நகரத்தார் சமூகத்தின் கொடை செட்டி நாட்டுக் கைத்தறிப் புடவைகள்!

என்.ஐ.எஃப்.டி பேராசிரியர்கள் செட்டிநாட்டுக் கைத்தறிப் புடவைகளை கண்டாங்கி சேலைகளின் மாற்று வடிவம் என்று கூறுகின்றனர்.
நகரத்தார் சமூகத்தின் கொடை செட்டி நாட்டுக் கைத்தறிப் புடவைகள்!

செட்டிநாடு என்றதும் நம் அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது செட்டிநாட்டு உணவு வகைகள் தான். செட்டிநாட்டு உணவு வகைகளை ஒரு முறையேனும் ருசி பார்க்காதவர் எவருமில்லை. உணவு வகைகளுக்காக மட்டுமல்ல செட்டிநாடு இன்னொரு விஷயத்துக்காகவும் பெண்களால் குறிப்பாக நடுத்தர வயதுப் பெண்களால் பெரிதும் விரும்பப் படுகிறது. அது எதற்காக என்றால் இந்தியாவின் பாரம்பரிய அடர் வண்ணங்களில் நெசவு செய்யப்படும் செட்டிநாட்டு கைத்தறிப் புடவைகளுக்காகத் தான். செட்டிநாட்டி கைத்தறிப் புடவைகளின் ஸ்பெஷாலிட்டி அவற்றின் அடர் வண்ணங்கள் மட்டுமல்ல பெரும்பாலும் சிறிதும் பெரிதுமாக பட்டை பட்டையான கோடுகள் அல்லது கட்டங்கள் நிறைந்த அவற்றின் டிஸைனும் தான். செட்டிநாட்டில் குறிப்பாக தேவாங்கர் இனத்தவர் தான் புடவை நெசவில் அதிகமும் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களால் நெய்யப்பட்ட புடவைகள் பல்வேறு நாடுகளையும் வியாபார நிமித்தம் சுற்றி வரும் மற்றொரு பிரிவினரான நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் அல்லது நகரத்தார் மூலம் உலகெங்கும் பரவியது.


  
செட்டிநாட்டுப் புடவைகளில் கட்டங்கள் மற்றும் கோடுகளின் வண்ணம் தான் மாறுமே தவிர பார்டரில் பெரும்பாலும் ருத்ராட்சம், கோயில் கோபுர டிஸைன், மயில், அன்னம், போன்ற மரபான டிஸைன்களே மீண்டும், மீண்டும் பயன்படுத்தப்பட்டிருக்கும். காஞ்சிபுரப் பட்டு நெசவில் கூட முன்பெல்லாம் சிங்கிள் ஸைட் பார்டர் மட்டும் தான் வழக்கமாக நெசவு செய்வார்கள். ஆனால் செட்டிநாட்டுக் கைத்தறிப் புடவைகளில் டபுள் சைட் பார்டர் நெசவு செய்யப்பட்டிருக்கும், அதோடு மற்ற புடவைகளில் தேடோ தேடென்று தேடினாலும் அத்தனை எளிதில் கிட்டாத 48 'இஞ்ச்' அகலம், 5.5 மீட்டர் நீளம் எனும் அளவிலான புடவை விஸ்தீரணம் தினசரி புடவை உடுத்தும் வழக்கமுள்ள நமக்கு முந்தைய தலமுறைப்  பெண்களுக்கு மிகவும் பிடித்துப் போனதில் ஆச்சர்யமில்லை.

இத்தகைய செட்டிநாட்டுப் புடவைகளை கூறைப்புடவைகள் என்றும் அழைக்கும் வழக்கமுண்டு. இப்படியொரு டிஸைனில் இந்த வகைப் புடவைகளை நெசவு செய்யும் எண்ணம் 250 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் காரைக்குடி மற்றும் சிவகங்கைப் பகுதியில் வாழ்ந்த செட்டிநாட்டு தேவாங்கர் சமூகத்தினருக்குத் தான் வந்ததாம். அவர்கள் எண்ணத்தில் விளைந்த கோடுகளுடனும், கட்டங்களுடனும் சுத்தமான ஜரிகையில் இணைந்த மாங்காய், மயில், அன்ன பட்சி, கோபுரம் முதலான டிஸைன்கள் அழகழகான புடவைகளாயின. 

செட்டிநாட்டுக் கைத்தறிப் புடவைகள் நெசவு முறை:

செட்டிநாட்டுக் கைத்தறிப் புடவைகள் 60s ரக நூல் கொண்டு ஊடும் பாவுமாக நெசவு செய்யப்படுகின்றன. பார்டர் டிஸைன்களுக்கு டோபி பயன்படுத்துகிறார்கள். வண்ணக் கலவை என்று எடுத்துக் கொண்டால் அடிப்படை வண்ணங்களான அரக்கு, சிவப்பு, பச்சை, அடர் நீலம் இவற்றோடு கருப்பு மற்றும் வெள்ளை வண்ண சாயங்களைப் கலந்து பயன்படுத்துகிறார்கள். இதனால் டபுள் ஷேடு கிடைக்கும். புடவையும் பளிச்சென்று கான்போரைக் கவர்ந்திழுக்கும். பெரும்பாலும் குழித்தறி அல்லது உயர்த்தப்பட்ட குழித்தறிகளில் ’ஷட்டில் நெசவு’ முறையில் இந்த வகைப் புடவைகளை நெசவு செய்கிறார்கள்.

பிற கைத்தறிப் புடவைகளிலிருந்து செட்டி நாட்டு கைத்தறிப் புடவைகளை எப்படி வேறுபடுத்தி அறிவது?

