குதிரைவாலிச் சோறும், நெத்திலி மீன்குழம்பும்...!

சொல்லப்போற கதையென்ன மாத்திரையா? சாப்பாட்டுக்கு முந்தியா?பிந்தியான்னு கேட்டுக்கிட்டு அவர் சாப்பிட்டுக்கிட்டே சொல்லட்டும் நம்மளும் சாப்பிட்டுக்கிட்டே கேட்போம்'' என்று ஹெட்போன் பாட்டி சொன்னார்.
குதிரைவாலிச் சோறும், நெத்திலி மீன்குழம்பும்...!

""தீப்பொறியில்தான் முருகன் பொறந்தாரா?'' என்று மீசைக்காரர் கேட்க, ""ஆமா அதுவும் ஒரு முகத்தோட  இல்ல...  ஆறு முகத்தோட''  என்று ஹெட்போன் பாட்டியும் சொல்ல,  ""தீப்பொறியில் ஆறுமுகமா?''  என்று அதிர்ச்சியாய் கேட்டார் மீசைக்காரர்.

""ஆமாம் ஐயா, ஆமாம், எந்த ஒரு சக்தியிலும் ஆக்கமும் உண்டு, அழிவும் உண்டு. இறையாற்றலின் சக்தி தீமையை அழிப்பது, நன்மையைக் காப்பது. அல்லது தீயவர்களை அழிப்பது நல்லவர்களைக் காப்பதுதான் இதை வடமொழியில் கூட, "துஷ்டநிக்ரஹ சிஷ்ட பரிபாலனம்' என்று குறிப்பிடுவார்கள்'' என நான் விளக்கம் சொன்னேன்.

""எனக்கு ஒரு சந்தேகம் ஐயா?''  என்று மீசைக்காரர் தொடங்க, ""உங்களுக்கு இந்நேரம் வரைக்கும் சந்தேகம் வரலையே என்கிற சந்தேகம் எனக்கு இருந்தது!''  என்று ஹெட்போன் பாட்டி சொல்ல, எல்லோர் முகத்திலும் அப்படி ஒரு மகிழ்ச்சி.  ஆனால் நம் மீசைக்காரர் அதையெல்லாம் கவனித்ததுபோல் தெரியவில்லை.

""சிவபெருமானோட நெத்திக்கண்ணுல வந்த நெருப்புப் பொறி முருகப்பெருமான உருவாக்குச்சு. அது ஆக்க சக்தி. சரிதான், ஆனா எதிர்த்து கேள்வி கேட்டார்ங்கிற ஒரு காரணத்துக்காக தமிழ்ப்புலவரான நக்கீரரை எரிக்கத் தன்னோட நெத்திக்கண்ணைச் சிவபெருமான் திறந்து அவரை எரிச்சது என்னமோ எனக்கு சரியா படல!'' என்று சற்று வருத்தத்தோடு சொன்னார் மீசைக்காரர்.       

உடனே, ""இவர் கேட்கிறதும் நியாயமாத்தானே படுது. நக்கீரன்கிற மனுஷன். தன்னோட பாட்டுல குறை சொல்றாரேன்னு கோபப்பட்டதும் மனுஷனாக வந்த சிவபெருமான் தான், மனுஷனுக்கு மனுஷன் சண்டைபோடுறப்ப வாய்ச்சண்டையோட நிறுத்த வேண்டியதுதானே? அதுக்கு போய் நெத்திக்கண்ண தொறந்து எரிப்பாங்களா?''  என்று இன்னொரு பெரியவரும் மீசைக்காரருக்கு ஆதரவு தெரிவிக்க, ""ஆமாமா இவர் கேட்கிறதும் நியாயம்தானே?''  என்று இன்னும் சிலபேர் கோரசாகக் கேட்டார்கள்.

""யோவ் நிறுத்துங்கய்யா, இங்க என்ன வில்லுப்பாட்டா பாடுறாங்க'' என்று சொன்ன தமிழ்மணி, ""எனக்குக் கூட சந்தேகமாகத்தான்யா இருக்கு''  என்று மெதுவாகத் தொடங்க,  நான் தமிழையாவிடம் ""ஐயா நீங்கள்தான் இவர்கள் கேட்கிற கேள்விக்கு விடைசொல்ல வேண்டும்!''  என்று கேட்டுக்கொண்டேன். இப்படி நாங்கள் பேசிக்கொண்டிருந்த போது எதுவும் புரியாத பேத்தி பாட்டியின் காதில் மெதுவாக ஏதோ சொன்னது.

