அள்ளித் தந்த முத்துகள்!

"கமுக்கமடி கத்தாழ காதுல கெடக்குறது பித்தாள'' என்று பழமொழியில் ஒருவர் பட்டையைக் கிளப்பினார்.
அள்ளித் தந்த முத்துகள்!

உன்னோடு போட்டிபோடு! 34

"காண பூப்பூக்கும்...  காணாமலே காய் காய்க்கும்...  அது என்ன?''  என்று ஒரு பெரியவர் விடுகதையைத் தொடங்கினார்.

"கமுக்கமடி கத்தாழ காதுல கெடக்குறது பித்தாள'' என்று பழமொழியில் ஒருவர் பட்டையைக் கிளப்பினார்.

"இதெல்லாம் இருக்கட்டும், சிமென்ட்ட கண்டுபிடிச்சது யாரு தெரியுமா?'' என்று தமிழ்மணி கேட்க,  நாலாபக்கமும் ஆளாளுக்கு ஒவ்வொரு பதிலாகச் சொல்லத் தொடங்கினார்கள். யார் கேள்விக்கு யார் பதில் சொல்கிறார்கள்? என்றே யாருக்கும் தெரியவில்லை. 
அப்போது மீசைக்காரர்,  "ஐயா எனக்கு ஒரு சந்தேகம். அந்த ஆண்டாள் பாட்டுல வியாழன்,  வெள்ளி, சனி, ஞாயிறுன்னு என்னமோ சொன்னீங்களே! அது என்ன?'' என்று கேட்க, மகிழ்ச்சியோடு சத்தம் போட்டுக் கொண்டிருந்த அத்தனை பேரும் ஆச்சரியத்தோடு அவரைப் பார்த்தார்கள். 
"தமிழ்மணி இந்த வினாடி-வினா பொறுப்பை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். நான் ஆண்டாளின் வியாழன், வெள்ளியை இவருக்கு விளக்குகிறேன்'' என்றவுடன் கைதட்டும் விசில் ஒலியும் தூள் பறந்தன.
கடற்கரை ஓரத்தில் சாம்பல் நிற நரிகள் நண்டுத் துவாரத்துக்குள் தங்கள் வாலை நுழைக்க நிலவொளியில் அந்தக் காட்சி ஆச்சரியமாய் இருந்தது. ஏன் தெரியுமா? 
"அங்க பாத்தீங்களா, நரிகள் கடல் நண்டுகளை வேட்டையாடுகின்ற அழகை'' என்று நான் சுட்டிக்காட்டிய திசையில் அத்தனை பேரும் பார்க்க நான் மேலும் தொடர்ந்தேன். "பொதுவாக நரிகள் இரவு நேரத்தில் உணவு தேடிப்போகும் போது தங்களுக்கே உரிய தந்திரக் குணத்தோடு வேட்டையாடுமாம். எப்படி என்றால் நண்டுகளின் வளைகளில் (பொந்துகளில்) ஏதாவது ஒரு பொருள் நுழைந்தால் உடனே உள்ளிருக்கும் நண்டுகள் அதனைத் தன்னுடைய  "நண்டுப்பிடி'யால் பிடித்துக் கொள்ளுமாம். இந்த குணத்தைத் தெரிந்து வைத்திருக்கிற நரிகள் தங்களுடைய வால்களை நண்டு வளைகளில் நுழைத்து அதனைப் பிடித்துச்  சாப்பிடுமாம் என்று விளக்கம் கொடுத்தேன். 
