குருநாதரும் சீடரும்!

செல்வத்தைக் கூட சேமித்து வைக்கலாம். ஆனால் அறிவு ஆறு மாதிரி ஓடிக்கொண்டே இருக்க வேண்டாமா?''
குருநாதரும் சீடரும்!

உன்னோடு போட்டிபோடு! - 36

"சீதையின் தந்தையாகிய ஜனக மன்னனுக்குப் பெருமையும் அழகும் வீரமும் மிகுந்த  இராமனுக்குத் தன் பெண்ணைக் கொடுப்பதில் மகிழ்ச்சிதான். ஆனால் இராமனுடைய தந்தையாகிய தசரதனுக்குக் கோசலை, கைகேயி, சுமித்திரை என மூன்று மனைவியர் உண்டு என்பதை  உலகறியும்'' என்று  தமிழையா சொல்லிக்கொண்டு வரும்போதே,

"அறுபதாயிரம் மனைவிகள் அப்டீன்னுதானே நான் கேள்விப்பட்டிருக்கேன் அதோட  ஐயா சொன்ன மூணையும் கூட்டனுமா'' என்று ஆர்வமாய் கேட்டார் மீசைக்காரர். 

தமிழையா சிரித்துக் கொண்டே,   "இந்த மாதிரி கணக்கெல்லாம் இவருக்குத்தான் சரியா தெரியுது. சரி இவர் சொன்ன மாதிரியே இருக்கட்டும். இராமனுடைய அப்பாவுக்கு இத்தன மனைவிகள் இருக்கிறபோது நம்ம பொண்ணக் கட்டப் போற அவரோட  மகனான இந்த இராமன் எப்படி இருப்பானோ? தகப்பன் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறு அடி பாஞ்சுட்டா என்ன செய்வது?''  என்று தான் தயங்கினானாம்.

அவனது மனதில் இருந்த எண்ண ஓட்டத்தை உணர்ந்த இராமனின் ஆசிரியராகிய விஸ்வாமித்திரர்,  "ஜனக மன்னனே கலங்க வேண்டாம்,  இந்த இராமனைப் பெற்றவன் தசரதன் தான். ஆனாலும் இவனை வளர்த்தவர்கள் வசிட்டனாகிய ஆசிரியரும், விஸ்வாமித்திரனாகிய நானும் தான் நாங்கள் உறுதி கொடுக்கிறோம் எங்கள் மாணவனாகிய இராமன் "சிந்தையாலும் பிற மாந்தரை சிந்தியாதான்' என உறுதி மொழி கொடுத்தாராம். திருமணம் இனிதே நிகழ்ந்ததாம்'' என்று தமிழையா கதையை முடித்தார். 

உடனே தமிழ்மணி நெகிழ்ந்து போய், "பார்த்தீர்களா கடவுளாக இருந்தாலும் அவர்களுக்கு நன்னடத்தைச் சான்றிதழ் (Conduct certificate) தருவதற்கு இரண்டு ஆசிரியர்கள் தான் தேவைப்பட்டிருக்கிறார்கள்'' என்று எல்லாரையும் பார்த்துச் சொல்லிவிட்டு, "ஐயா இன்றைய ஆசிரியர் மாணவர் உறவு நிலைகள் குறிப்பிட்டுச் சொல்லும்படி இல்லை,  இதுபோன்ற நல்ல கதைகளை நாம் இளைய தலைமுறையினர் உணரும்படி சொல்ல வேண்டும். அப்போதுதான் அடுத்த தலைமுறை மிகச்சிறப்பாய் அமையும்'' என்று கூறினார்.

உடனே நானும் "தமிழ்மணி ஐயா கூறுவது மிகச் சரியானது அவர் மேல் நாடுகளில் கற்றவர் பணிபுரிந்தவர் அங்கிருப்பவருடைய கல்விமுறையும், பழக்க வழக்கங்களும் வேறுவேறு. நம் நாட்டைப் பொறுத்தவரை ஆசிரியர் என்பவர் தந்தைக்கும் தெய்வத்திற்கும் நடுவில் வருபவர். ஆசிரியர் பாதி... தெய்வம் பாதி... அவர்தான் குரு. தமிழ்த்தாத்தாவைப் பற்றி நீங்கள் கேள்விபட்டிருக்கிறீர்களா?'' என்று நான் அங்கிருந்த இளைஞர்களைக் கேட்டேன்.

"நிச்சயமாக உ.வே.சாமிநாத ஐயர் அவர்களைப் பற்றித்தானே சொல்கிறீர்கள். உத்தமதானபுரம் வேங்கட்ராமன் சாமிநாதன் என்பதன் சுருக்கம் தானே உ.வே.சா? தமிழ்த்தாத்தாவை தெரியாதவர்கள் யார் இருக்க முடியும்?''  என்று ஹெட்போன் பாட்டி "டான் டான்' என்று பதில் சொல்லி கேள்வியும் கேட்டார்கள்.

