மகிழ்ச்சியே மானுட தத்துவம்!

மனவியல் ஆய்வுகள் நட்பை மகிழ்ச்சிக்கான முக்கியக் காரணம் என்று வரையறுக்கின்றன. சிறந்த நட்பு இருப்பவர்கள் எப்போதும் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்.
மகிழ்ச்சியே மானுட தத்துவம்!

உச்சியிலிருந்து தொடங்கு-28

கொலம்பியா பல்கலைக்கழகம் ஐக்கிய நாடுகள் சபைக்கு 2012ஆம் ஆண்டு உலக மகிழ்ச்சி அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தது. அதில் வாழ்க்கை குறித்த நிறைவும், நமக்குள் நன்றாக உணரும் உணர்வுமே மகிழ்ச்சி என்று குறிப்பிட்டது. போதுமான உணவு, வருவாய் வரும் பணி, பாதுகாப்பான உறைவிடம், மாசற்ற நீர், சுகாதாரம், மருத்துவ வசதி, கல்வி வாய்ப்புகள் ஆகியவையே வாழ்வில் நிறைவை வரையறுக்கின்றன. வருமானம் அதிகரிக்கிறபோது மக்கள் பதற்றமும், மன அழுத்தமும் இருக்கும் செயல்களில் அதிக நேரத்தைச் செலவு செய்கிறார்கள். மகிழ்ச்சி என்பது நல்ல விளைவுகள் எதிர்மறைத் தாக்கங்களைவிட விஞ்சி இருப்பதே.

மனவியல் ஆய்வுகள் நட்பை மகிழ்ச்சிக்கான முக்கியக் காரணம் என்று வரையறுக்கின்றன. சிறந்த நட்பு இருப்பவர்கள் எப்போதும் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். அதற்கு முதலில் நட்பு என்பதை எப்படி நாம் புரிந்து கொள்கிறோம் என்பது அவசியம்.  நடுத்தர வயதை அடைந்த பலர் கூட வீட்டில் நடக்கும் காது குத்தலிலிருந்து கல்யாணம் வரை அனைத்து நிகழ்வுகளிலும் நண்பர்களை நம்பியிருப்பதைப் பார்க்கிறோம். உறவினர்கள் ஓரமாய் உட்கார்ந்திருக்க நண்பர்களே எடுத்துக்கட்டிக் கொண்டு செய்கிறார்கள். சாம்பாரில் உப்பு குறைவு என்று சொந்தக்காரர்கள் "சொண்டு' சொல்கிறபோது, நண்பர்களோ கடைசிப் பந்தியில் அமர்ந்து எஞ்சியதைச் சாப்பிடுகிறார்கள்.

எனக்குத் தெரிந்த பலர் அறுவைசிகிச்சைக்காக அனுமதிக்கப்படும்போது அவர்களுக்கு ரத்தத்தைத் தருகிறவர்கள் நண்பர்களாகவே இருக்கிறார்கள்.  என் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது ரத்தம் தரம் வேண்டிய சூழல். அவருடைய ரத்தம் "ஓ' வகையைச் சார்ந்தது. எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பி பாசிட்டிவ். அப்போது என் சகோதரருடைய சிநேகிதி கலாவதி என்பவர்தான் ரத்தம் அளித்தார். பல மருத்துவமனைகளில் நோயாளிகளை இரவு பகலாகக் கவனித்துக் கொள்கிற நண்பர்களை நான் பார்த்திருக்கிறேன்.

பணியில் சேர்வதற்கோ, அவசரமாக நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்கோ பணம் தந்து உதவுகிறவர்களும் பெரும்பாலும் நண்பர்களாகவே இருக்கிறார்கள். தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றால் உறவினர்கள் இச்சகம் பேசும்போது தோள்களில் தட்டி ஆதரவு தருகிறவர்கள், ஆறுதல் கூறுகிறவர்கள் நண்பர்களே. ஓர் அல்லல், அவசரம் என்றால் ரகசியத்தைப் பகிர்ந்துகொள்ள நண்பர்களின் காதுகளே பாதுகாப்பாக இருக்கின்றன. 

மார்க்ஸ், ஏங்கல்ஸ்  ஆகிய இருவரின் நட்பு உலக அரசியலையே புரட்டிப்போட்ட நட்பு. மார்க்ஸ் என்னும் அறிவு தீபம் அணையாமல் இருக்க ஏங்கல்ஸ் என்கிற பாதுகாப்புக் கரங்களே உதவியாய் இருந்தன.

