இதிகாசக் கதைகள் பேசும் பிஷ்ணுபூர் 'பலுச்சாரி' கைத்தறிப் பட்டுப் புடவைகள்!

இன்று பிஷ்ணுபூரில் இந்தப் புடவைகள் நெய்யப்பட்டாலும் கூட இவ்வகை நெசவுக்கு உயிர் தந்த தாய் கிராமமான பலுச்சாரை  மறவாமல் ‘பலுச்சாரி கைத்தறிப் புடவைகள்’ என்றே அழைக்கப்படுகின்றன.
இதிகாசக் கதைகள் பேசும் பிஷ்ணுபூர் 'பலுச்சாரி' கைத்தறிப் பட்டுப் புடவைகள்!

தென்னகத்தில் பொதுவாக காஞ்சிபுரம், ஆரணி, தர்மாவரம், திருபுவனம், பனாரஸ், மங்கலகிரி, வெங்கடகிரி, கோட்டா, கோடம்பாக்கம் போன்ற புடவைகளைப் பற்றியெல்லாம் பெரும்பாலான பெண்களுக்குத் தெரிந்தே இருக்கிறது. ஆனால்  சென்ற வாரமே ‘பலுச்சாரி கைத்தறிப் புடவைகளை’அறிமுகம் செய்தோமே இதைப் பற்றியும் யாருக்காவது தெரிந்திருக்க கூடும் என்ற யோசனையில் நண்பர்கள் சிலரிடத்தில் விசாரித்துப் பார்த்ததில் ஒருவருக்கும் இந்தப் புடவைகளைப் பற்றி பெரிதாக எதுவும் தெரிந்திருக்க வில்லை. எல்லோரும் ஒரு சேர சொன்ன ஒரே பதில் கூகுள் பண்ணி பார்த்தால் தெரிந்து விடும் என்பது மட்டுமே! கூகுளில் புடவையை பார்க்கலாம்; ஆனால் உடுத்த முடியாதே! சரி இனி இணையத்தை தவிர வேறெங்கும் அறிந்து கொள்ள வாய்ப்பில்லை என்று அங்கே போய் இந்தப் புடவைகளின் ஆதி அந்தம் தேடி உட்கார்ந்த இடத்திலிருந்தே  ஒரு மினி டூர் அடித்ததில் அங்கிருந்து திரும்பி வரவே விரும்பாத அளவுக்கு பலுச்சாரி புடவைகளின் முந்தானை அழகு மனதை கொள்ளை கொண்டு  தன்னுள் முடிந்து வைத்துக் கொண்டது.

இந்தத் தொடர் மூலமாக நமது காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளுக்கு உலகமெல்லாம் ரசிகர்கள் இருப்பதைப் போல தொடரில் விவரிக்கப்படும் அனைத்து இந்தியக் கைத்தறிப் புடவைகளுக்குமே உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது விளங்கியது, அதோடு ஒவ்வொரு மாநிலத்திலுமே அதன் தனிப்பெருமையாக நினைவு கூறத் தக்க வகையிலான சிறப்பான நெசவு முறை ஒன்றை  நெசவாளர்கள் பல்லாண்டுகளாகப் பின்பற்றி வந்திருக்கிறார்கள் என்பதும், எத்தனையோ முறை இந்திய பாரம்பரிய நெசவுத் தொழில் நசிந்து காணமல் போகும் சிக்கலான நெருக்கடி நிலைகளில் கூட அந்த சந்ததியின் அடுத்தடுத்த தலைமுறையில் யாராவது ஒருவர் இந்த நெசவு முறைகளுக்கு மீண்டும் புத்துயிரூட்டி மீட்டெடுக்கிறார்கள் என்பதும் மிகவும் பாராட்டுதலுக்குரிய விசயம். ஆகவே அந்த நெசவாளர்களுக்கு சிறப்பு செய்யும் வகையில் விழாக்காலங்களில் புடவை வாங்க நேர்ந்தால் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறைகளாவது விலை சற்று அதிகமென்றாலும் பாரம்பரியம் மிக்க இந்தியக் கைத்தறிப் புடவை பிராண்டுகளில் ஒன்றை வாங்கியே தீருவோம் என்று உறுதியேற்பது நல்லது. சரி இனி பலுச்சாரி புடவைகளுக்கான கதையைத் தொடங்கலாமா?!

