ரசமற்ற வாழ்க்கை!

உச்சிக்குப் போவது மட்டும் சாதனையல்ல.  போகிற வழியிலும் ரசித்துக்கொண்டு போனால்தான் உச்சியை அடையும்போது மூச்சு வாங்காது, களைப்பு ஏற்படாது.  
ரசமற்ற வாழ்க்கை!

உச்சியிலிருந்து தொடங்கு-18
தினமும் ஒரே மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்கிறவர்களுக்கு சலிப்பு தோன்றுவது இயல்பு.  திருப்பங்களும், சுவாரசியங்களும் இல்லாமல் ஒரே பணியைச் செய்கிறபோதும், பதவி உயர்வே இல்லாமல் ஓய்வு பெறும் வரை ஒரே மாதிரியான வேலையில் ஈடுபடுவதும் அலுப்பையும், சலிப்பையும் வரவழைப்பது.  ஒரு சிலர் வாழ்வின் மீது ஏற்பட்ட சலிப்பின் காரணமாகத்  தற்கொலையை நாடுவதுண்டு.

சிலர் செய்கிற பணியில் ஏற்படும் அழுத்தத்தின் காரணமாக, தீய்ந்துபோன மனநிலையை அடைகிறார்கள். அவர்கள் உடல் சக்கையானது போலவும், உயிரை யாரோ உறிஞ்சிவிட்டதாகவும் எண்ணத் தொடங்குகிறார்கள். உலகம் அவர்களுக்கு வெறுமையாக இருக்கிறது. சுரண்டப்பட்ட ஏமாற்றம் ஏற்படுகிறது. வேலைக்குப் போவதற்கே பிடிக்காத வெறுப்பு நேரிடுகிறது. அவர்களும் விரக்தியில் வெந்துவிடுகிறார்கள். 

"அதற்குப் பிறகு அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்...' என்கிற வரிகள் புதினங்களிலும், திரைப்படங்களிலும் இடம் பெறலாம். ஆனால், வாழ்க்கை அப்படிப்பட்டதல்ல. ஒரு பிரச்னை தீர்ந்தால் நாம் சமாளிப்பதற்குத் தயாராக இன்னொரு சவால் காத்துக் கொண்டிருக்கும். தொடர் பிரச்னைகளின் வடிவமாகவே  வாழ்க்கையிருக்கிறது. அவற்றிற்கு இடையே தேநீர் அருந்துவதைப் போன்ற மகிழ்ச்சிக்குட்பட்டதே இளைப்பாறுதல். நாம் நம்முடைய விழிப்புணர்வால் அந்த பிரச்னையையும், ரசமுள்ளதாக மாற்றிக்கொண்டால் அலுப்பு நம்மை அண்டாது, அயற்சி நம்மைத் தீண்டாது. 

மேலை நாடுகளில் இடைநிலை மடைமாற்றம் (midlife transition) என்கிற தாத்பரியம் உண்டு.  நாற்பது வயதிற்கு மேல் உள்ளவர்கள் அதுவரை செய்துவந்த பணியை உதறி எறிந்துவிட்டு, அத்துடன் தொடர்பே இல்லாத வேறொரு பணிக்குச் செல்வதுண்டு.  ராணுவத்தில் இருந்தவர்கள் ஓவியராக மாறுவது, நிர்வாகத்தில் இருந்தவர்கள் சமூக சேவை செய்வது, அரசியலில் இருந்தவர்கள் ஆசிரியராக மாறுவது என முற்றிலும் மாறுபட்ட பணியைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.  ஊதியத்தைத் தாண்டிய அவர்கள் தேடல் அதில் நிறைவு பெறுகிறது. 

அவ்வாறு அவர்கள் புதிய பணியைத் தேர்ந்தெடுக்கும்போது இரண்டாம் ஆட்டத்திற்குத் தயாராகிறார்கள். கற்றுக் கொள்வதற்கும், அனுபவத்தைப் பரிசோதிப்பதற்கும் வாய்ப்புகள் கிடைக்கின்றன. சுவை கூடுகிறது. மீண்டும் மாணவனான மனநிலை ஏற்படுகிறது. வாழ்க்கை ரசிக்கத் தகுந்ததாக உருமாறிப்போகிறது. அலுப்பும், சலிப்பும் விடைபெற்றுவிடுகின்றன.  அனுபவம் என்கிற சுமை அவர்களை அழுத்துவதில்லை. புதிய சூழல், புதிய சக பணியாளர்கள் என்று இன்னோர் உலகத்தை நிர்மாணித்துக் கொள்கிறார்கள்.  

