வலிகளைத் தாங்குவோம்!

வலியும் ஒரு முக்கியமான அனுபவம்.  சிரிப்பைப்போல கண்ணீரும் தேவையான ஒன்று.   அழுகிறபோது துயரத்தினால் உடலில் உண்டாகும் ரசாயனங்கள் கண்களின் வழியாக கழிகின்றன.  வலிகளைத் தாங்குகிறவர்களே வரலாறு படைக்கிறார்கள்
வலிகளைத் தாங்குவோம்!

உச்சியிலிருந்து தொடங்கு-24

கிரேக்க ஞானியான ஜெனோ உள்ளொடுக்கவாதம்  (Stoicism) என்கிற கோட்பாட்டை முன்வைத்தவர். விருப்பு, வெறுப்பற்ற நிலையை அது வலியுறுத்தியது. அவர்கள் தற்கொலையைச் சரியென்றோ, தவறென்றோ கருதாத நிலைப்பாட்டைக் கொண்டவர்கள்.  அந்த வாதத்தை வழிமொழிந்த செனக்கா, "வாழ்க்கை சுகமாக இருந்தால் வாழ்.  இல்லாவிட்டால்  வந்த இடத்திற்குத் திரும்ப உனக்கு உரிமையுண்டு'' என்று சொன்னார். ஆனால், அப்பிரிவைச் சார்ந்த அவர்கள் அதை ஒப்புக்கொள்ளவில்லை.  

ஜெனோ கால்பெருவிரல் உடைந்த காரணத்தால் அதைக் கடவுள் தனக்கு அனுப்பிய சமிக்ஞையாகக் கருதி 98ஆம் வயதில் தன்னை மாய்த்துக் கொண்டவர்.  அவருடைய சீடர் க்ளீந்தஸ் ஈறுகளில் கொப்பளம் வந்ததால் இரண்டு நாட்கள் அது ஆறுவதற்காக சாப்பிடாமல் இருக்க மருத்துவரால் அறிவுறுத்தப்பட்டார்.  அது குணமான பிறகும் அவர் விரதம் இருந்து உயிரை முடித்துக் கொண்டார்.  மரணத்தை நோக்கி இவ்வளவு தூரம் வந்த பிறகு அதை முடித்துக் கொள்வதே சரி என்பது அவர் கூற்று.  

மாதவிலக்கு வலியின் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக சில செய்திகளைப் பார்க்கலாம்.  மாதவிலக்குச் சுழற்சி மனச்சோர்வை ஏற்படுத்துவதால் அது ஏற்கெனவே தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்களை அதை நோக்கிக் தூண்டுகிறது.  அதை மரணத்தை வரவழைக்கும் வலியாகக் கருத வேண்டியதில்லை.  மருத்துவர் திருநாவுக்கரசு கூறுவதைப்போல, பிரசவ வலியை விடவா மற்ற வலிகள் பிரமாண்டமானவை?

உடல் வலியைப் பெரிதாக எண்ணாவிட்டால் அது நம்மைப் பாதிப்பதில்லை என்பது நடைமுறை உண்மை.  சில சமூகங்களில் அம்மன் திருவிழாவின்போது நீண்ட ஈட்டிகளை  ஒரு கன்னத்தில் குத்தி இன்னொரு கன்னத்தின் வழியாக வெளியே வரும்படி நேர்ந்து கொண்டு பிரார்த்தனை செய்வதைப் பார்த்திருக்கிறோம்.  அருகில் இருப்பவர்கள் வலிக்கிறது என்று சொன்னால் ஒருவித ஒலியை எழுப்புவார்கள்.  அந்த வேலை எடுத்ததும் அது விரைவில் ஆறி விடுவதையும் பார்க்கலாம். எந்தச் சமூகம் வலியைப் பொருட்படுத்துவதில்லையோ அந்தச் சமூகத்தில் காயங்கள் விரைவாக ஆறுகின்றன.  

இராணுவத்தில் போரின்போது காலை இழந்தவர்கள் வலி குறித்து அதிகமாக அலட்டிக் கொள்வதில்லை. அதற்குக் காரணம், உயிர் மிஞ்சியதே என்கிற நிம்மதிதான். எனவே வலி என்பது அதை எவ்வாறு நாம் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து அமைகிறது.  வடகிழக்கு மாகாணங்களில் யாராவது கீழே விழுந்தால் நம்மைப்போல் அவர்கள் "அச்சச்சோ' என்று சூள் கொட்டுவதில்லை.  விழுந்தவரைப் பார்த்து எல்லாரும் சிரிப்பார்கள், அவரும் வெட்கமாக சிரித்துக் கொண்டே எழுந்து வருவார். நம்மூரில் நாம் பரிதாபப்பட்டதும் சாதாரணமாக எழுந்தவர் அழுதுகொண்டு வருவார்.  வலியை ஒட்டு மொத்த சமூகம் எப்படி எடுத்துக் கொள்கிறது என்பதே அச்சமுதாயத்தின் வலிதாங்கும் திறனை நிர்ணயிக்கிறது.  

