அவமானம் எனும் மாயை!

சாதனைகளில் குறைவதால் அதை கவுரவக் குறைச்சல் என்று நகர்ப்புறங்களிலும், சொந்தத்தில் சண்டை என்று கிராமப்புறங்களிலும் தற்கொலை ஆயுதத்தைகைகளில் எடுப்பவர்கள் அதிகம்.
அவமானம் எனும் மாயை!

உச்சியிலிருந்து தொடங்கு-34

பெரும்பாலான தற்கொலைகள் அவமானப்பட்டுவிட்டோம் என்கிற ஆதங்கத்தில் நிகழ்கின்றன. உறவுகளுக்குள் நடந்த உதாசீனத்தால் அவை மேற்கொள்ளப்படுகின்றன. கணவன் திட்டினான், மனைவி அசிங்கப்படுத்தி விட்டாள், பெற்றோர்கள் திட்டினார்கள், கடன் கொடுத்தவர் நாக்கைப் பிடுங்கிக்கொள்ளுமாறு நான்கு கேள்விகள் கேட்டுவிட்டார் என்றெல்லாம் வாழ்க்கையைப் பாதியிலேயே முடித்துக் கொள்பவர்களை நாம் பார்க்க முடியும்.

என்னுடைய நண்பரின் தந்தை இறந்த விதம் பரிதாபகரமானது. அவருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள். சின்ன பண்ணையம். மகன் டெல்லியில் உயர்ந்த உத்தியோகத்தில் பணியாற்றுகிறார். எப்போதாவது ஊருக்கு வருவார். அப்போது அப்பாவிற்குத் தேவையான பணத்தைக் கொடுத்துவிட்டுச் செல்வார். மிகவும்சிரமமான சூழலில் நம்மை நல்லபடி படிக்க வைத்தாரே என்கிற பாசமும், நன்றிக்கடனும் மிகுந்தவர் அவர். பலமுறை தந்தையை டெல்லிக்கு அழைத்தார்.அங்கிருக்கும் குளிரும், அந்நியச் சூழலும் தந்தைக்குப் பிடிக்கவில்லை.

இரண்டு மகள்களில் ஒருத்தி அவருடன் இருந்தாள். கணவன் உயிருடன் இல்லை. இரண்டாவது மகளை வெளியூரில் கட்டிக் கொடுத்திருந்தார். மூத்த மகள் மீதுஅவ்வளவு பாசம். அவள் பிறந்தபோதுதான் அவர் இரண்டு ஏக்கர் நிலம் வாங்கினார். அந்தப் பெண்ணும் சின்ன வயதிலிருந்து அவருடைய கால்களைக்கட்டிக்கொண்டே வளர்ந்தாள். அவளை வெளியூரில் கட்டிக்கொடுத்தாலும் அப்பாவை விட்டுப் பிரிந்திருக்க முடியாமல் அடிக்கடி ஏதாவது சாக்குச் சொல்லிவீட்டுக்கு வந்து விடுவாள். அப்போதுதான் மகிழ்ச்சியாக இருப்பாள். அவள் மனநிலையோ என்னவோ, நிரந்தரமாக அங்கேயே இருக்கும்படி நேர்ந்துவிட்டது.

நண்பரின் தந்தைக்கும் அந்த மகள்தான் உலகம். அவள் சமைத்தால் இன்னும் கொஞ்சம் சாதம் கூடுதலாகச் சாப்பிடுவார். வெளியூரிலிருந்த இரண்டாவது மகள்ஊருக்கு வந்தபோது அவளிடம் அக்காவைப் பற்றி ஏதோ கிண்டலாக அவர் கூறியிருக்கிறார். அது முதல் மகளுக்கு வருத்தமாகப் போய்விட்டது. தன்னைத் தவிரவேறு யாரும் அப்பாவிடம் நெருக்கமாக இருக்கக்கூடாது என்பதில் குறியாக இருக்கும் அவள் முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டாள். உறவினர்கள் போனதும்அப்பாவிடம் எதுவும் பேசவில்லை. அவருக்கு அந்தச் செயல் மிகுந்த சோகத்தைத் தந்தது. அவரும் வலியச் சென்று பலமுறை சமாதானம் செய்ய முயன்றார்.அவள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. தூக்கில் தொங்கி வாழ்வை முடித்துக்கொண்டார்.

எவ்வளவு இறங்கி வந்தும் மகள் அவரிடம் சரியாகப் பேசாதது அவருக்கு மிகப்பெரிய அவமானமாக இருந்தது. அவரைப் போலவே பல குடும்பங்களில் சின்னநிகழ்வுகளை பெரிய அவமானமாக எடுத்துக்கொண்டு தூக்கு மாட்டிக்கொண்டோ, பூச்சிமருந்து குடித்தோ உயிரைப் போக்கிக் கொள்பவர்களைப் பார்க்கலாம்.

