திணிப்பது தவறு!

ஒருவருக்குச் செய்கிற மிகப்பெரிய சித்ரவதை அவர்களுக்கு வராத ஒன்றை அவர்கள் மீது திணிப்பதுதான். சைவ உணவு உண்பவர் ஒருவருடைய இலையில் கோழி மாமிசத்தையும், மீன் துண்டுகளையும் பரிமாறினால்
திணிப்பது தவறு!

உச்சியிலிருந்து தொடங்கு-21
முதல் ஜெர்ஜெக்ஸ் என்கிற பாரசீக மன்னர் எகிப்தைக் கைப்பற்றி, பிறகு ஏதென்ஸ் நகரைச் சூறையாடிவிட்டு, ஆசியாவுக்குத் திரும்பினார்.  ஆனால், மார்டோனியஸ் தலைமையிலான படையிடம் அவர் தோற்றார்.  அவருடைய கடற்படையோ சலாமிஸ் என்கிற இடத்தில் துவம்சம் செய்யப்பட்டது.

கிரேக்கத்திருந்து திரும்புகிறபோது ஒரே கப்பலில் அவர் படை திரும்பி வர நேர்ந்தது.  அப்போது அலைகளில் சிக்கிய அந்தத் கலம் தடுமாறியபோது படைவீரர்கள் சிலர் கடலில் குதித்து கப்பலின் எடையைக் குறைத்தனர்.  கப்பல் பாதுகாப்பாக துறைமுகம் வந்தது.  ஜெர்ஜெக்ஸ் அந்த தலைமை மாலுமிக்கு தன் உயிரைக் காப்பாற்றியதற்காக ஒரு தங்கக் கிரீடத்தைக் கொடுத்தார். ஆனால், பல வீரர்கள் உயிரிழக்க நேர்ந்ததால் அவன் தலையைக் கொய்தார்.   

இன்று பல மாணவர்களுடைய நிலைமை பெற்றோர்களின் பிடிவாதத்தால் இந்த நிலைக்கு ஆளாகிறது.  மகுடம் சூட்டுவதாக எண்ணி தலையையே துண்டித்து விடுகிறார்கள். இவ்வுலகத்தில் ஒவ்வொருவரும் ஒரு திறமையோடு பிறக்கிறார்கள்.  அவர்களாக அதைக் கண்டுபிடித்து சரியான திக்கில் பயணம் செய்தால் மகிழ்ச்சியடைகிறார்கள்.  வாழ்க்கையில் வெற்றி பெறுவதைவிட மகிழ்ச்சியடைவது முக்கியம்.  வெற்றி பெற்ற பலர் தற்கொலை செய்து கொள்வதைப் பார்க்கிறோம்.  ஆனால், மகிழ்ச்சியுடன் வாழ்பவர்கள் மரணம் வருகிறபோது அதை வரவேற்று புன்னகைத்தவாறு புறப்படுகிறார்கள்.  

ஒருவருக்குச் செய்கிற மிகப்பெரிய சித்ரவதை அவர்களுக்கு வராத ஒன்றை அவர்கள் மீது திணிப்பதுதான். சைவ உணவு உண்பவர் ஒருவருடைய இலையில் கோழி மாமிசத்தையும், மீன் துண்டுகளையும் பரிமாறினால் அது எவ்வளவு பெரிய அநீதியோ அதைப்போலத்தான் மருத்துவப் படிப்பையே விரும்பாத ஒரு மாணவனை அதில் சேரவேண்டும் என்று வற்புறுத்துவதும்.

எனக்குத் தெரிந்த ஒரு சம்பவம்.. .. ...  
ஒரு மாணவன் குறைவான மதிப்பெண்களைப் பெற்றான்.  காரணம் அவன் விரும்பியது இலக்கியம்.  அவன் தந்தை சேர்த்தது முதலாம் பிரிவு.

மதிப்பெண்கள் குறைந்தாலும் விடமாட்டேன் என்று சொல்லி நிறையப் பணத்தை செலவழித்து அவனுடைய தந்தை அவனை மருத்துவக்கல்லூரியில் சேர்த்துவிட்டார். 

வெற்றியடைந்ததாக நினைத்து பெருமிதமும் கொண்டார்.  ஆனால் அவனுக்கோ ஒவ்வொரு நாளும் யுகமாக இருந்தது.  இதயத்தைப் பற்றி இலக்கியத்தில் படிக்க விரும்பிய அவனுக்கு அனாட்டமி வகுப்பில் அதைப் படிப்பது துன்பமாக இருந்தது. 

