ.எல். நாராயணன் பட்டுக்கோட்டை பற்றி எனக்குச் சொன்ன குறிப்பைத் தேடிப் பார்த்தபோதுதான் நான் எழுதியது தவறென்று புரிந்தது.

அந்தப் பாட்டின் புரட்சிகரமான கருத்துக்களைப் பார்த்தபோது பட்டுக்கோட்டை தான் எழுதியிருப்பார் என்ற நம்பிக்கையில் பல்லாண்டு காலம் மேடைகளில் தவறாகவே சொல்லி வந்திருக்கிறேன் என்பதும் புரிந்தது.

அதைத் தவறென்று தொலைபேசியில் முதன் முதல் என்னிடம் கூறியவர் கவிப்பேரரசு வைரமுத்து. அதற்கடுத்து புதுச்சேரியிலிருந்து பாரதி வசந்தன் என்ற கவிஞரும் தொலைபேசியில் கூறினார். அவர்கள் சந்தேகத்தோடுதான் கூறினார்கள். தீர்மானமாகச் சொல்லவில்லை.

அந்தப் பாடல் பற்றிய விவரங்களைத் தேடிப் பார்த்தபோதுதான், அந்தப் பாடலை எழுதியவர் கிளவுன் சுந்தரம் என்பதை உணர்ந்து கொண்டேன். இந்தக் கிளவுன் சுந்தரம் திரைப்படங்களுக்கு ஒன்பது பாடல்கள் வரை எழுதியிருக்கிறார் என்பதையும் தெரிந்து கொண்டேன்.

பழைய திரைப்பாடல்களைப் பற்றி எனக்கும் அண்ணன் வாலிக்கும் தெரிந்த அளவுக்கு மற்றவர்களுக்குத் தெரியாது என்ற நினைப்பில் இருந்து விட்டேன். யானைக்கும் அடி சறுக்கும் என்பதை அனுபவத்தில் அறிந்து கொண்டேன். தினமணி வாசகர்கள் எனது தவற்றைப் பொறுத்தருள வேண்டும்.

அதைப் போல மற்றொரு  கட்டுரையில் "அவன்', "பாட்டாளியின் சபதம்',  "ஆன்' ஆகிய மொழி மாற்றுப் படங்களுக்கு வசனம் பாடல்கள் எழுதியவர் கம்பதாசன் என்று குறிப்பிட்டிருந்தேன். இந்த மூன்று படங்களுக்கும் பாடல்கள் மட்டும்தான் கம்பதாசன் எழுதினார். "அவன்' படத்திற்கும் "பாட்டாளியின் சபதம்' படத்திற்கும் வசனம் எழுதியவர் எஸ்.டி. சுந்தரம். "ஆன்' படத்திற்கு வசனம் எழுதியவர் பி.எஸ். ராமையா என்பதையும் வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

இதுவரை தமிழ் சினிமாவுக்கு 720 பேர் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள் என்றாலும் ஒரு சில கவிஞர்களின் பெயர்தான் எல்லாருக்கும் தெரிந்த பெயராக இருக்கும். அதில் பாபநாசம் சிவன், உடுமலை நாராயணகவி, மருதகாசி, கண்ணதாசன், கம்பதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், தஞ்சை ராமையாதாஸ், சுரதா, கு. மா. பாலசுப்பிரமணியம், வாலி, புலமைப்பித்தன், வைரமுத்து ஆகியோர் குறிப்பிடத்தக்கவராக இருப்பார்கள்.

ஆர்மோனியப் பெட்டிக்கு அழகு தமிழை அறிமுகப்படுத்திய பெருமை கண்ணதாசனுக்கு உண்டென்றால் பாடல்களில் வெடி குண்டுக் கருத்துக்களை வைத்து வீசிய பெருமை பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்திற்கே உண்டு.

பட்டுக்கோட்டை என்றதும் அரசியல்வாதிகளுக்கு திராவிடக் கழகத்தைச் சேர்ந்த பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் பெயர் நினைவுக்கு வரும். திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பெயர் நினைவுக்கு வரும். நாட்டைத் திருத்தத் தனது பேச்சைப் பயன்படுத்தியவர் அழகிரிசாமி. சமுதாய சீர்கேட்டைத் திருத்தத் தனது பாட்டைப் பயன்படுத்தியவர் கல்யாணசுந்தரம்.

திரையுலகில் ஐந்தாண்டுக் காலம்தான் பாடல் எழுதினார் என்றாலும் எழுதிய காலம்வரை யாரும் நெருங்க முடியாத பெரும் சூறாவளியாகச் சுற்றிச் சுழன்றடித்தவர் இவர்.

கண்ணதாசனுக்குப் பிறகுதான் பட்டுக்கோட்டை கலையுலகில் புகுந்தார் என்றாலும் தத்துவப் பாடல்களில் கண்ணதாசனுக்கு நிகராக நிமிர்ந்து நின்றவர்.

ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே - அவன்
ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே...

இரைபோடும் மனிதனுக்கே
இரையாகும் வெள்ளாடே...
இதுதான் உலகம் வீண் அநுதாபம் கொண்டுநீ
ஒருநாளும் நம்பிடாதே...
இவை போன்ற எத்தனையோ பாடல்களை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

இலக்கிய உலகில் பாரதியாரும், பாரதிதாசனும் எப்படிப் புரட்சிக் கவிஞர்களாகப் புகழ் பெற்றார்களோ அப்படித் திரைப்பாட்டுலகில் கண்ணதாசனும், பட்டுக்கோட்டையும் எழுச்சிக் கவிஞர்களாகப் புகழ் பெற்றவர்கள்.

