உற்சாகப் பயணம்! 

குளிர்சாதன அறைக்குள் எல்லா நேரமும் குறுகிக் கொண்டு வாழ்கிறவர்களுக்கு உலகம் எவ்வளவு அழகானது என்கிற உண்மை இயற்கையான இடங்களுக்குச் செல்லுகிறபோது புரியும்.
உற்சாகப் பயணம்! 

உச்சியிலிருந்து தொடங்கு-20
வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றிக்கொள்வதற்கு விதவிதமான அனுபவங்கள் தேவைப்படுகின்றன. காலையில் சாப்பிட்ட உணவை மதியம் சாப்பிட மனம் மறுக்கிறது.   பத்தாண்டுகளுக்கு முன்பு உடுத்திய உடையைப்போல இப்போது வாங்க பலர் விரும்புவதில்லை.  புதியனவற்றைத் தேடி அலைகிறோம்.  

இது ஒருபக்கமிருக்க, நம்மைச் சுற்றியுள்ள சூழல் சிறிது மாறினாலும் நாம் சோர்ந்து விடுகிறோம்.  பலர் சொந்த ஊரிலேயே பணி கிடைக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள்.  பணி எங்காவது கிடைத்தால்போதும் என போராடுபவர்கள் கூட இரண்டாண்டுகளுக்குப் பிறகு பிடியாள் பிடித்துக் கொண்டு சொந்த ஊருக்குப் போக முடியாதா? என்று பிரயத்தனம் செய்கிறார்கள்.  

வழக்கமான இடம், பழகிய மனிதர்கள், பழகிய வேலை என செக்குமாடுகள் போல சுற்றி வர நினைப்பவர்கள் ஒரு கட்டத்தில் வெறுமையை உணரத் தொடங்குகிறார்கள்.  இந்த ஊரைவிட்டு நான் எங்கும் சென்றதில்லை என்று பெருமையாகச் சொன்னதுண்டு.  ஏதேனும் மாற்றம் வந்தால் அதைக் கண்டு பயப்படுபவர்கள் இருக்கிறார்கள். அதன் காரணமாகவே நிறுவனங்கள் புதிதாக எதையாவது அலுவலக நடைமுறையை அறிமுகப்படுத்தினால் பணியாளர்கள் அதை எதிர்க்கிறார்கள்.  சின்னச் சிரமத்தைக் கூட தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் மனச்சோர்வுக்கும், மன அழுத்தத்திற்கும் விரைவில் ஆட்பட்டுவிடுவார்கள்.  

இளைஞர்கள் நம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொள்ள நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டும்.  வெளிநாடுகளுக்குச் செல்வதுதான் பயணம் என்றில்லை.  சொந்த ஊரிலேயே பார்க்க வேண்டிய பல இடங்கள் இருக்கின்றன. அவற்றிற்குச் செல்வது அவசியம். அப்போது மனத்தின் இறுக்கம் தளர்ந்து போகும். இதுநாள் வரை இப்படிப்பட்ட அழகைத் தரிசிக்காமல் இருந்துவிட்டோமே என்கிற வியப்பு மேலிடும்.  

படித்து முடிந்ததும் கணினித்துறையில் பணிக்குச் சேர்கிற இளைஞர்கள் இருக்கிறார்கள்.  அவர்கள் நாள் முழுவதும் கணினித் திரையின் முன்பு ஓடையில் உறுமீனுக்காக ஒற்றைக் காலோடு நிற்கும் கொக்குபோல  தவமிருக்கிறார்கள்.  ஒரு சின்னத் தவறு நேர்ந்தாலும் கடுமையான பாதிப்பு ஏற்படும்.  சகல நேரமும் விழிப்புணர்வோடு பணியாற்ற வேண்டும்.  மக்களோடு பணியாற்றுவதைவிட இயந்திரத்தோடு பணியாற்றுவது கடினம்.  12 மணிநேரம் பணியாற்றுகிற அவர்கள் வீடு திரும்பியதும் இரண்டு நாட்கள் உழைத்த அலுப்பில் இற்றுப்போய் விடுகிறார்கள்.  