சாதனைகளில் குறைவதால் அதை கவுரவக் குறைச்சல் என்று நகர்ப்புறங்களிலும், சொந்தத்தில் சண்டை என்று கிராமப்புறங்களிலும் தற்கொலை ஆயுதத்தைகைகளில் எடுப்பவர்கள் அதிகம்.

இவர்கள் அற்புதமான வாழ்க்கையை அரை குறையாக முடித்துக் கொள்வதற்கு எழுதி வைக்கும் காரணங்கள் அற்பமாக இருக்கின்றன. அவமானம் என்று எதுவும் இல்லை. நாமே அதைக் கற்பனை செய்து கொள்கிறோம் என்பதே உண்மை. நெருங்கிய உறவுக்காரர் ஏதேனும் சொன்னால், "நம் மாமாதானே சொன்னார்? அவருக்குச் சொல்வதற்கு உரிமை இல்லையா?' என்று நினைத்தால் ஏற்படுகிற வருத்தம் மறைந்துவிடும். யார் மீது நமக்கு கோபம் ஏற்படுகிறதோ, அவர்கள் செய்த நன்மைகளை சில நிமிடங்கள் நினைவுபடுத்திப் பார்த்தால் போதும், நிலைமை சகஜமாகி விடும்.

நெருங்கிய சொந்தம் நம்மை அவமானப்படுத்த முடியாது என்பது ஒருபுறமிருக்க, நமக்குச் சம்பந்தமில்லாதவர்கள் நம்மைக் குறை சொன்னாலோ,கோபித்துக்கொண்டாலோ, மரியாதைக் குறைவாகப் பேசினாலோ அதுகுறித்துப் பொருட்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. தெரிந்தவர்கள் முன்புதான் கவுரவம் அவசியமாகிறது. முன்பின் தெரியாதவர்கள் பேசுவதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. அதைப்போலவே நமக்கு நெருக்கமில்லாதவர்களும், நம்முடைய நலனில் அக்கறை இல்லாதவர்களும் நம்மைத் திட்டினால் புரியாத மொழியில் பேசுகிறார்கள் என்று எண்ணிக் கொள்ள வேண்டும். மகாத்மா காந்தி சொன்னதைப்போல நாமாக அனுமதிக்கும்வரை யாரும் நம்மை அவமானப்படுத்த முடியாது.

நாம் சரியாக இயங்கினால் மற்றவர்கள் நம்மைப் பற்றிச் சேறு வாரித் தெளித்தால் அதுபற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. தவறாகச் செயல்பட்டிருந்தால் அதற்காக நொந்து நிம்மதி இழப்பது வழியல்ல. மாறாக நம்மை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். சில நேரங்களில் மனத்தைக் கொஞ்சம் இறுக்கமாக வைத்துக் கொண்டால் மட்டுமே வேண்டாதவர்களின் விமரிசனங்களைத் துடைத்தெறிய முடியும். வீட்டை விட்டு வெளியில் காலெடுத்து வைத்தால் நாம் பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதை உணர வேண்டும். கடலில் சென்று மீன் பிடிப்பவர்கள் எல்லா நாளும் கடல் ஒரே மாதிரி இருப்பதில்லை என்பதை அறிவார்கள். சில நாட்கள் கட்டாந்தரையைப்போல படகு நீந்திச் செல்ல உள்ளங்கைகளை விரிக்கும். சில நாட்கள் பொங்குகிற பாலைப்போல கலங்களைத் தூக்கித் தூக்கி அடிக்கும். வாழ்க்கையும் அப்படித்தான். எல்லாரும் நம்மைப் பார்த்து புன்னகை புரிவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. நாம் சிரித்தால் பதிலுக்கு முறைப்பவர்களும் உண்டு. அதற்காக நாம் சிரிப்பதைக் கைவிட்டு விடக் கூடாது. அவர்களைப் பார்த்து தினமும் சிரிப்பதைத் தொடர வேண்டும். என்றேனும் ஒரு நாள் அவர்களும் பதிலுக்குப் புன்னகைக்கத் தொடங்குவார்கள். இதுவே வெற்றியின் சூட்சுமம்.

நமக்கு நேர்கிற சின்னச் சிராய்ப்புகளையே பெரிதாக எண்ணி நாம் கவலைக் கடலில் விழுகிறோமே, எத்தனையோ மகத்தான மனிதர்கள் வெட்டுக்காயங்களைச்சந்தித்தபோதும் பெட்டிக்குள் அடங்காமல் வீரமாகப் பணியாற்றினார்களே, அவர்களைப் பற்றி எண்ணினால் நாம் சந்திப்பது அவமானமேயில்லை என்பது புரியவரும். எந்த வரலாற்று நாயகரை எடுத்துக் கொண்டாலும் அவர்கள் சாதனை அவமானத்தின் வாயிலாகத் தொடங்கியது என்பதை அறிய முடியும்.