"ஐயா, இந்த உலகத்தில் உள்ள எல்லா உயிரினங்களும் உணவைத் தேடுகின்றன, உயிர் பிழைக்கப் போராடுகின்றன. இதில் ஒவ்வொரு உயிருக்கும் தன்னைத் தற்காத்துக் கொள்ள ஓர் அறிவு இயற்கையிலேயே இருக்கும். இப்படி இருக்கையில் நரிகளை மட்டும் தந்திரம் நிறைந்தவை என்று ஏன் சொல்ல வேண்டும்?'' என்று மீசைக்காரர் கேட்டவுடன்,
"அப்படி போடுறா அரிவாள,  இந்தக் கேள்விக்கு யாராவது பதில் சொல்லிட்டா நான் இங்க இருந்து இப்படியே உருண்டு எங்க ஊருக்குப் போறேன்'' என்று இளைஞர் ஒருவர் சவால் விட்டார். இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது? யார் சொல்வது? என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அங்கிருந்த பெரியவர் ஒருவர் எழுந்து, "யோவ், மீச எல்லாரையும் நீ கேள்வி கேட்கிறீல, இப்ப உன்னய நான் கேட்கிறேன். நீ சர்க்கஸ் பார்த்திருக்கியா?'' என்று கேட்டார். 
"உள்ளுர் சர்க்கஸ்ல இருந்து ரஷ்யன் சர்க்கஸ் வரைக்கும் அத்தனையும் பார்த்திருக்கேன். அது மட்டுமல்ல அவங்ககிட்டயும் நாலு கேள்வி கேட்டிருக்கேன்'' என்று பெருமையோடு மீசையை முறுக்கினார் மீசைக்காரர். "சரி அது கெடக்குது விடு, இப்படி நீ பார்த்த எந்த சர்க்கஸ்லயாவது நரி சர்க்கஸ் பண்றத பார்த்திருக்கியா? யானை சைக்கிள் ஓட்டும், குரங்கு குச்சியில தாவும், புலி, சிங்கம் எல்லாம் கூட்டுல இருந்து வந்து கம்பியில நடக்கும். இப்பத் திரும்ப கேக்குறேன் சர்க்கஸ்ல நரியைப் பார்த்திருக்கிறியா?'' என்று பெரியவர் ஆணித்தரமாகக் கேட்டார். 
மீசைக்காரர் தலையைச் சொறிந்து கொண்டே யோசிக்க, நாங்களும் யோசித்துக் கொண்டே அந்தப் பெரியவரைப் பார்த்தோம். "இப்பத் தெரியுதா கேள்வி கேக்குறது சுலபம்... பதில் சொல்லத் தெரியணும்'' என்று அவர் சொல்லிக் கொண்டு வரும்போதே,  "சரி, நீங்க கேட்ட கேள்விக்கு நீங்களே பதில் சொல்லுங்க பார்ப்போம்?''  என்று எதிர்கேள்வி கேட்டார் மீசைக்காரர். 
"சொல்றேன் கேட்டுக்கோ, நான் பார்த்த வரைக்கும் எந்த சர்க்கஸ்ல மட்டுமில்ல யார் வீட்டுலையும் நரிய வளர்க்குறது கஷ்டம். மொதல்ல அது சொன்னபடி கேட்காது. அதோட எப்படியும் நம்மள ஏமாத்திட்டு போயிடும். நாங்க ஒரு தடவ எங்க தாத்தாவோட முயல் வேட்டைக்குப் போனப்ப, ரெண்டு மூணு நரிகளப் பார்த்தோம். சுத்தி வளச்சு புடிக்கலாமானு நான் எங்க தாத்தாகிட்ட கேட்டேன் அதுக்குள்ள அவரு,  "எல்லாரும் கண்ண மூடிக்கோங்கடா அது மண்ணவாரி எறியப்போகுது' என்று சொல்லி முடிப்பதற்குள் அந்த நரிகள் தங்கள் கால்களில் மண்ணைப் பிராண்டி புழுதியைக் கிளப்ப நாங்கள் கண்ணைத் துடைத்துவிட்டுப் பார்த்தபோது, ஒரு நரி கூட அங்க இல்லை. அதான் திரும்பவும் சொல்றேன்: நரியப் பழக்குறது கஷ்டம் அது தந்திரம் மிக்கது'' என்று அவர் கூறி முடிக்க 
"முன்பு ஒரு காலத்துல
முருங்க மல காட்டுக்குள்ள 
தந்திரம் மிக்க நரி வாழ்ந்து வந்தது -அது
காடு விட்டு நாடு தேடி ஓடி வந்தது... என்ன பண்ணுச்சு'' என்று நம் கோமாளி எழுந்து  "மூன்றாம் பிறை'  படத்தில் கமல் பாடுவதைப் போல பாடியும், ஆடியும் காண்பித்தார்.