மலர்களைப் பறிப்பதைக் கூட வன்முறையாக கருதிய அவனுக்கு உடல்களை அறுப்பது ஒவ்வாமையை ஏற்படுத்தியது.  எந்த வகுப்பிலும் அவனுக்கு விருப்பமில்லை.  எல்லாவற்றிலும் வெறும் தாளை விடைத்தாளாகக் கொடுத்துவிட்டு வெளியேறினான்.  குடும்பம் நெருக்கடி தருமே என்று குழப்பத்தில் மூழ்கினான்.  குளிப்பதை நிறுத்தினான், சவரம் செய்ய மறுத்தான், அழுக்கு ஆடைகள் அணிந்தான், எப்போதாவது உண்டான், ஒருநாள் தூக்குப் போட்டுக் கொண்டான். 

இன்று பல இல்லங்களில் குழந்தைக்கு அம்மை குத்துவதற்கு முன்பே அவாவைக் குத்திவிடுகிறார்கள்.  பெற்றோர்களே குழந்தைகள் என்ன ஆக வேண்டும் என்று முடிவு செய்து பச்சைக்குத்துவதுபோல அவர்களின் இதயத்தில் இச்சை குத்திவிடுகிறார்கள்.  நாளடைவில் பெற்றோர்கள் விருப்பமும், தன்னுடைய இலக்கும் வெவ்வேறாக இருந்தாலும் அதை வெளிப்படுத்த முடியாமல் அவர்கள் வெளிறிப் போய்விடுகிறார்கள்.  

நாம் மிகவும் வளர்ச்சியடைந்த நாடு என்று நினைக்கிற ஒரு நாடு.  அங்கு கடுமையான சட்ட திட்டங்கள் உண்டு.  கையூட்டு வாங்குகிறவர்கள் கையே துண்டிக்கப்படும் அளவிற்கு கறாரான நிர்வாகம்.  ஆனால், அங்கு மூன்றாம் வகுப்பிலேயே ஒரு மாணவன் என்னவாக வேண்டும் என்பதை பள்ளி நிர்வாகமும், அரசும் முடிவு செய்துவிடுகிறார்கள்.  அதற்கேற்ப கல்வியளிக்கப்படுகிறது.  சில மாணவர்கள் தொடக்கத்தில் விளையாட்டுக் குணத்தோடு இருப்பார்கள். அதை வைத்து அவர்கள் மந்தமானவர்கள் என்று முடிவு செய்ய முடியாது.  உலகெங்கிலும் குழந்தைப் பருவத்தில் மட்டியாக இருந்து, வளரும்போது சுட்டியாகி, வாழும்போது கெட்டியான பலர் இருக்கிறார்கள். 

இதுபோன்ற நடைமுறையால் பல மாணவர்கள் சாதாரணக் கல்வியைப் பெற்று தங்கள் திறமைகளைப் முழுவதுமாகப் பயன்படுத்த முடியாமல் சோர்ந்துவிடுகிறார்கள்.  அவர்கள் மனத்தில் தேசத்தைப் பற்றிய மிகப்பெரிய பிம்பங்கள் இல்லை.  சில நேரங்களில் வெளி உலகம் நினைப்பதும், உண்மையும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.  ஒருவருக்கு ஒன்று வருவதாலேயே அது பிடித்திருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை.  சில நாட்கள் கழித்து விருப்பம் மாறுபடலாம்.  இன்னொன்றில் அதைக் காட்டிலும் அதிகமான நேர்த்தியுடன் செய்கிற திறமை பளிச்சிடலாம்.  முத்திரை குத்தி முடக்குவதற்கு மனிதர்கள் கோழிகள் அல்ல.  

என்னைச் சந்திக்க ஒரு மாணவர் வந்தார்.  ஐ.ஏ.எஸ். படிக்க விருப்பம் என்பதாகத் தெரிவித்தார்.  என்னிடம் கையெப்பம் பெற நோட்டை நீட்டினார். அதில் அவர் பெயருக்குப் பின்னால் ஐ.ஏ.எஸ். என்று எழுதி வைத்திருந்தார்.  இன்னும் எட்டாம் வகுப்பைக்கூட முடிக்கவில்லை.  என் சக மாணவர்கள் எல்லாம் என்னை வாருங்கள் கலெக்டரே என்றுதான் அழைப்பார்கள் என்று அவர் சொன்னபோது எனக்கு வருத்தம் ஏற்பட்டது.  ஏனென்றால் இதுபோல அழுத்தம் திருத்தமாகச் சொன்ன பலர் அம்பேலானதை நான் பார்த்திருக்கிறேன்.  

