மனச்சோர்வு நிலைகள்! 

படிப்பையே சுமையாக நினைத்தால் அலுவலகமும் பாறாங்கல்லாகத்தான் பயமுறுத்தும். படிப்பையும், பணியையும் நேசிக்க எப்போது கற்றுத் தரப் போகிறோம்.
மனச்சோர்வு நிலைகள்! 

உச்சியிலிருந்து தொடங்கு-12

வழக்கமாக பந்தைப்போல் துள்ளிக் கொண்டும், முயலைப்போல் ஓடிக்கொண்டும் உற்சாகமாக இருக்கும் சில மாணவர்களின் நடவடிக்கைகளில் அமைதியும், மெளனமும் நீடித்தால் அதைப் பெரும்பாலும் பெற்றோர்கள் முதிர்ச்சி என்று எடுத்துக் கொள்கிறார்கள்.  அது மிகப்பெரிய தவறு.  
முதிர்ச்சி என்பது உற்சாகம் இல்லாமல் இருப்பதல்ல. அவசரப்படாமல் இருப்பதும், பதற்றப்படாமல் இருப்பதும், அதிகப் பிரசங்கித்தனமாக இல்லாமல் இருப்பதும், நிதானமாக அணுகுவதும், தெளிவாகப் பேசுவதும், யாரையும் குறைவாக மதிப்பிடாமல் பக்குவமாக நடந்துகொள்வதும் முதிர்ச்சிக்கான முத்திரைகள். ஆனால் இவற்றை ஒருவர் ஒரே நாளில் கிரகித்துக் கொள்ள முடியாது. படிப்படியாக ஒருவர் இவற்றைத் தரித்துக் கொள்ள முடியுமே தவிர, ஒரே நாளில் ஊறுகிற பண்பல்ல இவை.
இயல்பிலிருந்து மாறி ஒருவர் நடந்து கொண்டால் நாம் அவரை உற்று நோக்க வேண்டும்.  நன்றாகப் படிக்கும் மாணவன் அண்மைக் காலங்களாக படிப்பில் அக்கறை செலுத்துவதில்லை, மதிப்பெண்கள் குறைகின்றன என்றால் அது கவனிக்கப்பட வேண்டிய நடத்தை. அதைப் போலவே எப்போதும் புத்தகமும் கையுமாக இருக்கிற  ஒரு மாணவன் இப்போது புத்தகத்தையே தொடுவதில்லை என்றால், நாம் கொஞ்சம் அது குறித்து விசாரிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.  
எப்போதும் தூய்மை துலங்கும் பளிச்சென்ற ஆடைகளை அணிந்து அலங்காரமாக வருகிற ஒரு மாணவனோ, மாணவியோ சரியாக உடை உடுத்துவதில்லை என்பதும் சிந்திக்க வேண்டிய ஒன்று.  விடுதிகளில் இருக்கும் சில மாணவர்கள் குளிக்காமல், சவரம் செய்யாமல் அழுக்குத் துணியுடன் இருக்கத் தொடங்கினால், ஏதோ ஒரு பிரச்னை என்று யூகித்துவிடலாம். 
இன்னும் சில மாணவர்களோ எதன் மீதும் விருப்பமில்லாமல் இருப்பார்கள். சரியாகச் சாப்பிட மாட்டர்கள். ஒழுங்காகத் தூங்க மாட்டார்கள்.  இரவு நேரத்தில் உலவிக் கொண்டு திரிவார்கள்.  தூக்கமின்மை மனச்சோர்வின் ஓர் அடையாளம். கும்பகர்ணனைப்போல குறட்டையுடன் தூங்குகிற ஒருவன் அடிக்கடி எழுந்தாலோ, முன்கூட்டியே விழித்துக் கொண்டு நடமாடினாலோ பிரச்சினை இருக்கிறது என்று பொருள்.  தூக்கமின்மை, சுய சிதைவுக்கான ஒரு அறிகுறி.  