"யெஸ், நான் கூட ஈசாப் மாரல் ஸ்டோரீஸ்ல ரீட் பண்ணியிருக்கேன். பாஃக்ஸஸ் ஆர் ஆல்வேஸ் கன்னிங்'' என்று பேத்தி சொல்ல, "ஓகே பட் இட் இஸ் நேச்சுரல்!'' என்று ஹெட்போன் பாட்டியும் அதை ஆமோதிக்க, "நரிகளுக்கு இங்கிலீஷ் தெரியுமா?''  என்று ஒரு பெரியவர் பக்கத்தில் இருந்தவரிடம் கேட்க, "பிறகு என்ன லண்டன்ல இருக்கிற நரிகள் எல்லாம் தமிழ்ல சொன்னாவா கேட்கப்போகுது. போன வாரம் கூட என் பேரன் பார்த்திட்டிருந்த இங்கிலீஷ் கார்ட்டூன்ல நரி இங்கிலீஷ்ல தான் ஊளையிட்டது'' என்று அவர் ஆதாரத்தோடு விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது தமிழ்மணி எல்லோரையும் பார்த்து, "சரி நாம மொதல்ல என்ன பேசிட்டிருந்தோம்னு மறந்து போயிருச்சா? அந்த விடுகதைக்கு யாரும் விடை சொல்லலையே?''  என்று கேட்டார். 
"அட போங்கயா, இந்த மனுஷன் (மீசைக்காரரைக் காண்பித்து) கேட்கிற கேள்வியில எல்லாமே மறந்து போகுது. எங்க நம்மள கேள்வி கேட்டுருவாரோன்னு மனசு படபடங்குது. விடுகதையை திரும்பி போடுங்க பதில் சொல்லப் பார்க்கிறோம்'' என்றார் ஒருவர் அலுப்புடன்.
"காணப் பூப்பூக்கும் காணாமலே காய் காய்க்கும் அது என்ன?'' என்று விடுகதைப் போட்ட அதே பெரியவர் கேட்டார்.
"ஒரு க்ளு குடுங்களேன்''... என்று ஒரு இளைஞர் கேட்க, "உங்களுக்கெல்லாம் ரொம்ப பிடிச்சதுதான்'' என்று அந்தப் பெரியவர் குறும்பாகச் சிரித்து விட்டு, "நானே சொல்லி விடுகிறேன். அது கடலை - நிலக்கடலை'' என்று சொன்னவுடன் "ஆஹா...  நாம போடுற கடலைக்கு இப்படி ஒரு விளக்கம் இருக்கா?''  என்று இளைஞர்கள் அதிசயித்தனர். 
"வாட் இஸ் கடலை?  கேசுநட்?'' (Cashew nut) என்று பேத்தி கேட்க, ஹெட்போன் பாட்டியும், " நோ நோ கடலை மீன்ஸ்  பீ நட்'' (Peanut) என்று சொல்லி விட்டு,  "அதென்ன கத்தாழை அண்ட் பித்தாளை?''  உடனே விடுகதை போட்ட பெரியவர் எங்களைப் பார்க்க...  தமிழையா, "கத்தாழை என்பது ஒரு தாவரம் சோற்றுகற்றாழை, இரயில்வே கத்தாழை என்பது போல.  பித்தளை என்பது ஒரு உலோகம் - மெட்டல்.  ஒவ்வொரு மனிதனுடைய குணத்தையும், செயல்பாடுகளையும் பழமொழிகள் மூலம் சொல்லிக்காட்டுவது நம்முடைய மரபு. எப்பிடின்னா புதுசா பணக்காரனான சில பேரு ரொம்ப பந்தா பண்ணுனா ஊரே அவனப் பார்த்து என்ன சொல்லும் தெரியுமா?   "அற்பனுக்கு வகுசி (செல்வம்) வந்தா அர்த்த ராத்திரியில குடை பிடிப்பானாம்' .
