உன்னோடு போட்டிபோடு! - 2

அண்ணாவைப்போலப் பேச்சாளராக வேண்டுமென்றால் முதலில் படிப்பாளராக வேண்டும். படிப்பாளரென்றால் பள்ளியில், கல்லூரியில் பட்டம் பெறப் படிக்கும் படிப்பு மட்டுமில்லை. கண்டது கற்கப் பண்டிதனாகும் படிப்பு.
உன்னோடு போட்டிபோடு! - 2

திருச்சியில் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில் பாராட்டிப் பேச வந்தவர் பேசிய பேச்சு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்று சொல்லியிருந்தேன். அப்படி என்ன பேசினார், அவர்?

"இதோ நமது அன்பிற்கும் பாராட்டிற்குமுரிய இனிய நண்பரின் 39ஆவது பிறந்தநாள் இன்று'' என்று சொல்லி சற்றே நிறுத்தியவர், ஆவேசமாகத் தொடங்கினார். "இந்த 39ஆவது வயதில்தான் விவேகானந்தர் காலமானார்.  இதே 39ஆவது வயதில்தான் பாரதி மரணமடைந்தார். ஆனால்...'' என்று அவர் ஒரு விநாடி நிறுத்தியவுடன் அத்தனைபேரும் வியர்த்து விறுவிறுத்துப்போனோம்.

உண்மையில் அவர் சொல்ல வந்தது. "நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும்'' என்பதுதான். ஆனால், அவர் சொல்லியதோ அதற்கு நேர்மாறான பொருளைத் தந்துவிட்டது. எனவே, வார்த்தைகளை மிகக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.

"அபி' என்கின்ற புதுக்கவிஞர் "பேச்சு' பற்றிக் குறிப்பிடும்போது, எண்ணங்கள் வரிசை கட்டி நிற்க, எந்தெந்தக் கருத்தை, எந்தெந்தச் சொற்களில், எப்போது எப்போது நாவின் வழியே அனுப்ப வேண்டும் எனப் படிமமுறையிலே சொல்லியிருப்பார்.

அண்ணா அவர்கள் பேசும்போது வார்த்தைகள் நான்முந்தி, நீ முந்தி என்று வரிசைகட்டி நிற்குமாம்! குதிரைகளைக் கட்டுப்படுத்தும் தேர்ப்பாகன்போல வார்த்தைகளைக் கட்டுப்படுத்தி, சொற்களை எதுகை, மோனைகளோடு அமைத்து அவர் பேசும்போது பத்தாயிரம் பேர்கொண்ட கடற்கரைக்கூட்டம் கட்டுண்டு கிடக்குமாம்.

தேர்தலின்போது ஒருமுறை சென்னைக் கடற்கரையில் தன் பேச்சை இவ்வாறு முடித்தாராம்.

"மாதமோ சித்திரை
நேரமோ பத்தரை
உங்கள் கண்களில் நித்திரை
மறக்காமல் நீங்கள் பதிக்கவேண்டும் முத்திரை முத்திரை'
என்று அவர் முடித்தபோது தூக்கம் கண்களை விட்டு அகல, கூட்டம் ஆரவாரித்துக் கைதட்டியதாம்.

அண்ணாவைப்போலப் பேச்சாளராக வேண்டுமென்றால் முதலில் படிப்பாளராக வேண்டும். படிப்பாளரென்றால் பள்ளியில், கல்லூரியில் பட்டம் பெறப் படிக்கும் படிப்பு மட்டுமில்லை. கண்டது கற்கப் பண்டிதனாகும் படிப்பு. அப்படிப்பட்ட படிப்பு இன்றைய இளைய தலைமுறையினரிடம் உள்ளதா?

"நாளைக்குத் தேர்வு வைக்கப் போகிறேன்'' என்று ஆசிரியர் சொன்னவுடன், வகுப்பறையே மெளன அஞ்சலிக்கூட்டம் போல அமைதியானது. அதில் ஒரு பையன் எழுந்து, "ஐயா திடீரென்று நாளைத் தேர்வென்று சொல்லிவிட்டீர்கள். முக்கியமான கேள்விகள் மட்டும் சொல்லுங்களேன்'' என்றான் பணிவாக.

உடனே ஆசிரியர் கோபத்தோடு, "நான் என்ன முட்டாளா? முக்கியமான கேள்வியெல்லாம் சொல்லச் சொல்லி, கொஸ்டீன் அவுட் பண்ண பாக்குறியா?'' என்று சத்தம்போட, இன்னொரு மாணவன் எழுந்து, "அவன் கிடக்குறான் சார். நீங்க முக்கியமில்லாத கேள்விய சொல்லுங்க சார்'' என்றானாம்.

