சீரான பாதை!

மகத்தான பங்களிப்பைச் செய்த பலர் இயல்பான மரணத்தால் இல்லாமல் போனபோது ஏற்பட்ட வெற்றிடத்தை நம்மால் நிறைவு செய்ய முடிவதில்லை. 
சீரான பாதை!

உச்சியிலிருந்து தொடங்கு-22

நோபல் பரிசு பெற்ற வில்லியம் பட்லர் ஏட்ஸ்  "நமக்குப் பின்னால் காட்டுமிராண்டிக் கடவுள்' என்கிற வரிகளை எழுதினார். கலையின் நோக்கம் தற்கொலையை முடிவுக்குக் கொண்டு வருவது என்பதே  அவருடைய கருத்து.

சில நேரங்களில் தற்கொலை செய்து கொள்ளவில்லையென்றாலும் தீய பழக்கங்களுக்கு ஆட்படுவது மெதுவாகத் தற்கொலை செய்து கொள்வதற்குச் சமம்.  

எனக்குத் தெரிந்த ஒருவர் சிறந்த பேச்சாளர். ஆனால், போதைப் பழக்கத்திற்கு ஆளானார். மேடையில் பேசுவதற்கு முன்பு கூட போதையில் ஆழ்ந்துவிட்டு உரையாற்றத் தொடங்குவார். கம்பீரமான அவருடைய பேச்சு அவையைக் கட்டிப் போடும். சில நேரங்களில் அவருடைய பழக்கத்தை பெருமையாகக்கூட கூறிக்கொள்வார். பொதுவாகவே போதைப்பழக்கத்திற்கு ஆட்படுவர்கள், அவை உடலைக் கெடுத்துவிடும் என்பதை அறிந்தவர்கள். ஆனால் அந்தப் பழக்கம் தன்னை ஒன்றும் செய்யாது என அவர்கள் நம்புவார்கள்.  அப்படித்தான் அவர் அந்தப் பழக்கத்தை பெருமையாகச் சொல்லிக் கொண்டார்.  ஓடிக் கொண்டிருக்கிற நதி எப்போதும் ஓடுவதில்லை.  ஒருநாள் நலிந்து படுத்துவிட்டார்.  அப்போது அந்தப் பழக்கத்தை கட்டாயமாக கைவிட நேர்ந்தது.

இன்னொருவர் புகைவண்டியைப் போல எப்போதும் சிகரெட்டோடு இருப்பவர். அவரைச் சந்தித்த ஓர் இளைஞர் அவர் அடிக்கடி இருமுவதைப் பார்த்து, "நீங்கள் ஏன் இந்தப் பழக்கத்தை நிறுத்தக்கூடாது?'' என்று கேட்டார்.  தனக்கு ஒருவர் அறிவுரை வழங்குவதா என்று எண்ணி எரிமலையாக வெடித்தார் அந்த விஞ்ஞானி. 

அதற்குப் பிறகு கடுமையான உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  உயிருக்குப் பயந்து அந்தப் பழக்கத்தை அடியோடு நிறுத்தினார். 

இளைஞர் அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது, "நான் அந்தப் பழக்கத்தைக் கைவிட்டு விட்டேன்'' எனச் சொன்னார்.  உடனே அந்த இளைஞர், "நான் சொல்லும்போது நீங்கள் கேட்கவில்லை, காலம் அதை அழுத்தி உங்கள் காதுகளில் சொன்னபோது கேட்பதைத் தவிர வேறு வழியில்லை'' என்று சொன்னார்.  

காலம் கட்டாயமாகச் சொல்வதற்கு முன்பே, அதற்கான தேவையில்லாமல் வாழ்வதே சிறந்த வாழ்க்கை.   போதை மருந்துகள் மன அழுத்தத்திற்கு அடுத்த காரணியாக தற்கொலையில் முன்னிலை வகிக்கிறது. படைப்பாளி என்றால், அறிவாளி என்றால் வரைமுறையில்லாமல் வாழலாம் என சிலர் கருதிக் கொள்கிறார்கள்.  சமூகம் அதை ஏற்றுக்கொண்டாலும் உடலுக்கு படைப்பாளியா, படிப்பாளியா, முதலாளியா, தொழிலாளியா என்கிற வேறுபாடு இல்லை.  

மகத்தான பங்களிப்பைச் செய்த பலர் இயல்பான மரணத்தால் இல்லாமல் போனபோது ஏற்பட்ட வெற்றிடத்தை நம்மால் நிறைவு செய்ய முடிவதில்லை. 

மார்லோ இன்னும் அதிகநாட்கள் வாழ்ந்திருந்தால், கீட்ஸ் இறக்காமல் இருந்திருந்தால், பாரதி அற்ப ஆயுளில் மறையாமல் இருந்திருந்தால், பட்டுக்கோட்டை இன்னும் பல பாடல்களை எழுதியிருந்தால், கண்ணதாசன் இன்று உயிரோடு இருந்திருந்தால் என்கிற கற்பனை ஏக்கங்கள் நமக்குக் கண்ணீரை வரவழைக்கின்றன. 

