வன்மம் தவிர்ப்போம்!

சின்னக் குழந்தைகளாக இருக்கிறபோது பலர் வன்மத்தை உறிஞ்சிக் கொள்கிறார்கள்.  பெற்றோர்கள் போடுகிற சண்டை, அக்கம் பக்கத்தில் நடக்கிற அடிதடி, ஆக்ரோஷமான சொல்லாடல்கள்,
வன்மம் தவிர்ப்போம்!

உச்சியிலிருந்து தொடங்கு-17

நம் எல்லாரிடமும் சிறிதளவு வன்மம் நம்முடைய ஆழ்மனத்தில் ஒளிந்திருக்கிறது.  அது மரபுக்கூறு தொடர்புடைய பரிணாம வளர்ச்சியின் நீட்சி. அந்த வன்மத்தை மெருகேற்றி ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுபவர்கள் வெற்றியடைகிறார்கள். அதை தனக்குள்ளேயே அடைகாத்துக் கொண்டிருப்பவர்கள் அடுத்தவர்கள் மீது அதை செலுத்த முடியாதபோது தங்கள் மீதே செலுத்திக் கொண்டு வீழ்ச்சியடைகிறார்கள்.

சின்னக் குழந்தைகளாக இருக்கிறபோது பலர் வன்மத்தை உறிஞ்சிக் கொள்கிறார்கள்.  பெற்றோர்கள் போடுகிற சண்டை, அக்கம் பக்கத்தில் நடக்கிற அடிதடி, ஆக்ரோஷமான சொல்லாடல்கள், வன்மம் கலந்த அத்துமீறல்கள் போன்றவை அவர்களுக்குள் வன்முறை தவறல்ல என்கிற எண்ணத்தை ஏற்படுத்திவிடுகிறது. 

நம்முடைய பொழுதுபோக்குக்கான அனைத்து அம்சங்களிலும் ரத்தமும், இம்சையும் நீக்கமறக் கலந்திருக்கின்றன.  குழந்தைகள் கார்ட்டூன்களைத்தானே பார்க்கிறார்கள் என சில பெற்றோர்கள் நினைக்கிறார்கள்.  ஆனால், அவற்றில் வெளியே அப்பட்டமாகத் தெரியாத வன்மம் ஒளிந்திருக்கிறது. பாத்திரங்கள் படங்களாக இருப்பதால் பெரியவர்களுக்கு அவை வன்மம் கலந்ததாகத் தெரிவதில்லை.  ஆனால், குழந்தைகள் அவற்றைப் பாத்திரங்களாகப் பார்க்கிறார்கள். மல்லிகை நறுமண திரவத்தின் வாசனை மெதுவாக அறையெங்கும் படர்வதைப்போல, அவர்கள் இதயத்திற்குள் வன்முறை நுழைந்துவிடுகிறது.  

வன்முறையால் நாம் நினைத்தைச் சாதித்துக் கொள்வதில் எந்தத் தவறுமில்லை என்கிற எண்ணம் பலருக்கும் ஏற்படுகிறது. அடம்பிடிப்பதும் ஒருவித வன்முறையே. அழுது சாதிப்பதும் ஒருவித அடக்குமுறையே. 

சில நேரங்களில் திசை திரும்பிய வன்மம் நிகழ்கிறது.  நாம் ஒருவர் மீது இருக்கும் கோபத்தை அவர்மீது காட்ட முடியாவிட்டால், வேறு யார் மீதோ அதை வெளிப்படுத்துகிற யதார்த்தம் அன்றாடம் அனுபவிக்கும் ஒரு நிகழ்வு.  

முதலில் அது உயிரற்றவற்றின் மீது நிகழ்த்தப்படுகிறது.  கணக்கு தப்பானால் காகிதத்தை கிழித்தெறிவது, சாப்பாடு ருசியாக இல்லாவிட்டால் தட்டைக் கீழே போடுவது, நாற்காலியை உதைப்பது, தெரு விளக்கின் மீது கல் எறிவது என்று நம்மிடம் எதிர்வினை புரியாதவற்றின் மீது அதைக்  காட்டுகிறோம்.  அந்தப் பொருட்களுக்கும் நமக்கு ஏற்பட்ட ஏமாற்றங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.  

அடுத்ததாக பிராணிகளின் மீது அந்தக் கோபம் வெளிப்படுகிறது.  சாலையில் அமைதியாகப் போய்க் கொண்டிருக்கிற நாயின் மீது கல் எறிவது, மாட்டை ஓங்கி தட்டிவிட்டுச் செல்வது, ஆட்டை உதைப்பது என கோபத்திற்கு புகலிடம் தேடுபவர்கள் இருக்கிறார்கள். 