இப்படி இவர்கள் பேசக் காரணமே, இரண்டு கேள்விகேட்டு அதில் ஒருகேள்வி எழுதினால் போதுமென்றால், அந்த ஒரு கேள்வியை மட்டும் படித்தால் போதுமே என்று நினைக்கிற மனப்பான்மை வந்துவிட்டது.

படைப்பாளிகள் "கருவிலே திருவுடையவர்களாகப்' பிறக்கும்போதே ஞானத்தோடு பிறந்து காவியங்களை, கட்டுரைகளை, கதைகளைப் படைக்கிறார்கள் என்று ஒருசாரார் கூறுவர். ஆனால், இடைவிடாப் படிப்பினாலும், தொடர் பயிற்சியினாலும்தான் படைப்பாளிகள் உருவாகிறார்கள் என்றும் சிலர் கூறுவர்.

இந்த இரண்டு கருத்துக்களில் எது உண்மையாக இருந்தாலும், எதையும் எதிர்பாராமல் ஆர்வத்தோடு படிப்பவர்கள்தான் உயர்கிறார்கள்;  பிறரை உயர்த்துகிறார்கள்.

அமெரிக்க நாட்டில் பிறந்த பெஞ்சமின் ஃபிராங்ளின் என்ற விஞ்ஞானி, வறுமையின் காரணமாகப் பள்ளிக்குச் சென்று முறையாகப் படிக்க இயலாத சூழலில் வளர்ந்தவர். தன் அண்ணன் நடத்திய அச்சகத்தில் அச்சாகும் புத்தகப் பகுதிகளை பைண்டிங் செய்யும் வேலையைப் பார்த்துக் கொண்டே அந்தப் புத்தகங்கள் முழுவதையும் படித்துவிடுவாராம்.


வாழ்வதற்காக அவர் எத்தனையோ தொழில்களைப் பார்த்திருக்கிறார். பிற்காலத்தில் அவர் கண்டுபிடித்த  கண்டுபிடிப்புகளும், உருவாக்கிய அரிய பொருட்களும் இன்றைக்குப் பல நாட்டினரும் பயன்படுத்தும்விதமாக அமைந்திருக்கிறன.


"வீதிகளில் தெருவிளக்கை முதன்முதலில் உருவாக்கிக் கொடுத்தவர் யார் தெரியுமா?'' என்று நான் வகுப்பறையில் கேட்டபோது, "ஐயா நேற்று நீங்கள் Alchemist  பற்றிக் கேள்வி கேட்டுவிட்டுப் போய்விட்டீர்கள். அதற்குப் பதில் சொல்லவில்லையே?'' என்று ஒரு மாணவர் ஆரம்பித்தார்.

"Alchemy என்பது ரசவாதம். ரசவாதம் என்றால், ஒரு பொருளின் மூலக்கூறுகளை மாற்றியமைத்து அதனை மற்றொரு பொருளாக மாற்றுவது. நமது நாட்டில் சித்தர்கள், ரசவாதம் செய்பவர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள். தகரத்தைத் தங்கமாக மாற்ற முடியுமா? என்றெல்லாம் முயற்சித்திருக்கிறார்களாம்'' என்று ஒரு மாணவி சொல்லிவிட்டு, இதற்கு ஒரு பாடலைக்கூட மேற்கோள் காட்டினார் எங்கள் தாத்தா. அந்தப் பாட்டு. அந்தப் பாட்டு..'' என்றவுடன்,


"கந்துக மதக்களிறை வசமாய் நடத்தலாம்;  கரடி வெம்புலி யானையும் கட்டலாம்...'' எனும் தாயுமானவரின் இப்பாடலில், "வெந்தழலில் ரதம்வைத்து ஐந்துலோகத்தையும் வேதித்து விற்றுண்ணலாம்' இந்தப் பாட்டுத்தானே?'' என்று நான் கேட்க,
"ஆமாம் ஐயா! ஆமாம்'' என அந்த மாணவி மகிழ்ச்சியோடு கூத்தாடினாள்.
முதலில் கேள்வி கேட்ட மாணவன் சற்றே விழித்தபடி பார்த்து,

"என்ன நடக்குது இங்கே? ரசவாதி யார்?'' என்று திரும்பக் கேட்க, நான் ரசவாதி பற்றிச் சொல்லத் தொடங்கினேன். பிரேசில் நாட்டில் பிறந்த பவுலோ கொய்லோ (Paulo Coelho) எனும் கவிஞர் எழுதிய "அல்கெமிஸ்ட்' (ரசவாதி) என்ற அரிய புத்தகம்தான் 20 கோடிப் பிரதிகள் விற்றுச் சாதனை படைத்தது. அப்படி என்ன அதில் சொல்லப்பட்டிருக்கிறது?'' என்று நான் தொடங்க.. மணி அடித்தது

தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com