வழுதியே... எழுதி!

"ஸ்டாப்... ஸ்டாப்... கடல் வத்திப் போனது.. தொங்கும் கோட்டைகள் அதை அழித்தது.. இதெல்லாம் நம்ம இலக்கியத்தில் இருக்குன்னு சொன்னீங்களே? அத முதல்ல சொல்லுங்க'' என்று அந்தப் பேத்தி ஆர்வமுடன் கேட்டது.
வழுதியே... எழுதி!

உன்னோடு போட்டிபோடு! - 8
"வற்றிய கடலாம், தொங்கும் கோட்டைகளாம்... இதென்ன ஹாரிபாட்டர் கதையின் ஏழாவது பாகமா?'' என்று அந்தப் பேத்தி திகைக்க, நானும் சற்றும் தயங்காமல், "சரியா சொல்லிட்டீங்களே! திருவிளையாடற்புராணத்தில் மதுரைக்காண்டத்தில் "வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலத்தில்' இருக்கிறதே'' என்று நான் உற்சாகமாகச் சொன்னேன்.

"ஆமாய்யா திருவிளையாடற்புராணத்திலயும் இருக்கு, பஞ்சபுராணத்துல இருக்கு, சிலப்பதிகாரத்துல இருக்கு... அப்பிடின்னு சொல்லிக்கிட்டே போங்க'' என்று சற்று எரிச்சலோடு சொன்னார், அந்த மீசைக்காரர்.

நான் உடனே அவரைக் கையெடுத்துக் கும்பிட்டு," என்ன ஆச்சர்யம்! கடல் வற்றிய படலத்தைச் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளும் சொல்லியிருக்கிறார் என்பதை மிகச் சரியாகச் சொல்லிவிட்டீர்களே! ஆமாம்... நீங்கள் என்ன ஓய்வுபெற்ற தமிழாசிரியரா?'' என்று நான் அவரைப் பார்த்து ஆர்வமாய்க் கேட்டேன்.

"அடப் போங்கய்யா! நான் ஏதோ பசியிலயும் கோபத்துலயும் கேலியா கேட்டா, என்னயப் போய் தமிழ் வாத்தியாரான்னு கேட்டுக்கிட்டு? என் கையெழுத்த நான் போடவே மூன்று நாளாகும்'' என்று அவர் வருத்தத்தோடு சொன்னார்.

அப்போதுதான் எனக்கு ஒன்று புரிந்தது.  முறையாகச் சென்று பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கல்வி கற்கும் வாய்ப்பு இவருக்கு இளம்வயதில் இல்லாமல் போயிருக்க வேண்டும். அந்த ஏக்கத்தில் யார் என்ன சொன்னாலும், இடைமறித்துக் கேள்வி கேட்பதும், சொல்லும் பதில்களுக்குக் கேலியாகச் சிரிப்பதும் இவரின் சுபாவமாகவே மாறிவிட்டது என்று.

"அதனால் என்னய்யா? கையெழுத்துப் போடத் தெரியாவிட்டாலும் கல்வி கற்க வாய்ப்புக் கிடைக்காமலிருந்தாலும் கூட எத்தனையோ பேர் மேதைகளாக, சிந்தனையாளர்களாக விளங்கியிருக்கிறார்கள்.  வெற்றி பெற்றிருக்கிறார்கள். உங்களது கேள்விகளால் தானே நாங்கள் புதுப்புதுச் செய்திகளைச் சொல்ல முடிகிறது?'' என்று நான் அவரை மனதாரப் பாராட்டினேன்.

"ஐயா சொல்வது உண்மைதான். படிக்க வாய்ப்புக் கிடைத்த  பலபேர், அதைப் பயன்படுத்துவதில்லை. கல்வி என்பதே வேலை பார்ப்பதற்காகவும் சம்பளம் பெறுவதற்காகவும் மட்டுமே என்று நினைப்பவர்களால் சிந்தனையாளர்களாக ஒருபோதும் மாற முடியாது. மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பல்கலைக்கழகத்தில் தங்கப் பதக்கம் வாங்கியவர்கள் இந்தச் சமுதாயத்தை, அப்பாவி மக்களை முன்னேற்ற ஏதாவது செய்திருக்கிறார்களா?'' என்று ஆவேசமாகக் கேட்டார், எங்களோடு வந்த ஒரு சமுதாயத் தொண்டு நிறுவன நண்பர்.

"ஸ்டாப்... ஸ்டாப்... கடல் வத்திப் போனது.. தொங்கும் கோட்டைகள் அதை அழித்தது.. இதெல்லாம் நம்ம இலக்கியத்தில் இருக்குன்னு சொன்னீங்களே? அத முதல்ல சொல்லுங்க'' என்று அந்தப் பேத்தி ஆர்வமுடன் கேட்டது.

"முதலில் கடலை வற்றச் செய்ய முடியுமா அல்லது கடல் உள்வாங்கி வற்றிப் போயிருக்கிறதா?'' என்று நானொரு கேள்வியை வைத்தேன்.

