முயன்றவர் வாழலாம்!

வெர்ஜீனியா உல்ஃப் போன்று பலமுறை தற்கொலைக்கு முயல்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களைக் காப்பாற்றுவதோடு நின்றுவிடாமல் தகுந்த சிகிச்சையளித்து குணப்படுத்தினால் 
முயன்றவர் வாழலாம்!

உச்சியிலிருந்து தொடங்கு-39


தற்கொலைக்கு முயன்றவர்கள் மீண்டும் மீண்டும் தற்கொலைக்குத் தூண்டப்படுவதைப் பார்க்கலாம். வெர்ஜினியா உல்ஃப் என்கிற ஆங்கில எழுத்தாளர் அபரிமிதமான ஆற்றல் கொண்டவர். இருமுனைக்கோடி மனநிலையால் பாதிக்கப்பட்டவர். 

சிறந்த தந்தைக்கும், தாய்க்கும் பிறந்தவர். வீட்டிலேயே பெற்றோர்  கல்வி புகட்டினர். சின்ன வயதிலேயே அவருடைய தாய் இறந்து போனார். தந்தை அதிகம் பேசுவதை நிறுத்திக் கொண்டார். அது உல்ஃபை மிகப்பெரிய அலைக்கழிப்புக்கு ஆட்படுத்தியது. 

தந்தை இறந்தபோது இரண்டாவது மன பாதிப்பு ஏற்பட்டது. அவர் சன்னலின் வழியாகக் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். காப்பாற்றப்பட்டார். எட்டு ஆண்டுகள் கழித்து திருமணம் செய்து கொண்டார். அந்த நேரத்தில் அவருக்கு மூன்றாவது பாதிப்பு ஏற்பட்டது. மூன்று ஆண்டுகள் அதே மனநிலையில் இருந்தார். இரண்டாம் உலகப்போரின்போது இங்கிலாந்து கைப்பற்றப்பட்டதால் கணவனும் மனைவியும் தற்கொலை செய்வதற்குத் தயாரானார்கள்.

அப்போரின்போது அவரது லண்டன் வீட்டின்மீது குண்டுகள் விழுந்தன. அதில் மிகப்பெரிய பாதிப்புக்கு அவர் உள்ளானார். படிக்கவோ, எழுதவோ முடியாமல் சட்டைப் பைகளில் கற்களை நிரப்பிக்கொண்டு ஆற்றில் விழுந்து மாண்டு போனார். 

உல்ஃபின் மனநோய்களுக்கு மரபுக்கூறும் ஒரு காரணம். பல தலைமுறைகளாக அவருடைய குடும்பம் இருண்மையான மனிதர்களாலும் வினோதமான பெண்களாலும் நிரப்பப்பட்டதாகக் காணப்படுகிறது. அவருடைய சகோதர, சகோதரி இருவருக்குமே மன அழுத்தப் பிரச்னை இருந்தது. 

வெர்ஜீனியா உல்ஃப் போன்று பலமுறை தற்கொலைக்கு முயல்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களைக் காப்பாற்றுவதோடு நின்றுவிடாமல் தகுந்த சிகிச்சையளித்து குணப்படுத்தினால் அவர்கள் மறுபடி முயற்சி செய்யாமல் சகஜ வாழ்வு வாழ முடியும். அதை விட்டுவிட்டு ஆறுதல் கூறுவது, தைரியம் கூறுவது, அறிவுரை சொல்வது ஆகியவற்றின் மூலம் அவர்களைச் சரி செய்துவிட முடியாது. இன்னும் சிலரோ பேய் பிடித்திருக்கிறது, யாரோ பில்லி சூனியம் வைத்திருக்கிறார்கள், யாரோ செய்வினை செய்திருக்கிறார்கள் என்று பூஜை, தாயத்து, பரிகாரம் என்று கிளம்பிவிடுகிறார்கள். இவற்றால் எந்தப் பலனும் இருக்காது. அறிவியல்ரீதியான சிகிச்சை மட்டுமே இவர்களைக் காப்பாற்றும். 