தொன்று தொட்டு நீடித்து வரும் எல்லாவற்றுக்குமே தொடக்கம் என்ற ஒன்றிருக்கும் தானே! 

இந்தியாவில் பலுச்சாரி புடவைகளின் தோற்றம்:

18 ஆம் நூற்றாண்டில் முர்ஷித் குலி கான் எனும் பெங்கால் நவாப் ஒரு காலத்தில் டாக்காவில் செல்வாக்கான குடும்பங்களின் பாரம்பரிய நெசவாக இருந்த இந்த புகழ் பெற்ற புடவை நெசவு முறையை முதன் முதலாக முர்ஷிதாபாத்திலிருக்கும் பலுச்சார்  எனும் சின்னஞ்சிறு ஆற்றங்கரை கிராமத்திற்கு அறிமுகப்படுத்தினார். நவாப் காலத்தில் இந்த கைத்தறிப் பட்டுப் புடவைகளை அரச குடும்பத்துப் பெண்களும் ஜமீன் மற்றும் அரசாங்கத்தின் உயரதிகாரிகள் குடும்பத்துப் பெண்களும் மட்டுமே அணிந்து வந்தனர். பலுச்சார் கங்கையின் கிளை நதியான பகீரதியின் கரையிலிருந்ததால் பெருமழைக்காலங்களில் கங்கையில் சீற்றம் மிகுந்த போதெல்லாம் கிராமமும் அங்கிருந்த நெசவாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

தொடர்ந்த மழைச்சீற்றங்களுக்குப் பின் வேறு வழியின்றி பலுச்சாரில் இருந்து பாங்குரா மாவட்டத்தின் பிஷ்ணுபூருக்கு பலுச்சாரி புடைவைகளுக்கான நெசவுத் தறிகளும், நெசவாளர்களும் இடம் மாற நேர்ந்தது. இன்று பிஷ்ணுபூரில் இந்தப் புடவைகள் நெய்யப்பட்டாலும் கூட இவ்வகை நெசவுக்கு உயிர் தந்த தாய் கிராமமான பலுச்சாரை  மறவாமல் ‘பலுச்சாரி கைத்தறிப் புடவைகள்’ என்றே அழைக்கப்படுகின்றன.

பிரிட்டிஷ் காலத்தைய  நசிவு:

நவாப் காலத்துக்குப் பின் ’ஜகத் மல்லா’ எனும் மன்னர் மாளவத்தை ஆண்டு கொண்டிருந்த போது ‘பலுச்சாரி கைத்தறிப் புடவைகள்’ டஸ்ஸர் சில்க்கில் நெசவு செய்யப்பட்டு இந்தியாவெங்கும் பிரசித்தி பெற்று உயர் குடும்பத்து பெண்களின் மேனிகளை அலங்கரித்து புடவை உலகில் செழித்தோங்கின. ஆனால் எல்லாம் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் இங்கே பரவும் வரை மட்டுமே! வெள்ளையர் ஆட்சியில் புகழ் மிக்க பலுச்சாரி புடவைகளின் பெருமை குன்றி அதன் நெசவு நுணுக்கங்கள் எல்லாம் சீந்துவாரின்றி மறக்கடிக்கப்பட்டு வெறும் சாயமேற்றும் கலையாக மட்டுமே நீடிக்கும் அளவுக்கு ஷீணித்துப் போனது.