எப்போதும் சிரித்துக் கொண்டிருக்கும் ஒருவர் இப்போதெல்லாம் சிரிப்பதில்லை. எந்த நகைச்சுவையைச் சொன்னாலும் முகத்தை உம்மென்று வைத்திருக்கிறார். சில நேரங்களில் மற்றவர்களின் நகைச்சுவை எரிச்சலைத் தருகிறது. எப்போது பார்த்தாலும் மரணம் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார். சாவு பற்றிய புத்தகங்களையும், இருண்மை நிறைந்த படைப்புகளையுமே விரும்பிப் படிக்கிறார் என்றால் அவர் மனச்சோர்வில் மாட்டிக்கொண்டிருக்கிறார் என்று பொருள். சிலர் திடீரென மற்றவர்களுக்கு பாரமாக இருப்பதாகக் குறிப்பிடுவார்கள்.  
விரக்தியோடும், மரணம் பற்றிய உரையாடலோடும் சில நாட்கள் காணப்பட்டவர்கள் திடீரென மலர்ச்சியாகவும், புத்துணர்ச்சியாகவும் காணப்பட்டால் அவர்கள் வெளிச்சத்தைக் கண்டுவிட்டார்கள் என்று நாம் தப்பான முடிவுக்கு வரக்கூடாது. அவர்கள் தற்கொலை செய்து கொள்வதா? வேண்டாமா? என்கிற குழப்பங்களையெல்லாம் தாண்டி அது ஒன்றே தீர்வு என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள் என்று அறிந்து கொள்ளலாம்.  
வகுப்புக்கு வராமல் இருத்தல், கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருப்பது, தனிமையில் இருப்பது, மற்றவர்கள் இல்லாதபோது உணவு விடுதிக்கு வருவது, அறையில் வெகுநேரம் விளக்கு எரிவது போன்ற வித்தியாசமான செய்கைகள் விவாதிக்கப்பட வேண்டியவை.  
வாகனங்களைக் கண் மண் தெரியாமல் ஓட்டுவது, அடிக்கடி வாகனத்திலிருந்து கீழே விழுந்து அடிபட்டுக் கொள்வது ஆகியவை தற்கொலைக்குத் துணிந்து விட்டார்கள் என்பதற்கான அடையாளங்கள். இவற்றை எளிதில் புறந்தள்ளிவிடக்கூடாது.  
மனநல மருத்துவர் திருநாவுக்கரசு குறிப்பிடுவதைப்போல, தற்கொலை வேறு, தற்கொலை முயற்சி வேறு.  பொதுவாக ஒரு குற்றத்தில் நான்கு நிலைகள் இருக்கின்றன.  எண்ணம், திட்டமிடுதல், முயற்சி, செயல்படுத்துதல். எண்ணமிருக்கிறபோதே ஒரு குற்றத்தை கண்டுபிடிப்பது சிரமம்.  அதை ஏதேனும் ஆவணம் மூலம் வெளிப்படுத்தினால்தான் சாத்தியம்.  கொள்ளை, தீவிரவாதம் ஆகியவற்றைத் திட்டமிடுகிறபோதே தண்டிக்கலாம். பெரும்பாலான குற்றங்கள் செயல்படுத்தி முடிந்தால்தான் தண்டனைக்கு இலக்காகின்றன.  ஆனால், தற்கொலையை மட்டும் ஒருவர் வெற்றிகரமாக செயல்படுத்தி முடித்து விட்டால் அவர் தண்டனைக்கு அப்பால் சென்றுவிடுகிறார்.  அங்கு முயற்சியைத்தான் நாம் தண்டிக்க வேண்டியுள்ளது.  
ஒவ்வொரு வெற்றிகரமான தற்கொலைக்கும் ஈடாக 20 முதல் 25 வரை தற்கொலை முயற்சிகள் இருக்கின்றன. பெண்களும், இளைஞர்களும் அதிகமான விகிதத்தில் முயற்சியை மேற்கொள்கிறார்கள்.  
