வாழ்க்கை, புள்ளிவிவரங்கள் அல்ல!

திருமணம் ஆனவர். அவருடைய மனைவி அவரைவிட பத்து கிலோ எடை கூடுதலாக இருப்பதாகவும், அது அவருக்கு மன உளைச்சலாக இருக்கிறது என்றும் பேச்சை ஆரம்பித்தார்.
வாழ்க்கை, புள்ளிவிவரங்கள் அல்ல!

உச்சியிலிருந்து தொடங்கு-36

என்னைச் சந்திக்க இளைஞர் ஒருவர் வந்திருந்தார். அவர் தன்னுடைய பிரச்னைகளையெல்லாம் சொல்லி ஆலோசனை பெற வேண்டும் என்று அவகாசம் கேட்டார். அவருடைய ஆர்வம் உண்மையாக இருந்ததால், தனிமையில் அவரிடம் பேசக் கருதினேன். யாரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று வீட்டில் இருப்பவர்களுக்குச் சொல்லிவிட்டு தேநீரைக் கொடுத்து ஆசுவாசப்படுத்தினேன். அவர் சகஜநிலைக்கு வந்ததும் பேச ஆரம்பித்தார்.

திருமணம் ஆனவர். அவருடைய மனைவி அவரைவிட பத்து கிலோ எடை கூடுதலாக இருப்பதாகவும், அது அவருக்கு மன உளைச்சலாக இருக்கிறது என்றும் பேச்சை ஆரம்பித்தார். திருமணத்தின்போது மனைவி குறைந்த எடையோடு இருந்ததாகவும், பிறகு எந்த ஆண்டு எவ்வளவு எடை கூடியது எனத் தகவல்களைத் தந்தார். அதைக் கேட்பதற்குள்ளேயே எனக்கு அயர்ச்சி ஏற்பட்டுவிட்டது. 

அடுத்ததாக, அவர் எந்த ஆண்டு  எந்தப் பணிக்குத் தேர்வெழுதினார் என்ற விவரங்களையும், அவற்றில் எவ்வளவு மதிப்பெண்கள் தவறவிட்டார் என்றும் பட்டியலிட்டார். எண்களில்லாமல் அவரால் பேச முடியவில்லை. இப்போது அரசுப் பணியில் இருக்கிறார். ஆனால் எதிர்பார்த்த பணி கிடைக்கவில்லை என்கிற ஏக்கம் எக்கச்சக்கமாக இருந்தது. அவருடைய மனைவியையும் பணி தேடும்படி வற்புறுத்தியதாகவும், அவருக்கு பணி கிடைக்காததால் குடும்பத்தில் குழப்பம் இருப்பதாகவும் குறிப்பிட்டார். ஒரு மணி நேரத்திற்கு மேல் அவருடைய வாழ்க்கை குறித்த தகவல்களையும், புள்ளிவிவரங்களையும் அவிழ்த்துவிட்டார். எனக்கு அலுத்துப்போய்விட்டது. என்னிடம் ஆலோசனை கேட்க எத்தனையோ பேர் வந்திருக்கிறார்கள். ஆனால் இப்படிப்பட்டவரை இதுவரை நான் சந்தித்ததில்லை. இன்னும் சிறிது நேரம் பேசினால் எனக்கே ஆலோசனை தேவைப்படும் என்கிற நிலைமை.

அவரிடம், "உங்களுக்குக் குழந்தைகள் இருக்கின்றனவா?'' என்று கேட்டேன். திருமணம் ஆகி பத்து ஆண்டுகளும் தேர்வுகள் எழுதுவதிலேயே மும்முரம் காட்டியதால் நான் எதிர்பார்த்தவாறே இல்லை என்கிற பதில் வந்தது. மனைவிக்குப் பணி கிடைத்த பிறகு குழந்தைகள் பெற திட்டமிட்டுள்ளோம் என்று அவர் சொன்னார். அவருடைய புரிதல் எல்லா வகைகளிலும் தவறாக இருப்பதை அறிய முடிந்தது. 

"உங்கள் மனைவியை ஏதேனும் வெளியூர் அழைத்துச் சென்றிருக்கிறீர்களா?'' என்று கேட்டேன். அதற்கும் எதிர்மறையாகப் பதில் வந்தது. 

