கேப்பைக் களியும்... பருப்புக் குழம்பும்!

"பார்த்தீர்களா? மலையில் விளைந்த (குறிஞ்சி) பலாப்பழம். முல்லை நிலத்து தயிரும் மோரும், மருத நிலத்து அரிசியும் சிறுதானியங்களும், இவற்றோடு நெய்தல் நிலத்து மீன் குழம்பும் சேர்ந்து ஒரே இடத்தில் உண்ணும் வாய்
கேப்பைக் களியும்... பருப்புக் குழம்பும்!

உன்னோடு போட்டிபோடு! - 17

"நாரையைத் தூது அனுப்பிய ஏழைப் புலவன் பாண்டிய மன்னனைச் சந்தித்தானா?'' என்று அந்தப் பேத்தி கவலையோடு கேட்க, ""நகர் வலம் வந்த பாண்டியமன்னன் அந்தப் பாடலைக் கேட்டு மகிழ்ந்து அப்புலவருக்கு உதவினான்'' என்று நான் சொல்லி முடித்தபோது ""அது சரி.. அந்தப் புலவனின் ஊர் "சத்திமுத்தம்' எங்கிருக்கிறது?'' என்று தமிழ்மணி கேட்டார்.
""தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் போகும் வழியில் சுவாமிமலைக்கு அருகே திருப்பட்டீஸ்வரம் என்றொரு தேவாரப் பாடல்பெற்ற ஊர் இருக்கிறது. அந்த ஊருக்கு அருகேதான் "சத்திமுற்றம்' எனும் ஊர் உள்ளது. இந்தச் செய்தியைத் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர் தனது "என் சரித்திரம்' எனும் நூலில் குறிப்பிடுகிறார்'' என்று நான் கூறினேன்.
தமிழ்மணி கொண்டுவந்து இறக்கிய உணவை அனைவருக்கும் பரிமாறும் வேலை தொடங்கியது. பல்வகையான உணவு வகைகள், சிறுதானியங்களில் வியப்பூட்டும் வண்ணம் தயார் செய்திருந்தார் தமிழ்மணி.
""பார்த்தீர்களா? மலையில் விளைந்த (குறிஞ்சி) பலாப்பழம். முல்லை நிலத்து தயிரும் மோரும், மருத நிலத்து அரிசியும் சிறுதானியங்களும், இவற்றோடு நெய்தல் நிலத்து மீன் குழம்பும் சேர்ந்து ஒரே இடத்தில் உண்ணும் வாய்ப்பு யாருக்குக் கிடைக்கும்?'' என்று வியந்து சொன்ன நான், ""தமிழ்மணி கணினி கற்ற நீங்கள் கழனிக்கு வந்தது எப்படி?'' என்று ஆர்வமாய்க் கேட்டேன்

""ஐயா வாழ்க்கைக்குப் பொருள் வேண்டும். உண்மைதான். ஆனால் வாழ்வதிலும் பொருள் வேண்டும் அல்லவா?'' என்று அவர் கேட்டபோது எல்லோரும் அந்த இளைஞரையே பார்த்துக் கொண்டிருந்தோம்.
""சாப்பிட்டுக்கொண்டே கேளுங்கள். இந்த இராமேஸ்வரம் ஆன்மிக நகரம். தில்லியோ அரசியல் தலைநகரம். இந்த இரண்டையும் இணைத்த பாலம்தான் மறைந்த நம் குடியரசுத் தலைவர் மாண்புமிகு அப்துல் கலாம். எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு வழிகாட்டி, கலங்கரை விளக்கம். அவரது ஆற்றலைக் கண்டு அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாட்டு அரசாங்கங்கள் தங்கள் நாட்டில் பணிசெய்ய அவருக்கு அழைப்பு விடுத்தன. கோடிக்கணக்கில் சம்பளம் தருவதாக வாக்களித்தன. ஆனால், நம் கலாமோ, அவற்றை மறுத்து "நான் கற்ற கல்வி, என் அனுபவம் என் நாட்டு மக்களுக்குத்தான் பயன்பட வேண்டும்' என இந்தியாவிற்காக உழைக்க வந்தாரே, அவரைப் போன்றே நாங்களும் வாழ வேண்டும் என்று விரும்பினோம். நானும் என்னைப் போன்ற நண்பர்கள் சிலரும் இந்தியா வந்தோம். உழைக்கத் தொடங்கினோம். பலருக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்தோம். இதோ நீங்கள் சாப்பிடும் இந்தச் சிறுதானிய உணவை இந்த நூற்றாண்டில் உலகிற்கு மீண்டும் நினைவூட்டியவர் யார் தெரியுமா?'' என்று தமிழ்மணி கேட்டார்.
""நம்மாழ்வார்'' என்று அந்தப் பேத்தி சொல்ல, ஹெட்போன் பாட்டி அதை வழிமொழிந்து கைதட்ட, பலரும் அதை ஆமோதித்தார்கள்.
""சரியாகச் சொன்னீங்க பாப்பா - நம்மாழ்வார் இயற்கை வேளாண்மையை, சிறுதானியங்களின் அருமையை உலகிற்குச் சொன்னார். அவர் இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் எத்தனையோ இளைஞர்கள் இந்தியாவை நோக்கி வந்திருப்பார்கள்"" என்றார் தமிழ்மணி.