இளைப்பாறுவது என்பது நிகழ்காலத்தை மறப்பது என்கிற தவறான எண்ணம் அவர்களுக்குள் குருத்துவிட ஆரம்பிக்கும்.  மழைலையர் வகுப்பிலிருந்து 18 ஆண்டுகள் வரை படிப்பு படிப்பு என வாழ்ந்து வெளிஉலகம் தெரியாமல் தொடர்ந்து மாதத்தேர்வு, சுழற்தேர்வு, திருப்பத்தேர்வு, ஊக்கத்தேர்வு, பயிற்சித் தேர்வு, பொதுத்தேர்வு, போட்டித்தேர்வு என்று தேர்வு மேல் தேர்வு எழுதி களைத்த அவர்களுக்கு இன்னொரு வகுப்பறையாக பணியாற்றும் இடம் நீள்கிறது. இதனால் ஒரு கட்டத்தில் பணியையும், உலகத்தையும் வெறுத்து தற்கொலை முடிவை சிலர் எடுக்கிறார்கள்.  

கடுமையான பணிகளில் வேலை செய்பவர்கள் உடனடியாக திருணம் செய்துகொள்ளாமல் குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது அந்தப் பணியில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.  புதிய சூழலுக்கு முழுவதுமாக பொருத்திக் கொள்வதற்கு அவகாசம் தேவைப்படுகிறது.  ஓய்வு கிடைக்கும்போது நண்பர்களுடன்  அமர்ந்து தேநீர் அருந்துவதற்காக ஒரு சின்ன இடைவேளையை எடுத்துக் கொண்டால் கூட மனம் புத்துணர்ச்சி பெறும்.  பணி முடிந்ததும் பரந்து விரிந்த திறந்த இடங்களில் காலாற நடப்பதும், மிதமான உடற்பயிற்சி செய்வதும் அவசியம்.  வார இறுதியில் அருகிலிருக்கும் மலைவாழ் இடங்களுக்கோ, கடற்கரைப் பிரதேசங்களுக்கோ சுற்றுப்பயணம் செய்வதும் நல்லது.  அப்பயணங்கள் மற்றவர்களோடு ஒத்துப் போவதற்கும், எல்லாப் பதற்றத்தையும்  தணித்துக் கொள்வதற்கும், இருத்தலை சுவாரசியமாக்குவதற்கும் உதவும்.  நாம் பணிக்காக வாழ்கிற  இடத்தில் ஒருபோதும் அந்த சுகத்தை அனுபவிக்க முடியாது. வசிக்கிற இடம் பெரும்பாலும் ரசிக்கிற இடமாக இருப்பதில்லை. 

கல்லூரியில் படிக்கிறபோதே நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து மிதிவண்டிப் பயணம், மலை நடைப் பயணம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். அவற்றின் மூலம் உடலும், உள்ளமும் திடப்படும்.  இலக்கை நிர்ணயித்து அதை அடைய முயற்சி செய்யும்போது வைராக்கியம் வளரும். இடர்பாடு ஏற்படுகிறபோது எப்படிச் சமாளிக்க வேண்டும் என்கிற முதிர்ச்சி ஏற்படும்.  

குழுவாகச் சேர்ந்து செயல்படுவதற்குத் தேவையான பொறுமை, ஒத்துழைத்தல், அனுசரித்தல், விட்டுக் கொடுத்தல் போன்ற பண்புகள் வளர தலைமைக்கான தகுதிகள் உருவாகும். இப்படித்தான் உணவு இருக்க வேண்டும், எனக்கு கொஞ்சம்கூட உப்பு குறையக் கூடாது, வசதியான இடத்தில்தான் நான் தூங்குவேன் என்று பலரும் வைத்திருக்கிற கட்டுப்பாடுகளை உடைத்துக் கொண்டு வாழக் கற்றுக் கொள்வார்கள்.  இது வாழ்க்கையில் மின்னுவதற்கான அடிப்படைத் தேவைகள்.  எவ்வளவு படித்திருந்தாலும் சூழலுக்கேற்ப வாழக் கற்றுக் கொள்ளாதவர்கள் பொருந்தாமல் போய்விடுவார்கள்.  அவர்கள் மனம் முடிச்சுகளில்லாமல் வாழ்வதற்கு இதுபோன்ற பயணங்கள் அவசியம்.  

பயணங்கள் மேற்கொள்ளுகிறபோது மற்றவர்களுடைய மனநிலையை நாம் அறிந்து கொள்கிறோம்.  நாம் நம்பிக் கொண்டிருப்பது ஒன்றுதான் சரி, நம்முடைய சாப்பாடு மட்டுமே சிறந்தது, நாம் கருதுவது மட்டுமே சரியான கருத்து என்கிற குறுகிய வட்டப் பார்வை மறைந்து எல்லா இடங்களிலும் மக்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள், அவர்களிடம் கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கின்றன என்கின்ற புரிதல் பயணத்தால் ஏற்படும்.  இந்த அனுபவம் பணி செய்கிற இடங்களில் நாம் தலைதூக்குகிற தன்முனைப்போடு செயல்படாமல் இருக்க உதவும்.  

