வலம்புரிச்சங்கே முழங்கு!

சங்குகளில் இரண்டுவகை உண்டு. வலம்புரி, இடம்புரி. உலகில் இடம்புரிச்சங்குகள் எளிதாகக் கிடைக்கும். ஆனால், வலதுபக்கம் சுழிந்திருக்கும் வலம்புரிச்சங்குகள் (CLOCK -WISE WHORLS) அபூர்மாகவே கிடைக்கும்.
வலம்புரிச்சங்கே முழங்கு!

உன்னோடு போட்டிபோடு! - 9

"சிலப்பதிகாரத்தில் பாண்டிய மன்னனின் புகழைக் கூற வந்த இளங்கோவடிகள் "கடலே வற்றிப் போகுமாறு' கையிலிருந்த வேலினைக் கடலை நோக்கி எறிய, கடல் அஞ்சிப் பின்வாங்கியது'' என்று நான் சொல்லிக் கொண்டிருந்தபோது எங்களை நோக்கி ஒருவன், கையில் ஏதோவொன்றை ஏந்தியபடியே கத்திக் கொண்டு ஓடிவந்தான்.

அந்தக் கடல்புறத்து மீனவ இளைஞன் எங்களருகில் வந்தபோது "வலம்புரிச் சங்கு.. வலம்புரிச்சங்கு..'' என்று அவன் போட்ட சத்தத்தில் எல்லாரும் அவனைச் சூழ்ந்துகொண்டோம். அவன் கையிலிருந்த அழகான வெண்சங்கு, எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்தது.

"கடல் தண்ணியிலதான் சங்கு இருக்கும். அது கரையொதுங்கியிருக்கும் அல்லது மீன் பிடிக்கிற வலையில சிக்கியிருக்கும். இவன் ஏதோ காணாததைக் கண்ட மாதிரிக் கத்தறானே'' என்று மீசைக்காரர் சொன்னவுடன், "யோவ்! இது வலம்புரிச்சங்குய்யா. இதன் மதிப்பு என்னன்னு உனக்குத் தெரியுமா?'' என்று பதிலுக்கு அந்த இளைஞனும் கோபமாகக் கேட்டான்.

அதற்குள் கடல்சார் பொறியியல் பேராசிரியரும், அருகிலிருந்த மீனவரும் அந்தச்சங்கின் அருமையை விளக்கத் தொடங்கினார்கள். அதன் சுருக்கமாவது:
சங்குகளில் இரண்டுவகை உண்டு. வலம்புரி, இடம்புரி. உலகில் இடம்புரிச்சங்குகள் எளிதாகக் கிடைக்கும். ஆனால், வலதுபக்கம் சுழிந்திருக்கும் வலம்புரிச்சங்குகள் (CLOCK -WISE WHORLS) அபூர்மாகவே கிடைக்கும். சங்குப்பூச்சிகள் கடல்வாழ் உயிரினம்தான். நத்தைக்கூடு போல, சங்கும் கூடுதான். ஆனால், அபூர்வமாகக் கிடைக்கும் வலம்புரிச் சங்கை இந்துக்கள் புனிதமாகக் கருதுகின்றனர். மகாவிஷ்ணுவின் கையிலும் சங்கு இருப்பதால் இது புனிதமாகக் கருதப்பட்டிருக்க வேண்டும்.

இப்படி அபூர்வமாகக் கிடைப்பதால்தான் இதற்கு விலையும் அதிகம், இதன் பெருமையை உணர்ந்துதான் இந்த இளைஞர் மகிழ்ச்சியோடு கத்தியிருக்க வேண்டும்'' என்று அவர்கள் சொன்னார்கள்.

"மகாபாரதப் போருல கிருஷ்ணபரமாத்மா கையில இருந்த சங்கு பெயர் தெரியுமோ?'' என்று ஹெட்போன் பாட்டி கேட்க, அதன் பேத்தி மட்டுமே கைதூக்கியபடி, "பாஞ்சஜன்யம்'' என்று சொல்லியது. "சபாஷ்'' என்று பேத்தியைப் பாராட்டிய பாட்டி, "திருப்பாவை பாடிய ஆண்டாள், கண்ணன் கையில இருக்குற சங்க பத்திப் பாடியிருக்காளே? அந்தப் பாட்டப் பாடு'' என்று சொன்னவுடன், அந்தப் பேத்தி சட்டென்று சம்மணக்கால் போட்டுக் கடற்கரை மணலில் உட்கார்ந்து கொண்டு சின்ஸியராகத் தன் செல்போனில் ஸ்ருதிக்கான செயலியை (app) இயக்கிவிட்டு கணீரென்ற குரலில்,
கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித் திருக்குமோ
மருப்பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே
என்று இசையோடுப் பாடத் தொடங்க அத்தனை பேரும் மகுடியோசை கேட்ட நாகம் போல மயங்கிப் போனோம்.

"கண்ட நடை தாளத்துல, கமாஸ் ராகத்துல பாடுறா. இதோட தாய் ராகம், ஹரிகாம்போதி'' என்று ஹெட்போன் பாட்டி விவரித்தபோது, பெருமிதமும் பாசமும் மகிழ்ச்சியும் அந்தக்குரலில் இழையோடியது. அவர்களிருவரையும் நாங்கள் கைதட்டிப் பாராட்டினோம்.

