தற்கொலை சங்கிலிகள்!

ஒரு தற்கொலையை ஊடகங்கள் பிரதானப்படுத்தும்போது அதே போன்ற தற்கொலைகள் நிகழ வாய்ப்பிருக்கிறது.
தற்கொலை சங்கிலிகள்!

உச்சியிலிருந்து தொடங்கு-13

தற்கொலை என்பது எந்த அளவிற்கு தொற்றுநோயைப் போல பற்றிக் கொள்ளக் கூடியது என்பது திகைப்பூட்டக்கூடிய உண்மை.  பதின்மப் பருவத்தைச் சார்ந்தவர்கள் யாரேனும் தற்கொலை புரிந்து கொண்டதைப் பார்த்தாலோ, படித்தாலோ அவர்களும் இந்த உணர்வால் உந்தப்படுவதுண்டு.  தீவிரமான பிரச்னையோடு போராடுபவர்களுக்கு அடுத்தவர்கள் தற்கொலை அருமையான தீர்வாகத் தெரிகிறது.  சில நேரங்களில் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று சிந்திப்பவர்களுக்கு மற்றவர்களுடைய தற்கொலை உந்துசக்தியாக உதவுகிறது. அது அவர்களுக்கு அனுமதி கிடைத்ததைப்போல எல்லாக் கதவுகளையும் திறந்துவிடுகிறது.  அது அவர்களுக்கு முன்மாதிரியாகவும் திகழ்கிறது.  

அதிகம் பிரபலப்படுத்தப்படும் தற்கொலைகளும், உடன் பணியாற்றுபவர்கள் தற்கொலைகளும் ஒருவரிடம் பதுங்கியிருக்கும் தற்கொலை உணர்வை பாயச் செய்து விடுகின்றன. 

அமெரிக்காவில் 1948 முதல் 1983 வரை நடந்த தற்கொலைகளை ஒருவர் ஆராய்ந்தார்.  அரசியல் புள்ளிகளும், பொழுதுபோக்குக் கலைஞர்களும் தற்கொலை செய்யும்போது நாடு தழுவிய தற்கொலை விகிதம் அதிகரித்திருந்தது.  

ஒரு தற்கொலையை ஊடகங்கள் பிரதானப்படுத்தும்போது அதே போன்ற தற்கொலைகள் நிகழ வாய்ப்பிருக்கிறது. இங்கிலாந்தில் அரசியல் காரணங்களால் அதிகம் விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு தற்கொலை அதே போன்ற 82 பேரை தீக்குளிக்க வைத்தது.  அவ்வாறு தற்கொலை செய்துகொண்டவர்கள் யாருக்கும் அரசியல் பின்னணி கிடையாது.  உணர்ச்சிகளால் பாதிக்கப்பட்ட அவர்கள், அப்படி ஒரு முடிவைத் தேர்ந்தெடுக்க அந்த அரசியல் ரீதியான தற்கொலை அச்சாரமாக அமைந்தது.  சில நேரங்களில் அறிவுறுத்துவதற்காக அமைந்த ஊடக நிகழ்ச்சிகள்கூட அதைப் போன்றே தற்கொலை செய்யத் தூண்டியிருக்கின்றன.  

ஒரு பதின்ம வயதைச் சார்ந்தவர் ரயிலுக்கு முன்னால் விழுந்து தற்கொலை செய்துகொள்வதை தொலைக்காட்சி ஒன்று காட்டியது. அதைப் பார்த்த மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்த பல பதின்ம வயது மாணவர்கள் அதேபோன்று தற்கொலை செய்து கொண்டார்கள். ஆண்களில் தற்கொலை விகிதம் 175 சதவிகிதமாக உயர்ந்தது.  எனவே, மரணம், தற்கொலை போன்றவற்றைப் பிரமாதப்படுத்துவதை ஊடகங்கள் தவிர்ப்பது அவசியம்.    

தற்கொலை முயற்சிகளைப் பார்த்து மற்றவர்கள் முயற்சி செய்வதில்லை. ஆனால் அருகிலேயே  ஒரு தற்கொலை வெற்றிகரமாக நடந்தால் அது சிலரைப் பாதிக்க வாய்ப்புண்டு.  இது தற்கொலைக் கொத்து என்று அழைக்கப்படுகிறது. அதுபோன்ற தற்கொலைக் கொத்துகள் நிகழ்ந்தால் அதிகப்படியான மூலாதாரங்களை தற்காலிகமாக அவற்றை நோக்கி செலுத்தி மேலும் அசம்பாவிதம் நிகழாமல் பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுபோன்ற தற்கொலைக் கொத்துகள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், பள்ளிக் கல்லூரி மாணவர்கள், அமெரிக்க வம்சாவளியினர், கடற்படை பிரிவினர், சிறைக்கைதிகள், மதப்பிரிவினர் ஆகியோரிடம் அதிகம் காணப்படுகிறது. ஒருவருக்கொருவர் பரிச்சயமில்லாமலேயே இது நிகழ்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.  

சில நேரங்களில் கற்பனையான பாத்திரங்கள் கூட தற்கொலையைத் தூண்டக் காரணமாக இருக்கலாம். ஒரு திரைப்படத்தில் தற்கொலை உயர்ந்ததாகச் சித்திரிக்கப்பட்டால் அதேபோன்ற மனநிலை உள்ளவர்கள் தங்களைச் சாகடிக்க முடிவு செய்வதுண்டு. திரையில் காதல் தோல்வியால் நாயகனும், நாயகியும் வாழத்தான் முடிவதில்லை  சாவிலாவது ஒன்று சேரலாம் என்று தற்கொலை செய்வதைப்போல உச்சக்கட்ட காட்சி அமைந்தால் அது தோல்வியடையும் பலரை அதைப்போல செய்யத் தூண்டும். இதை "காப்பிகேட் தற்கொலை' என்று அழைக்கிறார்கள். 

