வில்லேஜ் விஞ்ஞானி!- 3

நம் வாழ்நாளில் நாம் அறியாதனவற்றை அறியும்போது ஏற்படுகின்ற ஆச்சர்யமிருக்கிறதே, அதற்கு ஈடேது இணையேது?
வில்லேஜ் விஞ்ஞானி!- 3

"ரசவாதி என்றால் யார்?'' என்று அந்த மாணவன் கேட்க, நான் சொல்லத் தொடங்கினேன். பிரேசில் நாட்டில் பிறந்த பவுலோகொய்லோ (Poulocoelho) எனும் ஒரு கவிஞர் எழுதிய அல்கெமிஸ்ட் (ரசவாதி) என்ற அரிய புத்தகம்தான் 20 கோடிப்பிரதிகள் விற்றுச் சாதனை படைத்தது. அதில் அப்படி என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று நான் சொல்லத் தொடங்க, மணிஅடித்தது. உடனே, "பரவாயில்லீங்க ஐயா... மணிய பத்தி நீங்க கவலைப்பட வேணாம், இப்ப எங்களுக்கு நூலக வகுப்புத்தான்'' என்று மாணவர்கள் ஆர்வமாகச் சொன்னார்கள். 

ரசவாதி என்ற நாவலின் நாயகனாகிய சான்டியாகோ எனும் ஆடு மேய்க்கின்ற சிறுவன் ஒருவன் பெரும் புதையலைத் தேடிப் புறப்பட்டுச் செல்கிறான். செல்லும் வழியெங்கும் அவனுக்கு ஏற்பட்ட நம்ப முடியாத அனுபவங்களும் தாங்க முடியாத துயரங்களுமாக அவனது பதினெட்டாண்டு காலப் பயணத்தை விவரித்துக் கதை நகர்கிறது. முடிவில் அப்பெரும்புதையல் அவன் வாழ்ந்த இடத்திற்கு அருகில்தான் இருக்கிறது எனக் கதை முடியும்போது நமக்குத் திகைப்பு ஏற்படுகிறது.  இத்தனை ஆண்டுகாலப் பயணமும், தேடுதலும், பட்டபாடும் பயனற்றதோ என வருந்தும்போது, அந்தப்பயணமும் அதில் கிடைத்த அனுபவமும்தான் உண்மையான பெரும்புதையல் என நினைத்துப் பார்க்கையில் இக்கதையின் உட்கருத்து புரிகிறது'' என்று நான் சொல்லி முடிக்க, "அப்ப புதையல் கெடைக்கலையா?'' என்று ஒரு மாணவன் சோகமாய்க் கேட்டான்.

உடனே ஒரு மாணவி, "ஏ! இது கூடப் புரியலையாப்பா? வாழ்க்கையில், தேடுதலின் மூலம்தான் எதையும் அடைய முடியும். அது சிலசமயம் நம் காலடியில் இருந்தும்கூட அது தெரியாமல் நாம் அலைந்து கொண்டு இருக்கிறோம் என்பதுதான் இந்தக்கதை நமக்குச்சொல்லும் நீதி'' என்று உற்சாகமாகச் சொல்லி முடிக்க, நான் மகிழ்ச்சியோடு கைதட்டினேன். "இருந்தாலும் இந்தக் கதை புரிய அஞ்சாறு வருசம் ஆகும் சார்'' என்றான் மற்றொரு மாணவன்.

"சரிங்கய்யா, தெருவிளக்கை கண்டுபிடித்து உலகத்துக்கு அறிமுகப்படுத்துனவருன்னு ஒரு கேள்வி கேட்டீங்களே? அதுக்கு பதில் சொல்லவே இல்லீயே?'' என்ற மாணவனிடத்தில், "நான் சொல்லிக் கொண்டு வரும்போதே அவரைப் பற்றிய குறிப்பும் சொன்னேனே கவனிக்கலையா?'' என்று நான் கேட்டேன். எல்லாரும் அமைதியாக இருக்க, "ஒரு க்ளு கொடுத்தால் ஈசியாக இருக்கும்'' என்று யாரோ வகுப்பறையில் முணுமுணுத்தார்கள்.

