காதலும் ஓர் உணர்வே!

காதல் நிறைவேறாதபோது தொன்றுதொட்டு காதலர்கள் தங்களை மாய்த்துக் கொள்கிற நிகழ்வுகள் மகத்தான காப்பியங்களிலும் இடம் பெற்றிருக்கின்றன. மேற்கில் இதை ரோமியோ-ஜுலியட் காரணி (Romeo-Juliet factor) என்று குறிப்பிடு
காதலும் ஓர் உணர்வே!

உச்சியிலிருந்து தொடங்கு-23
திரையில் காட்டப்படும் அனைத்தையும் வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்கிற பருவம் பதின்ம வயது.  அந்தப் பருவத்தில் மூளையின் ஒரு பகுதி வித்தியாசமாக இயங்குகிறது என்றும், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பது முக்கிய அங்கம் வகிக்கிறது என்றும் மூளை நரம்பியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.  அந்தப் பருவத்தில் மூளையின் முன்பக்க கார்டெக்ஸில் (Prefrontal Cortex) சாம்பல் பகுதி (gray matter) கணிசமாக குறையும் என்றும், முடிவெடுத்தல், திட்டமிடுதல் ஆகியவற்றில் குறைபாடு ஏற்படும் என்றும் அறிந்திருக்கிறார்கள்.  

குளிர்காலக் கதை என்கிற நாடகத்தில் பதின்ம வயதைச் சார்ந்தவர்களின் வித்தியாசமான நடவடிக்கைகளை ஷேக்ஸ்பியர் எடுத்துக் கூறியிருப்பார்.

காதலை பிரம்மாண்டப்படுத்தும் பொழுதுபோக்கு அம்சங்கள் அந்தப் பருவத்தில் கவர்ச்சிகரமாகத் தோன்றுகின்றன.  அதிக சமூக பிரக்ஞை ஏற்படும் அந்தப் பருவத்தில் தன் அன்பை ஒருவர் ஏற்றுக் கொள்ளாவிட்டால் மிகப்பெரிய மனச்சோர்வை அது ஏற்படுத்துகிறது.  இனக் கவர்ச்சிக்கும் காதலுக்குமான வேறுபாட்டை சரியாகப் புரிந்து கொள்ள முடிவதில்லை.  இவற்றைப் பற்றியெல்லாம் பெற்றோர்களும், குழந்தைகளோடு பேசுவதில்லை.  முறையான ஆலோசனைகள் அந்தப் பருவத்தில் தேவைப்படுகின்றன.  அது கிடைக்காததால் தவறான கற்பிதங்கள் இதயத்தில் புகுந்து கொள்கின்றன.  

"காதல் என்பது தெய்வீகமானது, அது ஒன்று மட்டுமே உயர்ந்தது' என்று திரைப்படங்களில் காட்டப்படுவதை அப்படியே நம்பி அதை நோக்கியே எல்லா நேரமும் ஓடிக்கொண்டிருக்கும் ஒருவித அவஸ்தையை சில பதின்ம வயதினர் உணர்கிறார்கள்.  உடன் படிக்கும் சிலர் இதில் வெற்றி பெறுவதைப் பார்த்து தாங்கள் தோற்றால் வாழ்க்கையே வியர்த்தம் என்று எண்ணத் தொடங்குகிறார்கள்.  தன்னுடைய முன்மொழிவை மறுத்த பெண்ணை தண்டிக்க வேண்டுமென்று கூட நினைக்கிறார்கள். சில நேரங்களில் அது வன்முறையாக மீறி கொலையில் முடிகிறது.  அண்மைக் காலங்களில் பல்வேறு இடங்களில் விருப்பத்தை ஏற்க மறுத்த பெண்ணை கொலை செய்வதைப் பார்க்கிறோம்.  இன்னொரு பக்கம் தற்கொலை செய்து கொள்பவர்களையும் பார்க்கிறோம்.  

காதல் நிறைவேறாதபோது தொன்றுதொட்டு காதலர்கள் தங்களை மாய்த்துக் கொள்கிற நிகழ்வுகள் மகத்தான காப்பியங்களிலும் இடம் பெற்றிருக்கின்றன. மேற்கில் இதை ரோமியோ-ஜுலியட் காரணி (Romeo-Juliet factor) என்று குறிப்பிடுவார்கள்.  மரணத்திற்குப் பிறகாவது நாங்கள் இணைவோம் என எண்ணி அபத்தமாக செய்து கொள்கிற முடிவு இது.  காப்பியங்களை அப்படியே வாழ்க்கை என எடுத்துக் கொள்ள  முடியாது.  