கதேவின் பிரபல நாவல் ஒன்றின் நாயகன் முடிவைப் படித்து தற்கொலையை நாடிய இளைஞர்கள் உண்டு.  தஸ்தாவஸ்கியின் நாவல் ஒன்றிலும் தன்னைத்தானே சுட்டுக்கொண்ட நாயகனின் தற்கொலையை அறிவுப்பூர்வமானது என்று குறிப்பிடுகிறார்.        

பிரபலமான பலர் தற்கொலை செய்துகொள்வதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.  தாமஸ் சேட்டர்டன், வர்ஜீனியா உல்ஃப், ஹார்ட் கிரேன், டைலன் தாமஸ்,டெல்மோர் ஷ்வார்ட்ஸ், மால்கம் லோரி, ஜான் பெரிமன், சில்வியா ப்ளாத், மாயாகவ்ஸ்கி போன்ற பலர் புகழ்பெற்ற கவிஞர்களாக இருந்தும் தற்கொலைக்குள் புகுந்தவர்கள்.  தமிழிலும் ஆத்மாநாம் போன்ற கவிஞர்கள் தற்கொலை செய்துகொண்டது நம் கண் எதிரிலேயே நடந்திருக்கிறது. கவித்துவம் மனம் கொண்டவர்கள் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பதும் ஒரு காரணம். அவர்கள் கவிதைகள் தருகிற நம்பிக்கைகள் வாழ்க்கை தராமல் போவதும் வருத்தமே.  

மேலை நாடுகளில் சட்டத்தை அமல்படுத்தும் அலுவலர்கள் தற்கொலை செய்து கொள்வது சகஜம்.  சில நாடுகளில் 24 மணி நேரத்திற்கு ஒரு காவல்துறை அதிகாரி மரணமடைவதாக ஓர் ஆய்வு அறிவிக்கிறது.  நியூயார்க்கில் நகர் அலுவலர்கள் ஒரு இலட்சத்திற்கு 29 பேர் தங்களைத் தாங்களே சாகடித்துக் கொள்கிறார்கள்.  இது மற்றவர்களிடம் நடப்பதைவிட இரண்டு மடங்கு அதிகம்.  கடுமையான பணிக்குப் பிறகு அந்த நினைவுகள் தாக்க அதில் சோர்வு அடைந்து போய் தற்கொலை செய்து கொள்கிற ஓய்வு பெற்றவர்களும் உண்டு. 

ஹெமிங்வே இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்றவர்.  அவருடைய தந்தை 1928இல் தற்கொலை செய்துகொண்டபோது அவரைக் கோழை என அறிவித்து வெறுப்பை உமிழ்ந்தார் ஹெமிங்வே.  ஆனால் 1961ஆம் ஆண்டு அவரே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்துபோனார்.  அவருடைய இரண்டு குழந்தைகளும் தங்களைத் தாங்களே சாகடித்துக் கொண்டன.  அவருடைய சகோதரி அதிக மருந்தால் 1966இல் இறந்தார்.  சகோதரரோ 1982இல் தன்னையே சுட்டுக்கொண்டார்.  

தற்கொலை எப்படி குடும்பத்தையே பாதிக்கும் என்பதற்கு "கடலும், தலைவனும்' (கிழவனுமென பலர் மொழிபெயர்த்திருக்கிறார்கள், ஓல்டுமேன் என்பது கடற்படையில் தலைமை அதிகாரியைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல்) என்கிற அருமையான புதினத்தை எழுதிய ஹெமிங்வேயின் வாழ்க்கையே சாட்சி.  அதில் அவர் ஒருவன் செத்துப் போகலாம், ஆனால் தோற்கக் கூடாது என்று எழுதியிருந்தார்.  "குட்டி இளவரசன்' என்கிற மகத்தான புதினத்தை எழுதிய செயின்ட் எக்ஸýபரி என்பவரின் மரணம் இயல்பானதா, தற்கொலையா என்று இன்னும் தெரியவில்லை.  ஏனென்றால், அவர் விமானத்தில் பறப்பதற்கு முன்பு எழுதி வைத்த உயில்  சந்தேகத்தைக் கிளப்புகிறது.  

தற்கொலையைப் பற்றி செய்திகள் வெளியிடும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  பல்வேறுவிதமான பிடிபடாத காரணங்கள் பின்னணியில் இருக்கும்போது அதை மிகவும் எளிமையாக ஒரு வரையறைக்குள் சுருக்கக் கூடாது.  தற்கொலை செய்துகொண்ட முறையைப் பற்றி விரிவாக எழுதக்கூடாது.  ஊடகங்களின் கவனத்தைப் பெற தற்கொலை புரிந்ததாக எக்காரணம் கொண்டும் எழுதிவிடக் கூடாது.  குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மனநல மருத்துவர்களால் தகுந்த ஆலோசனைக்குட்படுத்தப்படுவது அவசியம். அப்போது அவர்கள் தற்கொலையைத் தேர்ந்தெடுக்கும் முடிவைக் குறைக்க முடியும், இதனால் பாதிக்கப்படுவதையும் தவிர்க்கலாம். 

தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com