விக்ரம் வேதா!

"நீங்கள் பேசியதையெல்லாம் ஒரு செய்திப்படமாக எடுத்து மாணவர்களுக்குப் போட்டுக் காண்பித்தாலே போதும். அவ்வளவு செய்திகளை அத்தனை பேரும் பேசுகிறீர்கள். நான் பள்ளியில் படிக்கும் போது தொடங்கி "கடலும் கிழவனும்'
விக்ரம் வேதா!

உன்னோடு போட்டிபோடு! - 37

அப்போது கடலுக்கு நடுவே மீன் பிடிப்பதற்காக சிறு விளக்குகளோடு படகுகள் அணிவகுத்துச் செல்லும் காட்சி எல்லோரையும் ஈர்த்தது.

"தரையில் வாழுகிற நாம் நம் பிள்ளைகளை, நண்பர்களை, உறவினர்களை பள்ளிக்கோ, கல்லூரிக்கோ, வேறு ஊர்களுக்கோ அனுப்புகிற போது ஜாக்கிரதை, கவனம் என்றெல்லாம் சொல்லுகிறோமே,  ஆனால் கடலுக்கு நடுவே ஏதேனும் ஆபத்து வந்தால் அந்தப் படகை ஓட்டிச் செல்வோரின் துணிவையும் அவர் நம்புகின்ற கடவுளின் துணையையும் தவிர, வேறு யார் உதவிக்கு வர முடியும? நம் நாட்டு இளைஞர்களுக்கு நீச்சல் அடிக்க, படகோட்ட, மீன்பிடிக்க, வாகனங்களை ஓட்ட என்று அனைத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும். துன்பத்தைக் கண்டு அஞ்சாமல் போராடும் குணம் இருந்தால்தான் வெற்றி பெற முடியும் என்பதை அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும்''  என்று நான் உணர்வோடு கூறினேன். 

"நீங்கள் சொல்வதுபடி செய்வது என்றால் "கடலும் கிழவனும்'  என்ற புகழ்பெற்ற அமெரிக்க நாவலை மாணவர்களுக்குப் பாடமாக வைக்க வேண்டும். அதன் ஆசிரியர் யார் தெரியுமா?'' என்று தமிழ்மணி கேட்டவுடன்,

"ஐ நோ' என்று உற்சாகமாய் எழுந்தது பேத்தி,  "எர்னஸ்ட் ஹெமிங்வே' என்று கத்தியது.  நான் உடனே "சபாஷ்'' என்று பாராட்டிவிட்டு, "நீ அந்த நூலைப் படித்திருக்கிறாயா?''  என்று கேட்டேன்.  அதற்கு "த ஓல்டு மேன் அன்ட் த சீ' (THE OLD MAN AND SEA) - ஐ ரீட் தட் புக், லேட்டர்,  ஐ சா த மூவி, எனக்கு ரொம்பப் பிடிக்கும்''  என்று மகிழ்ச்சியாகச் சொன்னது. "பார்த்தீர்களா இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்களைக் கூட அந்த நாவல் எப்படி ஈர்த்திருக்கிறது பார்த்தீர்களா?''  என்று நான் கூறினேன்.

எங்கள் உரையாடல்களில் தேவையானால் மட்டுமே கலந்து கொண்டு அரிய செய்திகளைச் சொல்லும் கடல்சார் பொறியியல் பேராசிரியர், "கடலும் கிழவனும்' எனும் நாவலின் பெயரைக் கேட்டவுடன் மகிழ்ச்சி பொங்க, தமிழ்மணிக்குக் கைகொடுத்தார்.  பின்னர் தன் கையில் இருந்த சுக்குக் காப்பியை ஒரு மடக்குக் குடித்துவிட்டு ஆவி பறக்கத் தன் பேச்சினைத் தொடங்கினார்.

