அச்சம் என்பது...

பயம் ஒருவிதமான பதற்றத்தை ஏற்படுத்துகிறது. விலங்குகளில் வலிமையைத் தீர்மானிப்பது தைரியம் மட்டுமே. உருவம் இரண்டாவது பட்சம். எப்போது பயம் விலகுகிறதோ, அப்போது எதையும் நம்மால் எதிர்கொள்ள முடியும்.
அச்சம் என்பது...

உச்சியிலிருந்து தொடங்கு-35

அச்சம் எப்போதும் எதிர்காலத்தோடு தொடர்புடையது. என்ன ஆகுமோ? எப்படி வாழ்வோமோ? உலகம் என்ன சொல்லுமோ? மாட்டிக் கொள்வோமோ? என்கிற அனைத்துவிதமான சிந்தனைகளும் எதிர்காலத்தோடு தொடர்புடையவை. உலகம் இன்னும் பல லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு அழிந்துவிடும் என்று வருத்தப்படுபவர்களை நான் பார்த்திருக்கிறேன்.

பயம் ஒருவிதமான பதற்றத்தை ஏற்படுத்துகிறது. விலங்குகளில் வலிமையைத் தீர்மானிப்பது தைரியம் மட்டுமே. உருவம் இரண்டாவது பட்சம். எப்போது பயம் விலகுகிறதோ, அப்போது எதையும் நம்மால் எதிர்கொள்ள முடியும். நாம் நினைப்பதைப்போல நாம் எதிர்பார்க்காதது நடந்துவிட்டால், வாழ்க்கை பறிபோனதாகப் பொருளில்லை. நாம் நினைத்த படிப்பு கிடைக்காவிட்டாலோ, நேசித்த பெண் விரும்பாவிட்டாலோ, எண்ணியபடி வேலை வாய்க்காவிட்டாலோ எதிர்காலம் இருண்டு போனதாக நினைக்க வேண்டியதில்லை. ஒருவேளை அதை விடச் சிறப்பானது நமக்குக் கிடைக்கக் கூடும். இருத்தல் நமக்குத் தேவையானதை வழங்குவதற்காகக் காத்திருக்கிறது என்று எண்ண வேண்டும். அப்போது தெளிவு பிறக்கும். 

பெரும்பாலான தற்கொலைகள் அச்சத்தின் காரணமாக நிகழ்கின்றன. நாம் பயப்படுகிற சம்பவம் உண்மையில் நடக்கும்போது நாம் பயந்ததுபோல இல்லாமல், சாதாரணமாக இருப்பதை உணர்வோம். கோபித்துக் கொள்ளப் போகிறார்களோ என சிலரிடம் தயங்கித் தயங்கி உண்மையைச் சொன்னால், அவர்கள் அதை சகஜமாக எடுத்துக் கொள்வதைப் பார்க்கலாம். எப்போதும் பிம்பங்கள் நிஜங்களைவிட நீளமாக இருக்கின்றன. 

பெற்றோர்கள் குழந்தைகளைப் பயமுறுத்தி வளர்க்கிறார்கள். இன்னும் கொஞ்சம் கூடுதலாகச் சாப்பிட வேண்டுமென்பதற்காக, இல்லாத பேய்களையும் பூச்சாண்டிகளையும் பிசாசுகளையும் அவர்களிடம் சொல்லி, ""நீ சாப்பிடாவிட்டால் பூச்சாண்டி பிடித்துக் கொள்ளும்'' என்று பயமுறுத்துகிறார்கள். இங்கு உணவோடு பயமும் ஊட்டப்படுகிறது. 

எனக்குத் தெரிந்த குழந்தையை இப்படித்தான் பேய், பிசாசு என்று பயமுறுத்தி வளர்த்தார்கள். மாலை நேரத்தில் மாடிக்குப் போன அந்தக் குழந்தை அப்பாவின் நிழலைப் பார்த்து பயந்து காய்ச்சலில் படுத்துவிட்டது. அதற்குப் பிறகு எங்கு சென்றாலும் பயப்பட ஆரம்பித்தது. அந்தப் பயம் அக்குழந்தையின் ஆளுமையையே சிதையச்  செய்துவிட்டது. 

பெற்றோர்கள் குழந்தைகள் உண்மையாக இருக்க வேண்டும் என்பதைவிட பணிவாக இருக்க வேண்டும் என்பதையே அதிகம் விரும்புகிறார்கள். நம் நாட்டில் உண்மையாக இல்லாதவர்கள்தான் அதிகப் பணிவோடு நடந்துகொள்கிறார்கள். இங்கு பணிவு ஒரு பாசாங்கு. இன்னும் சொல்லப்போனால் அது உத்தி, தந்திரம். சில குழந்தைகள் எல்லா விஷமங்களையும் செய்துவிட்டு பணிவாக இருப்பதைப்போலக் காட்டிக் கொள்வார்கள். அடங்கி நடக்க வேண்டும் என்பதும், முறையாக நடக்க வேண்டும் என்பதும் வெவ்வேறு வகையான எதிர்பார்ப்புகள் என்பதைப் பலர் உணர்வதில்லை. 