"க்ளுவா? சரி. அவர்தான் இடிதாங்கியைக் கண்டுபிடித்தவர்''
"அட முருகா... இதுக்குச் சொல்லாமலே இருந்திருக்கலாமே''
"சரி பைஃபோகல் லென்ஸ் (Bifocal Lense). இதை உலகத்துக்குக் கண்டுபுடிச்சுக் கொடுத்தவருதான் தெருவிளக்கையும் உலகுக்கு அறிமுகப்படுத்துனவரு,  நான்சொன்ன அவரு. அவரு யாரு? யாரு மனசுல யாரு?'' என்று நான் கேட்க,
 "அவர் ஒரு வில்லேஜ் விஞ்ஞானி,  ஐயா'' என்று ஒரு மாணவன் சொல்ல, சிலர் சோகமாகக் கைதட்டினார்கள். 

"சரி நூலக வகுப்புதான உங்களுக்கு? எல்லாரும் நூலகத்துக்குப்போங்க. தேடிப் பாருங்க. பதில் சொன்னவங்களுக்கு அருமையான பரிசு தருகிறேன்'' என்று சொல்லிவிட்டு நான் புறப்பட, "பெஞ்சமின் ப்ராங்க்ளின்'' என்று எழுந்து சத்தமாகக் கத்தினார், ஒரு மாணவி. "சபாஷ். சரியான விடை'' என்று நானும் சிலாகித்துப் பாராட்டினேன். அதற்குள் வகுப்பறையில் சிலபேர், நாங்களும் அவரத்தான நெனச்சோம் என்று கவலையோடு சொன்னார்கள்.

நான் என் சட்டைப்பையிலிருந்த பேனா ஒன்றினை எடுத்து அந்தப் பெண்ணுக்குப் பரிசாகத் தர முனைந்தபோது, "பெண்ணுக்குப் பரிசு, பென் (Pen) தானா?'' என்று ஒரு மாணவன் கேலியாகக் கேட்டான். நானும் சிரித்தபடியே அந்தப்பெண்ணிடத்தில், "எப்படி கண்டுபிடித்துச் சொன்னீர்கள்?''
என்று கேட்டேன். "யுரேகா'' என்று அந்த மாணவி பெருமிதமாகச்சொல்ல, "சபாஷ்'' என்று சொன்ன நான், "இந்தப் பேனாவில் ஒரு சிறப்பு உண்டு. என்ன தெரியுமா?'' என்று நான் கேட்க, "இத தேய்ச்சா பூதம் வருமா?'' என்று ஒரு மாணவன் கேலியாய்க் கேட்டான். 

"இந்தப் பேனாவை என் நண்பர் எனக்குப் பரிசாகக் கொடுத்தார். அவர் யாரென்று நான் பிறகு சொல்கிறேன். இது மரத்தால் செய்யப்பட்ட பேனா. மரப்பேனா என்று நான் சொல்ல..'' அதைப் பரிசாக வாங்கிக்கொண்ட அந்த மாணவியோ, "நானும் இதை மறப்பேனா?'' என்று சொன்னபோது அந்த சிலேடை வார்த்தைக்கு எல்லாரும் மகிழ்ந்தார்கள். 

இந்த உலகத்தில் எத்தனையோ அரிய செய்திகள் உண்டு. அதை அறியும் அறிவைத்தான் நாம் பெற்றிருக்க வேண்டும். சில நேரங்களில் நம்மைச் சூழ்ந்திருக்கின்ற அற்புதங்களை, அருமைகளை நாம் உணராமலேயே மறைந்துபோவதுதான் மிகக்கொடுமையான ஒன்று.

வெகுநாட்களுக்கு முன் காஸ்பியன் கடல் நடுவே ஒரு சரக்குக் கப்பல் திசை தெரியாமல் தடுமாறிக் கடலுக்குள் மூழ்கியது. அதிலிருந்து உயிர்பிழைக்க எண்ணிய கப்பலின் மாலுமியும் அதில் பயணித்த மற்றவர்களும்  கடலுக்குள் குதித்தார்கள். மூன்று நாட்கள், உணவும் நீருமின்றி அவர்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தபோது, வெகுதூரத்தில் கப்பலொன்று அவர்கள் கண்ணில்பட்டது. இவர்களது துயரத்தைத் தொலைநோக்கியில் பார்த்த அந்தக் கப்பலின் கேப்டன் உடனடியாக அவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கி, அத்தனைப்பேரையும் தங்கள் கப்பலிலேற்றினார்.