"எத்தனையோ பேருடைய மனைவி அவர்களைவிட பருமனாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அது அவர்களுடைய மகிழ்ச்சியைப் பாதித்ததில்லை. கணவனைவிட உயரமான பெண்களையும், வயது அதிகமான பெண்களையும் சந்திக்க முடிகிறது. அவர்கள் மகிழ்ச்சியில் சமூகம் திணித்த கோட்பாடுகள் குறுக்கிடுவதில்லை. 

முதலில் இந்த மனத் தயாரிப்புகளை வெளியேற்றுங்கள். உங்கள் மனைவியை ஏதேனும் அழகிய இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். பழையவற்றை எல்லாம் மறந்துவிட்டு பூங்கா, திரைப்படம் என்று சென்று மனத்தை லேசாகிக் கொள்ளுங்கள். அங்கும் போய் பணியைப் பற்றியும், தேர்வைப் பற்றியும் பேசி வாழ்க்கையை வீணடித்து விடாதீர்கள். பணத்தாலும், பதவியாலும் வருவதல்ல மகிழ்ச்சி. மூட்டை தூக்குகிற தொழிலாளிகள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்க்கிறேன். நீங்கள் பல தவறான தகவல்களை உங்கள் மனத்தில் திணித்துக்கொண்டு வாழ்கிறீர்கள். அவற்றை வெளியேற்றாத வரை உங்களுக்குள் சிரிப்பும், கும்மாளமும், மகிழ்ச்சியும் நுழைய வாய்ப்பில்லை. நீங்கள் படித்தது போதும். இருக்கிற துறையில் நன்றாகப் பணியாற்றுங்கள். ஒரு மாதத்திற்கு எந்தப் படிப்பும் படிக்காதீர்கள். வீட்டிற்கு மாலை நேரத்தில் சென்று மனைவியை எங்காவது அழைத்துச் செல்லுங்கள். இருவரும் காலையில் நடை பயிலுங்கள். உள்ளமும், உடலும் நன்றாக மாறும். இனிமேல் இதைப் பற்றி யாரிடமும் விவாதிக்காதீர்கள்'' என்று சொல்லி அனுப்பினேன்.

வாழ்க்கையை புள்ளிவிவரமாகப் பார்க்கிறவர்களால் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்?   கடந்த காலத்தை ஆண்டுகளாகவும், தோல்விகளாகவும், மனைவியை கிலோ கிராம்களாகவும், நிகழ்காலத்தை மதிப்பெண்காளகவும், எதிர்காலத்தை ஊதிய உயர்வாகவும் பார்க்கிறவர்களால் தென்றலையும் ரசிக்க முடியாது, தேனையும் சுவைக்க முடியாது. 

நான் விழாவில் சந்தித்த மனிதர் அழைப்பு அட்டை கொடுத்து அறிமுகப்படுத்திக்கொண்டார். அவர் பெயருக்குப் பின்னால் அட்டை முழுவதும் அடையடையாகப் பட்டங்கள். பிறகு அவர், "நான் படித்துக்கொண்டே இருப்பேன். நிறையப் பட்டங்கள் வாங்கியிருக்கிறேன்'' என்று பெருமையாகச் சொல்லி பெற்ற பட்டங்களை மூச்சுவிடாமல் சொல்லி முடித்தார். இப்படிப் பார்க்கிறவர்களிடமெல்லாம் சொல்லி மனப்பாடம் செய்வார்போல. அதோடு நிற்கவில்லை. "இப்போதும் நிறைகலை தத்துவம் படித்துக் கொண்டிருக்கிறேன்'' என்று நெஞ்சை நிமிர்த்தினார். 

நிகழ்ச்சி முடிந்து திரும்பி வருகிறபோது என்னுடன் வந்தவர், "அவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' என்று கேட்டார். "பரிதாபத்திற்குரிய ஆசாமி'' என்று சொன்னேன். "அவர் மொத்த வாழ்நாளை பட்டம் பெறுவதிலேயே கழித்துவிட்டார். அவர் படித்தவற்றில் ஏதேனும் கேள்வியைக் கேட்டால் நிச்சயம் பதில் சொல்லத் தெரியாது. அவர் படித்த அடுத்த படிப்பு ஏற்கெனவே படித்ததை மறக்கச் செய்திருக்கும் என்பது எனக்குத் தெரியும். அதுமட்டுமல்ல. படித்த படிப்பை பட்டத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் அதுகுறித்து மேலும் பல புத்தகங்களை வாசிப்பதும், வாழ்க்கையோடு தொடர்புபடுத்திப் பார்ப்பதும், சிந்திப்பதன் மூலமுமே அந்தத் துறையில் ஆழமாக அறிவு பெற முடியும். அஞ்சல்வழியில் கொடுக்கிற குறிப்புகளைப் படித்து நுனிப்புல் மேய்ந்தவர்கள் தேர்வு எழுதிய வேகத்தில் படித்தவற்றை மறந்துவிடுவார்கள். பட்டப்படிப்பு என்பது வழிகாட்டுதல் மட்டுமே. அதைக்கொண்டு மேலே தேடினால்தான் ஓரளவு நிபுணத்துவத்தையும், பரந்துபட்ட பார்வையையும் பெற முடியும். 