உணர்ச்சிவசப்பட்டு தற்கொலைக்கு முயல்பவர்கள் இந்த வகையைச் சார்ந்தவர்கள் அல்லர். உதாரணமாக, காதல் தோல்வி, தேர்வில் தோல்வி போன்றவற்றிற்காக தற்கொலை முயற்சியை யாராவது மேற்கொண்டால் அவர்களைக் காப்பாற்றிய பிறகு அந்த நிகழ்வைச் சொல்லி கிண்டலடிப்பதோ, துன்புறுத்துவதோ மிகவும் தவறு. அது அவர்களை மீண்டும் தற்கொலை செய்யத் தூண்டும். 

சாமுவேல் வேலஸ் என்கிற சமூகவியல் அறிஞர் "தற்கொலைக்குப் பிறகு' என்கிற புத்தகத்தை எழுதியிருக்கிறார். தற்கொலைக்கு முயன்று தப்பியவர்களை நண்பர்களும், உறவினர்களும், உடனிருப்பவர்களும் கனிவாக நடத்துவது அவசியம். ஒருவர் பேசுவதைக் கவனிப்பது மிகவும் அவசியம். ஆனால் சிலர் மட்டுமே அதைச் செவ்வனே செய்கிறார்கள் என்று வேலஸ் குறிப்பிடுகிறார். தற்கொலை செய்துகொண்டவர்களின் மனைவிகளை அவர் ஆய்வு செய்து சில முடிவுகளை வெளியிட்டார். அந்தப் பெண்கள் அனைவரும் ஓராண்டு காலமாக கணவன் தற்கொலை செய்து கொண்டது குறித்து மற்றவர்களிடம் பேசிப்பேசி துயரம் குறைந்ததாகக் குறிப்பிட்டார்கள். இயல்பான மரணத்தை ஏற்றுக் கொள்வதைப்போல தற்கொலையை ஏற்றுக் கொள்வது சிரமம். ஆகவே தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தைச் சார்ந்தவர்களையும் அனுசரணையோடு நடத்துவது அவசியம். 

தற்கொலை முயற்சியில் தப்பியவர்கள் அதிக உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பார்கள். அவர்களால் தங்கள் எண்ண ஓட்டங்களை கட்டுப்படுத்த முடியாது. ஏதோ பெரிய இழப்பைச் சந்தித்ததாக உணர்வார்கள். சுயபச்சாதாபம், வெட்கம், குற்ற உணர்வு ஆகியவை அதிகமாக இருக்கும். சில நாட்கள் வெளியே தலைகாட்டவே வெட்கப்படுவார்கள். அவர்களையும் அதேபோன்று தற்கொலை செய்து கொண்டவர்களின் நெருங்கிய உறவினர்களையும் அந்தக் குற்ற உணர்வு வராத மாதிரி கவனித்துக் கொள்வதும் அவர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்வதும் அவசியம். 

ஒன்றின் மீது வெறுப்பின் காரணமாக தற்கொலை செய்துகொள்ள முயல்பவர்களை பொதுவாக சமூகம் அதை மேலும் தொடர வற்புறுத்துவதில்லை. உதாரணமாக, பிடிக்காத வரனுக்கு திருமணம் செய்ய பெற்றோர்கள் நிச்சயித்து அந்தப் பெண் வரன் பிடிக்காமல் தற்கொலை செய்ய முயன்றால் அதற்குப் பிறகு அந்தத் திருமணத்தை நடத்துவதில்லை. தற்கொலைக்கு முயன்று அந்தக் காரணம் தவிர்க்கப்பட்டால் அதற்கு பிறகு அந்த சிந்தனையே எழாமல் மகிழ்ச்சியாக வாழ்கிறவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். 

தற்கொலைக்கு முயன்ற வரை கூடுமானவரை வேறு சூழலுக்கு அழைத்துச் செல்வது நல்லது.  சிறிது காலமாவது அவர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட வேண்டும். புதிய சூழலில் அவர்கள் தங்கும்போது பழைய அழுத்தங்களிலிருந்து விடுபடுவார்கள். அவர்களுக்குத் தியானம், உடற்பயிற்சி போன்றவற்றைத் தந்து அவற்றின் மூலம் கவலைகள், குழப்பங்கள் ஆகியவற்றிலிருந்து விடுவிக்க முடியும். 

