மரணம் தீர்வல்ல! 

வளாக நேர்காணலில் தேர்ச்சி பெறாவிட்டால் வாழ்க்கையே முடிந்துவிட்டதாகப் பொருளல்ல. இன்று வேலைவாய்ப்புக்கு ஆயிரம் கதவுகள் திறந்திருக்கின்றன.
மரணம் தீர்வல்ல! 

உச்சியிலிருந்து தொடங்கு-16

எந்தவொரு பிரச்னைக்கும் மரணம் தீர்வல்ல.  ஒருவர் நம்மை எதிர்க்கிறார் என்றால், அவரை அழிப்பதால் அந்த எதிர்ப்பை முடிவுக்குக் கொண்டு வர முடியாது. ஒருவர் அழிந்தால் அந்த இடத்தில் நூறு பேர் உண்டாவார்கள். சில கிளர்ச்சி இயக்கங்கள் இப்படித்தான் பூதாகரமாக உருவாகி தீர்க்க முடியாத திருகுவலியாகி விடுகின்றன. 

நான் சந்தித்த ஒரு விசாரணை விவரம்...

ஒருவர் கையூட்டுப் பெறுகிற ஆசாமி. கையூட்டுப் பெற்றுப் பழகியவர்களுக்கு உள்ளங்கை அடிக்கடி அரிக்கத் தொடங்கிவிடும். ஞாபக மறதி நோய் வந்தாலும் கரன்சி நோட்டுகள் மட்டும் எப்போதும் மறக்காமல் இருக்கும்.  இவர் பணியாற்றிய இடத்தில் ஒருவருக்கு செய்ய வேண்டிய பணிக்காக கையூட்டு கேட்டிருக்கிறார். அவரோ தர மறுத்திருக்கிறார்.  அந்தப் பணியை தாமதப்படுத்திக் கொண்டே இருந்தார்.

கையூட்டுப் பேர்வழியின் மகள் திருமணம் மூன்று, நான்கு நாட்களில் நடக்க இருந்தது.  அப்போது இவருடைய வீட்டுக்கு வந்து அந்த மனுதாரர் பணத்தைக் கொடுத்திருக்கிறார்.  அலுவலர் அதை மகிழ்ச்சியாகப் பெற்றுக் கொண்டு நோட்டுகளை எண்ணி மேசையில் வைக்கிறபோது லஞ்ச ஒழிப்புத்துறைக் காவலர்கள் கைது செய்துவிட்டார்கள். அந்த நேரத்தில் அவர் அருகில் ஒரு கைத்துப்பாக்கி இருந்திருந்தால் கட்டாயம் அதை எடுத்து தன்னைச் சுட்டுக் கொண்டிருப்பார். இதுபோல திடீர் உணர்ச்சி எழுச்சிக்கு ஆளாகி வாழ்வை முடித்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்.

திருடி மாட்டிக் கொண்ட ஒருவன், காவலர்களால் கைது செய்து அழைத்துச் செல்லப்படும்போது கொரடாச்சேரி பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டான். அதுகுறித்த விசாரணையை நான் நிகழ்த்த நேர்ந்தது.   அந்த நேரத்தில் ஏற்படுகிற உணர்ச்சியின் காரணமாக அவமானத்தைத் தவிர்ப்பதற்கும், பழிச்சொல்லை மறுப்பதற்கும் தொடர்புடையவர்களை குற்ற உணர்வுக்கு ஆட்படுத்துவதற்கும் மரணத்தை மலர் மாலையாக ஏற்றுக் கொள்பவர்கள் இருக்கிறார்கள்.  அப்படித் தூக்குக் கயிற்றை முத்தமிட்டவர்கள் பிறகு சுருக்கு, கழுத்தை இறுக்கியதும் ஏன் இறங்கினோம்? என்று வருத்தப்படுவதும் உண்டு. அவர்களைக் காப்பாற்ற நேர்ந்தால் அதற்குப் பிறகு பலநாட்கள் உயிர் வாழ்வது உண்டு. 