இருண்மையான இலக்கியங்களைத் தொடர்ந்து வாசிக்கிறபோது வாழ்க்கை ஒரு சூனியமாகவும், வெறுமையாகவும் தென்படத் தொடங்குகிறது.

எல்லாவற்றையும் விமர்சிக்கும் போக்கும் ஏற்பட்டுவிடுகிறது.  ஏட்ஸ் கூறுவதைப்போல கலையின் நோக்கம் மனிதனை உற்சாகப்படுத்துவதும், அவனிடம் தேடலை ஏற்படுத்துவதும், அவனுக்குள் இருக்கும் மேன்மையான குணங்களை வெளிக்கொண்டு வருவதும், வாழ்க்கையைப் புதிய நோக்கில் பார்க்கச் செய்வதும். 

சிறையிலிருந்தபோது ஏற்பட்ட அனுபவங்களின் காரணமாக தாஸ்தாவஸ்கி "ஆட்கொண்டல்' என்கிற புதினத்தில் வரும் மையப் பாத்திரம் தாம் கடவுள் என்று காட்டுவதற்காக தற்கொலை செய்வதுபோல காட்டியிருப்பார்.  ஆனால் அவன் கடவுள் இல்லை என்பதை அவன் அறிந்திருந்ததால்தான் அந்த முடிவை எடுக்கிறான். இதுபோன்ற சித்திரிப்புகள் வாசகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்திவிடுவதுமுண்டு.  தோல்வி மனப்பான்மையில் இருப்பவர்களுக்கு இவை தீர்வுகளாகக் கூட தென்பட வாய்ப்புண்டு.  

மிகப்பெரிய படைப்பாளிகள் சில பழக்கங்களைக் கொண்டிருந்தார்கள் என்கிற காரணத்தால் அவர்களைப் பார்த்து சூடு போட்டுக் கொண்ட பூனைகள் உண்டு.  படைப்பாளியின் படைப்பை மட்டும் ரசிக்க வேண்டுமே தவிர, அவர்கள் சுயசரிதத்தை நகலெடுக்க வேண்டிய அவசியமில்லை.  

ஜாக்ஸன் போலக் என்கிற புகழ்பெற்ற அமெரிக்க ஓவியர் ஒரு வாகன விபத்தில் இறந்துபோனார்.  அவருடைய மதுப்பழக்கமே அதற்குக் காரணம். 

சந்தேகங்களில் இரண்டு விதம் இருக்கின்றன.  ஒன்று சுயத்தைப் பற்றிய சந்தேகம், இன்னொன்று கருத்தைப் பற்றிய சந்தேகம்.  கருத்து குறித்த சந்தேகம் தேட வைக்கிறது, ஆய்வு செய்யத் தூண்டுகிறது, உண்மையைக் கண்டுபிடிக்க நம்மை ஊக்கப்படுத்துகிறது.  ஆனால், சுய சந்தேகம் ஏற்படும்போது பதற்றம் உண்டாகிறது.  போலக், மதுப்பழக்கத்தால் மன அழுத்தத்திற்கு ஆட்பட்டு, வேண்டுமென்றே விபத்து ஏற்படும்படி வாகனத்தை  ஓட்டியதாக பதிவுகள் உள்ளன.

கல்லூரிகளில் விளையாட்டாக தீய பழக்கங்களுக்கு ஆளாகிற பல மாணவர்கள் அவற்றிலிருந்து மீள முடியாமல் எல்லா நேரமும் அந்த தாக்கத்திலேயே இருக்கிறார்கள்.  ஏற்கெனவே அந்தப் பழக்கத்தை வைத்திருந்த சிலர்கூட அந்த அளவிற்கு போதை தலைக்கேறி திரிவதில்லை.  எதிலும் புதிதாகச் சேர்ந்தவர்கள்தான் அதிகப் பற்றோடு இருப்பார்கள்.  இவர்கள் தேர்வுகளைத் தவறவிட்டு பல பாடங்களை மீதம் வைத்து ஒரு கட்டத்தில் குற்ற உணர்வில் ஆழ்ந்துவிடுவார்கள்.  திடீரென கெட்ட கனவுகளும், இனந்தெரியாத பயமும் அவர்களை ஆட்கொள்ளும்.  இனி வாழ்ந்து பயனில்லை என்கிற முடிவுக்கு இவர்கள் வந்துவிடுகிறார்கள்.