சின்ன வயதிலிருந்தே வலியைப் பெரிதுபடுத்தாத சூழலை உருவாக்கினால் அதற்காக மனம் உடைகிற வழக்கம் துளிர்விடாது.  வலிகளைத் தாங்கும்போதுதான் வாழ்க்கையில் நாம் எண்ணியதைச் சாதிக்க முடியும்.  

உலகின் தலைசிறந்த நகைச்சுவைகள் யூதர்களிடம் புழங்குகின்றன. மிகுந்த துயரங்களுக்கு இடையே காலம் தள்ளியவர்கள் அவர்கள்.  அவர்களுடைய நகைச்சுவையே அவர்களுக்கு உயிர் கொடுத்தது.  அந்தச் சிரமங்களை எருவாக ஆக்கிக் கொண்டு எண்ணற்ற கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து அதிக நோபல் பரிசுகளை அவர்கள் தட்டிக் செல்கிறார்கள்.  வலியைக்கூட சிரிக்கக் கற்றுக் கொண்டு புறந்தள்ள வேண்டும் என்பது அவர்கள் நெறி.  வள்ளுவரும் இடுக்கண் வருங்கால் சிரிக்கச் சொன்னது அதனால்தான்.

உடல் வலியைத் தாங்கிக்கொள்கிறவர்கள் கூட மன வலியைப் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை.  நாம் எப்போது நம்மைவிட மற்றவர்கள் முக்கியம் என்று நினைக்கிறோமோ, அப்போது மன வலியைத் தவிர்க்க முடியாது.  நம்மை நிரூபிக்க நினைக்கிறபோதும், நம்மைவிட அடுத்தவர்கள் முக்கியம் என்று நினைக்கிறபோதும் நாம் மகிழ்ச்சியை காவு கொடுப்போம்.  இன்னொருவர் நம்மைப் பற்றி இல்லாததையும், பொல்லாததையும் சொன்னால் அதற்காக நாம் அவமானப்பட வேண்டியதில்லை.  உண்மையான அவமானம் நம்மிடம் இருந்து உருவாக வேண்டும்.  நாமே நினைத்துக் கூசுகிற மாதிரி ஒரு செயலைச் செய்தால் அது நம்மை வருத்த வேண்டும், பிறகு திருத்த வேண்டும்.  மாட்டிக்கொண்டால் உடல் கூசுவது அவமானத்தில் அடங்காது. 

ஜப்பானில் உடல்வலியில் ஒப்பற்று விளங்கும் சாமுராய்கள் கூட தற்கொலை செய்து கொள்வது சகஜம்.  செப்புக்கு என்று அதற்குப் பெயர்.  ஜப்பானிய எழுத்தில் அதைத் தலைகீழாக வாசித்தால் ஹராக்கிரி என்று வரும். மனவலி ஒருவிதமான கணநேர வெறுப்பை ஏற்படுத்திவிடுகிறது.  நமக்கு உரைக்க வேண்டும் என்பதற்காக சிலர் வைவது உண்டு.  அது நியாயமான குறையா? என்று யோசித்துப் பார்க்க வேண்டியது நம்முடைய கடமை.  

"நான் இறந்ததும் நீ வருத்தப்படுவாய்' என்கிற மனோபாவம் ஜப்பானில் அதிகமிருந்தது.  இதற்கு மாயாஜால சிந்தனை என்று பெயர்.  ஒருவர் அவமானப்படுத்திவிட்டால் அவருடைய வீட்டிற்குச் சென்று அவர் வாசலில் நின்றுகொண்டு தற்கொலை செய்து கொள்வது பழைய ஜப்பானிய மரபு.  இன்றும் சில இடங்களில் நம்மூரில் மன வலியை ஏற்படுத்தியவர்களுக்கு குற்ற உணர்வை ஏற்படுத்துகிற மாயாஜால சிந்தனை இருக்கவே செய்கிறது.  அவரவர்களுக்கு இருக்கிற பிரச்னையில் இவையெல்லாம் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என்பதே யதார்த்தம்.