அதிகம் கட்டுப்படுத்தி வளர்க்கப்படுகிற குழந்தைகள் தேடுவதை நிறுத்திவிடுவார்கள். யாரோ கைகளில் கொடுத்ததை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் உள்ளத்தில் எப்போதும் பயம் ஊஞ்சலாடும். புதியவற்றைத் தேடுவதற்கும், உலகம் இதுவரை நம்பிக்கொண்டிருப்பதை உதறி எறிவதற்கும் துணிச்சல் வேண்டும். அதை பெற்றோர்களே நெஞ்சத்தில் விதைக்காவிட்டால் அவர்கள் சராசரியாக முடிந்துவிடுவார்கள், சரித்திரம் படைக்க மாட்டார்கள். 

அச்சமிருப்பவர்கள், யார் எது சொன்னாலும் சரி என்று ஏற்றுக் கொள்வார்கள். உலகம் தட்டை என்றாலும் தட்டாமல் ஒத்துக்கொள்வார்கள். அவர்களுக்கு விவாதம் செய்யத் திராணி இருக்காது. அவர்களால் மனப்பாடம் செய்து ஒப்பிக்க முடியுமே தவிர, சுயமாகத் தேடி மற்றவர்கள் மனப்பாடம் செய்ய வேண்டியதை அறிந்திட முடியாது. எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்து விடுவார்கள். அவர்கள் விஞ்ஞானத்திலோ இலக்கியத்திலோ எதையும் சாதிக்க மாட்டார்கள். 

அச்சமில்லாமல் இருப்பவர்கள்தான் ஆசிரியர் தவறாகச் சொன்னாலும் திருத்த முற்படுவார்கள். மற்றவர்கள் சொன்னதைத் தேவைப்படும் இடங்களில் பரிசோதித்துப் பார்ப்பார்கள். "மெய்ப்பொருள் காண்பதே அறிவு' என்பதை அறிந்து செயல்படுவார்கள்.

பெற்றோர்கள் நடத்தையைக் கண்காணிப்பதும், பண்பாட்டுடன் பழகுவதை நெறிப்படுத்துவதும் அவசியம். அதே நேரத்தில் குழந்தைகளை சுயசிந்தனை உள்ளவர்களாகவும், கேள்வி கேட்பவர்களாகவும், எதையும் சந்தேகத்துக்கு உட்படுத்துபவர்களாகவும் வளர்க்க வேண்டும். எந்தப் பெற்றோர் தன் குழந்தையிடம் எனக்குத் தெரியாது என்று ஒத்துக்கொள்கிறார்களோ அவர்களே சிறந்த பெற்றோர். அதற்கு முதிர்ச்சியும், பெருந்தன்மையும் தேவைப்படுகிறது. "நான் உன் அப்பா.

நான் சொல்வதை நீ கேட்டுத்தான் ஆக வேண்டும்'' என்று அதிகாரத் தோரணையில் குழந்தைகளை வளர்த்தால் அவர்கள் இரண்டு விதமாக ஆவதற்கு வழியிருக்கிறது. ஒன்று, அவர்கள் பெற்றோர்களைப்போலவே அடாவடியாக ஆவார்கள், அல்லது, பயந்தாங்கொள்ளியாகப் பலராலும் பந்தாடப்படுவார்கள். 

அச்சத்துடன் இருப்பவர்கள் பிரச்னைகளை எதிர்கொள்ளத் தயங்குவார்கள். முரட்டுச் சூழலையும் சந்தித்து சமாளிக்கும் திறன் அமையப் பெற்றால் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்க முடியும். அச்சத்தின் பிடியில் வளர்க்கப்படுகிற குழந்தைகள் பெற்றோர்களைப் பாசத்துடன் பார்க்காமல் கொடுங்கோலர்களைப்போல எண்ணத் தொடங்குகிறார்கள். எங்கு தவறு நிகழ்ந்தாலும், எப்படிப் பெற்றோர்களைச் சமாளிப்பது? என்று நடுங்கத் தொடங்குகிறார்கள். தேர்வுக்குச் செல்லும்போதே அவர்கள் உள்ளத்தில் நம்பிக்கையைவிட அச்சமே தூக்கலாக இருக்கிறது. அவர்கள் வாழ்நாள் முழுவதும் முழுமையான ஆற்றலை பயத்தின் காரணமாக வெளிப்படுத்த முடியாமல் வெளிறிப் போகிறார்கள். 