குறைபாடுகள் இருப்பவர்கள்கூட வாழ்க்கையை குதூகலமாக்கிக் கொள்கிறார்கள்.  எந்நேரமும் இழப்புகள் ஏற்படுத்திய தழும்புகளைத் தடவிப் பார்த்துக் கொண்டிருப்பவர்களால் மகிழ்ச்சியாக வாழ முடியாது.  சின்ன வயதிலேயே முதுமைத் தட்டிப்போகும் நோய் சிலருக்கு அபூர்வமாக வரும். அப்படி பாதிக்கப்பட்ட சாம் பெர்ன்ஸ் என்கிற இளைஞர் சோர்ந்து போய் சூம்பிவிடாமல் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என்று உலகின் பல இடங்களில் சொற்பொழிவு ஆற்றி மகிழ்கிறார். அவர் தூக்கக்கூடிய இசை முரசு ஒன்றை  இனிமையாக ஒலித்து கச்சேரிகளில் பங்கேற்கிறார்.   

நிக் உஜிசிக் என்கிற  இளைஞர். கை, கால்கள் சரியாக இல்லாத அவரை பிறந்ததும் தாய் பார்க்கக் கூட விரும்பவில்லை. அவர் ஊனம் ஒரு தடையல்ல என்பதை உணர்ந்து கை, கால்கள் இல்லாத வாழ்க்கை என்கிற அமைப்பை நடத்தி வருகிறார்.  திருமணம் செய்துகொண்டு, குடும்பத்தோடு வாழ்கிறார்.  நலிந்தவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவது அவருடைய பணி.  

காலையிலிருந்து இரவு வரை ஒரே மாதிரி வாழ்க்கையை நகர்த்தினால் அயர்ச்சி ஏற்படத்தான் செய்யும்.  அப்படிப்பட்டவர்களுக்கு உலகமே கறுப்பு வெள்ளையாகத் தெரியும். அங்கு வண்ணங்கள் இல்லை, மலர்கள் இல்லை, மரங்கள் இல்லை, நதிகள் இல்லை, வானமும் இல்லை. படிப்பையே உலகம் என்று எண்ணுகிற பல இளைஞர்கள் அயர்ச்சிக்கு ஆட்படுவது இப்படிப்பட்ட சூழலில்தான். ஏதேனும் ஒரு பொழுதாக்கத்தை பதின்ம வயதிலேயே  ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். கவிதை எழுதுவது, ஓவியம் தீட்டுவது, கிளிஞ்சல்களை சேகரிப்பது என எதுவாக வேண்டுமானலும் இருக்கலாம். 

தொடக்கத்தில் ஓர் அபத்தமான பொழுதாக்கத்தை கடைப்பிடித்தால் கூட பரவாயில்லை.  நாளடைவில் நல்ல பொழுதாக்கத்திற்கு அது நம்மை அழைத்துச் செல்லும். புத்தகத்திற்குள்ளேயே தலையைப் புதைத்துக் கொண்டிருக்காமல் மனத்தில் மடிப்பு விழுகிறபோது பொழுதாக்கத்தில் ஈடுபட்டால் மூளை விரிந்து கொடுக்கிறது.  நம் அறைக்குள் பறவைகளும், பட்டாம்பூச்சிகளும் பறக்கத் தொடங்குகின்றன. இறுக்கம் குறைகிறது.  

சிலரோ எதையும் கொண்டாடாமல் பெரிய  திருப்பத்திற்காக காத்திருப்பார்கள்.  கடைசியில் அந்த மாபெரும் வெற்றி ஏற்படும்போது எப்படிக் கொண்டாடுவது என்பது தெரியாமலேயே அவர்களுக்குப் போய்விடும்.  சின்னச் சின்ன நிகழ்வுகளைக்கூட கொண்டாடுவது நம் இருத்தலை இனிமையாக்கும். அதற்காகப் பணம் செலவழிக்க வேண்டுமென்பதில்லை.  நான்கு பேர் அமர்ந்து நகைச்சுவையாக பேசிக் கொண்டு ஓர் அரை மணி நேரம் நிம்மதியாக, துளித்துளியாக தேநீரை ரசித்துப் பருகுவதும் கொண்டாட்டம்தான். இதுபோன்ற பரிமாற்றங்கள் நாம் இன்னும் இரட்டிப்பு வேகத்துடன் நம் பணியைச் செய்ய உதவும். நம் உள்ளத்தின் இடுக்குகளில் சேரும் அயர்ச்சியை அவை ஒருசேர அகற்றும்.  