சில்வர்ஸ்டர் ஸ்டோலன் சின்ன வயதில் திரைப்படத்தில் மாடியிலிருந்து குதிப்பது நிஜம் என்று கருதி குடையை பாராசூட்டாக எண்ணி முதல் மாடியிலிருந்து விழுந்து அடிபட்டாராம்.  இந்தியாவில் பல குழந்தைகள் சக்திமான் காப்பாற்றுவார் என்று விபரீதமாக செயல்பட்டு இறந்ததைப் படிக்கிறோம்.  கற்பனைகளும், பொய்களும், மிகைப்படுத்துதலும் திரைப்படம் போன்ற வணிக ஊடகத்திற்கு அவசியம்.  பலருடைய வாழ்க்கை அதில் சம்பந்தப்பட்டிருக்கிறது.  அதை எந்த தூரத்தில் வைக்க வேண்டுமென்பதற்கு அவ்வப்போது சமூகம் தொடர்ந்து வினையாற்ற வேண்டும்.  

இன்று நாம் எதை விரும்புகிறோமோ, அதை இன்னும் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு விரும்புவோம் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை.  
நான் படித்திருக்கிறேன்...
பணக்காரர் ஒருவரை ஒரு பெண் நேசித்தாள்.  அவரோ ஏற்கெனவே மணமானவர்.  அவருக்கும் மனம் ஊசலாடியது.  இதை மோப்பம் பிடித்த அவருடைய மனைவி ஒருநாள் அவரைக் கையோடு கூட்டிக் கொண்டு போய் காதலியின் வீட்டுக் கதவைத் தட்டினாள்.  அவள் கதவைத் திறந்ததும் அதிர்ந்து போனாள்.  கதவைச் சாத்த முயன்றாள். மனைவி அவளிடம், ""ஒரே ஒரு கேள்வி. அதற்கு மட்டும் பதில் சொல்லிவிடு. அதற்கான விடை எனக்குத் தெரிந்தால் போதும். நான் போய்விடுகிறேன்'' என்றாள். காதலி அமைதியாக இருந்தாள். அவளிடம் மனைவி, ""பத்து வருடமாக இவரோடு வாழ்கிறேன். இவரிடம் பணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.  இவரை நேசிக்குமளவிற்கு நீ என்ன கண்டு விட்டாய்?'' என்று காரசாரமாகக் கேட்டாள்.  

பதின்ம வயது அலைபாயும் பருவம்.  அந்த வயதில் பச்சைக்குத்திக் கொண்டவர்கள் பத்து வருடங்கள் கழித்து அதை அழிக்கப் பெரும்பாடு படுகிறார்கள்.  இன்று பதின்ம வயதிலிருக்கும் ஒருவரை அவருடைய சிறந்த நண்பர், பிடித்த சுற்றுலாத்தலம், விரும்பும் பொழுதுபோக்கு, ரசிக்கும் இசை ஆகியவற்றைக் கேட்டுவிட்டு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களுடைய விருப்பங்களைக் கேட்டால் வேறு மாதிரியாகப் பதில் வரும்.  அதற்கு முக்கியக் காரணம் விருப்பங்கள் எதுவும் நிலையானதல்ல.  மாறிக் கொண்டே இருப்பவை.  அதேபோலத்தான் இந்தப் பெண் இல்லாவிட்டால் வாழ்க்கையே இல்லை என நினைத்தவர்கள் அவளை அடைய முடியாமல் வேறு யாரையோ திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்வதைப் பார்க்கலாம்.  

கோபம் போல், பயம் போல் காதலும் ஒருவித உணர்ச்சி.  அது ஒன்று மட்டுமே வாழ்க்கையைத் தீர்மானிக்க வேண்டுமென்று நினைக்கக் கூடாது.  படிக்கும்போது நிறைவேறாத காதல் பணிபுரியும்போது வேறொரு நட்பில் மறுபடியும் சாத்தியப்படலாம்.  அப்போது நாம் சின்ன வயதில் தேவையில்லாமல் உணர்ச்சி வசப்பட்டோமே என்று வருத்தப்படுவதுண்டு.  