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி அமைய அடித்தளமிட்ட ராபர்ட் கிளைவ் இரண்டுமுறை தற்கொலைக்கு முயன்றவர்.  தற்கொலை முயற்சி செய்து அதிலிருந்து மீள்பவர்கள் பலர் அதிக நாட்கள் வெற்றிகரமாக வாழ்ந்திருக்கிறார்கள்.  சில நேரங்களில் விரும்பியவரை திருமணம் செய்து கொள்ள  வேண்டுமென்பதற்காக பெற்றோர்களைச் சம்மதிக்க வைக்க தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டு   பிறகு வெற்றி பெறுபவர்களும் உண்டு. அவர்கள் சில நேரங்களில் தற்கொலைக்கு முயன்றதை நினைத்து வருத்தமும், வேதனையும் அடைவதுண்டு.  உயிர் மீண்டாலும் சமூகம் அவர்களைத் தற்கொலைக்கு முயன்றவர்களாகவே அடையாளப்படுத்தும்.  அவர்கள்மீது குத்தப்பட்ட தற்கொலை முத்திரையிலிருந்து அவர்கள் வெளிவர முடியாமல் தவிக்கிறார்கள்.

தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டவர்கள் பல நேரங்களில் மரணத்தைத் தீர்வாக நினைத்தது எவ்வளவு பெரிய மடத்தனம் என்பதைப் புரிந்து கொள்கிறார்கள்.  எனக்குத் தெரிந்த ஒரு நண்பர். மதுரையில் பணியாற்றும்போது பழக்கமானவர்.  மிகச்சிறந்த சமூக ஆர்வலர்.  அரிய பங்களிப்புகளை ஒதுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியவர். தமிழ் உணர்வாளர்.

ஒருமுறை அவர் என்னிடம் தற்கொலைக்கு முயன்றதாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். பார்க்க உயரமாக எடுப்பாக இருக்கும் அவருக்கு உடல் பருமனாக இருக்கிறதே என்கிற தாழ்வு மனப்பான்மை.  இப்போது அவருடைய வாழ்வால் சமூகமும், எண்ணற்ற ஏழை மாணவர்களும் பயன்பெற்று வருகிறார்கள்.  

ஒருமுறை மரணத்தைத் தீர்வாக மனம் நினைக்கத் தொடங்கிவிட்டால் அதற்குப் பிறகு எந்த பிரச்சினை வந்தாலும் மரணமே தீர்வாகத் தோன்ற ஆரம்பிக்கும். கணநேர உந்துதலால் உயிரைப் போக்கிக் கொள்பவர்கள் அதன் விளைவுகளைப் பற்றி எண்ணிப் பார்ப்பதில்லை.  குடும்பத்தில் இருப்பவர்கள் ஒரு தற்கொலையால்  சிதைந்து போகிறார்கள். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவர்களால் ஆறுதல் அடைய முடிவதில்லை. சிலரோ மனைவி, குழந்தைகள் ஆகியவர்களை நட்டாற்றில் தவிக்க விட்டுவிட்டுப் போய்விடுகிறார்கள்.  அந்தக் குடும்பம் மாலுமி இல்லாத கப்பலாய் வறுமை அலைகளில் சிக்கி கரையேறாமல் தத்தளிப்பதையும், குழந்தைகள் தாறுமாறாக வளர்வதையும் பார்க்கலாம்.  

உணர்ச்சி உந்துதல் ஏற்படுகிறபோது மரணம்தான் எல்லா அழுக்குகளையும் நீக்கி விட முடியும் என நினைக்கத் தோன்றும். ஆனால் அது சாத்தியமில்லை. அந்த அவமானம் குடும்பத்தின் மீதே பூசப்பட்டு விடுகிறது.  ஒருவகையில் இதுபோன்ற நிகழ்வுகளில் தற்கொலை செய்து கொள்பவர்களை சுயநலவாதிகள் என்றுதான் குறிப்பிட வேண்டும்.  அவர்களை நம்பி வந்த அனைவரையும் ஏமாற்றிவிட்டுச் செல்வது மிகப்பெரிய துரோகம் என்பதை அவர்கள் உணர வேண்டும்.  