சமூக நுண்ணறிவுடன் விளங்குபவர்கள் சலிப்படைவதில்லை.  அவர்களால் எந்தப் புதிய சூழலையும் எதிர்கொள்ள முடியும்.  முன்பின் தெரியாதவர்களிடம் சந்தித்து வசீகரிக்க முடியும்.  அவர்கள் பண்பாட்டு அதிர்ச்சிக்கு ஆளாவதில்லை.  புதிய இடத்தில் தனிமைப்படுவதில்லை. பள்ளியில் படிக்கிறபோதே பல்வேறு விதமான நண்பர்களுடன் பழகத் தெரிந்திருக்க வேண்டும். 

சிலர் அவர்கள் வகுப்பு மாணவர்களுடன் மட்டும் பழகுவார்கள்.  அதிலும் ஒரு சின்ன வட்டத்தை வைத்திருப்பார்கள்.  சாப்பிடப் போனாலும், கடைவீதிக்குப் போனாலும் அவர்களுடன் மட்டுமே பயணம் செய்வார்கள்.  சுற்றுலா செல்கிறபோது அவர்கள் எல்லாரும் ஒரே இருக்கையில் அமர்வார்கள்.  இப்படிப்பட்டவர்கள் உப்பு சப்பில்லாத வாழ்க்கைக்குத் தயாராகிறார்கள் என்பது பொருள்.  யார் ஒருவர் பலதரப்பட்ட நண்பர்களோடு பழகுகிறார்களோ, அவர்கள் தலைமைப் பண்புகளோடு விளங்குகிறார்கள் என்பது பொருள்.  

கல்லூரிகளில் படிக்கும்போது சில மாணவர்கள் மற்ற பிரிவைச் சார்ந்தவர்களைக் குறைவாக மதிப்பிடுவதையும், அவர்களோடு பழகாமல் இருப்பதையும் பார்க்கலாம்.  அவர்கள் முகம் இறுக்கமாகிவிடும்.  முகத்திற்கு ஓர் இலக்கணம் உண்டு.  அடிக்கடி புன்முறுவல் பூத்து, கண்களைச் சிநேகமாக வைத்திருந்தால் அவை நாளடைவில் அழகாகிவிடுகின்றன.  சிரிக்க மறுக்கிற முகங்கள் சினத்தின் குறியீடுகள்.  அவை சீக்கிரம் கிழடுதட்டிப் போகின்றன.  

நாங்கள் கல்லூரியில் படிக்கிறபோது விளையாட்டு, பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, ஓவியம் என்று இயங்குகிற மாணவர்கள் எங்கள் கல்லூரியைத் தாண்டி வேறு கல்லூரிகளில்  உள்ள மாணவர்களையும் நண்பர்களாக வைத்திருந்தோம்.  பூங்காக் கவியரங்கங்களில்  அவர்களைச் சந்திப்போம்.  சிலருடைய நட்பு இன்னும் தொடர்கிறது.  

வீட்டிலிருப்பவர்கள் இப்போது தீவுகளாகத் தேங்கி விட்டார்கள்.  ஆளுக்கோர் அலைபேசியோடு குடித்தனம் நடத்துகிறார்கள்.  பயணத்தின்போதுகூட அவர்கள் பரிமாறிக் கொள்வதில்லை.  சாப்பிடும்போதும் சம்பாஷணைகளும், குறுந்தகவல்களும் அலைபேசியோடு மட்டுமே.  இவையெல்லாம் வாழ்க்கையைச் சக்கையாக்கிவிடுகின்றன.

ஒவ்வொரு குடும்பமும் ஒருவேளையாவது ஒன்றாக அமர்ந்து உணவு உண்ண வேண்டும்.  அப்போது எந்த மின்னணு சாதனமும் இல்லாமல் அவர்கள் அன்றைய நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.  வாரம் ஒருமுறையாவது ஒருமணி நேரம் கூடி அந்த வாரம் நடந்த அனுபவங்களைப் பேசி மகிழ வேண்டும்.  அவர்கள் ரசித்தவற்றை,  சிரித்த நகைச்சுவைகளை, ஏற்பட்ட அனுபவங்களைச் சொல்லி வயிறு குலுங்க சிரிக்க வேண்டும்.  அந்தக் கலகலப்பு அடுத்த வாரத்தையும் மகிழ்ச்சி மகரந்தம் தடவி மணக்கவைக்கும்.

உச்சிக்குப் போவது மட்டும் சாதனையல்ல.  போகிற வழியிலும் ரசித்துக்கொண்டு போனால்தான் உச்சியை அடையும்போது மூச்சு வாங்காது, களைப்பு ஏற்படாது.  

தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com