தற்கொலை தடுப்பு நடவடிக்கைகள்

சின்னப் பிரச்னைக்கே சிறகு ஒடிந்துவிடுபவர்கள்.  இவர்கள் மூளையில் சில ரசாயன உற்பத்தி குறைவாக இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.  எனவே, தக்க மருந்துகளைக் கொடுத்து மனநல மருத்துவர்கள் இவர்களை மீட்பார்கள். 
தற்கொலை தடுப்பு நடவடிக்கைகள்

உச்சியிலிருந்து தொடங்கு-38

சாக்ரடீஸ் மரணமடைவதற்கு முன்பு, "எந்த மனிதனுக்கும் தன் உயிரை தானே எடுத்துக் கொள்வதற்கு உரிமையில்லை'' என்று சொன்னதாக பிளாட்டோ குறிப்பிடுகிறார்.  அவர், "தன்னுடைய இடத்தில் நின்றுகொண்டு காவல் காக்கும் ஒரு சிப்பாயைப்போல, நாம் நம் பணி முடியும் வரை உலகத்தைவிட்டு அகல முயற்சி செய்யக்கூடாது'' என்று குறிப்பிடுகிறார்.  பிளாட்டோ, அரிஸ்டாட்டில் இருவருமே தற்கொலையை மறுதலித்தவர்கள்.  

மனவியாதி, போதைப்பொருள் பழக்கம், தற்கொலை முயற்சி மேற்கொண்டவர்கள், குடும்பத்தில் தற்கொலை பின்னணி உள்ளவர்கள், தேவையின்றி உணர்ச்சிவசப்படுபவர்கள், வன்முறைக்கு ஆட்பட்டவர்கள் போன்றோர் தற்கொலை வாய்ப்புள்ளவர்களாகக் கருதப்பட வேண்டும்.

இவர்களை முன்கூட்டியே தீவிரமான மனவியல் ஆலோசனைக்குட்படுத்தி அவர்களிடமிருக்கும் எல்லாப் பிரச்னைகளையும் தீர்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.  வாழ்க்கையை நம்பிக்கையுடன் பார்ப்பதற்குக் கற்றுத் தர வேண்டும்.

எந்த நிகழ்வையும் இவர்கள் தனக்கு மட்டுமே நிகழ்ந்ததாக விரக்தியடைபவர்கள்.  சுயபச்சாதாபத்தை தேடிக் கொள்ள முயல்பவர்கள்.

சின்னப் பிரச்னைக்கே சிறகு ஒடிந்துவிடுபவர்கள்.  இவர்கள் மூளையில் சில ரசாயன உற்பத்தி குறைவாக இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.  எனவே, தக்க மருந்துகளைக் கொடுத்து மனநல மருத்துவர்கள் இவர்களை மீட்பார்கள். 

மன அழுத்தம் ஏன் ஏற்படுகிறது என்பதை அறிய வேண்டும்.  சிலரது பிரச்னைகள் காரணங்களோடு ஏற்படுபவை.  அவற்றை அகற்றினாலே அவர்கள் சகஜமாகி விடுவார்கள்.  பிடிக்காத பள்ளி, ஒத்துவராத கல்லூரி, விருப்பமில்லாத படிப்பு ஆகியவற்றால் ஒருவர் மனச்சோர்வு அடைந்திருந்தால் மேலும் மேலும் வற்புறுத்தி அவர்களை அங்கே நீடிக்கச் செய்வது தவறு.  

வேலை கிடைக்காத வருத்தத்தில் ஒருவர் இருந்தால், வீட்டிலிருப்பவர்கள் அவர்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டும்.  குத்திக் காட்டுவதோ, கடிந்து கொள்வதோ, அவர்களிடம் கொஞ்ச நஞ்சமிருக்கும் தன்னம்பிக்கையையும் காணாமல் அடித்துவிடும்.  ஒருவரை அவமானப்படுத்தி அவர்கள் திறமையை வெளிக்கொண்டு வரவும் முடியாது.  நம்பிக்கையூட்டி அவர்களை ஆசுவாசப்படுத்துவதன் மூலம்தான் அவர்கள் நேர்மறையாகச் சிந்திக்கத் தொடங்குவார்கள்.  

பணியில்லாமல் அவதிப்படுகிறவர்களுக்கு மற்ற வாய்ப்புகளை சுட்டிக்காட்ட வேண்டும்.  அடிக்கடி அவர்களுக்கு தன்னம்பிக்கை பிறப்பதுபோல பேச வேண்டும்.  ஏற்கெனவே இருட்டறையில் சுருண்டுபோய் இருக்கிறவர்களை வெளியே அழைத்துச் செல்ல வேண்டும்.  எதற்குமே பயனற்றவர்கள் போல் அவர்களிடம் கெளரவக் குறைச்சலான பணிகளை ஒப்படைத்து குட்டக் கூடாது.  