கண்ணதாசனுக்கும் பட்டுக்கோட்டைக்கும் ஒற்றுமையும், வேற்றுமையும் உண்டு. இரண்டு பேரும் அசைவப் பிரியர்கள் இதுதான் ஒற்றுமை. பணத்தைத் தண்ணீராகச் செலவழித்தவர் கண்ணதாசன். பணத்தைத் தங்கத்தைப் போல் பாதுகாத்தவர் பட்டுக்கோட்டை. பாட்டெழுதி வாங்கிய பணத்தையும் நோட்டெழுதி வாங்கிய பணத்தையும் கொண்டு படம் தயாரித்துக் கடனாளியானவர் கண்ணதாசன். பாட்டுடெழுதி வாங்கிய பணத்தை ஊருக்கனுப்பி தோட்டம் துரவுகள் வாங்கிப் போட்டவர் பட்டுக்கோட்டை. அந்தவகையில் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு செயல்பட்டவர் இவர். திரைப்படக் கவிஞர்களில் பாடல் தொகுப்பு முதலில் இவருக்குத்தான் வெளிவந்தது. அதன்பிறகுதான் கண்ணதாசனுக்குப் பாடல் தொகுப்பு வந்தது.

"கண்ணதாசனும் வாலியும் எனக்கு இரண்டு கண்களென்றால் பட்டுக்கோட்டை எனது நெற்றிக்கண்' என்று கூறினார் இசையமைப்பாளர் அண்ணன் எம்.எஸ். விசுவநாதன்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். முதலமைச்சர் ஆனபோது, "நான் அமர்ந்திருக்கும் நாற்காலிக்கு ஒரு கால் பட்டுக்கோட்டையார் என்றும் மற்ற மூன்று கால்கள் வெவ்வேறு கவிஞர்கள்' என்றும் கூறினார். வெவ்வேறு கவிஞர்கள் யார் யார் என்று அவர் கூறவில்லை. வெளிப்படையாகச் சொன்னது பட்டுக்கோட்டை ஒருவரைத்தான்.

திரைப்படத்திற்காக பட்டுக்கோட்டை எழுதியது இருநூற்று நாற்பத்தைந்து பாடல்கள்தான். படத்திற்காக எழுதி படத்தில் வராத பாடல்களையும் சேர்த்துக் கணக்கெடுத்தால் கூட முந்நூற்றுக்கும் குறைவாகத்தான் இருக்கும். மூவாயிரம் பாடல்கள் எழுதியவன் பெறக்கூடிய புகழை முந்நூற்றுக்கும் குறைவான பாடல்களே எழுதி இவர் பெற்றாறென்றால் இவர் பாடல்களில் இருந்த கருத்துக்கள்தான் அதற்குக் காரணம். இத்தனை ஆயிரம் பாடல்கள் எழுதினார் என்பதற்காக ஒரு கவிஞனுக்குப் புகழ் வந்துவிடாது.

சமுதாயம் பலன் பெறத்தக்க கருத்துக்களை எந்த அளவில் சொன்னான் என்பதை வைத்தே ஒரு கவிஞனுக்குப் பெயரும் புகழும் சேரும். சிலர் இவன் இத்தனை புத்தகம் எழுதியிருக்கிறான் என்று கணக்குச் சொல்வார்கள். சரி, என்ன எழுதியிருக்கிறான் என்று பார்த்தால் ஒன்றும் தேறாது. 

பட்டுக்கோட்டைக்கிருந்த சிந்தனைக் கூர்மை பட்டப்படிப்பு படித்தவர்க்கில்லை. படிப்பு வேறு. அறிவு வேறு. பட்டப்படிப்பு படிக்காதவர்கள் தான் அறிவியல் மேதைகளாய் அகிலத் தலைவர்களாய் உலக அளவில் உயர்ந்திருக்கிறார்கள். சுயசிந்தனையாளரான பெரியார் எந்தக் கல்லூரியில் படித்தார்? அவருக்கிணையான சிந்தனையாளர்கள் உலக அளவில் இன்று யாரேனும் இருக்கிறார்களா?

சிலம்புச்செல்வர் ம.பொ.சி. பட்டம் பெற்றவரா? அவரில்லையென்றால் தமிழ்நாட்டின் வடக்கெல்லையை நாம் மீட்டிருக்க முடியாதே.

அதிகம் படித்த அறிவாளி என்பவன் நம்மையும் நமது நாட்டையும் ஏய்ப்பவன். அதிகம் படிக்காத சுயசிந்தனையுள்ள அறிவாளிதான். நாட்டையும் சமுதாயத்தையும் காப்பவன்.

படிக்காதவர்களே பாவபுண்ணியம் பார்த்து நடக்கும் பண்புள்ளவர்கள். பட்டுக்கோட்டை இதைப் பாடலிலே சொல்வார்,
எழுதிப் படிச்சு அறியாதவன்தான்
உழுது உழைச்சுச் சோறு போடுறான்
எல்லாம் தெரிஞ்சவன் ஏதேதோ பேசி
நல்லா நாட்டைக் கூறு போடுறான்
அவன் சோறு போடுறான்
இவன் கூறு போடுறான்
என்பார்.
(இன்னும் தவழும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com