தவறான கற்பிதங்கள்!

தற்கொலை என்பது யாரும் விரும்பி ஏற்கிற ஒரு நிலைப்பாடு அல்ல. அதைத் தடுக்கவும், தவிர்க்கவும் ஒட்டுமொத்த சமுதாயத்தின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது.
தவறான கற்பிதங்கள்!

உச்சியிலிருந்து தொடங்கு-7

தற்கொலையைக் குறித்து நம்மிடம் பல தவறான கற்பிதங்கள் இருக்கின்றன. அவற்றைத் தெளிவாக உணர்ந்து கொண்டால் தற்கொலையில் விழுந்து விடுகிற பலரை மீட்டெடுக்க முடியும். 

முதலாவதாக, தற்கொலை செய்துகொள்ளப் போவதாக பயமுறுத்துபவர்கள் ஒருபோதும் தற்கொலை செய்துகொள்ள மாட்டார்கள் என்கிற கருத்து நம்மிடம் ஆழமாக இருக்கிறது. நம் ஊரில் எல்லாவற்றிற்கும் ஒரு பழமொழி வைத்திருக்கிறோம். அவற்றை எடுத்து அந்தச் சூழலுக்கு ஏற்ப அள்ளி வீசுவது நமக்குக் கை வந்த கலை. "குரைக்கிற நாய் கடிக்காது'  என்று சொல்லி திருப்திப்பட்டுக் கொள்வோம். யாரோ சொன்னதுபோல அந்தப் பழமொழி அந்த நாய்களுக்குத் தெரியாததால் சமயத்தில் அவை கடித்துத் தொலைக்கின்றன.

"நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்' என்று ஒருவர் சொன்னால் அவர் பயங்கரமான மன அழுத்தத்தில் இருக்கிறார் என்று பொருள். மன அழுத்தம் வேறு, மனச் சோர்வு வேறு. ஏதேனும் ஒரு காரணத்திற்காக ஏற்படுவது மனச்சோர்வு, அது தற்காலிகமானது என்று சிக்மண்ட் ஃப்ராய்டு குறிப்பிடுகிறார். ஆனால், காரணமே இல்லாமல் ஏற்படுவது மன அழுத்தம். அது நீடித்து இருக்கக்கூடியது. யாராவது இப்படி சொல்லிக்கொண்டு இருந்தால் அவர்கள் உடனடியாக கவனிக்கப்பட வேண்டியவர்கள். சின்ன விதையாக எழுகிற இந்த எண்ணம் விரைவில் விருட்சமாகக் கூடியது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 

தற்கொலை செய்துகொள்ள முயல்பவர்கள் சாக விரும்புகிறார்கள் என்கிற தவறான எண்ணமும் நம்மிடம் இருக்கிறது. அவ்வாறு முயற்சி செய்பவர்கள், அந்தச் சூழலிலிருந்து தங்களைக் காப்பாற்ற யாருமில்லையே என்கிற அங்கலாய்ப்பில்தான் அப்படியொரு முடிவைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்களுக்குப் போதிய உதவியைச் செய்து நெருக்கடியிலிருந்து காப்பாற்றினால் அவர்கள் பன்னெடுங்காலம் வாழ்வார்கள். 

இதுகுறித்த ஒரு சம்பவம் உண்டு...

தண்ணீரில் மூழ்குவதற்காக தயாராக இருந்த ஒருவனை அவ்வழியாக வந்த காவல்துறை அதிகாரி துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, "ஆற்றை விட்டு வெளியே வராவிட்டால் சுட்டுவிடுவேன்'' என்று சொன்னார். உடனே அவன் கரைக்கு ஓடிவந்துவிட்டான். சாக விரும்பியிருந்தால் அங்கேயே அவன் நின்றிருப்பான். 

ஒருமுறை தற்கொலை செய்ய முயன்று காப்பாற்றப்படுபவன் மறுபடியும் அதற்கு முயற்சி செய்யமாட்டான் என்பதும் முற்றிலும் தவறான கற்பிதம். தற்கொலைக்கு முயன்ற காரணங்கள் அப்படியே இருக்குமேயானால் அவர்கள் மறுபடியும் அதை நாட மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. 
வெகுகாலமாக இருக்கும் மன அழுத்தத்தில் இருந்த  ஒருவர் தற்போது கவலையின்றி காணப்பட்டால் அவருக்கு இருந்த விரக்தியும், தற்கொலை முனைப்பும் கழிந்துவிட்டன என்பது பொருளல்ல.

தற்கொலைக்கு முயன்றவர்கள் முட்டாளாக இருக்க வேண்டும், அல்லது பைத்தியமாக இருக்க வேண்டும் என்கிற தவறான கருத்துகளும் நம்மிடம் இருக்கின்றன. வாழ்க்கையின் இனிய பக்கங்களையெல்லாம் உதறித் தள்ளுகிற அளவுக்கு ஒருவர் வேதனையோடு இருந்தால், அவர்களுக்குத் தேவையான சிகிச்சை அளித்து குணப்படுத்த வேண்டியது அவர்களைச் சுற்றியுள்ள அனைவருடைய கடமையும் ஆகும். 