பாவம் அவர். அவரே கைப்பட பெயருக்குப் பின்னால் பட்டங்களை கையால் எழுதுவதற்கும், இதற்கும் அதிக வேறுபாடு இல்லை'' என்று சொன்னேன். 

பூக்களைப் பார்க்கும்போது அவற்றிலிருக்கும் இதழ்களின் எண்ணிக்கையை கருத்தில் வைத்துப் பார்த்தால் அதன் வாசனையை உணர முடியாது. அதை ரசிக்க முடியாது. மரங்களை நோக்குகையில் அவற்றின் அறிவியல் பெயர் என்னவென்று ஆராய்ந்தால் பசுமையை ரசிக்க முடியாது. பறவைகளைப் பார்க்கும்போது அவற்றின் எடை எவ்வளவு இருக்கும் என்ற ப்ராய்லர் கோழிப் பார்வை இருந்தால், அந்த இறகுகளின் அசைவு குளிர்ந்த காற்றை நம் மீது விசிறிவிட்டுச் செல்லாது. 

குழந்தைகளை மதிப்பெண்களாகவே பார்க்கிறவர்களும், மனிதர்களைப் பதவிகளாகவே பார்க்கிறவர்களும், இணையைச் சம்பளமாகவே நோக்குகிறவர்களும், புடவையை விலையாகவே பார்க்கிறவர்களும், பரிசைப் பணமாகவே எடை போடுகிறவர்களும் புள்ளிவிவரப் புலிகளாக இருக்கலாம். ஆனால் துள்ளி வருகிற மகிழ்ச்சிக்குச் சொந்தக்காரர்கள் அல்லர்.

மேடைகளில் பேசி இறங்கியதும் சிலர் அருகில் வந்து நாம் எத்தனை பாடல்களைச் சொன்னோம், எத்தனை நகைச்சுவைகளைப் பகிர்ந்தோம், எவ்வளவு கைத்தட்டல்கள் விழுந்தன என்றெல்லாம் எண்ணிக்கையைச் சொல்வார்கள். அவர்கள் அந்தப் பேச்சை ரசிக்கவேயில்லை என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம். பேச்சில் கரைந்து போகிறவர்கள் கைத்தட்டுவதற்குக் கூட மறந்து விடுகிறார்கள். அழகான மலையைப் பார்க்கிறவர்கள் ஆச்சரியப்படுவார்களே தவிர, அழகாக இருக்கிறது என்று சொற்களில்கூட சொல்ல மறுப்பார்கள். 

இன்று இளைஞர்கள் தகவல்களிலும், புள்ளிவிவரங்களிலும் காணாமல் போய்விடுகிறார்கள். அவர்களால் விவரங்களைத் தாண்டிய அழகை ஆராதிக்க முடிவதில்லை. வாழ்க்கையை ஆய்வறிக்கையாகப் பார்க்கக் கூடாது. சொற்களை இலக்கணத்தில் உரசி கோர்க்கக்கூடாது. மிகவும் ஜாக்கிரதையாக இருப்பவர்கள் சின்னவற்றில் உஷாராக இருந்து பெரியவற்றில் கோட்டை விடுகிறார்கள். 

வாழ்க்கையை நாட்களாகவும், நிமிடங்களாகவும், வரவு செலவுக் கணக்காகவும், லாபநஷ்டப் புத்தகமாகவும் பார்த்தால் சலிப்பு ஏற்படும். பொறாமை தோன்றும். விரக்தி விளையும். வெறுப்பு பொங்கும். ஒரு கட்டத்தில் எதற்காக வாழ்கிறோம் என்றுகூடத் தோன்றும். இலக்கணத்தைத் தாண்டி கவிதையை ரசிப்போம். பெயர்களைத் தாண்டி மலர்களை நேசிப்போம்.
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com