  • பிற கைத்தறிப் புடவைகளைக் காட்டிலும் செட்டிநாட்டுக் கைத்தறிப் புடவைகளில் நீள, அகலம் அதிகம். தொடக்கத்தில் 6 கஜம், 8 கஜம் எனும் அளவிலான பெரிய பெரிய புடவைகள் எல்லாம் கூட நெய்திருக்கிறார்கள். அளவை வைத்து நாம் ஒரிஜினல் செட்டிநாட்டு கைத்தறிப் புடவைகளைக் கண்டுபிடிக்கலாம்.
  • புடவையின் உடல் பகுதியில் எந்த விதமான கூடுதல் டிஸைன்களும் இருக்காது. அதிசயமாக நூல் புட்டாக்களுடன் பெரும்பாலும் பிளெயினாகத்தான் நெசவு செய்வார்கள். 
  • இரண்டு புறமும் அகலமான கெட்டி பார்டர் இருக்கும். 
  • பாலும் பழமும் வகைப் புடவைகளில் நீண்ட கோடுகள் மற்றும் கட்டங்கள் இடம் பெறும்.

ஒரிஜினல் செட்டிநாட்டுக் கைத்தறிப் புடவைகள் எங்கெல்லாம் கிடைக்கின்றன?

இந்தியாவிலிருக்கும் அனைத்து பாரம்பரிய இந்தியக் கைத்தறிப் புடவைகளின் நெசவையும் மீட்டெடுக்கும் முயற்சியிலுள்ளது மத்திய அரசு, தரம் மற்றும் நெசவு முறைகளில் மத்திய அரசின் பரிசோதனைகளில் வெற்றி பெற்ற பிரபல இந்திய கைத்தறிப் புடவைகள் அனைத்தும் தற்போது பெரிய ஜவுளிக்கடைகள் அனைத்திலும் விற்பனைக்கு கிடைக்கின்றன. சென்னையில் நந்தன அண்ணாசாலையில் உள்ள "காட்டேஜ் எம்போரியம், கோவையில் பி.எஸ்.ஆர் சில்க்ஸ், காஞ்சிபுரம் பச்சையப்பா சில்க்ஸ்" போன்ற இடங்களில் மத்திய அரசால் ஒரிஜினல் செட்டிநாடு தறி பிராண்ட் முத்திரையிடப்பட்ட கைத்தறிப் புடவைகள் கிடைக்கும்.

செட்டிநாட்டுப் புடவைகள் பிற கைத்தறிப் புடவைகளைக் காட்டிலும் அளவில் பெரிதாக இருப்பதைக் கண்ட என்.ஐ.எஃப்.டி பேராசிரியர் குழுவினர் 1920 ஆண்டு நெசவு செய்யப்பட்ட 40s நூல் ரகம் கொண்ட புடவையை ஆய்வு செய்து தற்போதைய 60s ரக செட்டிநாட்டுக் கைத்தறிப் புடவைகளை கண்டாங்கி சேலைகளின் மாற்று வடிவம் என்று கூறுகின்றனர். 

செட்டிநாட்டுத் தறியில் அடிப்படை நிறங்களான பச்சை, அடர் நீலம், மஞ்சள், ஆரஞ்சு, அரக்கு, மஸ்டர்டு ஊதா, போன்ற அடர் வண்ணக்கலவைகளில் உருவான சில தூய கைத்தறிப் புடவைகளின் விடியோ காட்சியை இங்கு காணலாம். இந்தப் புடவைகள் அனைத்துமே அன்றாடப் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் எளிமையானதாகவே உள்ளன. 

’பாலும் பழமும்’ திரைப்படம் பலருக்குத் தெரியுமோ இல்லையோ ஆனால் நிச்சயம் செட்டிநாட்டுப் பாலும் பழமும் வகைப் புடவைகளைத் தெரிந்திருக்கும். திருமண விழாக்களில் வயதில் மூத்த பெண்களின் ஏகோபித்த சாய்ஸ் இந்தப் பாலும் பழமும் புடவையே! இந்த வகைப் புடவைகளில் பொடிக்கட்டம், சிறிய கட்டம், பெரிய கட்டம் என்று அவற்றின் அளவு தான் மாறுபடுமே தவிர எல்லா வண்ணப் புடவைகளிலும் கட்டங்கள் தவறாது இடம் பெறும். இந்த வகைப் புடவைகளுக்கான விடியோவைக் காண கீழுள்ள லிங்கை அழுத்தவும். 

தமிழ்நாட்டில் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் உரியதாக பிரத்யேகமாக புடவை உடுத்தும் ஸ்டைல் இருப்பது எல்லோருக்கும் தெரியும். அந்த வரிசையில் செட்டிநாட்டு ஸ்டைல் என்பது பின் கொசுவம் வைத்து புடவை கட்டிக் கொள்வது. இன்றைய தலைமுறையினரில் வயதான பெண்களைத் தவிர பிறர் அப்படி பின் கொசுவம் வைத்து உடுத்துவதில்லை. செட்டிநாட்டுப் பின் கொசுவம் பாணியில் புடவை உடுத்துவது எப்படி என்று கீழுள்ள விடியோவில் இருக்கும் பெண்மணி விளக்குகிறார். பள்ளிகளில் மாறுவேடப் போட்டிகளில் பங்கு பெறும் சிறுமிகளுக்கு இந்த விடியோ பயன்படலாம். 

அம்மாக்களுக்குப் பிடித்த செட்டிநாட்டுப் புடவைகளைப் பற்றி பார்த்தாகி விட்டது, இனி அடுத்த வாரம் மத்தியப் பிரதேசத்தின் ”சந்தேரி கைத்தறிப் புடவை”களைப் பற்றி பார்க்கலாம்.

தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com