""ஓகே, ஓகே'' என்று சொன்ன பாட்டி எங்களைப் பார்த்து, ""என் பேத்தி என்ன சொல்றா தெரியுமா? "பர்ஸ்ட்; ஸ்டேஜ்;  ஈவெண்ட்ஸ்... நெக்ஸ்ட் டிஸ்கஷன்' ஓகேயா?'' என்று கேட்கிறாள் என்று தமிழ்மணியிடம் சொன்னார்.  உடனே தமிழ்மணியும், ""நிச்சயமாக நீங்கள் சொல்வது சரிதான்,  நாம் முதலில் இந்த கலைநிகழ்ச்சிகளை முடித்து விடுவோம்.  தமிழ் விவாதத்தை சாப்பாட்டுக்குப் பிறகு தொடங்குவோம்'' என்று சொல்லிவிட்டு மேடையை நோக்கி முடித்துவிடுமாறு கையசைத்தார்.

தப்போசை வாசித்துக்கொண்டிருந்த பெண்களுக்கு நடுவே ஒரு பெண் மின்னல் போல் தோன்றி ஆட, கூட வந்த ஒருவன்,  "அயிக்கு மூட்டை மீனாட்சி மூஞ்ச கழுவி நாளாச்சு  தங்கமாரி ஊதாரி புட்டுக்குவ நீ நாறி''  

என்று பாட இளைஞர்கள் மத்தியில் விசில் சத்தம் காற்றைக் கிழித்தது. அதோடு விடாமல் நடுவில் வந்து ஆடிய பெண்ணைப் பார்த்து,  ""பெண்ணே, உன் உடையழகும், நடையழகும்,  நீண்ட சடையழகும் என்னை மயக்கி விட்டது'' என்று அவன் மண்டிபோட்டு அந்த மின்னல் பெண்ணிடம் காதல்மொழி பேச,
 ""அப்படியா, என் சடையழகு உன்னை மயக்கிவிட்டதா? அப்படியென்றால் இந்தா இந்தச் சடையை நீயே வைத்துக்கொள்'' என்று சொல்லிய அந்தப் பெண், தன் நீண்ட சடையைக் கழட்டி அவன் கையில் கொடுக்க,  மண்டியிட்ட அந்தக் காதலன் மண்ணில் மயங்கி விழுந்தான். சடையைக் கழட்டிக்கொடுத்த அந்த அதிரூப சுந்தரி வேறு யாருமில்லை...  கூத்தில் வந்த நம் கோமாளிதான். தப்படித்துக் கொண்டிருந்த பெண்களே தங்களை மறந்து சிரித்துவிட்டார்கள். அந்தக் காட்சியைப் பார்த்து அதிகமாகச் சிரித்தது பேத்திதான், அதோடு ""வாட் இஸ் த மீனிங் ஆஃப் அழுக்கு மூட்டை?''  என்று தமிழ்மணியிடம் கேட்டது.

""என்ன இந்தப் பொண்ணுக்கு சுத்தத் தமிழும் புரியல, அழுக்குத் தமிழும் புரியலையே'' என்று ஒருவர் கவலையோடு கேட்டார்.

""அழுக்குத் தமிழா அப்படின்னு ஒன்னு இருக்கா?'' என்று ஒருவர் ஆச்சரியத்தோடு கேட்டார்.

 ""அந்தப் பொண்ணு கேட்ட கேள்வியும், இவர் கேள்வியிலேயே சொன்ன பதிலும் ஒன்னுதான்''  என்றேன் நான், ""அட முருகா, இப்ப இவுங்க யார் சொல்றதும் எனக்கு புரியலையே''  என்று கேள்வி கேட்டவர் புலம்ப,  நான் தொடர்ந்தேன், ""ஐயா அந்தக் கோமாளியோடு வந்த காதலன் பாடுன பாட்டு சமீபத்துல வந்த தமிழ்ப்பட பாட்டுதான்.  அதுல "அயிக்கு மூட்டை' அப்படீன்னு அந்தக் கவிஞர் எழுதியிருக்கிறது "அழுக்கு மூட்டையைத்தான்' அதாவது, டர்ட்டி பண்டல்'' அந்தப் பேத்திக்கு விளங்குமாறு சொல்லிவிட்டு சென்னைக்காரர்களில் ஒரு பகுதியினருக்கு சிறப்பு "ழ' கரம் அவ்வளவு சிறப்பாக வராது  என்றும் சொன்னேன். உடனே, தமிழையா நீங்கள் சொல்வது உண்மைதான் நான் கொஞ்ச நாள் சென்னையில் வேலை பார்த்தேன் அப்ப என் வகுப்புல ஒரு பையனை "வாழைப்பழம்' சொல்லச் சொன்னேன், அவன் உடனே "வாயப்பழம்'ன்னு சொன்னான். எத்தனை தடவ சொன்னாலும் அவனால திருப்பிச் சொல்ல முடியல, உங்க அப்பாவ போய் கூட்டிவான்னு சொன்னேன் அவரும் வந்தாரு, அவருகிட்ட நான் கேட்டேன், ஐயா உங்க பையன் "வாழைப்பழத்தை' "வாயப்பழம்ன்னு' சொல்றான்னே ஏன்?'' என்று.