உலக அளவில் சாதித்த மனிதர்களுடைய வாழ்க்கைச் சரிதங்களை கல்லூரி மாணவர்கள் வாசிக்க வேண்டும்.  அவர்கள் சந்தித்த சோதனைகளுக்கு முன்னால் நம்முடைய பிரச்னைகள் ஒன்றுமில்லை என்பது புரியும்.  அதைப்போலவே நம் இதயத்தை வெளிச்சமாக்கும் இலக்கியங்கள், போராடி வெற்றி பெற்ற திரைப்படங்கள், நம்பிக்கையை வளர்க்கக் கூடிய குறும்படங்கள் போன்றவற்றின் மூலம் ஒருவரை தொடர்ந்து போராட வைக்க முடியும்.  

பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளக் கூடாது என்று வழிகாட்டுதல் மையம் அமைக்கும்படி தமிழக அரசு அனைத்துப் பள்ளிகளையும் அறிவுறுத்தி சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது.  பள்ளிகளில் வித்தியாசமாக நடந்து கொள்ளும் மாணவர்களை ஆசிரியர்கள் அறிந்து அவர்கள் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிப்பதும், அவ்வப்போது பேசி என்ன பிரச்னை என்று அறிந்து கொள்வதும் பெரிய அளவிற்கு தற்கொலையைத் தடுக்கும்.  கல்லூரிகளில் ஒரு காலத்தில் ராக்கிங் இருந்தபோது அதைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டவர்கள் உண்டு.  இப்போது அந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.  இருந்தாலும் வகுப்பிற்கு வராமல், சரியாகச் சாப்பிடாமல், உடையணியாமல், தூய்மையான வாழ்வுக்குப் புறமுதுகு காட்டுபவர்கள் ஆகியவர்களை அடையாளம் கண்டுபிடித்து பெற்றோர்களுக்குத் தெரிவிப்பதும், அவர்களது சகநண்பர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தருவதும் அவசியம்.  

வெளிநாடுகளில் விரிவான திட்டங்கள் தற்கொலை குறித்து தீட்டப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன.  ஆரம்ப சுகாதார மையங்களிலேயே தற்கொலை பாதிப்புக்கு உள்ளாகக் கூடியவர்களை கண்டறிந்து அவர்கள் குணப்படுத்துகிறார்கள்.  அங்கு அடிக்கடி மனநல மருத்துவர்களைச் சந்தித்து பிரச்னைகளைப் பேசுகிற பழக்கம் இருக்கிறது.  

பெற்றோர்கள் குழந்தைகளிடம் அன்பு செலுத்துவதும், அவர்கள் சொல்கிற அத்தனை அறிகுறிகளையும் அன்பிலிருந்து பிறக்கின்றன என்பதை புரிய வைப்பதும் அவசியம்.  பெற்றோர்கள் சிலவற்றைத் திணிக்கிறபோது குழந்தைகள் நம் மீது அன்பு இல்லையோ என்று எண்ணத் தொடங்கிவிடுகிறார்கள்.  குறைவான மதிப்பெண் பெற்றதற்காக வெறுப்பதும், நன்றாகப் படிக்கும் மகனை மட்டும் பாசமாக பார்த்துக் கொள்வதும் தீவிரமான மன அழுத்தத்தை மற்ற குழந்தைகளுக்கு ஏற்படுத்தும்.  படிப்பை வைத்து பாசத்தைச் செலுத்துவது மிகப்பெரிய பாதிப்பை குடும்பத்தில் ஏற்படுத்திவிடும்.  பலவீனமான குழந்தைகளுக்கு பாசம் அதிகம் தேவைப்படுகிறது. 

சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தற்கொலையைத் தடுக்கும் முயற்சியில் பெருமளவு ஈடுபட்டு வருகின்றன.  சமுதாய மையங்கள் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.  

ஆசிரியர்கள் குழந்தைகளைப் பொறுமையாகவும், அவர்களுடைய நம்பிக்கை குறையாமலும் கையாள்வது அவசியம்.  குடும்பப் பின்னணி சரியாக அமையாத குழந்தைகளை அதிகப் பரிவோடு கவனித்துக் கொள்ளும் பொறுப்பு கல்வி நிறுவனங்களுக்கு இருக்கின்றன.  படிப்போடு கல்வியை நிறுத்திக் கொள்ளாமல் மாதம் ஒருமுறை மிகுந்த போராட்டத்திற்கு இடையே வெற்றி பெற்றவர்களை அழைத்து சொற்பொழிவாற்றச் செய்வது அவசியம்.  சிறந்த திரைப்படங்கள், நல்ல புத்தகங்கள் போன்றவற்றை அறிமுகப்படுத்துவது தேவை.  

வறுமையின் காரணமாக தற்கொலை சில இடங்களில் நடக்கின்றன.  கடன் தொல்லை, மோசடி நிறுவனத்தில் முதலீடு செய்து ஒட்டுமொத்த பணத்தை இழத்தல், வியாபாரத் தோல்வி, சீட்டுப் போட்டு ஏமாறுதல், வெளிநாட்டு வேலைக்கு பணம் கொடுத்து நஷ்டமடைதல் போன்றவை பொருளாதார ரீதியான தற்கொலைகளுக்கு காரணமாக இருக்கின்றன.  