மீண்டும் புத்துயிர் பெற்ற நெசவுக் கலை:
 
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கிட்டதட்ட அழியும் நிலையிலிருந்த இந்த நெசவுக் கலையை மீட்டெடுத்து உயிர் கொடுத்த வகையில் பிரபல நெசவுக் கலைஞர் சுபோ தாஹூரைப் பாராட்டியே ஆக வேண்டும். நாளுக்கு நாள் சவலைக் குழந்தை போல் மெலிந்து கரைந்து வரும் பலுச்சாரி  நெசவுக் கலையைப் பார்த்து கவலை அடைந்த சுபோ தாஹூர் பிஷ்ணுபூரில் இருந்து அதன் திறன் வாய்ந்த தலைமை நெசவாளர் அக்‌ஷய் குமார் தாஸை தனது நெசவு மையத்துக்கு வரவழைத்து ஜக்கார்டு தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ள வைத்தார். இப்படித்தான் டஸ்ஸர் சில்க்கில் நெசவு செய்யப்பட்ட பலுச்சாரி நெசவு பின்நாட்களில் ஜக்கார்டு நெசவாக மாறியது. சுபோவின் தறிகளில் கற்றுக் கொண்ட நுணுக்கங்களை வைத்து பிஷ்ணுபூர் திரும்பியதும் அக்‌ஷய் கடுமையாக உழைத்து பலுச்சாரி புடவைகளுக்கு மறு வாழ்வு கொடுத்தார் என்று தான் சொல்ல வேண்டும். 

பலுச்சாரியில் மல்ல ராஜாக்களின் பெருமை:

ஜக்கார்டு நெசவு முறைக்கு மாறினாலும் பலுச்சாரி புடவை நெசவில் என்றென்றும் மல்லர் குல மன்னர்களின் செல்வாக்கே மிகுந்திருந்தது எனலாம். இந்தியாவில் குறிப்பாக மாளவப் பகுதியில் மல்லர்கள் ஆட்சி வலுப்பட்டிருந்த காலங்களில் மல்ல மன்னர்கள் டெரகோட்டா எனப்படும் சுடுமண் செங்கற்களால் பெருவாரியான கோயில்களை வடிவமைத்தனர். அந்தச் சிற்ப வடிவங்கள் அனைத்தும் ‘பலுச்சாரி புடவைகளின்’பல்லு அல்லது முந்தானை பகுதிகளில் தங்க நிற ஜரிகைக் கோலங்களாகி இன்றும் கூட மல்ல ராஜாக்களின் பெருமைகளைப் பறைசாற்றுகின்றன. 

பலுச்சாரி நெசவின் சிறப்பு:

பலுச்சாரி புடவைகளைப் பொறுத்தவரை  டாக்காவிலிருந்து அறிமுகமாகும் போது டஸ்ஸர் சில்க்கில் ஜலா உத்தியைப் பயன்படுத்தி தான் நெசவு செய்யப்பட்டது. ஆனால் காலம் மாற மாற ஜக்கார்டு நெசவு நுட்பத்துக்கு மாற்றப் பட்டு அதன் அடிப்படை சிறப்புத் தன்மைகளான ’பல்லு’ அல்லது ’முந்தானைப்’ பகுதியில் இந்தியாவின் பண்டைய  இதிகாசக் கதைகள், புராணக் கதைகள், அந்த கால கட்டத்தில் ஆட்சி செய்த மன்னர்கள், மகாராணிகளின் உருவங்கள், பிரிட்டிஷ் காலத்திய கலாச்சார மாறுதல்கள்,வியாபார பண்ட மாற்றங்கள், போராட்டங்கள் போன்றவை தங்க நிற ஜரிகையில் நெசவு செய்யப் பட்டன. பலுச்சாரி புடவைகளின் தனிச் சிறப்பென்று இதைத் தான் காலம் தோறும் கலாரசிகர்கள் சொல்லிச் சொல்லி மாய்ந்து போகிறார்கள்.