பணக்காரர்களிடம் தற்கொலை அதிகமாக இருப்பதாக நினைப்பதும் தவறான கற்பிதம். பணக்காரர்களும், செல்வாக்கு மிக்கவர்களும் பிரபலமானவர்களும் தற்கொலை செய்துகொண்டால் அவை ஊடகங்களில் அதிகமாக அடிபடுகின்றன என்பதால் இப்படிப்பட்ட எண்ணம் ஏற்படுகிறது. ஒருவர் குறிப்பு எழுதி வைக்காவிட்டால் அது தற்கொலையாக இருக்க முடியாது என்பதும் தவறு. இரண்டுபேர் ஒன்றாக இறந்துபோனால் அவர்கள் ஒருவரையொருவர் அவ்வளவு நேசித்தார்கள் என எண்ணுவதும் தவறு. 

குழந்தைகள் 18 வயதை அடைவதற்கு முன்பு பெற்றோர் தற்கொலை செய்துகொண்டால் குழந்தைகளும் அந்த முடிவைத் தேர்ந்தெடுப்பதற்கு 300 சதவிகித வாய்ப்புகள் இருக்கின்றன என்று ஜான்ஸ் ஹாப்ஹின்ஸ் பல்கலைக்கழகம் செய்த ஆய்வு தெளிவுபடுத்துகிறது. 

குழந்தைகளை விட்டுவிட்டு தற்கொலை செய்துகொள்பவர்கள்  வாரிசுகளுக்கு நன்மையைச் செய்யவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அடுத்தவர்கள் தற்கொலையும் நமக்கு அந்த எண்ணத்தை ஏற்படுத்திவிடுகிறது. ஒரே பணியைப் பார்க்கிறவர்கள் கொத்துக்கொத்தாக தற்கொலை செய்துகொள்வதை லாரன் கோல்மேன் என்பவர் எழுதிய "தற்கொலைக் கொத்துகள்' என்கிற நூல் தெளிவுபடுத்துகிறது. பிரபலமானவர்கள் தற்கொலை செய்துகொண்டால் கேட்கவே வேண்டாம். 

மர்லின் மன்றோ அதிக டோஸால் இறந்துபோனபோது (அவர் மரணத்திற்கான காரணம் இன்னும் புதிராகவே இருக்கிறது) அமெரிக்காவில் 12 விழுக்காடு தற்கொலை அதிகரித்தது. பள்ளிகளில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டால் அதே வகுப்பில் படிக்கிற பலர், அம்முடிவுக்கு வர வாய்ப்புண்டு. ஊடகங்களில் தற்கொலை பற்றிய செய்திகளைக் கவனமாகக் கையாள வேண்டும். அவற்றை அதிகமாகப் பார்க்க நேர்ந்தால் அந்த எண்ணம் அதே மனநிலையில் இருக்கிறவர்களுக்கு வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. 

ஒரு முறையோ, பலமுறையோ தற்கொலைக்கு முயன்றவர்கள், குடும்பத்தில் மனச்சிதைவு நோய்க்கு ஆட்பட்டவர்கள், போதைப் பொருளுக்கு அடிமையான குடும்பப் பின்னணி கொண்டவர்கள், பல தற்கொலைகள் நடந்த குடும்பத்தைச் சார்ந்தவர்கள்,  குடும்பத்தில் வன்முறை அதிகமாக இருக்கும் சூழலில் வளர்ந்தவர்கள், உடல்ரீதியாகவும், பால் ரீதியாகவும் பலாத்காரம் செய்யப்பட்டவர்கள். வீட்டில் துப்பாக்கி வைத்திருப்பவர்கள், தற்கொலைகளை நேரில் பார்த்தவர்கள் ஆகியோர் எளிதில் தற்கொலை வயப்படுவதுண்டு. 

தற்கொலை ஒரு சின்ன எண்ணமாக உதயமாகிறது. அதற்கு எதிராக வாழ்வதும் ஓர் எண்ணமாகத்தான் ஊற்றெடுக்கிறது. எனவே நம்பிக்கையான சூழல்களின் மூலம் ஒருவரை எதிர்மறை எண்ணத்திலிருந்து நாம் மீட்டெடுக்க முடியும். 

தற்கொலை செய்வது பெண்களைவிட ஆண்களிடம்தான் அதிகமாகக் காணப்படுகிறது. திருமணமானவர்களைவிட தனியாக இருப்பவர்கள்தான் அதிகம் தற்கொலை செய்துகொள்கிறார்கள். குழந்தையில்லாதவர்கள் அதிகமாக தற்கொலை செய்துகொள்கிறார்கள். அதைப்போலவே, குடிமைப் பணிகளிலிருப்பவர்களைவிட படைவீரர்கள் அதிகம் இதைத் தேர்ந்தெடுக்கிறார்கள். போர்க்காலத்தை விட அமைதிக்காலங்களில் தங்களையே மாய்த்துக் கொள்பவர்கள் அதிகமிருக்கிறார்கள். படிக்காதவர்களைவிட படித்தவர்கள் அதிகம் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது நாம் நினைத்ததைப்போல கோழைத்தனமாக இருப்பவர்கள் தற்கொலையைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதுவும் சரியல்ல. 

தற்கொலை என்பது யாரும் விரும்பி ஏற்கிற ஒரு நிலைப்பாடு அல்ல. அதைத் தடுக்கவும், தவிர்க்கவும் ஒட்டுமொத்த சமுதாயத்தின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது. ஆரம்ப அறிகுறிகளை வைத்து அனுமானித்து அணுகினால் பலரையும் நம்மால் காப்பாற்ற முடியும்.

தொடரும்...
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com