தமிழிலக்கியத்தில் நெய்தல் நிலப்பாடல்களில் இந்தக் கடல்சங்கு குறித்த செய்திகள் அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, பரிபாடல் போன்றவற்றில் சொல்லப்பட்டிருக்கின்றன. கார்த்திகை மாதத்தில் திங்கட்கிழமைகளில் 1008 சங்குகளை வைத்துச் சங்காபிஷேகம் செய்வது இப்போதும்கூட சிவன் கோவில்களில் நடைபெறுகின்றது என்று நானும் என் பங்குக்குச் சொன்னேன்.

அன்றைக்கு எங்களோடு சுற்றுலா வந்த நண்பர்களும் அவர்களுடைய குடும்பத்தாரும் வியப்போடு பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டுமிருந்தார்கள்.

"பார்த்தீர்களா இலக்கியம், இசை, அறிவியல், சுற்றுப்புறச்சூழல், வாழ்க்கை அனுபவங்கள் என ஒவ்வொருவரும் தத்தம் கருத்துக்களைச் சொன்னபோது, யாரோடு யார் போட்டி போடுகிறார்கள்? என்று யோசித்துப் பார்த்தால், அறிவோடு அறிவுதான் போட்டி போடுகிறது. இந்தப்போட்டியில் ஜெயிக்கப் போவது யாரு?'' என்று நான் கேட்க, "அறிவுதான்'' என்று அழகாகச் சொன்னார் அந்த மீசைக்காரர்.

அவர் அப்படிச் சொன்னதும் உண்மையில் எல்லோரும் அசந்து போனோம். கேள்விகளாகக் கேட்டுக் கொண்டிருந்த மீசைக்காரர், ஒரு சொல்லால் அத்தனை பேரையும் ஈர்த்த விதம், என்னை வியப்பில் ஆழ்த்தியது. 

லட்டும் லட்டும் மோதும்போது உதிரும் பூந்தியும் இனிப்பாயிருப்பதைப்போல அறிவான கருத்துக்கள் மோதுகிறபோது சுடர்விடும் தீபம்போல் அறிவு பிரகாசிக்கிறது என்று நான் நினைத்துக் கொண்டேன்.

"இன்றைக்கும் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் மியூசியம், நியூயார்க்கிலுள்ள மெட்ரோபாலிட்டன் மியூசியம் போன்றவற்றில் அரியவகை வலம்புரிச்சங்குகளை வெள்ளி அல்லது தங்கத்தில் பூண் போட்டு வைத்திருக்கின்றனர். இவையெல்லாம் இந்தியக் கோயில்களிலிருந்து கொண்டு செல்லப்பட்டவை. பெளத்தர்களும் சங்கைப் புனிதமாகக் கருதுகின்றனர். அவர்களுடைய எட்டு மங்கலச் சின்னங்களில் இதுவுமொன்று. ஆயுர்வேதத்தில் கூடச் சங்கைப் பொடி செய்து பயன்படுத்துகின்றனராம்'' என்று கடல்சார் பொறியியல் பேராசிரியர் வரிசைப்படுத்திச் சொன்னார்.

"கேட்டீங்களா? அதனாலதான் நம்மவங்க குழந்தைக்குச் சங்குல பால் குடுக்குறாங்க. உணவுக்கு உணவும் ஆச்சு. மருந்துக்கு மருந்தும் ஆச்சு'' என்று சொன்ன ஹெட்போன் பாட்டி பேத்தியைப் பார்த்தார். 

"சார், அந்தரத்துல தொங்குற கோட்டை மதிலைப் பத்தி சொல்லிட்டே இருந்தீங்க. அது உண்மை தானா?'' என்று அந்தப் பேத்தி கேட்டவுடன், விடாப்பிடியான.. அறிந்து கொள்ளும் ஆர்வம் கொண்ட அந்தப் பெண்ணைப் பார்க்கிற போது, தாகமுடையவன் தண்ணீருக்கு அலைவது போல இந்தப் பெண் அத்தனையையும் தெரிந்து கொள்ள ஆர்வமாயிருக்கிறாளே! என்று மகிழ்ச்சியடைந்தேன்.

"இந்தத் திறமை வாய்ந்த பெண்ணுக்காக மட்டுமில்லை, உங்களெல்லாருக்காகவும் சொல்லுகிறேன். "தூங்கெயில் எறிந்த தொடித்தோட்செம்பியன்' என்ற புறநானூற்றுப் பாடல்வரியும், பரிபாடலில் சொல்லப்பட்டிருக்கிற ஒரு செய்தியும் தொங்குகின்ற மதிற்சுவரைத் தன் வீரத்தால் வீழ்த்திய சோழமன்னன் குறித்துக் குறிப்பிடுகின்றன. இது மட்டுமில்லை. தேவலோகத்துக்குத் தலைவனான இந்திரனையே வெற்றிகண்ட செய்திகளையும் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன'' என்று நான் சொன்னேன்.

"ஸ்டார் வார்ஸ், அவதார்.. இது மாதிரியான ஹாலிவுட் படங்கள்ல அயல் கிரகத்துக்குப் போற மாதிரி, வர்ற மாதிரி காட்டுவான். இதெல்லாம் அப்பவே இருந்ததா?'' என்று அந்தப் பேத்தி கேட்க,
"நிவாதகவசர் காலகேய வதைச்சருக்கத்தில் இதைப் பற்றி மிக அருமையாகச் சொல்லியிருப்பார், வில்லிப்புத்தூரார்'' என்று நான் சொன்னவுடன், ஏதோ மந்திரவாதி சொன்ன மந்திரச்சொற்கள் போல என் வார்த்தைகளைக் கேட்டு அத்தனை பேரும் திடுக்கிட்டுப் போனார்கள்.
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com