பயணத்தின்போது இயற்கையோடு இயைந்து வாழ்கிற அனுபவம் ஏற்படுகிறது.

குளிர்சாதன அறைக்குள் எல்லா நேரமும் குறுகிக் கொண்டு வாழ்கிறவர்களுக்கு உலகம் எவ்வளவு அழகானது என்கிற உண்மை இயற்கையான இடங்களுக்குச் செல்லுகிறபோது புரியும்.  அது அவர்களிடம் விசாலமான பார்வையை ஏற்படுத்தும்.  அழகாகச் சிறகடித்துப் பறக்கிற பறவைகளையும், மணம் வீசி காற்றில் ஆடும் மலர்களையும், கூட்டம் கூட்டமாக மருண்டு ஓடும் மான்களையும் பார்க்கும்போது நம் கவலைகள் எதுவும் பெரிதல்ல என்ற உணர்வு ஏற்படும்.  

இயற்கையின் முன்னால் நம் பிரச்னை அணுவைவிட சிறியது என்கிற தெளிவு உண்டாகும்.  பயணம் முடிந்து திரும்பி வருகிறபோது நம் அலுவலகத்திற்கு அந்த அனுபவங்களையும் எடுத்துச் செல்கிறோம்.  எனவே அலுவலகப் பணியின்போது அயற்சி ஏற்படாமல் உற்சாகத்தோடு பணியாற்ற முடியும்.

ஒரு நல்ல பயணம் உடலுக்குப் பயிற்சியை ஏற்படுத்தும். நம் தசைகளையும், எலும்புகளையும் திடப்படுத்தக்கூடிய பயணங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

நடப்பது, மலை ஏறுவது போன்ற உடலுக்கான அம்சங்களும் இடம் பெற்றிருந்தால் அப்பயணத்தின் முடிவில் நம் நுரையீரல் விரியும், ரத்த அழுத்தம் சீராகும், கொழுப்பு குறையும்,  சர்க்கரை சீராகும், கால்கள் வலுவாகும், தொப்பை குறையும்.  

இன்று பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றுகிற பல இளைஞர்களுக்கு காலையில் நடை பயில நேரமிருப்பதில்லை.  உணவையும் சரியான நேரத்தில் உட்கொள்ள முடிவதில்லை.  வெளிநாட்டுப் பானங்களையும், விரைவு உணவுகளையும் அவசர அவசரமாக உள்ளே தள்ளி  ஊளைச் சதையை பெருக்கிக் கொள்கிறார்கள்.  இது உடல் வடிவத் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடுகிறது.  இவை மணப்பெண் சம்மதத்தைப் பெறுவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது.  இவற்றையெல்லாம் நன்றாக வடிவமைக்கப்பட்ட பயணத்தை மேற்கொள்பவர்களால் எதிர்கொள்ள முடியும்.

பயணம் மேற்கொள்பவர்கள் மனரீதியாகவும் மேம்படுகிறார்கள்.  நம்மை விட வறுமையில் இருக்கிறவர்களும், இழப்புகளைச் சந்தித்தவர்களும் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்கிற மெய்ஞானம் நம் வாழ்க்கையின் மீது பிடிப்பு ஏற்படுத்துகிறது. அப்படிப்பட்டவர்களுக்குத் தற்கொலை எண்ணம் தலைதூக்குவதேயில்லை.

பணி புரியும்போது "தங்க விதி' ஒன்றை முன்பெல்லாம் வலியுறுத்துவார்கள். மற்றவர்கள் உன்னை எப்படி நடத்தவேண்டும் என எதிர்பார்க்கிறாயோ அப்படி அவர்களை நீ நடத்து என்பது தங்க விதி.  இப்போது நிறுவனங்களில் வெற்றிகரமாக பணியாற்ற பிளாட்டினம் விதியை வலியுறுத்துகிறார்கள்.

மற்றவர்கள் தங்களை எப்படி நடத்த வேண்டும் என விரும்புகிறார்களோ, அப்படி அவர்களை நடத்து என்பதே புதிய விதி.  

பயணம் நம்மை தங்கத்திலிருந்து பிளாட்டினத்திற்கு அழைத்துச் செல்லும். 
-தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com