இன்னும் சிலரோ, அப்பிராணிகள் மீது அந்தக் கோபத்தைக் காட்டுகிறார்கள். முதலாளி திட்டியதற்காக மனைவியின் மீது எரிந்து விழுபவர்கள், குழந்தைகளை அடிப்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.  அந்தக் காலத்தில் ஜமீன்தாரின் குழந்தைகள் படிக்கும்போது தப்பாகச் சொன்னால் அடி வாங்குவதற்கே உடன் ஒரு மாணவன் அனுப்பப்படுவான்.  ஜமீன்தாரின் மகன் தப்பாகச் சொல்லுகிறபோதெல்லாம், மாணவனுக்கு அடிவிழும்.  நம் பிரார்த்தனை நிறைவேறியதற்காக விலங்குகளைப் பலிகொடுப்பதும், புதிய கட்டுமானத்தின்போது கோழி அறுப்பதும்கூட வன்மத்தின் ஒரு பகுதிதான்.  

தற்கொலைக்கும், கொலைக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது.  அவை ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.  கொலை விகிதம் அதிகமிருக்கும் நாடுகளில் தற்கொலை எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. மனத்தில் இருக்கும் வன்மத்தை வெளிப்படுத்த வழியில்லாவிட்டால் அதை தங்கள் மீதே திருப்பிக் கொள்கிறார்கள்.  உலகத்தில் மிகவும் அமைதியான நாடு என அழைக்கப்படுவது சுவிட்ஸர்லாந்து.  அங்கு குற்றங்கள் குறைவு. எனவே, ஆண்டுதோறும் அங்கு சில சிறைச்சாலைகளை மூடி வருகிறார்கள். ஆனால், அது அதிகத் தற்கொலை விகிதத்தைக் கொண்ட ஒரு நாடு.  வன்மத்தை யார் மீது திருப்புகிறோம் என்பதே மானுட வாழ்வில் முக்கிய பங்கை வகிக்கிறது.  

சிலர் பார்க்க சாதுவாக இருப்பதனாலேயே அவர்களை அமைதி நாயகர்கள் என்று கருதிவிட முடியாது.  அவர்கள் உள்ளத்தில் வன்மத் தீ கனன்று கொண்டிருக்கலாம்.  எனக்குத் தெரிந்த ஒருவர், மலர் மண் தரையில் விழுவதைப்போல மென்மையாகப்  பேசுவார்.  ஆனால், அவர் வன்முறை நிறைந்த படங்களையே விரும்பிப் பார்ப்பார்.  இன்னும் கொஞ்சம் வன்முறையிருந்தால் நன்றாக இருக்கும் என்று கருத்துச் சொல்வார்.  இதுபோல நீறு பூத்த நெருப்பாக இருப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.  அது தற்கொலையாகவும் இருக்கலாம். 

எப்போதும் சண்டைபோட்டுக் கொண்டிருக்கிற தம்பதிகள் பவள விழா காண்கிறார்கள்.  ஒருமுறைகூட அதிர்ந்து பேசாத   வீட்டில்தான் திடீரென விவாகரத்து விளைந்து விடுகிறது.  இதுபோன்ற முரண்கள் சாத்தியமானவையே.

வன்மத்தை மென்மையான முறையில் வெளிப்படுத்துபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவற்றின் தாக்கம் கடுமையான விளைவுகளை ஏற்படுத்திவிடலாம்.  தன்மீது நடவடிக்கை எடுத்தவர் மீது மொட்டைக் கடுதாசி போடுவது, அவதூறு பரப்புவது, சில திடீர் பத்திரிகைகளுக்குப் பணம் கொடுத்து பொய்யாகச் செய்திகள் வெளியிடுவது போன்ற ஈனச் செயல்களில் ஈடுபடுபவர்கள் உண்டு.  தான் நேசித்த பெண் பாராமுகம் காட்டினால், அந்தத் பெண்ணின் திருமணத்தின்போது தவறாக எழுதி பிரச்னையை ஏற்படுத்துபவர்கள் உண்டு.  இவையும் வன்முறையோடு தொடர்புடையவையே. 

சிலர் தற்கொலை செய்து கொள்ளும்போது தங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களையும், நம்பியிருப்பவர்களையும் முதலில் கொன்றுவிட்டு பிறகு தன்னை மாய்த்துக் கொள்வதுண்டு.  அவர்கள் இறந்த பிறகு அவர்களைச் சார்ந்திருப்பவர்கள் துன்பப்படுவதை சகிக்காமல் அப்படிச் செய்வதுண்டு. அதே நேரத்தில் சில விநோதமான திருப்பங்கள் இதுபோன்ற நிகழ்வுகளில் ஏற்படுவதுண்டு.  எல்லாரையும் கொன்ற பிறகு கொலையாளிக்கு மிகப் பெரிய நிம்மதி ஏற்படும்.  அவர்கள் பதற்றம் முழுவதுமாக அகன்றுவிடும்.  அதற்குப் பிறகு அவர்கள் சாக விரும்புவதில்லை.  