மிகவும் செல்லமாக வளர்க்கப்படுகிறபோதும் வெளியில் ஏற்படும் சின்ன சிராய்ப்புகளை எலும்பு முறிவுகளாகக் கருதிக் கொள்ளும் மனப்பான்மை குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.  பல பெற்றோர்கள்,  என் குழந்தையை நான் திட்டியதே இல்லை எனப் பெருமைப்பட்டுக் கொள்வதைப் பார்க்கலாம்.  அது சரியான அணுகுமுறையல்ல.  பாதுகாக்கப்பட்ட குடிநீர்போல பாதுகாக்கப்பட்ட குழந்தைகள் சமூகத்தில் கிளம்பும் எதிர்ப்புகளையும், சில நேரங்களில் மற்றவர்கள் புறம் பேசுவதையும் சகித்துக்கொள்ளுகிற மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது அரிது.  அடிக்கடி நீர் ஊற்றாமல் வளர்க்கப்படுகிற நெல் மட்டுமே வறட்சியைத் தாங்கும் ரகமாக நிமிர்ந்து நிற்கிறது.  

ஏமாற்றங்கள், புறக்கணிப்புகள், தோல்விகள், அவமானங்கள், உதாசீனங்கள், நிராகரிப்புகள், காத்திருத்தல் ஆகியவற்றைச் சந்தித்து வளர்கிறபோது குழந்தைகள் மனவலியால் பாதிக்கப்படுவதில்லை.  இன்று எதையும் கணினி மூலம் வாங்கிவிடலாம், காத்திருக்கத் தேவையில்லை என்று நாம் உருவாக்கியிருக்கிற நிலை அவர்களை பதற்றப்படுத்துவதாக இருக்கிறது.  சின்ன தாமதத்தையும் அவர்களால் செரிமானம் செய்ய முடிவதில்லை.  

குழந்தைகளை ஊக்கப்படுத்துவதை எல்லா நிகழ்வுகளில் செய்வதைவிட, விட்டு விட்டுச் செய்வது நல்லது என மனவியல் வல்லுநர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.  எப்போதும் கிடைக்கும் என்பதைவிட, எப்போதாவது கிடைக்கும் என்கிற நிலை எல்லா நிகழ்வுகளையும் கச்சிதமாகச் செய்ய ஒருவரைத் தூண்டும்.  

பகிரங்கமாக குழந்தையைத் திட்டுவதும் ஆபத்து.  அதைப் பக்குவமாக, நாகரிகமான சொற்களால் போர்த்தி நயமாகச் செய்ய வேண்டும்.  குறையைத் தனிப்பட்ட முறையிலும், பாராட்டைப் பலர் முன்னிலையிலும் செய்வது பலனளிக்கும்.  அலுவலகங்களிலும் ஒருவருடைய தன்முனைப்பை எல்லார் முன்னிலும் காயப்படுத்தினால் அவர்கள் ஒடிந்துபோய் எதையோ ஒன்றைச் செய்துகொள்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.  ஒருவருக்கு நாம் மன வலியை ஏற்படுத்தினால் அது அவர்களுடைய தன்னம்பிக்கையை தகர்த்தெறிவதோடு நம்மால் எதுவும் முடியாது என்கிற எண்ணத்தையும் ஏற்படுத்திவிடும்.  

எனக்குத் தெரிந்த ஒரு பெண், வகுப்புத் தோழி ஒரு வாரமாகப் பேசவில்லை என்பதற்காக தற்கொலை செய்து கொண்டாள்.  நுண்ணிய மனத்தோடு வளர்க்கப்படுபவர்கள் இதைப்போல செய்து கொள்வதுண்டு.  இது மாநகரங்களில் சற்று அதிகம்.  கிராமங்களில் நண்பர்கள் சண்டைபோடுவதும், சில நாட்கள் பேசாமல் இருப்பதும், பிறகு சேர்ந்து கொள்வதும் சகஜம்.  

"நாம் தான் சிரமப்பட்டோம், குழந்தைகளாவது மகிழ்ச்சியாக இருக்கட்டும்' என நினைப்பதில் தவறில்லை, ஆனால் அதற்காக அவர்களை வாழ்க்கையின் சகல பரிமாணங்களையும் உணராமல் வளர்ப்பது பலவீனப்படுத்திவிடும்.

வலியும் ஒரு முக்கியமான அனுபவம்.  சிரிப்பைப்போல கண்ணீரும் தேவையான ஒன்று.   அழுகிறபோது துயரத்தினால் உடலில் உண்டாகும் ரசாயனங்கள் கண்களின் வழியாக கழிகின்றன.  வலிகளைத் தாங்குகிறவர்களே வரலாறு படைக்கிறார்கள்.

-தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com