எந்தக் காரணமும் இல்லாமல் மன அழுத்தத்தால் தற்கொலையை நாடுபவர்களை சிறப்பு சிகிச்சைகளின் மூலம் தான் குணப்படுத்த முடியும். கணவனை இழந்து கடுமையான மன அழுத்தத்தில் இருப்பவர்கள் மரபுக்கூறுகளின் காரணமாக மனநோய்க்கு ஆட்படுபவர்கள் ஆகியோரை அவர்களுடைய நடவடிக்கைகளிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். அவர்கள் முதல் முயற்சி மேற்கொள்ளும்போதே எச்சரிக்கையடைந்து அவர்களை மனநல ஆலோசனைகக்கு அழைத்துச் செல்ல வேண்டும். மனநல மருத்துவர்கள் அவர்கள் எந்த அளவிற்குப் பாதிப்புள்ளாகியிருக்கிறார்கள் என்பதைப் பேசி அறிந்து கொள்வார்கள். அவர்களுக்கு எப்படிப்பட்ட சிகிச்சை தேவைப்படுகிறது என்பதையும், மருந்துகள் வேண்டுமா என்பதையும் முடிவுசெய்துகொள்வார்கள். மனச்சிதைவைத் தடுக்கும் முயற்சியும், மருந்துகளையும் அளிப்பார்கள். அதோடு அவர்களை பெற்றோர்கள் எப்படி அணுக வேண்டும் என்பதையும் எடுத்துரைப்பார்கள். இதுபோன்ற மருந்துகளை ஒருநாள் கூட தவறாமல் உட்கொண்டு வருவதும் அவசியம். 

வறுமை, கடன்தொல்லை போன்றவற்றால் தற்கொலையைத் தேர்ந்தெடுப்பவர்கள் அந்தப் பிரச்னைகளிலிருந்து விடுபட்டால் நன்றாக வாழ்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. அதில் கூட சிலர் மீண்டும் மீண்டும் தவறான தொழிலைச் செய்து நஷ்டமடைவதிலேயே குறியாக இருப்பார்கள். அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை குடும்பத்தினரும், உறவினரும் ஏற்படுத்தினால் அவர்களால் இயல்பான வாழ்க்கை வாழ முடியும். உணர்ச்சிவசப்பட்டு தற்கொலைக்கு முயல்பவர்களும் ஒருநிமிடத்தில் முடிவெடுப்பவர்களையும் தக்க அறிவுரையின் மூலமும், மனநல ஆலோசனையின் மூலமும் எளிதில் மீட்டுக் கொண்டு வர முடியும். 

எந்த மனநிலை பாதிப்பும் இல்லாமல் ஏதோ ஒரு கோபத்தில் ஒருவர் தற்கொலைக்கு முயன்றிருந்தால் அவர்களைப் பக்குவமாக நடத்துவது நம்முடைய கடமை. அவர்களிடம் அதைப்பற்றி எதுவும் பேசி நினைவுபடுத்தாமல் இருப்பது நல்லது. அவர்கள் தற்கொலை தொடர்பான இலக்கியங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றைத் தவிர்ப்பதும், அவர்களைச் சார்ந்தவர்கள் அது போன்றவற்றைப் பற்றி பேசாமல் இருப்பதும் நல்லது.

தற்கொலைக்கு முயன்றவர்களை நேர்மறையான கருத்துக்களின் மூலமும், உரையாடல்களின் மூலமும் பொறுப்புகளைக் கொடுத்து ஊக்கப்படுத்துவதன் மூலமும், மகிழ்ச்சியான இடங்களுக்கு அழைத்துச் செல்வதன் மூலமும், இனிய பயணங்களுக்கு அனுப்புவதன் மூலமும் அவர்கள் இதயத்தில் ஏற்பட்ட வடுக்களைப் போக்கி நன்றாக வாழ வைக்க முடியும்.
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com