சந்தேரி கைத்தறிப் பட்டுப்புடவைகள்!

முகலாயர் காலத்தில் சந்தேரி நெசவுத் தொழில்நுட்பம் அதன் உச்ச கட்ட வெற்றியை அடைந்தது. மாள்வா சுல்தான்களும், பந்தேல்கண்ட் ராஜபுத்திர ராஜாக்களும் சந்தேரி நெசவின் மீது அபிரிமிதமான விருப்பத்தைக் கொண்டிருந்தன
சந்தேரி கைத்தறிப் பட்டுப்புடவைகள்!

முன்னர் பார்த்த இந்தியக் கைத்தறிப் புடவைகள் வரிசையில் சந்தேரி என்பதும் ஊரின் பெயர் தான். இந்த ஊரை உருவாக்கியதாக அடையாளம் காட்டப் படுபவர் நமது மகாபாரத வில்லன் சிசுபாலன். விதர்ப்ப தேசத்து ருக்மிணியைத் திருமணம் செய்து கொள்ள ஸ்ரீ கிருஷ்ணருடன் போட்டியிட்டு சுதர்சன சக்கரத்தால் சிரசு அறுபட்டு வீழும் சிசுபாலனை மகாபாரதம் பார்த்தவர்கள் யாரும் அத்தனை சீக்கிரம் மறந்து விட முடியாது. ருக்மிணியின் அண்ணண் ருக்மியின் அத்யந்த நண்பன் இந்த சிசுபாலன். இந்த சிசுபாலன் உண்டாக்கிய நகரமாகத்தான் மக்கள் இப்போதும் சந்தேரியை நினைவு கூர்கிறார்கள்.
 
வேதகால சந்தேரிக்கும் இப்போதிருக்கும் சந்தேரிக்கும் தோற்றத்தில் வித்யாசம் இருக்கலாம். ஆனால் இன்றும் அங்கே கோட்டைகளுக்கும், கொத்தளங்களுக்கும் பஞ்சமேயில்லை. விந்திய மலைக்கூட்டங்களுக்கு இடையே மத்தியப்பிரதேசத்தின் மாள்வா மற்றும் பந்தேல்கண்டுக்கு நடுவே சந்தேரி அமைந்திருக்கும் நிலப்பரப்பில் இயற்கை எழில் கொஞ்சுகிறது. இங்கே கி.பி. 2 மற்றும் 7 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தான் இன்றைய பிரசித்தி பெற்ற சந்தேரி கைத்தறி நெசவு கண்டறியப்பட்டு மத்திய இந்தியாவில் வேரூன்றியது. 11 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் மாள்வா, பந்தேல்கண்ட், குஜராத்தின் தென்பகுதி  உள்ளிட்ட கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பல நகரங்களின் முக்கிய வியாபாரப் கேந்திரமாக சந்தேரியும் வியாபார பண்டமாற்றாக சந்தேரி நெசவுப் பொருட்களும் சிறப்புற்று  இருந்தன.

முகலாயர் காலத்தில் சந்தேரி நெசவுத் தொழில்நுட்பம் அதன் உச்ச கட்ட வெற்றியை அடைந்தது. மாள்வா சுல்தான்களும், பந்தேல்கண்ட் ராஜபுத்திர ராஜாக்களும் சந்தேரி நெசவின் மீது அபிரிமிதமான விருப்பத்தைக் கொண்டிருந்தனர். முகலாயர்களைப் போலவே இவர்களும் சந்தேரி நெசவை பேணி வளர்த்தனர். ஆனால் பிற இந்தியக் கைத்தறி நெசவுக் கலைகளைப் போலவே சந்தேரி நெசவும் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் பின் படிப்படியாக நசியத் தொடங்கியது.
 