"நல்லாயிருக்குய்யா எங்க கேள்விக்கு நீங்க பதில் சொல்றத விட்டுட்டு, எங்களப் பாத்து கேள்வி கேக்குறீங்க?'' என்று மீசைக்காரர் திரும்பி ஆரம்பிக்க, அங்கே மணற் குவியலில் அமர்ந்திருந்த ஒரு மீனவர் எழுந்து வந்து, "ஐயா சொல்றது உண்மைதான். கடல் உள்வாங்கவும் செய்யும், வத்திப் போற மாதிரியும் தெரியுறதும் உண்டு. ராத்திரியில மீன் பிடிச்சுட்டு வந்து படகை தண்ணியில நிறுத்தி வச்சிருப்போம். திடீர்ன்னு காலையில பாத்தா படகுகள் மண் தரையில கெடக்கும். கடல் தண்ணி அரை மைலுக்கு அப்பால கெடக்கும்'' என்று அவர் ஆதாரத்துடன் சொன்னார்.

"சரியாச் சொன்னீங்க  ஐயா. திருவிளையாடற்புராணத்தில் "கடல் சுவற வேலெறிந்த படலத்தில்' உக்கிரப்பெருவழுதி என்னும் பாண்டிய மன்னன் 96 அசுவமேத யாகம் (பரிவேள்வி) செய்து புகழ் பெற்றாராம். அதனால் பொறாமை கொண்ட வானவர் கோனாகிய (அரசனாகிய) இந்திரன், கடலரசனை நோக்கிப் பொங்கியெழுந்து மதுரையை அழிக்குமாறு ஆணையிடக் கடல் பொங்கியெழுந்ததாம். அப்போது பாண்டிய மன்னனின் கனவிலே வந்த வெள்ளியம்பலவாணர் (மதுரைச் சொக்கநாதப் பெருமான்) சித்தராகத் தோன்றி, "வழுதியே எழுதி பொங்கிவரும் கடலை வெற்றி வேலால் வற்றச் செய்க'' என ஆணையிட, பாண்டிய மன்னனும் தன் படைகளோடு விரைந்து சென்று, வேல்கொண்டு கடலில் எறிய, கடல் பின்வாங்கி வற்றத் தொடங்கியதாம்'' என்று நான் ஒரு சிறு சொற்பொழிவே ஆற்றி முடித்தேன்.

"திருவிளையாடல் படத்துல இத நான் பாத்ததா ஞாபகமில்லையே?'' என்று ஒரு பெரியவர் தலையைச் சொறிய,  "பாகுபலி படம் மாதிரி அதையும் இரண்டாம் பாகமா எடுப்பாங்கய்யா. அப்பப் பாத்துக்கலாம்'' என்று அவரருகிலிருந்த ஒருவர் அவரைச் சமாதானம் செய்தார்.

"முதல்ல, சிலப்பதிகாரத்துல வருதுன்னு சொன்னீங்க... அத மறந்துட்டீங்களா?'' என்று ஹெட்போன் பாட்டி ஞாபகமாய்க் கேட்க, நான் அசந்துபோனேன்.

நினைவாற்றலும் தொடர் சிந்தனையும்தான் ஒரு மனிதனை உயர்த்துகின்றன. அத்தகைய திறனுடையோரை உலகம் ஒருபோதும் மறப்பதில்லை என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு (மைண்ட் வாய்ஸ்), "பார்த்தீர்களா நாம் மறந்துவிட்ட செய்தியை இவர்கள் எவ்வளவு ஞாபகமாகக் கேட்டிருக்கிறார்கள்? எல்லாரும் அவர்களைப் பாராட்டுங்கள்'' என்று நான் சொன்னவுடன் அத்தனை பேரும் சந்தோஷமாகக் கைதட்ட, ஹெட்போன் பாட்டியும் எழுந்துநின்று தன் கூலிங்கிளாஸைக் கழற்றி எல்லாருடைய பாராட்டையும் ஏற்றுக் கொண்டது.

சிலப்பதிகாரத்தில், அதனை எழுதிய இளங்கோவடிகள், மதுரைக்காண்டத்தில் காடுகாண் காதையில் பாண்டியமன்னனை வாழ்த்தும்போது, 
அடியில் தன்னளவு அரசர்க்கு உணர்த்தி
வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
என்று வாழ்த்துகிறார் என்று நான் சொன்னவுடன் திருவிளையாடற்புராணத்தில் சந்தேகம் கேட்ட பெரியவர் படபடவென்று கைகளைத் தட்டினார்.

"இப்ப என்ன புரிஞ்சுச்சுன்னு கைதட்டுறீங்க?'' என்று மீசைக்காரர், அந்தப்பெரியவரைப் பார்த்துக் கோபமாகக் கேட்க, "ஏன்யா ஐயா தமிழ்ல தான சொல்றாரு? வேல் எறிந்த.. வடிவேல் எறிந்த.. என்ன அர்த்தம் வேல கொண்டு கடல்ல எறியக் கடல் வத்திப்போச்சு. இதத்தான் சொல்றாரு. எல்லாத்தையும் விளக்க முடியாதுய்யா. சில விசயத்த நாமளாத்தான் புரிஞ்சுக்கணும்'' என்று அவரும் கோபமாகச் சொல்ல, அங்கே ஒரு கடற்போர் தொடங்கும் போலிருந்தது.

"இருங்க... இருங்க... நானே விளக்கத்தச் சொல்றேன்'' என்று நான் சொல்லத் தொடங்கினேன். இளங்காற்று வீச, கடற்பறவைகள் சுற்றிலும் வந்தமர்ந்து கேட்கத் தொடங்கின. அப்போது எங்களை நோக்கி ஒருவன், கையில் ஏதோவொன்றை ஏந்திக் கொண்டு, கத்திக் கொண்டே ஓடிவந்தான்.
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com