கல்லூரியில் படிக்கும்போதும், பணியில் சேரும்போதும் பொறுக்கிப் பொறுக்கி நண்பர்களைத் தேர்வு செய்ய வேண்டும். பொறுக்கிகளாகத் தேர்வு செய்யக்கூடாது. இப்போதெல்லாம் போட்டித் தேர்விற்குத் தயாரிப்பவர்கள் ஒன்றாகக் கிளம்பி வந்து, ஒரே அறையில் இருந்து தங்கிப் படிக்கிறார்கள். ஒரே பயிற்சி நிலையத்திற்குச் செல்கிறார்கள். இவையெல்லாம் அவர்களைக் கூட்டு முயற்சியுடன் இலக்கை நோக்கிப் பயணிக்க வைக்கின்றன. 

எங்கள் கல்லூரியில் ஒரு மாணவர் நண்பர்கள் இல்லாமல் இருப்பார். கருத்தரங்குகளின்போது மேடையில் ஏறி அவரால் சரளமாகப் பேச முடியாது. சமயத்தில் விடுதிக் கட்டணம் கட்ட வீட்டிலிருந்து பணம் வராவிட்டால் தவித்துக் கொண்டு இருப்பார். வேறு யாராவது எதற்கோ சிரித்தால்கூட, அவரைக் கிண்டல் செய்வதாக எண்ணி கண் கலங்குவார். ஒரு முறை அவரை மாணவர்கள் கேலி செய்தார்கள் என்பதற்காக சுண்டு விரலைக் கத்தரித்து நெகிழிப் பையில் போட்டு அறையில் தொங்கவிட்டார். நல்ல நட்பு அமையாதவர்கள் வேறு எந்த உறவோடும் சகஜமாக இருக்க மாட்டார்கள். அவர்கள் சுயநலத்தோடு இருப்பார்கள். அவர்கள் திருமண வாழ்க்கை வெற்றி பெறுவது கூடக் கடினம். 

ஆங்கிலத்தில் நண்பன் என்கிற சொல்லுக்கு அன்பு, சுதந்திரம், தேர்வு ஆகியவை பொருள்களாக இருக்கின்றன. நல்ல நட்பு அன்பின் அடிப்படையிலும், சுதந்திரமாக இருக்கும் உரிமையுடனும், விருப்பமானவர்களுடன் பழகும் பரந்துபட்ட உணர்வுடனும் மலர்கின்றது. திணிப்பதால் நட்பு உருவாக முடியாது. ஒருவருக்கொருவர் நல்லெண்ணத்துடனும், சமமான பரிவுடனும், அடுத்தவர் சமீபத்தை மகிழ்ச்சியாகக் கருதும் மனப்பான்மையுடனும் இருக்கும்போதே நட்பு சிறக்கிறது. 

நண்பர்களோடு சேர்ந்து படிப்பது மட்டுமல்ல, கடினமான பாடத்திட்டத்தை அணுகுவது கூட மகிழ்ச்சியான அனுபவம். நான் பேராசிரியரிடம் கற்றதை விட வகுப்புத் தோழர்களிடம் கற்றதே அதிகம். புரியாத பாடத்தை அவர்களிடம் உரிமையோடு கேட்க முடியும். எத்தனை முறை கேட்டாலும் பொறுமையாகக் கற்றுத் தருவார்கள். அவர்கள் சொல்லித் தரும்போது பயம் விலகும், பதற்றம் குறையும். பெற்றோர்களிடம் எல்லாச் செய்திகளையும் சொல்லிவிட முடியாது. அது அவர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தும். சகோதரர்களிடம்கூட அனைத்தையும் பகிர்ந்து கொள்ள முடியாது. பிரச்னை வருகிறபோது குத்திக்காட்ட நேரிடலாம். நண்பர்கள் இப்படி ஒருபோதும் நடந்து கொள்ளமாட்டார்கள். 

நட்பு கொள்வது அப்போதைய கேளிக்கைகளுக்காக அல்ல. அது நீண்டகாலப் பயன்பாட்டுக்காக. நல்ல நட்பு சுயமதிப்பீட்டை அதிகரிக்கிறது. நேர்காணல்களிலும், ஆளுமைத் தேர்வுகளிலும், நல்ல நட்பைப் பெற்றவர்கள் பளிச்சென்று பதில் சொல்லி மதிப்பைப் பெற்றுவிடுகிறார்கள். ஏதேனும் சரிவு வந்தால் நண்பர்கள் இருக்கிறார்கள் என்கிற தைரியம் கிடைக்கிறது. 