அபரிமிதமான கனவுகளை சாத்தியமானவற்றிற்குக் கூட வளர்த்துக் கொள்ளக் கூடாது.  ஒரு சிற்றுண்டி விடுதிக்கு செல்வதற்கு முன்பு என்ன சாப்பிடலாம் என்று மனத் தயாரிப்பு செய்வதுகூட தவறுதான்.  அன்று ஒருவேளை அந்தப் பதார்த்தம் தீர்ந்து போயிருக்கலாம், அல்லது அந்தச் சிற்றுண்டி சாலையே மூடப்பட்டிருக்கலாம்.  நினைத்தது மாதிரி நடப்பதற்கு வாழ்க்கை திரைப்படம் அல்ல.  நமக்கு நாமே சிலவற்றைத் திணித்துக் கொள்வதுகூட தவறுதான்.  அப்படியிருக்கும்போது அடுத்தவர்கள் மீது திணிப்பது மாபெரும் தவறு.  

குழந்தைகளை சொத்துக்களைப் போலவும், உடைமைகளைப் போலவும் கையாளுகிற மனோபாவம்  இருக்கிறது. அவர்களுக்கு நிறைவேறாத கனவை குழந்தைகள் மூலம் சாதித்துக் கொள்ள நினைக்கிறார்கள்.  இது தவறு. ஒவ்வொரு குழந்தையும் மூளையோடும், இதயத்தோடும் பிறக்கிறது. அதை நிர்பந்திப்பது ஒருவித வன்முறை.

இன்று குழந்தைகளுக்கு விளையாட பல பள்ளிகளில் திடல் இல்லை.

குடியிருப்புகளிலோ இடம் இல்லை.  தெருக்களிலோ மைதானம் இல்லை.

இவையெல்லாம் இருந்தாலோ நேரமில்லை.  பெற்றோர்கள் எல்லா வகுப்புகளிலும் அவர்களைச் சேர்த்து விடுகிறார்கள்.  மிதிவண்டிக்கு காற்றடிப்பதைபோல மதிப்பெண்களை அவர்களுக்குள் செலுத்த முயற்சி செய்கிறார்கள்.  

கோடை விடுமுறையில் எங்கள் தலைமுறையினர் சொந்தக்காரர்கள் வீட்டிற்குச் செல்வோம்.  அங்கிருக்கும் வசதிகளை அனுசரித்துக் கொண்டு மகிழ்ச்சியாக உறவினர்களோடு விளையாடி மகிழ்வோம்.  இன்று குழந்தைகள் தாங்கள் வழக்கமாகப் படுக்கும் படுக்கையைவிட்டு வேறிடத்தில் படுக்க விரும்புவதில்லை. 

கோடை விடுமுறை முழுவதும் ஏதாவது ஒரு வகுப்பிற்கு கட்டாயம் அனுப்பப்படுகிறார்கள்.  இன்று விளையாடுவது கூட ஒரு செயல்பாடு.  

எனக்குத் தெரிந்து ஒரு மாணவர் பெற்றோர்கள் சொல்லிச் சொல்லி ஐ.ஐ.டி. செல்ல வேண்டுமென்று சுயமனோவசியம் செய்துகொண்டார்.  ஒருமுறை அவர்கள் குடும்பம் உயரதிகாரி ஒருவரோடு திருப்பதி செல்ல நேரிட்டது.  ஆந்திராவில் அதிகாரி என்பதால் அவருக்கு தரிசனத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டது.  அவர்களோடு இவர்களும் ஒட்டிக்கொண்டதால் இந்த மாணவரும் ஏழுமலையானை கிட்டத்தில் அதிகநேரம் பார்க்க முடிந்தது.  வெளியே வந்ததும், பெற்றோர்கள், "என்ன வேண்டினாய்?'' என்று கேட்டார்கள்.  அதற்கு அவன், "எதையும் வேண்டவில்லை, எனக்கு ஐ,ஐ,டி. கிடைத்தால் இதுபோல தரிசனத்தில் முன்னுரிமை கிடைக்குமா? என யோசித்தேன்'' என்று சொன்னார்.  

ஒரு காலத்தில் தந்தை மருத்துவராக இருந்தால் மகனும் மருத்துவராக வேண்டும் என்கிற வேட்கை இருந்தது.  ஆனால், இன்று சில குடும்பங்களில் மகன்கள் தந்தையின் தொழிலைச் செய்ய விரும்பவில்லை என சொல்லி சுதந்திரமாக வேறொரு துறையைத் தேர்ந்தெடுப்பதை நான் பார்க்கிறேன்.  அந்த இளைஞர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், நன்றாகப் பணியாற்றுகிறார்கள், அபரிமிதமான உயரங்களைத் தொடுகிறார்கள்.  

திணிக்கிறபோது தின்பண்டமும் தெவிட்டத் தொடங்கும்.  கட்டாயப்படுத்தும்போது கற்கண்டும் கசக்கத் தொடங்கும். 
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com