பலுச்சாரி புடவைகளுக்கான பார்டர் மற்றும் முந்தானை டிஸைன்கள் அனைத்தும் பெரும்பாலும் மல்ல ராஜாக்கள் கட்டிய பெருமை வாய்ந்த கோயில்களின் சுவரோவியங்கள் மற்றும் கோபுர பொம்மைகளின் மாதிரிப் படிவங்களாகவே இருக்கின்றன. இந்தப் புடவைகளுக்கான தனிப்பெரும் சிறப்பென்றே இதைக் கொண்டாடலாம். புடவை வாங்கும் சாக்கில் மட்டுமல்ல மல்லர்களின் டெரகோட்டா கோயில் சிற்ப அழகை ரசிக்கவும் கூட நாம் மெனக்கெட்டு பிஷ்ணுப்பூருக்கு ஒரு டூர் போனாலும் தவறே இல்லை. அத்தனை அழகு பலுச்சாரி புடவைகளின் பல்லு டிஸைன். 

பலுச்சாரி புடவைகளின் பல்லு பகுதியில் நெசவு செய்யப்படும் கதைகளுக்கான சிறப்பு மோட்டிஃப்களை பிற நெசவுகளில் காண்பது அரிது. இந்த வகை மோட்டிஃப்கள் அனைத்தும் புடவையின் பார்டர் மற்றும் முந்தானை பகுதியில் சிறு பிசிறோ தடங்களோ இல்லாமல் தொடர்ச்சியாக நெசவு செய்யப்பட்டிருப்பது பிற போலியான நெசவில் இருந்து ஒரிஜினல் பலுச்சாரி நெசவை நாம் கண்டடைவதற்கான  நல்வாய்ப்பு எனலாம். 

பலுச்சாரி புடவை நெசவு முறை:

  • பட்டுக்கூடு சாகுபடி,
  • நூல் செயலாக்கம் பெறுதல்,
  • மோட்டிஃப் கள் தயாரித்தல்,
  • நெசவு செய்தல்

எனும் நான்கு முக்கியமான செயல் முறைகளைத் தாண்டித் தான் பலுச்சாரி புடவைகள் தயாராகின்றன.

தூய பட்டு நூல் தயாரிக்க முதலில் பட்டுப் புழுக்கள் வளர்க்கப்பட்டு அவற்றில் இருந்து பாரம்பரிய முறையில் பாலுச்சாரி புடவை நெசவுக்குத் தேவையான பட்டு நூல்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. 

பின் நெசவுக்குத் தேவையான நூல் பண்டில்கள் மிருதுவாகும் பொருட்டு சோடா மற்றும் சோப் திரவத்தில் கொதிக்க வைக்கப்பட்டு வெவ்வேறு வண்ண புடவைகளுக்கேற்ற வகையில் அமிலங்களை பயன்படுத்தி சாயமேற்றப்படுகின்றன. சாயமேற்றப்பட்ட புடவைகள் கசங்காது நறுவிசாக இருக்கும் பொருட்டு நீண்ட கழிகளில் இழுத்துக் கட்டப்பட்டு நீளமான குச்சிகளால் நிரவப்பட்டு மெருகேற்றப்படுகின்றன.

பலுச்சாரி புடவைகளின் மோட்டிஃப்கள் நெசவு செய்யும் போது ஜக்கார்டு முறையில் டிஸைன்கள் முதலில் கிராப் பேப்பரில் வரையப்பட்டு பின் கார்டுகளில் பஞ்ச் செய்யப்படுகின்றன. பஞ்ச் செய்து முடிந்ததும் இந்த கார்டுகள் ஜக்கார்டு மெஷினில் தைக்கப்பட்டு மோட்டிஃகள்  சிறப்பாக நெசவு செய்யப்படுகின்றன. 

ஜக்கார்டு தறிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின் குறைந்த பட்சம் 5 அல்லது 6 நாட்களில் ஒரு பலுச்சாரி புடவை நெய்து முடிக்கப்படுகிறது. இல்லா விட்டால் பழைய  ’ஜல’ நெசவு முறையில் இந்த வகை முழு வேலைப்பாடமைந்த புடவைகளை நெசவு செய்ய கிட்டத்தட்ட 2, 3 மாதங்களுக்கு மேலும் கூட ஆகுமாம். ஜக்கார்டு மெஷின்கள் வந்ததும் தான் நெசவு எளிதாகியிருக்கிறது.