அரிஸ்டாட்டில் மூன்றுவிதமான நட்பு முறைகளை வேறுபடுத்திக் காட்டுகிறார். தூய்மையான நட்பு முதல் வகை. அதுவே ஆதர்சமானது. இரண்டாவது வகை பயன்பாட்டுக்காக உருவாவது. யாரிடம் என்ன பெறலாம் என்பதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு பழகுவது. கல்லூரியில் சிலர் பணக்கார மாணவர்களை மட்டும் சுற்றிக் கொண்டிருப்பார்கள். சிலரோ யாரிடம் என்ன பெறலாம் என்பதைக் கருத்தில் கொண்டு பழகுவார்கள். பிறகு காரியம் முடிந்ததும் கழற்றி விடுவார்கள். 

களிப்புக்காகப் பழகுவது மூன்றாவது ரகம். திரைப்படம் போவது, சீட்டாடுவது, மது அருந்துவது போன்றவற்றிற்காக ஒன்றுகூடுபவர்கள் உண்டு. இந்த வகை நட்பு நெருக்கமாக இருப்பதைப்போலத் தோன்றும். ஆனால், அந்த நண்பர்கள் வேறோர் அவசரத்தில் மருந்துக்குக்கூட மனிதாபிமானம் காட்ட மாட்டார்கள். இந்தப் போலி நெருக்கத்தால் பணமும், நேரமும், விரையமாவதுடன் உடல்நலமும் கெடும். 

நம் நம்பிக்கையை வளர்க்கும் நண்பர்களை நாம் பெற வேண்டும். நமக்குள் உறங்கிக் கிடக்கிற ஆற்றலை அடையாளம் காணவும், அதை உசுப்பி விடவும் ஏற்ற நண்பர்கள் நமக்குக் கிடைக்க வேண்டும். தனியாக நடைபயில்வது கடினம். இன்னொருவருடன் இணைந்து கொண்டால் நாம் அசந்தாலும் அவர்கள் விடாமல் நம்மை வழிநடத்துவார்கள். 

எந்தப் பிரச்னை வந்தாலும் மனம்விட்டு நண்பர்களுடன் பேச வேண்டும். பேசுவதாலேயே பாதி மன அழுத்தம் விலகும். திடீரென ஏதோ ஒரு மூலையிலிருந்து நமக்குச் சரியான ஆலோசனை கிடைப்பதுண்டு. அது தீர்வாக அமையலாம். நம்பிக்கையோடு மற்றவர்கள் பேசும்போது நமக்குள்ளேயே தெளிவு வரும். நம் ஆழ்மனத்தில் இருக்கிற சிந்தனை மிகுந்து வந்து பிரச்னையைத் தீர்க்க உதவலாம். நிறைய நண்பர்கள் இருப்பவர்கள் கலங்குவது இல்லை.

பெரும்பாலான தற்கொலை முயற்சிகள் உதவியை நாடியே நிகழ்கின்றன. யாரும் உதவுவதற்கு இல்லையே என்கின்ற எண்ணம் அப்படிப்பட்ட முடிவை எடுக்கச் செய்கிறது. விரக்கி அடைந்தவர்கள் விபரீத முடிவு எடுப்பதற்கு முன்பு நண்பர்களிடமிருந்து தனிமைப்படுவதைப் பார்க்கலாம். நண்பனைப் பறிகொடுக்கத் தோழர்கள் ஒருபோதும் தயாராக இருப்பதில்லை. அவர்கள் எப்படியாவது அதிலிருந்து மீட்டுக்கொண்டு வந்துவிடுவார்கள்.

பணத்திற்காகவும், பதவிக்காகவும் பழக நேர்பவர்களை பரிச்சயமானவர்கள் என்று சொல்லலாமே தவிர, நண்பர்கள் என்று கூற முடியாது. பதின்ம வயதுதொட்டு கல்லூரி வரை பழகும்போது சட்டையைப் பிடித்து உலுக்கினாலும் சமரசம் செய்துகொண்டு ராசியாகி விடுகிற நண்பர்களையே நாம் வாழ்வின் இறுதிவரை நினைவில் வைத்துக் கொள்வோம். எந்தப் பாசாங்கும் இல்லாமல் நம் மீது அன்பு செலுத்தியவர்கள் அவர்கள்.

இன்று மாணவர்கள் சிறந்த நண்பர்களை விரல் எண்ணிக்கையைப் போலத் தேர்ந்தெடுத்துக் கொண்டால் அவர்கள் அவ்வப்போது ஏற்படும் ஏமாற்றங்களை இரட்டை வேகத்துடன் எதிர்கொண்டு முறியடிப்பார்கள், வாழ்வில் சதமடிப்பார்கள். 
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com