தோல்வியடைந்தால் என்னவாகிவிடப் போகிறது என்று நினைத்தால் போதும், நம்முடைய செயல்பாடு ஒளிர ஆரம்பித்து விடும். என்னுடைய தெருவில் குடியிருந்த நண்பர் நன்றாகப் படிக்கக்கூடியவர். அவர் தேர்வுக்குச் செல்கிறபோதெல்லாம், "நான் எத்தனையோ தேர்வுகளை எழுதியிருக்கிறேன். இந்தத் தேர்வா என் வாழ்க்கையை மாற்றப் போகிறது.? இதையெல்லாம் நான் எளிதில் சமாளித்து விடுவேன். இதில் முதல் மதிப்பெண் பெறாவிட்டால் குடியா முழுகிவிடப் போகிறது?'' என்று எங்களிடம் சொல்வார். இத்தனைக்கும் மிகவும் நன்றாகத் தயாரித்திருப்பார். முதல் மதிப்பெண் பெறுவதையே இலக்காக வைத்திருப்பார். ஆனாலும் இப்படி எங்களிடம் உரையாற்றுவது அவருக்குத் தெம்பைக் கொடுக்கும். 

அச்சத்தால் குனியும்போது உடலில் சோர்வை உண்டாக்கும் ரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகின்றன. அவை நம்முடைய நம்பிக்கை அளவை நீர்த்துப்போக வைத்துவிடுகின்றன. அப்போது நம்முடைய நடத்தை சிதைகிறது. நம் வெளிப்பாடு குறைகிறது. அச்சத்தோடு நேர்காணலுக்குச் சென்றால் தெரிந்த கேள்விகளுக்கும்கூட சரியாகப் பதில் சொல்ல முடியாது. வார்த்தைகள் தடுமாறும், சொற்கள் குழறும், பற்கள் தந்தியடிக்கும், கைகள் நடுங்கும், முகம் சிவக்கும், முடிவு விபரீதமாகும். 

பெற்றோர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை ஒளிமயமாக்குவதாக நினைத்துக்கொண்டு அடிக்கடி அதைப் பற்றியே பேசி பயமுறுத்தக் கூடாது. அப்படிச் செய்வதால் அவர்கள் இருக்கிற ஆற்றலையும் இழந்து விடுவார்கள். 

குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை ஏற்படுத்துவதற்கு பயத்தை சாதனமாக ஆக்கக் கூடாது. நான் எங்கள் கல்லூரியில் பார்த்திருக்கிறேன். எந்த மாணவர்கள் வீட்டில் அதீத பயத்துடன் வளர்க்கப்படுகிறார்களோ, அவர்களே விடுதியில் மூத்த மாணவர்களின் அச்சுறுத்தலுக்குப் பயந்து தவறான பாலியல் செயல்களில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டு தற்கொலை செய்துகொள்ள முற்பட்ட நிகழ்வுகளை நான் அறிவேன். இன்னும் சிலரோ பணிக்கு வந்த பிறகு மற்றவருடைய பயமுறுத்தலால் ஊழல் நடவடிக்கைகளுக்கு ஒத்துப் போனதையும் கண்டிருக்கிறேன். சிலர் குழந்தைகளுக்குக்கூட பயப்படுவதையும் பார்க்கிறேன். 

பயமின்மை வேறு, துணிச்சலாக இருப்பது வேறு. துணிச்சலாக இருக்கும்போது பயம் நெறிப்படுத்தப்படுகிறது. பயமின்மை என்பது தீயவற்றிற்கும் கவலைப்படாமல் இருப்பது. அது தவறு. அதனால் வள்ளுவர், "அஞ்சுவது அஞ்சாமை பேதமை' என்று குறிப்பிடுகிறார். 

அதிகப்படியாக பயம்கொண்டு வளர்பவர்கள் யார் எதைச் சொன்னாலும் நடுங்க ஆரம்பித்து விடுகிறார்கள். அடிக்கடி அழுகிறார்கள். சோர்ந்து விடுகிறார்கள். தேர்வில் தோல்வியடைந்தால் வாழ்க்கை வீணாகி விட்டதே என்று முடித்துக்கொள்ள முற்படுகிறார்கள். 

நாம் அடிக்கடி "பயபக்தி' என்கிற பதத்தைப் பயன்படுத்துகிறோம். பக்தி அன்பினால் நிகழ வேண்டுமே தவிர, பயத்தினால் அல்ல. காதலாகிக் கசிந்துருக வேண்டும். 

பெற்றோர்கள் துணிச்சலாகக் குழந்தைகளை வளர்ப்பது மட்டுமே அவர்களுக்கு அளிக்கிற மாபெரும் சொத்து. அவர்கள் அதை அடைந்தால் தோல்வி முட்டையை உடைத்துக்கொண்டு வெற்றிக் குஞ்சாய் வெளிவருவார்கள்.   
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com