"நீங்கள் பேசியதையெல்லாம் ஒரு செய்திப்படமாக எடுத்து மாணவர்களுக்குப் போட்டுக் காண்பித்தாலே போதும். அவ்வளவு செய்திகளை அத்தனை பேரும் பேசுகிறீர்கள். நான் பள்ளியில் படிக்கும் போது தொடங்கி "கடலும் கிழவனும்' என்ற நூலைப் படித்து வருகிறேன். எத்தனை ஆச்சரியம்! முதலில் தமிழில் படித்தபோது இருந்த மகிழ்ச்சி, பின்னர் நான் பேராசிரியரான பின்பு அந்நூலின் முழு வடிவத்தை ஆங்கிலத்தில் படித்தபோது மேலும் கூடியது. அந்நூலாசிரியர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர். எர்னஸ்ட் ஹெமிங்வே என்பது அவரது இயற்பெயர். இவரது பெரும்பாலான இலக்கிய பங்களிப்புகள் 1920-களின் மத்தியிலிருந்து 1950-களின் மத்தி வரை எழுதப்பட்டதாகும். அவரது பல படைப்புகள் எல்லோராலும் விரும்பிப் படிக்கப்பட்டவை. "கடலும் கிழவனும்' நாவலுக்காக இவருக்கு 1953 ஆம் ஆண்டுக்கான "புலிட்சர் பரிசும்' 1954ல் இலக்கியத்திற்கான "நோபல் பரிசும்' வழங்கப்பட்டன. இவரது  "கடலும் கிழவனும்'   நாவலுக்குத் தமிழில் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பின்னர் இந்நூல் சினிமாவாக எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விடாமுயற்சி, தன்னம்பிக்கை, வாழ்வா? சாவா? என்ற போராட்டம்.  இத்தனையும் அந்தக் கதையின் நாயகனுக்கு வயோதிக காலத்தில் நடக்கும் சோதனைகள், கடைசியில் வெற்றி பெற்றது யார்? என்பதை அந்த நாவலைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்களேன்''  என்று மர்மமாக முடித்தார்.

"ஐயா, இதென்ன அந்தக் காலச் சினிமா பாட்டுப் புத்தகத்தில் கதைச்சுருக்கம் போடுவதைப் போல சொல்கிறீர்கள்? மாலதியின் கதி என்ன? கடத்திச் செல்லப்பட்டாளா? பாண்டியன் காணாமல் போனானா? பிரிந்த குடும்பம் ஒன்று சேர்ந்ததா? விடை வெள்ளித்திரையில் காண்க'  என்று போடுவதைப் போல் கதையை முழுக்கச் சொல்லாமல் பாதியிலேயே படக்குன்னு முடிச்சுப்புட்டீங்களே'' என்று கவலையோடு கேட்டார் மீசைக்காரர்.

"நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் இன்றைய இளைய சமுதாயத்தைப் படிக்கத் தூண்டுவதற்காக நம் பேராசிரியர் மிகச் சுருக்கமாக அந்த நூல் பற்றிச் சொன்னார்'' என்று மீசைக்காரருக்கு நான் ஆறுதல் கூறிவிட்டு, மேலும் தொடர்ந்தேன். "நான் 2012ஆம் ஆண்டில் அமெரிக்கா சென்றிருந்த போது நண்பர்களோடு சேர்ந்து நயாகரா நீர்வீழ்ச்சியைக் காண்பதற்காகக் காரில் பயணப்பட்டோம். நாங்கள் நியூஜெர்சியில் இருந்து புறப்பட்டுச் சாலைமார்க்கமாக ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணப்பட்டோம். அப்போது நயாகரா நீர்வீழ்ச்சி இருக்கும் பஃப்பல்லோ மாநகரத்திற்கு முன்பாக அந்த நெடுஞ்சாலையில் மிகப்பெரிய அறிவிப்புப் பலகை ஒன்றைப் பார்த்தேன். "எர்னஸ்ட் ஹெமிங்வே' வசித்த வீடு அருகில் 10மைல் தூரத்தில் உள்ளது என்ற அறிவிப்புத்தான் அது. உடனே நான் என் அமெரிக்க நண்பர்களிடம், "அங்கே சென்று வரலாமா? எனக் கேட்டேன். "ஆனால் நாம் இரவுக்குள் நயாகரா செல்ல வேண்டியிருப்பதால் இப்போது இயலாது பின்னர் ஒருமுறை பார்க்கலாம்' என்றார்கள். பின்னர் எங்களது பேச்சு முழுவதும் "கடலும் கிழவனும்' நூல் பற்றியும் அந்த எழுத்தாளர் பற்றியுமே அமைந்தது'' என்று நான் சொல்லி முடித்தேன்.