சமூகத்தில் ஒதுக்கப்பட்டும், உணர்வுகள் அமுக்கப்பட்டும் வாழ்கிற பலர் ரசிக்கிற திரைப்படங்கள் வன்முறை சார்ந்ததாக இருக்கின்றன.  அவர்களுக்குள் அமுங்கிக் கிடக்கும் கோபத்திற்கு அப்படங்கள் வடிகாலாக இருக்கின்றன. மற்றவர்கள் அவர்களை ஆதிக்கம் செய்வதை ஆற்றிக் கொள்வதற்கு இதுபோன்ற படங்கள் தற்காலிக நிவாரணமாக இருக்கின்றன.  உலகெங்கிலும் வன்முறை கலந்த புத்தகங்களே அதிகம் வாசிக்கப்படுகின்றன.  ஆனால் இதுபோன்ற பொழுதுபோக்குகள் நீடித்த நிம்மதியைத் தருவதில்லை.  புண்ணை சொறியும்போது ஏற்படும் சுகத்தைப்போல அப்போது மகிழ்வைத் தந்து மேலும் ரணத்தை அதிகப்படுத்திவிடுகின்றன.  இப்படிப்பட்ட படங்களைப் பார்க்கிறவர்கள் அடுத்த நிலையில் இருப்பவர்கள் மீது வன்முறையோடு நடக்கத் தொடங்குகிறார்கள்.  சில விளையாட்டுகள் இதுபோன்ற உணர்ச்சிகளுக்கு வடிகாலாக அமைவதுதான்.  

போர் நடக்கும்போது கொலைகள் குறைவாக இருப்பதற்கு இந்த மனவியல் காரணம் உண்டு.  இரண்டு உலகப்போர்களின்போதும் ஐரோப்பாவில் மரணங்கள் குறைவாக இருந்தன.  போர்களின் போது மேலதிகாரிகள் சிப்பாய்களை இரக்கமில்லாமல் நடத்துவார்கள்.  அது கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்காக அல்ல, மாறாக அவர்களை கொதித்தெழச் செய்வதற்காக.  தன்முனைப்பு காயப்பட்ட அந்த சிப்பாய்கள், தங்கள் வெறுப்பை எதிரிகள் மீது காட்டுவார்கள் என டெஸ்மான்ட் மாரிஸ் குறிப்பிடுகிறார்.  

சில நாடுகளில் சிப்பாய்களுக்குப் பயிற்சியளிக்கும்போது எதிரியிடம் மாட்டிக்கொண்டால் எப்படியெல்லாம் துன்புறுத்துவார்கள் என வகுப்புகள் எடுப்பதுண்டு.  அது அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவற்காக மட்டுமல்ல.  எதிரிகள் இவர்களிடம் சிக்கிக்கொண்டால் உண்மையை வரவழைக்க எப்படியெல்லாம் சித்ரவதை செய்யலாம் என்பதை மறைமுகமாக சொல்லிக் கொடுப்பதற்காகத்தான்.  

உண்மையான நாகரிகம் வன்முறையற்ற வாழ்க்கையைக் கற்றுக் கொடுப்பதுதான்.  கருணையும், அன்புமே பண்பாட்டிற்கான அடையாளங்கள். உடை உடுத்துவதிலும், உணவு உண்பதிலும் பண்பாடு இருப்பதாக நாம் பொய்யாக நம்பிக்கொண்டிருக்கிறோம்.  அவையெல்லாம் பல்வேறு தாக்கங்களால் ஏற்பட்ட மாற்றங்கள்.  

மனத்தளவில் கூட மற்றவர்களைக் காயப்படுத்தக்கூடாது என்கிற எண்ணத்தை சின்ன வயதிலேயே குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும்.  அதற்குப் பெற்றோர் தங்கள் நடவடிக்கைகளைத் திருத்தி அமைத்துக் கொள்வது அவசியம். குழந்தைகள் முன்பு சண்டையிடுவது, சட்டையைப் பிடிப்பது போன்றவற்றை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.  கோபத்தை அடக்க நினைத்தால், அது வேறொரு சூழலில் வன்முறையாக வெளிப்படும்.  அதைக் கடப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.  ஆழ்ந்த உள்ளுணர்வின் மூலமே அது சாத்தியம். 

நம் சரித்திரத்தில் வன்மம் சார்ந்த பதிவுகளைவிட அன்பு சார்ந்த சம்பவங்களும், சப்தம் சார்ந்த நிகழ்வுகளைவிட மெüனம் சார்ந்த பதிவுகளும் அதிகம் இடம் பெற வேண்டும். 
(தொடரும்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com