அடுத்தவர்களுக்காக வாழ்வது...

பெற்றோர்களும் பிள்ளைகளிடம், "நீ சரியாக வரவில்லை என்றால் நான் வெளியே தலைகாட்ட முடியாது'' என அடிக்கடி கூறியும், மிரட்டியும் வந்தால், பிள்ளைகள் முடிவு வேறுவிதமாக இருந்தால் நாம் அவமானப்பட வேண்டும்
அடுத்தவர்களுக்காக வாழ்வது...

நாம் விரக்தியடைவதற்கான மூலகாரணம், நாம் அடுத்தவர்களுக்காக வாழ்வது.

ஒன்று அடுத்தவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக வாழ்நாள் அனைத்தையும் செலவழிக்கிறோம்.  அல்லது மற்றவர்களுக்கு நிரூபிப்பதற்காக மகிழ்ச்சியை இழக்கிறோம்.

மற்றவர்களுடைய வாழ்வை செம்மையாக்குவதற்காக வாழ்வதில் தவறில்லை. ஆனால் அது நமக்கும் உவப்பானதாக இருக்க வேண்டும். நம்முடைய முயற்சிகளும், செயல்களும் நேர்மையானதாகவும், முகம் தெரியாத ஒருவருக்கு இன்னாததாகவும் இருக்கக் கூடாது.  பிடிக்காமல், மனம் ஒப்பாமல் மற்றவர்களுடைய மனத்தை மகிழ்விப்பதற்காக செய்யப்படும் செயல்கள் ஒருகட்டத்தில் நம் வாழ்வையே கேள்விக்குறியாக ஆக்கிவிடும்.  நமக்குக் குழப்பங்கள் ஏற்படும்.  நாம் ஏன் வாழ்கிறோம்? என்கிற எண்ணத்தைத் தோற்றுவிக்கும்.

எதிர்மறை எண்ணமும், வாழ்வு வியர்த்தம்  என்கிற சிந்தனையும் சின்னப்பொறியாக ஆரம்பிக்கின்றன. அதற்குப் பிறகு அவை "குபுகுபு'வென எரிகின்றன.  

மரணம் எளிய வழி, எல்லாப் பிரச்னைகளையும் திறக்கும் மூலச்சாவி என்கிற எண்ணம் ஆழமாக ஏற்பட்டுவிடுகிறது.

அடுத்தவர்கள் என்னைக் குறைவாக மதிப்பிடுவார்கள் என்ற எண்ணமே தவறானது.  இன்று ஆளாளுக்கு இருக்கும் பிரச்னையில் நம்மைப் பற்றிச் சிந்திக்க யாருக்கும் அதிக நேரம் இல்லை. அப்படியே நம்முடைய தோல்வியை யாரேனும் கொண்டாடினால் அவர்கள் நண்பர்கள் அல்லர். அவர்கள் குறித்து நாம் கவலைப்பட முடியாது.

பெற்றோர்களும் பிள்ளைகளிடம், "நீ சரியாக வரவில்லை என்றால் நான் வெளியே தலைகாட்ட முடியாது'' என அடிக்கடி கூறியும், மிரட்டியும் வந்தால், பிள்ளைகள் முடிவு வேறுவிதமாக இருந்தால் நாம் அவமானப்பட வேண்டும், என்ற குற்ற உணர்ச்சியே ஏற்படுகிறது. ஒருவரை எளிதில் வீழ்த்த குற்ற உணர்வை ஏற்படுத்திவிட்டால் போதும். அவர்கள் பதற்றத்தின் மடியில் விழுந்துவிடுவார்கள். அவர்கள் கடந்த காலத்தைப் பற்றிய கவலையில் நிகழ்காலத்தைத் தவறவிடுவார்கள்.

இன்று நம்முடைய அணுகுமுறை குற்ற உணர்வை ஏற்படுத்துவதாகவே எல்லா இடங்களிலும் இருக்கிறது. பள்ளி தொடங்கி பணியிடம் வரை இது தொடர்கிறது. திரும்பத் திரும்ப ஒருவரை மட்டம் தட்டினால் அவரிடம் இயல்பாக இருக்கும் ஆற்றலும் பறிபோய்விடும்.  பயத்தில் பல தவறுகள் ஏற்படும்.

ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்தால் உண்மை தெரியும் . . . .
நாம் உண்பது, உடுப்பது, பண்டிகை கொண்டாடுவது, படிப்பது, பணியைத் தேர்ந்தெடுப்பது என எல்லாமும் மற்றவர்கள் முன்பு தலைநிமிர்ந்து நிற்கவேண்டும் என்பதற்காக மட்டுமே.  பலர் பிள்ளைகளிடம், "நீ கம்மி மதிப்பெண் பெற்றால் என் சக அலுவலர்கள் என்ன நினைப்பார்கள்?‘'  என வருத்தம் தோயும் குரலில் பேசுவதைப் பார்த்திருக்கிறேன். 

படிப்பது வாழ்வின் ஒரு பரிமாணம். நல்ல பணிக்குப் போவது என்பதே மாறுபட்ட கருத்தாக்கம். யாருக்கு எது நல்லது என்பதை யார் முடிவு செய்வது? நமக்கு இயல்பாக வரக்கூடிய, பிடித்தமான பணியே நல்ல பணி.  அது பணத்தை நமக்குக் கொண்டுவந்து கொட்டுகிறதோ இல்லையோ, மகிழ்ச்சியை அள்ளித்தரும்.  

ஒவ்வொரு நாளும் பணியிடத்திற்குச் செல்லும்போது உற்சாகமும், திரும்பி வரும்போது திருப்தியும் அளிக்கும்.

தமிழ்நாட்டில் பல இடங்களில் அடுத்தவர்களைக் காட்டிலும் உயர்ந்து நிற்கவேண்டும் என்கிற வெறியோடு இயங்குகின்ற சமூகங்கள் உண்டு.

அவர்களிடம் நட்பு இருக்கும், உறவு இருக்கும்.  ஒருவரைப் பார்த்து ஒருவர் புன்னகையோடு மரியாதை செய்வார்கள். ஆனால் ஊமைக்காயம் போல உள்ளுக்குள் அந்தஸ்து போட்டியிருக்கும். அவர்களில் எப்போதும்  உச்சத்தில் இருப்பவர்கள் ஒருபடி குறைந்தால் உயிரைப் போக்கிக் கொள்கிற நிகழ்வுகள் பலவற்றைப் பார்த்திருக்கிறேன்.

நம்முடைய வீட்டை ஏன் வேறொருவர் வீட்டோடு ஒப்பிடவேண்டும்? நமக்குத் தேவையானவை கிடைத்தால் போதுமே? நாம் அந்த வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறோமா? என்பதே கேள்வி.  நமக்குப் போதிய இடமும், காற்றும், வெளிச்சமும், செயல்படுவதற்குத் தேவையான சூழலும் இருந்தால் அதுவே சிறந்த வீடு.  

நமக்கான அறை ஒன்று என்றபோது மற்ற அறைகள் யாருக்காக?
பணத்தை  ஈட்டுவதில் போட்டி போட்டு பொடிப்பொடியாகிப் போனவர்கள் அதிகம்.  மற்றவர்களைப் பார்த்து, "அவர்கள் சம்பாதிக்கிறார்களே நாமும் சம்பாதிக்க வேண்டும்' என்கிற எண்ணத்தில், அலுவலகப் பணியாளர் ஒருவர் சீட்டு ஒன்றைத் தொடங்கினார்.  நடத்தை விதிகளுக்குப் புறம்பானவை என்றாலும் சிலவற்றைச் செய்ய பலரும் தயங்குவதில்லை. தொடக்கத்தில் பணம் வர ஆரம்பித்தது.  அவருக்கு மகிழ்ச்சி.  பெரிய அளவில் அதை  விஸ்தரித்தார்.