கோபம் வந்தால் கூட நம்மவர்கள் பழமொழி சொல்லத் தயங்க மாட்டார்கள். இந்தப் பழமொழியைக் கேட்டிருக்கீங்களா?   கேட்கிறவன் கேணப்பயலா இருந்தா கேப்பையில (கேழ்வரகு) கூட நெய் வடியிதுன்னு சொல்வாங்களாம்''  என்று அவர் சொன்னவுடன், " அட இதுதான் உண்மையான பழமொழியா? இதப் பல பேரு மாத்தி மாத்தி சொல்றாங்களே''  என்று ஒரு இளைஞர் வியப்போடு கேட்டார். "அத விடுங்க தம்பி. ஆனைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம்  வரும் அப்டீன்னு ஒரு பழமொழி இருக்கு தெரியுமா?'' என்று கேட்டார். அதைக் கேட்ட தமிழ்மணி சிரித்துவிட்டு, தமிழையாவைப் பார்த்து "ஆனை, பூனை ஏதாவது தமிழ் விளக்கம் இருக்கா?'' என்று கேட்டார். 
"ஆ+ நெய் = ஆ நெய், பசுவோட நெய்
பூ+நெய் =  பூ நெய்,  பூவில் வரும் தேன்'' என்று பிரித்துப் புதுப்பொருள் சொன்னார் தமிழையா.
"அப்ப நெய்யிக்கு ஒரு காலம் வந்தா, தேனுக்கு ஒரு காலம் வரும் அப்படித்தானே?'' என்று ஒருவர் கேட்க, அதற்குள் தமிழ்மணி "ஐயா சொன்ன விளக்கம் ஒரு பக்கம் இருக்கட்டும். நான் சொல்றேன் கேளுங்க...  இத ஒருத்தர் பட்டிமன்றத்துல சொன்னாரு. அந்தக் காலத்து ராஜாக்களெல்லாம் யானைப்படை வச்சிருந்தாங்க, இந்தக் காலத்து மந்திரிங்களெல்லாம் பூனைப்படை (Black cats) வச்சுருக்காங்க அதுனாலதான் ஆனைக்கு ஒரு காலம் வந்தா இப்ப பூனைக்கு ஒரு காலம் வந்திருச்சு பாருங்க'' என்று சொல்லி முடிக்க எல்லோரும் சந்தோசமாய் கைதட்டினார்கள். 

"பார்த்தீர்களா, நாம் இப்போது பேசுகிற, கலந்துரையாடுகிற செய்திகளெல்லாம் அந்தக் காலத்தில் ஓயாது மழை பெய்யும் போது வீடுகளில்  வீதிச்சாவடிகளில், நான் படித்த பள்ளிகளில் இது போல கலந்து உரையாடப்பட்டிருக்கிறது. உரையாடல்கள் மூலம்தான் அறிவைக் கூர்மைப்படுத்த முடியும் என்று கிரேக்க நாட்டின் தத்துவஞானியாகிய  "சாக்ரடீஸ்'  தன் மாணவர்களுக்குச் சொல்வாராம். அவர் மாணவர்தான்  பிளாட்டோ.  அவரின் மாணவர்தான்  அரிஸ்டாட்டில்''  என்று நான் சொன்னேன். 
"நீங்கள் சொல்வது உண்மைதான், நாம் எல்லாரும் சிறுபிள்ளைகளாக இருந்தபோது எல்லாரோடும் எல்லா நேரமும் பேசிக்கொண்டுதான் இருந்திருக்கிறோம். மழையும் விடாமல்தான் பெய்திருக்கிறது. அவையெல்லாம் இப்போது  "பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போயிற்றோ?' என்ற கவலையும் இருக்கிறது'' என்று தமிழையா கவலையோடு சொன்னார். 
"கவலைப்படாதீர்கள் ஐயா, உங்களைப் போன்ற ஆசிரியர்கள் இருக்கிறவரை மாணவர் சமுதாயம், இளைய சமுதாயம் எழுச்சியோடு விளங்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு'' என்று கரம் கூப்பிச் சொன்னார் தமிழ்மணி. 
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com