நிறைய வாய்ப்புகள் முன்வைக்கப்படும்போது தேர்ந்தெடுப்பதில் சிரமங்கள் இருக்கின்றன.  ஒரு காலத்தில் உணவு விடுதியில் நான்கைந்து  பதார்த்தங்கள் மட்டும் தான் இருக்கும்.  ஆனால் மக்கள் சாப்பிட்டுவிட்டு சந்தோசமாக வருவார்கள்.  காரணம் தேர்ந்தெடுப்பதற்கு வாய்ப்புகள் குறைவு.  ஆனால் இன்று 400 பதார்த்தங்கள் விலைப்பட்டியலில் இருக்கின்றன.  சாப்பிட்டு முடித்ததும் யாரும் அகமகிழ்ந்ததாகத் தெரியவதில்லை. வேறொன்றைச் சாப்பிட்டிருக்கலாமோ என எண்ணுகிறார்கள். அவசரப்பட்டு காதலித்தவர்கள் நிலையும் இதுதான்.  

காதல் என்பது முதிர்ச்சியில் வர வேண்டும். இயல்பாக மலர வேண்டும். நீ இல்லாவிட்டால் நானில்லை என்று குழந்தைத்தனமாக சிந்திப்பதல்ல காதல்.  அது ஒருவிதமான சுயநலம்.  இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வதல்ல காதல்,  ஒரே திக்கில் பார்ப்பதுதான் நேசம் என்று ஆன்டன் த எக்ஸுப்ரே குறிப்பிடுகிறார்.  

நேசித்துத் திருமணம் செய்துகொள்கிற சில நிகழ்வுகள் விரைவிலேயே விவாகரத்தில் முடிவதையும் பார்க்கிறோம்.  அதற்கு முக்கியமான காரணம் அத்திருமணத்தில் எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் ஏற்படுவதுதான்.  சில நேரங்களில் பெற்றோர்கள் செய்து வைக்கிற திருமணத்தில் தேர்ந்தெடுப்பதற்கு வாய்ப்பும் குறைவு, இவரைத் திருமணம் செய்திருக்காவிட்டால் என்று யோசிக்கிற சந்தர்ப்பங்களும் குறைவு, எதிர்பார்ப்புகளும் அதிகம் இருப்பதில்லை.  ஆனால் நேசித்தவரிடம் மணமான பின்பு ஏற்படும் ஏமாற்றங்கள் பூதாகரமானவையாகத் தோன்றுகின்றன.

படிக்கும்போது பலரிடம் பழக நேரும்.  ஒருவர் இயல்பாகப் பேசினால் அதைக் காதல் என்று கருதிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.  திருட்டுத்தனமாகத் திருமணம் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.  ஊட்டி வளர்த்தவர்களை உதறி எறிந்துவிட்டு, தூக்கி வளர்த்தவர்களை தூக்கியெறிந்துவிட்டு நேற்றுப் பார்த்தவர்களோடு நெடுந்தூரம் செல்ல வேண்டியதுமில்லை.  நம் சொந்தக் காலில் நின்று சரியான புரிதலோடு வாழ்வை முன்னகர்த்திச் செல்லும் தகுதியிருந்தால், ஒரே அலைவரிசையில் இருவரும் எதிர்காலத்தைப் பற்றி எண்ணங்களைக் கொண்டிருந்தால் அனைவருக்கும் புரிய வைத்து நடக்க வேண்டியது திருமணம்.

பெற்றோர்களும், சமூகமும் குழந்தைகளுக்கு நன்கு தெளிவுபடுத்த வேண்டியது அவசியம்.  எது உண்மையான அன்பு என்பது படித்து அறிய வேண்டிய ஒன்று.  பெற்றோர்கள் கண்டிப்பாக வளர்க்கிறபோது, பள்ளிக்கு அழைத்துச் செல்கிறவர்கள் மீது கூட இனக்கவர்ச்சி ஏற்படுவதை நான் பார்த்திருக்கிறேன்.  கனிவு கலந்த கண்டிப்பு, எச்சரிக்கையோடு கூடிய கவனிப்பு, பகிர்ந்து கொள்கிற இன்பச் சூழல் ஆகியவற்றின் மூலம் காதல் தோல்வியால் ஏற்படுகிற தற்கொலைகளைத் தடுக்க முடியும்.  

உண்மையான காதல் ஒருவரை மட்டும் பிரதானப்படுத்துவதல்ல, எல்லாரின் ஒத்துழைப்போடு அந்த நேசத்தை முன்னிறுத்துவதை இளைஞர்கள் புரிந்துகொண்டால், அந்தத் திருமணங்களின் மூலம் சாதிகளும் ஒழியும், சமூகமும் செழிக்கும்.
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com