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே ஹெட்போன் பாட்டியும், அவர்களின் பேத்தியும் தங்களது "ஐபேடில்' தேடி "கடலும் கிழவனும்' நாவலையும், அதை எழுதிய ஆசிரியர் குறித்த செய்திகளையும், புகைப்படங்களோடு எடுத்து எல்லாருக்கும் காட்டினார்கள்.

"அடேயப்பா, இதென்ன இம்புட்டு ஆச்சரியமாய் இருக்கு, கொஞ்சம் விட்டா, இந்த ரெண்டுபேரும் இந்தச் சின்ன சிலேட்டு வழியா நம்ம எல்லாரையும் அமெரிக்காவுக்கே கூட்டிட்டுப் போயிருவாங்க போல இருக்கே''  என்று ஒரு கிழவர் வியப்போடு சொன்னார்.

"நீங்க சொல்வது உண்மைதான் ஐயா. அந்தக் காலத்தில் ஏதாவது ஒரு புத்தகத்தைப் படிக்க வேண்டுமென்றால், நூலகத்திற்கு ஓடி, புத்தகத்தைத் தேடி, அந்தச் செய்தியைக் குறிப்பெடுத்துக் கொண்டு வந்து நாம் பேசுவதற்கு பல நாட்கள், மாதங்கள் பிடிக்கும். புத்தகம் கிடைக்காமல் போனாலும் போகும். அப்படியே கிடைத்தாலும் அந்தப் பக்கங்களை நம் மாணவ சிகாமணிகள் கிழித்துக்கொண்டு போகாமல் இருக்க வேண்டும். ஆனால் இன்றையச் சூழலில் வாழும் இளைய சமுதாயத்தினரோ, கொடுத்து வைத்தவர்கள். விரல் நுனியில் வேறு உலகங்களைக் கூடக் காண முடியும்'' என்று பெருமிதமாகச் சொன்னார் தமிழ்மணி.

"இன்றைய  பாடத்திட்டங்களில், வகுப்பறைகளில் மாணவர்களுக்கான நீதிகளைச் சொல்வதற்கான வகுப்புகள்  இல்லாமல் போனதும் வருத்தத்திற்குரிய செய்திதான்'' என்றார் தமிழையா. "இருக்குற பாடங்களை முடிக்கவே நேரம் பத்தலை. இதுல கதை சொல்லிட்டிருந்தா அந்தப் பையன் எப்படி பாஸ் பண்ணுவான்? எப்படி கட் ஆஃப் மார்க் வாங்குவான்? எப்படி மெடிக்கல் சீட் வாங்குவான்? எப்படி என்ஜீனியரிங் படிப்பான்?'' என்று ஒருவர் ஆவேசமாய் கேட்டார். 

"மாணவர்கள் மதிப்பெண்களை பெற வேண்டும் வாழ்க்கையில் முன்னுக்கு வரவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, ஆனால் அவர்களுக்குள் இருக்கின்ற மனிதநேயம் கெட்டுப் போய்விடக் கூடாது அல்லவா?'' என்று ஆதங்கத்தோடு கேட்டார் தமிழையா.

நானும் "நீதிக் கதைகளுக்குரிய வகுப்புகள் (Moral instruction class) வாரத்தில் ஒரு நாள் தான் வரும். ஆனால் அந்த ஒரு நாள் கேட்ட கதைதான் நம் வாழ்நாளில் மறக்கமுடியாத செய்திகளாக இன்றைக்கும் இருக்கின்றன. உதாரணமாக என் இளம் வயதில் கேட்ட நீதிக்கதை ஒன்றை இப்போதும் என்னால்  திரும்பச் சொல்லிக் காட்ட முடியும்''  என்று சொன்னேன்.

"அது என்ன கதை?'' என்று ஆர்வமாய் கேட்டார் தமிழ்மணி. "விக்ரமாதித்தனும் வேதாளமும் கதைதான்'' என்றேன் நான். 