அவர்களுக்கு உணவு கொண்டுவந்து வைத்தபோது, "தண்ணீர் தண்ணீர்'' என்று கதறியபடி, தண்ணீரை வாங்கிக் குடித்த அவர்கள், பின் மெதுவாக உணவினை உண்ணத் தொடங்கினார்கள். அதிலொருவர், "எங்களைக் கடல்நீரிலிருந்து காப்பாற்றியதோடு மட்டுமில்லாமல், குடிநீரும் தந்து காப்பாற்றினீர்கள். இந்த ஒருவாய்த் தண்ணீர் இல்லையென்றால், எங்கள் உயிர் போயிருக்கும். உங்களுக்கு நன்றி. உங்களை வரவழைத்த  கடவுளுக்கு நன்றி'' என்று கண்ணீர் மல்க அவர்கள் வணங்கினார்கள்.

அதற்கு அந்தக் கேப்டன், "உங்களுக்கு ஒன்று தெரியுமா? தாகம் தாகம் என்று கதறியபடி தத்தளித்துக் கொண்டிருந்தீர்களே, அந்த இடத்திலிருந்த கடல்நீர் உண்மையில் அற்புதமான குடிநீர். நீரோட்டம் நிறைந்த அந்த இடம்தான், கடலுக்கு நடுவே நன்னீர் கிடைக்குமிடம். பல அரிய மீன்வகைகள் இந்த இடத்தை நோக்கித்தான் முட்டையிடுவதற்கு வருகின்றன. நாங்களும் நல்ல தண்ணீரைத் தேடித்தான் இங்கு வந்தோம். ஆனால், என்ன ஆச்சர்யம் பாருங்கள். நல்ல தண்ணீரில் நீங்கள் மிதந்து கொண்டிருந்தும்கூட, அது உப்புத் தண்ணீராக இருக்குமோ? என்ற பயத்தில் நீங்கள் குடிக்காமலிருந்திருக்கிறீர்கள். இறைவனின் விளையாடல்களில் இதுவும் ஒன்றுதான். நாம் இந்த உலகத்தில் எதைத்தான் தெரிந்து கொண்டோம்? நம்மைப் பற்றியா அல்லது நம்மைச் சுற்றியா?'' என்று அவர் கேட்டபோது, எல்லாருமே திகைத்துப் போனார்களாம். நம் வாழ்நாளில் நாம் அறியாதனவற்றை அறியும்போது ஏற்படுகின்ற ஆச்சர்யமிருக்கிறதே, அதற்கு ஈடேது இணையேது?

சில ஆண்டுகளுக்கு முன் ஒருமுறை இராமநாதபுரத்தில் என் நண்பர்களான நாராயணன், ஜெயசங்கர் இவர்களுடைய அழைப்பின்பேரில் இராமேஸ்வரம் அருகில் உள்ள மண்டபத்திற்குச் சென்றிருந்தேன். என்னை வரவேற்ற அவர்கள், "நீங்கள் பல மேடைகளில் பேசியிருப்பீர்கள். கோயில்களில் பேசியிருப்பீர்கள். இப்போது பேசப் போகும் இடம் எது தெரியுமா? முயல்தீவு'' என்று சொல்லிவிட்டு, இராமேஸ்வரத்திற்கும் மண்டபத்திற்கும் இடையிலே இருந்த அந்தச் சிறிய தீவுக்கு என்னை அழைத்துச் சென்றார்கள்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் குடும்பத்தோடும் குழந்தைகளோடும் அந்தத்தீவில் வந்து இறங்கியிருந்தார்கள். அது ஓர் ஆச்சரியமான குட்டித்தீவு. எங்கு நோக்கினும் மணல் வெளி. நெய்தல் நில மரங்கள் ஆர்ப்பரிக்கும் அலைகளிலிருந்து கால் புதையும் மணலில் நடந்து சென்ற எங்களை வியப்பில் ஆழ்த்தியது. அந்தத் தீவின் மறுபுறம் இருந்த அமைதியான கடல்தான்.

அங்கு மருந்துக்குக் கூட அலை இல்லை. "இது என்ன கண்மாயா? ஏரியா?'' என்று நான் கேட்டபோது, "இது கடல்தான், ஐயா'' என்று என் கையைப்பிடித்து நீருக்குள் அழைத்துச் சென்ற மீனவர் ஒருவர், பளிங்கு போன்ற அந்தத் தண்ணீரில் இடுப்பளவு ஆழத்தில் ஒரு பொருளைக் காண்பித்தார். நான் வியப்போடு அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அது என்ன தெரியுமா?

தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com