""இவர் சொல்வது உண்மைதான். நம்மாழ்வாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கையில் ஐ.டி. படித்த இளைஞர்களின் பங்கு அதிகம் என்று கலந்துகொண்டவர்கள் சொன்னார்கள்'' என்று ஒரு பெரியவர் பெருமிதமாகச் சொன்னார்.
சாப்பாட்டு இலையில் கேழ்வரகுக் களி உருண்டையில் பருப்புக்குழம்பு ஊற்றப்பட்டபோது அதனை எப்படி உண்பது என்று சிறுகுழந்தைகள் வியப்போடு பார்க்க, அருகிலிருந்த பெரியவர், தன் இலையில் போடப்பட்ட களியைக் குழிவெட்டி பருப்புக் குழம்பை அணை கட்டி கொஞ்சம் கொஞ்சமாகப் பிசைந்து தன் வாயில் சிந்தாமல், சிதறாமல் போட்ட பாங்கு... கண்கொள்ளாக் காட்சி.
""குழந்தைகளே பார்த்தீர்களா? எத்தனதான் முள் கரண்டியிலும், ஸ்பூனிலும் சாப்பிட்டாலும் இந்த மாதிரி ருசியாக உண்ண முடியுமா?'' என்று அப்பெரியவர் மகிழ்வோடு கேட்டார்.
இளைஞர்களின் பெருமைகளைத் தமிழ்மணி எடுத்துக் கூறிக்கொண்டே வந்து, எல்லோரையும் பார்த்து ஒரு கேள்வியும் கேட்டார். ""நம் நாட்டில் இயற்பியலுக்காக முதன்முதலில் நோபல் பரிசு பெற்றவர் யார் தெரியுமா?''
""சர்.சி.வி.ராமன்'' எப்போதும்போல பேத்தி சொல்ல, ""கரெக்ட்  அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைச் சொல்றேன் கேளுங்க'' என்று தொடங்கினார் தமிழ்மணி.

""இயற்பியல் துறையில் நோபல் பரிசு பெற்ற நம் சர்.சி.வி.இராமன் அப்பரிசுத் தொகையில்தான் பெங்களூருவில் ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கினார். அப்போது தகுதி வாய்ந்த பல பேரைத் தேர்வு செய்யும் பணியில் அவரே பங்கேற்றார். நேர்முகத் தேர்வு நடைபெறத் தொடங்கியதாம். அதில் கலந்துகொள்ள வந்த இளைஞர் ஒருவர் இயற்பியலில் ங.நஸ்ரீ பட்டம் பெற்றவர். ஆனால் வாய்மொழித் தேர்வில் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தெரியாமல் திணறிக்கொண்டே விழித்திருக்கிறார்.
எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காத அந்த இளைஞரைப் பார்த்துக் கோபத்துடன் சர்.சி.வி.இராமன் சொன்னாராம்: "இதோ பாருங்கள் உங்களுக்கு இயற்பியல் துறையில் ஒன்றும் தெரியவில்லை. உடனே ஊருக்குக் கிளம்பிப்போய் வேறு வேலை தேடுங்கள்'' என்று அதை தமிழ்மணி சொல்லிக் கொண்டுவந்தபோது, ""இப்படித்தான் சார், எவ்வளவு நல்லாப் படிச்சாலும் வாய்மொழித் தேர்வு, பல பேரைப் பழி வாங்கி விடுகிறது'' என்று
மீசைக்காரர் வருத்தத்தோடு சொன்னார்.
""இருங்க... நான் சொல்ல வந்ததை முழுசும் கேளுங்க... அதே பையனுக்கு அங்கேயே வேலை போட்டுக் கொடுத்தாராம் நம் சர்.சி.வி.ராமன்... எப்படி தெரியுமா?'' என்று தமிழ்மணி தொடங்க... நாங்கள் ஆர்வமாய் அவரைப் பார்க்க...
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com