போதைப் பழக்கங்களில் தீவிரமாக இருப்பவர்கள் உடல் மெலிந்தும், அழுக்கு உடைகளோடும் இருக்கிறபோது சக மாணவர்கள் அவர்களிடம் அதிகமாகப் பழக மறுக்கிறார்கள்.  இவர்கள் வட்டமும் சுருங்கிவிடுகிறது.  பிறகு அதுவே ஒருவித தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகிறது.  போதை விலகும்போதெல்லாம் அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆட்படுகிறார்கள்.  வீட்டிலிருப்பவர்கள் அவர்களை நம்பிக்கையோடு  எதிர்பார்க்கும்போதெல்லாம் அவர்களின் குற்ற உணர்வு பலமடங்காகப் பெருகுகிறது.  இனி அவர்கள் முகத்தில் விழிப்பதுகூட சாத்தியமில்லை என்று தோன்றுகிறது.  அவர்கள் சுய மரணத்தை தேடிக் கொள்கிறார்கள்.  இதுபோல போதையின் காரணமாக மரணத்தைத் தேடுவது மேலை நாடுகளில் அதிகஅளவில் இருக்கிறது.  

நியூயார்க் நகரில் தற்கொலைக்கு முயன்ற 100 பேரை ஆய்வுசெய்தபோது அவர்கள் எல்லாரும் மனநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தது.  இனி எந்தவிதமான நம்பிக்கையுமில்லை என்கிற நிலைக்கு அவர்கள் வந்துவிட்டார்கள். அப்போது மரணமே தீர்வாகத் தென்பட்டது. அவர்களில் பலர் தங்கள் போதைப் பழக்கத்தையும், அதனால் ஏற்பட்ட மனஇயல் அறிகுறிகளையும் காரணமாகச் சொன்னார்கள்.  

போதைப் பழக்கங்களுக்கு ஆளாகிறவர்கள் அவற்றின் அளவை அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள்.  அவையில்லாமல் வாழ முடியாது என்கிற நிலைக்கு ஆளாகிறார்கள்.  அதற்காகத் திருடவும், கொலை செய்யவும் கூட முற்படுகிறார்கள்.  ஒரு கட்டத்தில் தங்களை எண்ணி தாங்களே வெட்கப்பட்டு வாழ்வை முடித்துக் கொள்கிறார்கள்.

குடிபோதை போன்றவற்றிற்கு ஆளாகிறவர்கள் மரியாதைக் குறைவையும் சந்திக்கிறார்கள்.  கெளரவத்தை இழக்கிறார்கள். அது அவர்கள் துணிச்சலை பெருக்கித் தள்ளிவிடுகிறது. சில நேரங்களில் இதுபோன்ற தீவிர போதைப்பழக்கத்திற்கு ஆளானவர்களின் உறவினர்கள் அவர்கள் மீது ஏற்படுகிற வெறுப்பின் காரணமாக தற்கொலை செய்கிற நிகழ்வுகளும் நடக்கின்றன. தின்னத் தின்ன கேட்கும் தீயாக போதைப் பழக்கம் ஒருவரை ஆட்படுத்திவிடுகிறது. போதைப்பழக்கம் ஒருவருக்கு உணர்ச்சிவசப்படும் தன்மையையும், வன்முறையையும் ஏற்படுத்திவிடுகிறது. பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான ஆற்றல் பறி போய்விடுகிறது.

ஆளுமைச் சிதையும் ஏற்பட்டுவிடுகிறது. சாப்பிடுவதிலும் குறைபாடுகளை ஏற்படுத்திவிடுகிறது. இவையெல்லாம் ஒருவனை வாழ்க்கை வீண் என்கிற மனநிலைக்கு அழைத்துச் செல்கின்றன.

போனால் திரும்பக் கிடைக்காத அற்புதமான வாய்ப்பு இந்த வாழ்க்கை.  மனத்தை எவ்வளவு செம்மையாக வைத்திருக்கிறோமோ, அவ்வளவு செறிவாக நாம் வாழ முடியும். முறையாக வாழ்கிறவர்கள் ஒரே வாழ்க்கையை பத்து வாழ்க்கை அளவிற்கு விருத்தி செய்து திருப்தியோடு இருக்கிறார்கள். தீய பழக்கங்களில் தோய்பவர்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட அழகான காகிதத்தைக் கசக்கி எறிந்து கொடுக்கப்பட்ட ஆயுளையும் கிழித்து  விடுகிறார்கள்.

சீரான பாதையில் இனிய பழக்கங்களோடும், நல்ல நண்பர்களோடும், கல்லூரி வாழ்க்கையை கவிதையாக்கிக் கொள்பவர்கள் அவர்களுக்கு அளிக்கப்பட்ட புத்தகத்தின் ஒவ்வொரு வரியையும் விடாமல் வாசிப்பதோடு அவற்றில் தங்கள் சிந்தனைகளையும் செதுக்கிவிட்டுச் செல்கிறார்கள்.
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com