வாழ்க்கையில் தீர்க்க முடியாத பிரச்னை என்று எதுவும் இல்லை. வளாக நேர்காணலில் தேர்ச்சி பெறாவிட்டால் வாழ்க்கையே முடிந்துவிட்டதாகப் பொருளல்ல. இன்று வேலைவாய்ப்புக்கு ஆயிரம் கதவுகள் திறந்திருக்கின்றன. போட்டித்தேர்வுகள் எழுதலாம்.  தகுதியை மட்டுமே அடிப்படையாக வைத்து மத்திய தேர்வாணையம் நடத்துகிற குடிமைப்பணிகளுக்கான தேர்வுகளில் வெற்றி பெறலாம். தமிழ்நாட்டிலிருந்து இந்தியப் பொறியியல் பணிக்கு அதிகம் பேர் விண்ணப்பிப்பது இல்லை.  பொறியியல் படித்த மாணவர்கள் அந்தப் போட்டித் தேர்வுக்கான வினாக்களைப் புரட்டி கல்லூரியிலிருக்கும்போதே நூலகத்தை நன்றாகப் பயன்படுத்தி முதல்முறையே வெற்றி பெறலாம்.

புள்ளியியல் படித்தவர்கள் அதிகம் பேர் தமிழகத்திலிருந்து இந்தியப் புள்ளியியல் பணிக்கு முயற்சி செய்வதில்லை.  கல்லூரியில் படிக்கும்போதே இந்தத் தேர்வை மனத்தில் வைத்துப் படிக்கலாம்.

பரந்துபட்ட ஒரு போட்டித் தேர்வுக்காக ஒருவர் தயார் செய்தால் அவர்கள் அதே வகையைச் சார்ந்த எண்ணற்ற பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு சாத்தியங்கள் இருக்கின்றன.  எல்லாப் போட்டித் தேர்வுகளின் வடிவமும் ஒன்றுதான்.  பொது அறிவு, ஆங்கிலத் திறன், நுண்ணறிவுத்  திறன் ஆகியவை இந்தத் தேர்வுகளில் பரிசோதிக்கப்படுகின்றன.  கல்லூரித் தேர்வில் சாதாரணமாகப் படித்த பலர், இந்தப்போட்டித் தேர்வில் சாமர்த்தியமாக எழுதி வெற்றி பெற்றிருக்கிறார்கள்.  கல்லூரிப் படிப்பைத் தொலைத்தொடர்பு மூலம் முடித்தவர்கள் கூட வெற்றி பெற்றிருக்கிறார்கள்.  

மேலாண்மைப் படிப்பு, மேற்படிப்பு, பல்வேறு விதமான வங்கித் தேர்வுகள், வெளிநாட்டுக்குச் சென்று உதவித்தொகையுடன் படிக்கும் வாய்ப்பு போன்ற பல்வேறு விதமான வழிகள் நமக்கு முன்னே வாசனைத் திரவம் தெளித்து நம்மை வரவேற்கின்றன.  தூய்மையாக இருத்தல், நேர்மையாகப் பணி செய்தல், எச்சரிக்கையோடு கடமையாற்றுதல், விழிப்புணர்வோடு வாழ்தல், கிடைத்தததை ஏற்றுக் கொள்ளுதல் போன்ற பண்புகளைப் பெற்றிருப்பவர்கள் இயல்பான மரணம் வரும்வரை காத்திருக்கிறார்கள்.  அவர்களுக்கு அம்மரணமும் வாழ்வின் ஒரு பகுதி.  அவர்களாக அதைத் தேடித் திரிவதில்லை.

தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com