இந்திய சுதந்திரத்தின் பின் கடந்து போன அறுபத்து சொச்ச ஆண்டுகளில் மிகப் பெரும் ஜவுளி அதிபர்கள் மற்றும் மாஸ்டர் நெசவாளர்கள் என்று அடையாளம் காணப்படுபவர்கள் மட்டுமே இந்த வகை நெசவுத் தொழிலில் அதிகம் சம்பாதிக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அங்கிருக்கும் நெசவாளர்களின் சுபிட்சம் மட்டும் சொல்லிக்கொள்ளும் படியாக விசேஷமாக இல்லை குடிசைத் தொழிலாக சந்தேரி நெசவு செய்பவர்களது நிலை மிக, மிக வறுமையில் தான் இருந்திருக்கிறது. சமீபத்தில் தான் நமது மத்திய அரசு சார்பில் பாரதப் பிரதமர் மோடி ’இந்தியா ஹேண்ட்லூம் பிராண்ட்’ எனும் அமைப்பைத் தொடங்கி இந்தியா முழுவதும் மீட்பர்கள் இன்றி பரவிக் கிடக்கும் இந்திய பாரம்பரியக் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வில் ஒளியேற்றும் முயற்சியைத் தொடங்கி இருக்கிறார். அரசு அமைப்புகள் சிறப்பு மிக்க சந்தேரி நெசவின் பெருமையை உலகம் முழுக்க எடுத்துச் செல்ல அந்தப் பகுதி சிறு நெசவாளர்களை ஒருங்கிணைத்து ”சந்தேரியான்” எனும் நெசவாளர் கூட்டமைப்பு இணையதளம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இந்த தளத்தில் எக்ஸ்க்ளூஸிவான சந்தேரி கைத்தறி மற்றும் பட்டுப் புடவைகள், சல்வார் மெட்டீரியல்கள், பாந்தமான துப்பாட்டக்கள் முதலியவற்றை நுகர்வோர் பார்வையிட்டு வாங்கும் வசதி உண்டு.

சந்தேரி கைத்தறியில் மூன்று விதமாக புடவைகள் நெசவு செய்கிறார்கள்;

சந்தேரி காட்டன் புடவைகள்:

இந்த விதமான புடவைகள் வீட்டில் இருக்கும் போது உடுத்திக் கொள்ள ஏற்றது.

சந்தேரி காட்டன் பட்டுப்புடவைகள்:
இவை அலுவலகப் பயன்பாட்டுக்கு, நண்பர்களை, விருந்தினர்கள் சந்திப்புக்குச் செல்கையில் உடுத்திக் கொள்ள ஏற்றது.

சந்தேரிப் பட்டுப் புடவைகள்:

மிக்கியமான விசேஷ நாட்கள், திருமண விழாக்கள், திருவிழா நாட்களுக்கு  ஏற்றது இந்த வகைப் புடவைகள்.

சந்தேரிப் புடவைகள் நெசவு செய்யும் முறை:

சந்தேரிப் புடவைகள் வார்ஃப் மற்றும் வெஃப்ட் தனித்தனியாக நெசவு செய்யப்பட்டு உடல் பகுதியில் ஸ்பெஷல் மோட்டிஃப்கள் தனியாக இணைக்கப்படுகின்றன. பெரும்பாலும் மயில், காசு வடிவம், பாய் பின்னல் வடிவம், பூக்கள், கணித வடிவங்கள் போன்றவையே புட்டாக்களாக மாறி புடவையின் பல்லு பகுதியில் இடம் பெறுகின்றன. மோட்டிஃப்கள் பட்டுச் ஜரிகை அல்லது வண்ண நூல் ஜரிகை இழைகளால் ஸ்பெஷலாக நெசவு செய்யப் படுவதால் அவை சந்தேரிப் புடவைகளின் தனி அடையாளங்களாக பேசப்படுகின்றன.

இன்றைக்கு நமக்கு காணக் கிடைக்கும் சந்தேரி நெசவு முறையானது கி.பி 13 நூற்றாண்டில் பின்பற்றப் பட்டு வந்த சந்தேரி நெசவு முறையே. அதற்கும் முந்தைய சந்தேரி நெசவு முறை பற்றி அதிகத் தகவல்கள் இல்லை. மேலும் சந்தேரியில் முஸ்லிம் நெசவாளர்கள் தான் இந்த வகை நெசவை அறிமுகப் படுத்தினர். பின்னாட்களில் ஜான்ஸியில் இருந்து சந்தேரிக்குக் குடி பெயர்ந்த கோஷ்டி இனத்தவர்கள் இந்த நெசவு முறையைக் கற்றுக் கொண்டு நெசவில் ஈடுபட ஆரம்பித்தனர். இவர்களை அடுத்து முகலாய மன்னர்கள் சந்தேரி நெசவை தங்களது செல்லப் பிள்ளையாக தத்தெடுத்து போற்றி வளர்த்தனர். அவர்களது காலத்தில் சந்தேரி முக்கியமான வியாபார கேந்திரமாய் இருந்தது. 