சமூகப் பொருளாதார காரணிகளை மாற்றியமைப்பதன் மூலம் எல்லாருக்கும் வாழ்க்கை ஆதாரங்களை ஏற்படுத்தி வறுமையினால் ஏற்படும் தற்கொலைகளைத் தடுக்க முடியும்.  மோசடிப் பேர்வழிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு தொடர்ந்து காட்சி ஊடகங்களில் இதைப் பற்றிய விழிப்புணர்வைப் பரவலாக்க வேண்டும்.  இதுபோன்ற நிறுவனங்கள் முளைக்கும்போதே அவற்றை தணிக்கைக்கு உட்படுத்துவதும் அவர்கள்மீது கண்காணிப்பு செலுத்துவதும் அவசியம்.  

அரசு அளித்து வரும் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, நலிவடைந்த ஆதரவற்றோர் வாழ்க்கையில் ஈரத்தை ஏற்படுத்தி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.  சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் தேவையை வறுமையை கண்கூடாகப் பார்த்தவர்களால் மட்டுமே உணர முடியும்.

இளம் பெண்களை மின்னணு ஊடகங்களின் மூலம் பயமுறுத்துவதும், அவர்கள் மன அமைதியைக் கெடுப்பதும் தற்கொலைக்கு வித்திட்டு விடுகின்றன.  மின்னணு ஊடகங்களை எச்சரிக்கையாகக் கையாள வேண்டும்.  தேவையற்ற தகவல்களை அவற்றில் அனுப்புவதும், நாம் எப்போது வேண்டுமானால் கண்காணிக்கப்படலாம் என்ற உணர்வின்றி செயல்படுவதும் ஆபத்தில் முடிகின்றன.  யாராவது ஒருவர் பயமுறுத்தினால் உடனடியாக பெற்றோர்களிடம் தகவலைத் தெரிவித்து உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கே பெற்றோர்கள் கோபித்துக் கொள்வார்களோ என்று எண்ணி அவற்றை மறைக்க நினைப்பது கனன்று கொண்டிருக்கும் நெருப்பை காகிதத்தால் மூடுவதைப்போல.  பெற்றோர்களும் இவற்றையெல்லாம் பெண் குழந்தைகளுக்குப் புரிய வைப்பது அவசியம்.  கல்லூரிகளிலும் இவற்றைப் பற்றிய வகுப்புகள் எடுப்பது அவசியம்.

போதை, மது போன்றவற்றிற்கு அடிமையானவர்களை அவற்றிலிருந்து விடுவிப்பதற்கு சிகிச்சைகள் தந்து பழைய வாழ்க்கைக்குத் திருப்ப வேண்டும்.

உயரமான கட்டடங்களில் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

ஊடகங்கள் தற்கொலை குறித்த செய்திகளை சுவாரசியமாக்காமல் முடிந்த அளவிற்கு அவற்றை வெறும் செய்தியாக மட்டும் வெளியிட வேண்டும்.  

எனக்குத் தெரிந்த ஒருவர்,  குருவிக்காரர்கள் பிரிவைச் சார்ந்தவர்.

அப்போதிருந்த ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டத்தில் அவர்கள் குழுவைச் சார்ந்த அனைவருக்கும் கடன் வாங்கித் தருவார்.  அடிக்கடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து அம்மக்களுக்காக மனுக்களைத் தருவார்.

அவர்களுக்குத் தலைவரைப்போல இருந்த அவர் கடனைக் கட்டுவதாகச் சொல்லி  அவர்களிடம் வசூலித்த தொகையை தனக்காகச் செலவழித்து விட்டார்.  இந்த ரகசியம் வெளியே தெரிய வந்ததும் அவரும், அவர் மனைவியும் விஷம் குடித்து இறந்து விட்டார்கள்.  

கடனைத் திருப்பித் தர முடியாமல் தற்கொலையை நாடுபவர்கள் அதிகம்.  தமிழ்ப் படங்கள் சிலவற்றில் வறுமைக்குத் தீர்வு தற்கொலை என்று முடிவைப் பார்க்கும் அதைப்போன்ற மனநிலைக்கு இவர்கள் ஆட்படுகிறார்கள்.

"துலாபாரம்', "சுவரில்லாச் சித்திரங்கள்' போன்ற படங்களில் வறுமையைச் சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுகள் முன்வைக்கப்படுகின்றன.  ஐரோப்பாவில் கூட 19-ஆம் நூற்றாண்டில் இலக்கியவாதிகள் வறுமையை தற்கொலைக்கான காரணியாக உருவகப்படுத்தினார்கள். ஆனால் இன்று அங்கு வறுமையைத் தாண்டிய காரணங்கள் அதிகரித்துவிட்டன.  

நியாயமான ஆசை, உழைப்புக்கேற்ற எதிர்பார்ப்பு, அன்பான குடும்பம் ஆகியவற்றின் மூலமே வளமான வாழ்க்கையை அமைத்து எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்து தற்கொலைகளைத் தடுக்க முடியும்.
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com