"நன்றி அம்மா,  மகாகவி பாரதியார் கூட  உ.வே.சா அவர்களை புகழ்ந்து பாடியிருக்கிறார் அவருடைய குருநாதர் பெயர்தான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை "என் சரித்திரம்' எனத் தன் சரித்திரத்தை எழுதிய உ.வே.சா அவர்கள் தன் குருநாதராகிய மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் சரித்திரத்தையும் இரண்டு பகுதிகளாக எழுதி வெளியிட்டுள்ளார். அதிலும் அவர் தன் ஆசிரியரின் பெயரை ஒருபோதும் குறிப்பிடமாட்டார். "ஐயா அவர்கள்' "பிள்ளை அவர்கள்' என்று தான் குறிப்பிட்டுச் சொல்வார் அதில் ஓர் அற்புதமான செய்தியைச் சொல்லியிருப்பார். அவர் பிறந்தது உத்தமதானபுரமாக இருந்தாலும் படித்தது மாயவரத்தில், வேலை பார்த்தது கும்பகோணத்தில், கடைசிக்காலத்தில் வாழ்ந்தது சென்னை திருவல்லிக்கேணியில், மறைந்தது திருக்கழுக்குன்றத்தில்'' என்று சொல்லிக்கொண்டே வந்த நான் சற்றே நிறுத்தினேன்.

உடனே தமிழ்மணி சூடான சுக்குக்காபியை எனக்குக் கொடுத்து, "ஐயா இதை குடித்துக் கொண்டே படித்ததை சொல்லுங்கள்'' என்றார். "திருவல்லிக்கேணியில் ஒரு நாள்'' என்று நான் தொடங்கினேன்.

தொடர்ந்து பேசினேன்:    "உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் தன் ஆசிரியராகிய மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களை "ஐயா' அவர்கள் என்றுதான் குறிப்பிடுவார். அவர் திருவல்லிக்கேணியில் வசித்து வந்தபோது ஒரு சம்பவம் நிகழ்ந்தது'' என்று சொல்லிக்கொண்டே வந்த நான் சற்றே நிறுத்த, தமிழ்மணி சூடான சுக்குக்காபியை எனக்குக் கொடுத்து. "ஐயா இதைக் குடித்துக்கொண்டே நீங்கள் சொல்ல வருகிற செய்தியை சொல்லுங்கள்'' என்றார். 

"உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் தன் வாழ்நாளில் ஆசிரியப் பணியோடு பழந்தமிழ் ஏடுகளைத் தேடிஎடுத்து அவற்றைப் பதிப்பிக்கும் பணியில் பெரும் கவனம் செலுத்தினார். பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும், ஐம்பெருங்காப்பியங்களும் அவரது முயற்சியால்தான் தமிழ் உலகுக்கு கிடைத்தன. அவரின் தமிழ்ப்புலமையைப் பட்டை தீட்டிக் கொடுத்தவர் அவருடைய ஆசிரியராகிய மீனாட்சி சுந்தரம்பிள்ளை தான். ஏடுகளைத் தேடி அந்த எழுத்துக்களைப் படித்து அதை நூல் வடிவில் கொண்டுவர அவர் பட்டபாடு அரும்பாடு பெரும்பாடு, அதனால் அவருக்கு புத்தகத்தின் அருமை தெரியும்'' என்று நான்  சொல்லிக்கொண்டு வரும்போது,

"ஐயா நீங்கள் சொல்லுகிற உ.வே.சா அவர்களுக்கு முன்பாக வேறு யாரும் இந்தப் பணியில் ஈடுபடவில்லையா?'' என்று தமிழ்மணி கேட்டார். 

"நல்ல கேள்வி கேட்டீர்கள், இலங்கையைச் சேர்ந்த சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களும், யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலர் அவர்களும், பின்னத்தூர் நாராயணசாமி போன்றோரும் உ.வே.சா. வின் முன்னோடிகள் எனக் கூறலாம். ஆனாலும் உ.வே.சா. அவர்களின் தமிழ்ப்பணிக்கு ஈடு இணையில்லை என்று நம்மால் கூற முடியும்'' என்று நான் சொல்லிக்கொண்டு வரும்போதே,

"திருவல்லிக்கேணியில் ஏதோ  சம்பவம் என்று சொன்னீர்களே அந்தச் சம்பவத்தைப் பத்தி சொல்லுங்களேன்'' என்று ஆர்வமாய் கேட்டார் மீசைக்காரர். நானும் உடனே சிரித்துக்கொண்டே "ஐயா நீங்கள் நினைப்பது போல அது ஏதும் அடிதடி சம்பவம் இல்லை'' என்று சொல்லிவிட்டு மேலும் தொடர்ந்தேன், "உ.வே.சா. அவர்கள் தன்னுடைய எண்பதாவது வயதில் திருவல்லிக்கேணியில் உள்ள "தியாகராச விலாசம்' என்னும் தன் வீட்டில் ஊஞ்சலில் படுத்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார் அப்போது வந்த ஓர் இளைஞர், ஐயர் அவர்களை வணங்கி, "ஐயா வணக்கம் நான் உங்களிடம் ஒரு வாரத்தில் படித்துவிட்டு தருவதாகச் சொல்லி ஒரு புத்தகத்தை இரவல் வாங்கிக்கொண்டு சென்றிருந்தேன். இரண்டு மாத கால தாமதம் ஆகிவிட்டது என்னை மன்னிக்க வேண்டும்'' என்று பணிவோடு கூறினார். 