மகாத்மா காந்தி முதல் வகுப்புப் பெட்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டபோது அவர் கணக்கைத் தொடங்கினார். மண்டேலா கால்சட்டையோடு காவல்நிலையத்தில்நிறுத்தி வைக்கப்பட்டபோது, வைராக்கியத்தை வளர்த்துக்கொண்டார். அண்ணல் அம்பேத்கரை மாட்டுவண்டியிலிருந்து உருட்டிவிட்டபோது, போராட்டக் குணத்தைவளர்த்துக் கொண்டார். இப்படி எண்ணற்றோர் உலகச் சரித்திரத்தில் இடம்பெற்றதற்கு அவர்கள் சந்தித்த அவமானங்களே உந்துசக்தியாக இருந்தது.

வாழ்க்கையில் இளமைப்பருவத்தில் படுகிற அவமானங்கள் முதுமையில் அவமானப்படாமல் வாழ்வதற்கான அடியுரமாக இருக்கின்றன. எப்போது
அவமானப்படுகிறோம் என்பதே முக்கியம். ஒவ்வொரு முறை நாம் அவமானப்படும்போதும் சுருங்கிவிடுவதில் பயனில்லை. இன்னும் வேகமாக எழுவதற்குத்தெரிய வேண்டும். தட்டத் தட்டத் தாவுகிற பந்தாக வெட்ட வெட்ட வளர்கிற வாழையாக நாம் இரண்டு மடங்கு ஆற்றலுடன் எழுந்து நிற்க வேண்டும்.

யாராவது அவமானப்படுத்தினால் அதைத் துடைத்தெறிய வேண்டுமா, எடுத்து ஆராய வேண்டுமா என்று முடிவு செய்ய வேண்டும். நம்மைச் சார்ந்தவர்கள்நமக்குள் ஒளிந்திருக்கும் ஆற்றலைத் தூண்டுவதற்காகச் சொல்கிற சொற்களை அவமானமாகக் கருத வேண்டியதில்லை. ஆனால் நம்மைப் பற்றிய குற்றச்சாட்டுஉண்மையாக இருக்கும்பட்சத்தில், அதைத் தவிர்க்கவும், அதிலிருந்து மீளவும் நாம் கடுமையாகப் பாடுபட வேண்டும். நாம் பேசுவது நன்றாக இல்லை என்றுசொன்னால் இரவு, பகலாகப் பயிற்சி செய்து அவ்வாறு சொன்னவர்கள் முன்பு அற்புதமாக உரை நிகழ்த்தி நம்முடைய அவமானத்தைத் துடைத்தெறியவேண்டுமே தவிர, அதற்காக முழக்கயிறைத் தேட முயற்சி செய்யக் கூடாது.

நம்மை உற்சாகக் குறைவாக ஆக்க வேண்டுமென்றே அவமானப்படுத்துகிறவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நோக்கமே நம்மைச் சோர்வடையச் செய்வதும்,நம்முடைய நம்பிக்கையைச் சீர்குலைப்பதும். நாம் உடனே மனம் உடைந்தால் அவர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

அப்படிப்பட்ட நிகழ்வுகளை மூளையில் வைத்துக் கொண்டு முயற்சியைத் தீவிரமாக்க வேண்டுமே தவிர, இதயத்திற்கு எடுத்துச் சென்று பதைபதைக்கக் கூடாது.

எல்லாத் துறைகளிலும் தொடக்கத்தில் தூக்கியெறியப்பட்டவர்களும், நிராகரிக்கப்பட்டவர்களுமே நிலையான சாதனைகளை நிகழ்த்தினார்கள். அவர்களோடுநம்மை ஒப்பிட வேண்டியதில்லை, ஆனால் உதாரணமாகக் கொள்ள வேண்டும்.

பெர்னாட்ஷாவின் படைப்புகள் பலமுறை நிராகரிக்கப்பட்டவை. திரையில் ஜொலிக்கும் நடிகர்கள் பல அரங்கங்களின் கதவைத் தட்டி
அவமானப்படுத்தப்பட்டவர்கள். எடுத்த உடன் உலகம் யாரையும் தூக்கி வாரி உச்சி முகர்ந்து விடுவதில்லை. எனவே நமக்கு நிகழ்வது ஒன்றும் புதிதல்லஎன்பதை உணர்ந்து அவமானத்திற்குப் பரிகாரம் உயிரைத் தருவதில் இல்லை, உயர்ந்து காட்டுவதில் என்பதை உணர வேண்டும்.
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com