பலுச்சாரி கைத்தறி புடவைகளின் வகைகள்:

பலுச்சாரி புடவைகள் தற்போது மூன்று விதமாக வகைப்படுத்தப் படுகின்றன. 

  • சாதாரண பலுச்சாரி புடவைகள்: இவற்றில் சிறப்பாக எந்த விதமான வண்ணக் கலவையோ, பேட்டர்ன்களோ இல்லாமல் மிகவும் சிம்பிளாக ஒன்று அல்லது இரு நிற நூல்களைப் பயன்படுத்தி  புடவை முழுதும் நெசவு செய்யப்படுகிறது.
  • பலுச்சாரி மீனாகரி புடவைகள்: பலுச்சாரி புடவைகளில் தனித்து தெரியும் வண்ணம் மீனாகரி எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்து நெசவு செய்தால் அது மீனாகரி எனப்படும். இந்த வகை எம்பிராய்டரியால் புடவை தனித்து மிகப் பகட்டாக காட்சியளிக்கும், திருமணம் போன்ற வைபவங்களுக்கு மிகப் பொருத்தமானது.
  • ஸ்வர்ணாச்சாரி புடவைகள்: முழுவதும் தங்கம் மற்றும் வெள்ளி நிற ஜரிகை இழைகளால் மட்டுமே நெசவு செய்யப்படும் பலுச்சாரி வகைப் புடவைகளுக்கு ஸ்வர்ணாச்சாரி புடவைகள் என்று பெயர். இந்த வகைப் புடவைகள் மணப்பெண்களுக்கு மிகவும் பொருத்தமானவை. 

இன்றைய நவீன நெசவு உத்திகளின் புழக்கத்தின் பின் பலுச்சாரி நெசவில் இப்போதெல்லாம் பட்டுப்புடவைகள் மட்டுமே தயாராவதில்லை. புடவைகளுக்கு பொருத்தமாக வெளிநாட்டினரும் விரும்பி வாங்கிச் செல்லும் தரத்தில் உயர்ரகமான குஷன்கள்,  பெண்களுக்கான கலைநயமான வேலைப்பாடுகள் மிக்க ரசனையான கைப்பைகள், பட்டில் துப்பட்டாக்கல் எல்லாமும் கூட தயாராகி இணையத்தில் விற்பனைக்கு கிடைக்கின்றன.

பலுச்சாரி புடவைகளையும் கூட இணையப் பெருவெளியில் இரைந்து கிடக்கும் ஏராளமான விற்பனை தளங்களில் நம்பிக்கையான ஒன்றைத் தேர்ந்தெடுத்து அங்கிருந்து ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். தேடிய வரையில்;

http://shop.gaatha.com/Baluchari  

இந்த தளத்தில் எல்லா வகை பலுச்சாரி தயாரிப்புகளும் விற்பனைக்கு காணக் கிடைக்கின்றன. 

சரி இந்த வாரம் பலுச்சாரி புடவைகளின் பெருமையை போதுமான அளவுக்கு தெரிந்து கொண்டாயிற்று. தெரிந்து கொண்டு அப்படியே விட்டு விடக் கூடாதில்லையா! கூப்பிடு தூரத்தில் தீபாவளி வந்து கொண்டிருக்கிறது, முடிந்தால் ஒரு மாறுதலுக்காக  பிஷ்ணுபூரின் பலுச்சாரி கைத்தறிப் பட்டையும் இந்த  முறை முயற்சித்துப் பார்க்கலாமே!

பலுச்சாரியைத் தொடர்ந்து அடுத்த வாரம் நாம் பார்க்கவிருப்பது மண் மணம் மாறா சிவகங்கை மாவட்டத்து  காரைக்குடி சுற்றுவட்டாரச் செட்டிநாட்டுப் பெருமை பேசும் ‘செட்டிநாடு கைத்தறிப் புடவைகள்” 

- தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com