அப்போது உ.வே.சா. அவர்கள் வருத்தத்தோடு, "என்ன ஐயா!  இப்படி செய்துவிட்டீர்களே? இந்த ரெண்டு மாதகாலத்தில் எத்தனை பேர் இந்த நூலைப் படித்து ஐயம் தெளிந்திருப்பார்கள். செல்வத்தைக் கூட சேமித்து வைக்கலாம். ஆனால் அறிவு ஆறு மாதிரி ஓடிக்கொண்டே இருக்க வேண்டாமா?'' என்று கேட்டுவிட்டு, "உமது பேர் என்ன?'' என்று வந்த இளைஞரைப் பார்த்துக் கேட்டாராம். அதற்கு அந்த இளைஞரும் சற்று பயத்தோடு "என் பெயர் மீனாட்சி சுந்தரம்'' என்றாராம்.

உடனே சட்டென ஊஞ்சலில் இருந்து எழுந்த உ.வே.சா. அவர்கள், "எங்களது ஐயா (ஆசிரியர்) பேரையா வைத்திருக்கிறீர்கள்? மொதல்லையே சொல்ல வேண்டாமா?'' என்று சொல்லிவிட்டு அந்த இளைஞர் தன்னிடத்தில் கொடுக்க வந்த அந்தப் புத்தகத்தை வாங்கி தன் கையொப்பமிட்டு மகிழ்வோடு அவரை வாழ்த்தி அவருக்கே அன்பளிப்பாய் அந்தப் புத்தகத்தைக் கொடுத்து வழியனுப்பி வைத்தாராம்.  பார்த்தீர்களா ஆசிரியர் பெயரைச் சொன்னவுடன் எத்தனை வேதியியல் மாற்றம் ஏற்படுகிறது?'' என்று நெகிழ்வோடு சொன்ன நான், "அப்படி அந்தப் புத்தகத்தை வாங்கிச் சென்ற இளைஞர் யார் தெரியுமா?''  என்று கேட்டு நிறுத்தினேன். 

எல்லோரும் என் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்கள், "ஐயா எப்போதும் போல ஒரு "க்ளூ' கொடுங்களேன்'' என்று ஆர்வமாய் கேட்டார் ஹெட்போன் பாட்டி,

"சரி' என்று சொன்ன நான், "அந்த இளைஞரின் சகோதரர் மிகச்சிறந்த நாடகக் குழுவை நடத்தி வந்தவர். அந்தக் காலத்திலேயே லண்டன் மாநகர் சென்று நாடகங்களைப் போட்ட தெ.பொ.கிருஷ்ணசாமி பாவலருடைய தம்பிதான் இவர். இவர் யார்?'' என்று கேட்டேன்.

"தெரியாததைக் கண்டுபிடிக்க தெரிஞ்ச விஷயத்தை  சொல்லுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனால் ஐயா நமக்கு தெரியாத விஷயத்த வச்சே யாருக்கும் தெரியாதது மாதிரி சொல்லுறாரு... உங்களுக்குத் தெரியுதா?''  என்று கோமாளி அடுக்கிக்கொண்டே போக,

"அட இருப்பா நீ வேற குழப்பிக்கிட்டு, ஐயா இன்னொரு  க்ளூ'' என்றார் ஒரு பெரியவர், உடனே நானும், "அந்த இளைஞர்தான் பிற்காலத்தில் தமிழ் மொழியியல் அறிஞராய் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராய் திகழ்ந்தவர்'' என்று நான் சொல்லி முடிக்கும் முன்பே,
"தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் தான் அந்த இளைஞர்'' என்று மகிழ்ச்சியோடு கூறினார் தமிழையா.

நானும் உடனே "மிகச் சரியாகச் சொன்னீர்கள்'' என்று அவரைப் பாராட்டிவிட்டு, "இவருக்கு மேலும் ஒரு சிறப்பு உண்டு. நமது இந்திய நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவராக விளங்கிய சர்வ பள்ளி இராதகிருஷ்ணன் அவர்களுக்கு அண்ணாமலை பல்கலைக்கழகம் 42வது டாக்டர் பட்டத்தை வழங்கியபோது அப்பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். அப்போது நடைபெற்ற ஆய்வரங்கில் சங்க இலக்கியங்கள் குறித்த ஆய்வுக் கட்டுரையை தெ.பொ.மீனாட்சி சுந்தரானார் அவர்கள் வாசிக்க, அக்கட்டுரையை முழுமையாகக் கேட்ட சர்வ பள்ளி இராதா கிருஷ்ணன் அவர்கள், "தமிழ்மொழியின் பழமையும் பெருமையும் உங்களைப் போன்றோர்களால் பெருமை பெறும்' என்ற பாராட்டையும் வழங்கி விட்டுச் சென்றாராம். இத்தனை பெருமைகளை உடையவர்தான் தெ.பொ.மீ'' என்று நான் முடித்தேன். 
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com