சந்தேரி கைத்தறிப் புடவைகளை எப்படி நெசவு செய்கிறார்கள் என்பதை இந்த விடியோ இணைப்பு மூலமும் காணலாம்.

சந்தேரி நெசவாளர்களின் முன்னேற்றதுக்காக உருவாக்கப்பட்ட சந்தேரியான் அமைப்பின் செயல்பாட்டு முறையை இந்த விடியோ இணைப்பில் காணலாம். 

சந்தேரி கைத்தறியில் பட்டுப் புடவைகளுக்கான விடியோ இணைப்பு;

சந்தேரி கைத்தறிப் புடவைகளுக்கான விடியோ இணைப்பு;

ஒரிஜினல் சந்தேரி கைத்தறி மற்றும் பட்டுப் புடவைகளை வாங்க இந்த இணைய தளங்களை அணுகலாம். 

https://www.chanderiyaan.net/chanderi-saree.html

http://shop.gaatha.com/index.php?route=product/product&product_id=7610

சந்தேரிப் புடவைகள் பராமரிப்பு முறை:

உலர் சலவை செய்வதே நல்லது. அது காஸ்ட்லி என்று நினைப்பவர்கள் பட்டுப் புடவைகளை எப்படி வீட்டிலேயே மைல்ட் ஷாம்பூ உபயோகித்து தூய்மை செய்கிறோமோ அப்படியே இந்த வகைப் புடவைகளையும் பராமரிக்கலாம். 

சந்தேரி நெசவாளர்களை தேடிச் சென்று ஊக்குவிக்கும் அமீர்கான் மற்றும் கரீனா கபூர்:

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் சந்தேரி கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்க அவர்களைத் தேடிச் சென்று உரையாடிய வீடியோ தொகுப்புகளைக் காண கீழ்க்காணும் 5 இணைப்புகளைக் கிளிக்குங்கள்; நம் ஊரிலும் சூப்பர் ஸ்டார்களும், ஸ்டாரிணிகளும் ஜொலித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களும் இப்படி நலிந்த நெசவாளர்களைச் சந்தித்து அவர்களது கஷ்ட நஷ்டங்களைக் கேட்டு உரையாடி,  ஊக்குவிக்கலாமே!

பார்ட் - 1

பார்ட் - 2

பார்ட் - 3

பார்ட் - 4

பார்ட் - 5


இந்திய பாரம்பரியக் கைத்தறிப் புடவைகளில் எல்லா வகைகளுமே ஒன்றுக்கொன்று சளைத்தவை இல்லை. எந்தப் புடவைகளைப் பற்றி இணையத்தில் ஆராயப் புறப்பட்டாலும் அழகழகான புடவைகள் கண்காட்சியாய் விரிந்து கண்களுக்கு விருந்தளிக்கின்றனவே தவிர புடவைகளின் தோற்றம், நெசவு முறை, நெசவாளர் வாழ்க்கை முறை, போன்றவற்றைப் பற்றியெல்லாம் விரிவான தகவல்களை அறிய முடியவில்லை. இந்தத் துறையில் இது மிகப்பெரும் குறை. எதிர் வரும் நாட்களில் இந்தக் குறை நிவர்த்தி செய்யப்பட்டால் இந்தியக் பெண்கள் மட்டுமல்ல உலகம் முழுக்க புடவை உடுத்திக் கொள்ள ஆசைப்படும் பெண்களிடையே நமது கைத்தறிப் புடவைகள் மீதான மோகத்தை இன்னும் அதிகரிக்கலாம்.

இதுவரை பாலராமபுரம், மங்கலகிரி, பலுச்சாரி, செட்டிநாடு இன்றைய சந்தேரி வரை ஐந்து வகையான கைத்தறிப் புடவை பிராண்டுகள் பற்றி இயன்ற வகையில் சற்று விளக்கமாகவே பார்த்திருக்கிறோம். இந்தப் புடவைத் தொடர் கட்டுரையை வாசிக்கும் நபர்கள் இந்த வகைப் புடவைகளைப் பற்றி தங்களுக்குத் தெரிந்த சுவாரஸ்யமான விவரங்கள், செய்திகள் ஏதேனும் இருப்பின் தங்களது கருத்துக்களை தினமணி.காமில் பகிர்ந்து கொள்ளலாம். 

அடுத்த வாரம்  பனாரஸ் கட்  வொர்க் கைத்தறிப் புடவைகளைப் பற்றி விரிவாகக் காணலாம். 

தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com