"ஓ "விக்ரம் வேதா' மாதவன் விஜய் சேதுபதி நடிச்சது இல்லையா? முந்தியே வந்த பழைய படமா இது?'' என்று சில இளைஞர்கள் ஆர்வமாய் கேட்டார்கள் நான் சிரித்தபடி, "இல்லை, இல்லை... இந்தப் படம் புதுப்படம் தான், ஆனால் பழைய  வேதாளமும் விக்ரமாதித்தனும் பேசுவதை இந்தப் படத்தில் புதிய முறையில் சொல்லியிருக்கிறார்கள்'' என்றேன்.

"ஓகோ பழைய கள்ளு புதிய மொந்தை அப்படித்தானே?'' என்று ஒரு பெரியவர் கிறக்கத்தோடு கேட்டார். 

"நல்ல உதாரணம் சொல்லுறாரையா நாட்டாமை!'' என்று அவரைக் கேலி செய்தார் ஒருவர்.

"ஐயா அந்தக் கதை என்ன? அதச் சொல்லுங்களேன்'' என்று தமிழையா கேட்க, "விக்ரமாதித்தன் ஒரு சகலகலா வல்லவன்'' என்று நான் தொடங்கினேன், உடனே "அன்பானவன், அசராதவன், அடங்காதவன் இதென்ன சிம்புப் படம் மாதிரி சினிமா படப்பெயரா ஐயா சொல்லுறாரு?'' என்று ஒரு இளைஞர் மற்றொருவரிடம் கேட்க, "அட சும்மா இருங்கப்பா, அவர் சொல்லட்டும்'' என்று ஒரு பெரியவர் கோபத்தோடு சொன்னார். 

"வீரம் மிகுந்த விக்ரமாதித்தனும் அவருடைய விவேகம் மிகுந்த மந்திரியாகிய பட்டி என்பவரும் சேர்ந்து நாடாறு மாதம், காடாறு மாதம் எனச் சென்று வருவார்களாம்'' என்று நான் சொல்ல, " நாடாறு மாதம், காடாறு மாதமா? அப்படின்னா?''  என்று புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள்.

உடனே தமிழையா உள்ளே புகுந்து "அதாவது அந்தக் காலத்தில் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி இவையெல்லாம் கிடையாது. எனவே நாட்டில் நடப்பதை அறிந்து கொள்வதற்காக மன்னர்கள் மாறுவேடம் அணிந்து நகர்வலம் சென்று மக்களின் மனநிலையை அறிந்து வருவார்கள். அவர்களின் குறைகளை அறிந்து அவற்றைத் தீர்த்து வைப்பார்கள். ஆறு மாதம் நாட்டில் இருந்தால், ஆறு மாதம் காடு, மேடு என்று ஊர் சுற்றி வருவார்கள். இதைத்தான் நாடாறு மாதம் காடாறு மாதம் என்று ஐயா கூறுகிறார்'' என்றார்.

நான் அவர் விளக்கத்துக்கு நன்றி சொல்லிவிட்டு, "அப்படி ஊர் சுற்றி வரும் விக்ரமாதித்தனும், பட்டியும் மக்களோடு மக்களாக கலந்து திரிவார்கள். நாட்டில் அதிசயங்களை அறிவார்கள். அப்படி அவர்கள் சுற்றிவந்த போது ஒரு நாட்டின் இளவரசி வைத்திருந்த போட்டிகளைப் பற்றி கேள்விப்பட்டார்கள். அந்தப் போட்டிகளில் எவர் வெல்கிறாரோ, அவர் தனக்கு மாலையிடலாம் என்றும், தோற்றவர்கள் அடிமையாக வேண்டும் என்றும் அறிவித்திருந்தாள். அப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற முடியாத மன்னர்கள் பலரையும் அவள் அடிமைப்படுத்தி வைத்திருந்தாளாம். இதனைக் கேள்விப்பட்ட விக்ரமாதித்தனும், பட்டியும் அந்தப் போட்டிகளில் பங்கேற்கச் சென்றார்கள். அத்தனை போட்டிகளிலும் வெற்றி நம் விக்ரமாதித்தனுக்குத்தான்.

கடைசியில் அந்த இளவரசி ஒரு புதிய போட்டியை அறிவித்தாள், அந்தப் போட்டியில் விக்ரமாதித்தன் வெற்றி பெற்றானா? இளவரசிக்கு மாலையிட்டானா? ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு''....
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com