பணம் வாங்கிய பலர் திரும்பக் கட்டாததால் பணமுடை ஏற்பட்டது.  அதை ஈடுகட்ட இருக்கும் சொத்துகள் பற்றாது என்ற நெருக்கடியில் பூச்சி மருந்தைக் குடித்துவிட்டு இறந்துபோனார்.  இதுபோல் பலர் வியாபாரம் செய்தும், விலை அதிகரிக்கும் என ஒதுக்குப்புறத்தில் நிலம் வாங்கியும், கேட்பார் பேச்சைக் கேட்டு நிதிமோசடி செய்கைகளில் முதலீடு செய்தும் பெருநஷ்டப்பட்டு வாழ்க்கையை முடித்துக்கொள்கிற செய்திகளை அன்றாடம் படிக்கிறோம்.

"இறந்துபோகிறவன் எல்லாக் கடன்களையும் அடைத்துவிடுகிறான்' என்கிற ஷேக்ஸ்பியருடைய வாசகங்களை அவர்கள் படிக்காமலேயே பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

"நம்மை ஒருவன் விஞ்சிவிடுவதா?'  "நமக்குத் தெரிந்த ஒருவன் நமக்கு மேலதிகாரியாக வருவதா?‘
என்று எண்ணுவதே கயமை.  முகம் தெரியாத ஒருவன் கால்மேல் கால்போட்டுக்கொண்டு அமர்ந்தால், அவன் முன்பு கைகட்டிக்கொண்டு நிற்கத் தயாராக இருக்கும் சிலர், தெரிந்தவர் உயர்ந்தால் தெள்ளேனம் கொட்ட மறுப்பது அற்பத்தனம்.  "நேற்று வரை என்னோடு கால்பந்து விளையாடியவன்' என சொல்பவர்களுக்கு நேற்று என்பது நிழல், இன்று மட்டும் நிஜம் என்கிற உண்மை புரிவதில்லை.

வாழ்க்கை விசித்திரமான புதிர்.  இன்று நம் கை ஓங்கியிருக்கிற காரணத்தால் அது என்றுமே ஓங்கியிருக்கும் என எண்ணுவது மடமை. காலச்சக்கரம் சிறிதுகாலம் மட்டுமே மேலே வைத்திருக்கும்.  அதற்காக ஆசைப்படாதவர்கள் கீழே விழுகிறபோதும் சுதாரித்துக் கொள்கிறவர்களாக இருப்பார்கள். அவர்கள் உயரும்போது துள்ளிக் குதிப்பதுமில்லை;  தாழும்போது வீழ்ந்து தவிப்பதுமில்லை.  நாம் யாருடனும் ஓட்டப் பந்தயத்தில் இல்லை.  நம்முடன் மட்டுமே நாம் போட்டி போட வேண்டும். நேற்று இருந்ததைவிட ஓர் அங்குலம் பெருந்தன்மையுடன் இன்று நடந்துகொண்டால் அதுவே வளர்ச்சி.

வாழ்க்கை நிரூபிப்பதற்காக அல்ல.  நாம் யாருக்காக நினைத்தோமோ, அவர்கள் ஒருநாள் நம் முன்பு நிராதரவாக நின்று கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.

இவர்களோடு போய் போட்டி போட்டு நல்ல கணங்களை அசுத்தப்படுத்திக் கொண்டோமே  என்கிற வருத்தம் ஏற்படும்.  நிரூபிப்பது ஆய்வேடுகளுடனும் பரிசோதனைக்கூடங்களுடனும் நின்றுவிடவேண்டிய முயற்சி. அதை மற்றவற்றிற்கு நீட்டிப்பது வாழ்விலேயே மரணமடையும் நிலை.

ஹம்மிங் பறவைகள் நெருப்புக்கோழிகளோடு போட்டிப்போட நினைக்காததால், பின்புறமும் பறக்கும் பேறு பெற்றிருக்கின்றன.  நம்முடைய காற்றை ஏன்
அடுத்தவர்கள் நாசி வழியாக சுவாசிக்க வேண்டும்?

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com