இளைஞர்களின் பிறழ்வான நடவடிக்கைகளைப் பார்த்தால் அவர்களைப் பற்றிய தகவல்களைப் பெற்றோர்களுக்குத் தெரிவிப்பது அவசியம். அதுவரை அவர்களை தனியாக விடாமல் தன்னம்பிக்கையுள்ள ஒருவருடன் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். உடனடியாக மனநல சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும்.  
கல்லூரி வளாகங்களில் இன்று பள்ளிகளைப்போலவே மதிப்பெண்களைத் துரத்தும் மனப்பான்மை ஊக்குவிக்கப்படுகிறது. வாழ்க்கை கல்வியைத் தாண்டியது என்பதை மாணவர்களுக்கு அடிக்கடி எடுத்துச் சொல்லும் பாடம் தாண்டிய ஊக்க முகாம்கள் அவசியம்.  
படிப்பைப் பெரிய சிரமமாகக் கருதும் மனநிலை இன்று அதிகம் காணப்படுகிறது.  புதுடெல்லிக்குச் செல்லும்பொழுது நான் அனுபவித்த நிகழ்வு...
ஒரு பேருந்து வந்தால் மக்கள் முந்தியடித்துக்கொண்டு ஒருவரையொருவர் தள்ளியவாறு ஏறத் துடிப்பார்கள்.  அரும்பாடுபட்டு அரக்கப்பரக்க மூச்சிரைக்க ஏறினால் வண்டி காலியாக இருப்பது தெரியும். எல்லாரும் நிதானமாக ஏறியிருந்தால்கூட  உட்காருவதற்கு இடம் கிடைத்திருக்கும். கிடைக்காதோ என்கிற பதற்றம் தேவையில்லாத களைப்பை ஏற்படுத்திவிடுகிறது.  
அதைப் போலத்தான் வாழ்க்கையும். எல்லாருக்குமான இடம் இருக்கிறது. இன்று வேலையில்லாத் திண்டாட்டம் இல்லை. பணி தேடுபவர்களிடம் வேலைக்கான தகுதிகள் போதுமானதாக இல்லை. அவற்றை மேம்படுத்துவது அனைவருக்கும் ஏற்ற பணியைப் பெற்றுத் தரும். நமக்குத் துளியும் பொருந்தாத பணிக்காக அடித்துக் கொள்வதில் அர்த்தம் இல்லை.  
படிப்பைச் சுமையாகப் பார்ப்பதால் சில மாணவர்கள் கல்லூரியை முடிக்கும் முன்பே தற்கொலை செய்து கொண்டு விடுகிறார்கள். தேவையற்ற கட்டுப்பாடுகளும், பள்ளியைப்போல கல்லூரி மாணவர்களை நடத்தும் கடுமையும் தவிர்க்கப்படவேண்டியவை.  சூறாவளித் திங்கள் என்கிற அடைமொழி திங்கட்கிழமைக்கு உண்டு. திங்கட்கிழமையில் தற்கொலையின் விகிதம் அதிகமாக இருக்கிறது.  அதுமட்டுமல்ல, திங்கட்கிழமையன்று விடுப்பெடுப்பவர்கள் விகிதமும் அதிகம். தப்பித்தவறி செவ்வாய்க்கிழமையும் விடுமுறையாக இருந்தால் திங்கட்கிழமையன்று 50 விழுக்காடு பணியாளர்கள் விடுப்பில் செல்கிறார்கள்.  மாணவர்களுக்கும் இது பொருந்தும். படிப்பையே சுமையாக நினைத்தால் அலுவலகமும் பாறாங்கல்லாகத்தான் பயமுறுத்தும்.
படிப்பையும், பணியையும் நேசிக்க எப்போது கற்றுத் தரப் போகிறோம்.

தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com