"அது எங்க பயக்க வயக்கம்' (பழக்க வழக்கம்) என்று அவர் சொல்ல, நான் அதிர்ந்து போய், ""உங்க சொந்த ஊர் எது?'' என்றுக் கேட்டேன்.

அவரும் தயங்காது ""கியக்கே'' (கிழக்கு) என்றார்.

""இந்த ஊருக்கு எதுக்கு வந்தீங்க?'' என்று நானும் விடாமல் கேட்க, ""பொயக்கே(பிழைக்க)'' என்றார் அவர் என்று தமிழையா சொல்லி முடிக்க அத்தனை பேரும் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தோம்.

அப்போது ஹெட்போன் பாட்டி, ""என் பேத்திக்கி செம்மொழியான நம்மொழியும் தெரியும், ஹிந்தி, இங்கிலீஷ், பிரெஞ்ச் என்று பல மொழிகள் கற்ற பாக்கியலெட்சுமி இவள்''  என்று பெருமையாக பேத்தியைப் பாராட்டிவிட்டு, "" இவ படிக்கிறது அமெரிக்காவிலேனாலும் பண்பாட்டில் தம் தமிழ்பெண் தான்''  என்று மகிழ்ச்சியோடு சொன்னார்.

அதற்குள் மேடையில் தோன்றிய கோமாளி ஒரு வட்டத் தட்டை "ஸ்கூல்' மணி போல் கையில் பிடித்து வைத்துக்கொண்டு அதில் ஒரு கரண்டியை வைத்து "கணகண' என்று அடித்தார்.

""இப்ப நமக்கெல்லாம் சாப்பாடு சாப்பாடு சாப்பாடு, இதுதான் என் கூப்பாடு கூப்பாடு கூப்பாடு'' என்றான் எல்லோரும் மகிழ்ச்சியோடு எழுந்தோம்.

வட்ட நிலா ஆகாயத்தில் பளபளக்க, கடல் அலைகளின் ஓசை சலசலக்க நாங்கள் அனைவரும் அத்தீவின் கடற்கரை வெண்மணலில் வட்டமாய் அமர்ந்தோம்.

இப்போது தமிழ்மணி சொன்னார்,

""இன்றைய நம் உணவில் சிறுதானிய உணவுகளோடு வெஜ்ஜும் உண்டு, நான் வெஜ்ஜும் உண்டு''  என்றார். அப்போது ஹெட் போன் பாட்டி, "" இப்படி எல்லோரும் வட்டமாய் உட்கார்ந்துகொண்டால் உணவை யார் பரிமாறுவார்கள்? எல்லோருக்கும் எப்படி வந்து சேரும்?''  என்று கேட்டுக்கொண்டிருந்த போதே பேத்தி தான் உட்கார்ந்திருந்த இடத்துக்கு முன்னே கடல் மணலை சிறிய கோபுரம் போல் குவிக்கத் தொடங்கியது.

""இது எதற்கு?'' என்று பாட்டி கேட்க, ""திஸ் இஸ் மை டைனிங் டேபிள்.  என் புட் பிளேட்டை இதுல வச்சுக்குவேன்''  என்று பேத்தி சொன்னவுடன், அந்த யோசனை எல்லோருக்கும் பிடித்துப்போக, ஆளாளுக்கு தங்கள் முன்னே மண்ணை குவிக்கத் தொடங்கினார்கள். அப்போது தமிழ்மணியோடு வந்த கலைக்குழு இளைஞர்களில் ஒருவர் உணவு வகைகளை "கமுகு'(பாக்கு) இலைத்தட்டில் வைத்து ஒருவரிடம் கொடுத்து, ""அப்படியே அடுத்தவருக்கு கை மாற்றி விடுங்கள்''  என்று சொல்லிவிட்டு சைவ உணவு சாப்பிடுகிறவர்களுக்கு "கமுகு'  இலைத்தட்டும், அசைவ உணவு சாப்பிடுகிறவர்களுக்கு "வாழைநார்' தட்டும் அடையாளம் என்று சொன்னார்.

பத்து நிமிடத்திற்குள் அத்தனை பேர் கையிலும் உணவு நிரம்பிய தட்டு வந்தது. சாப்பிடத் தொடங்குமுன் தமிழையா சொன்னார்:  ""இங்கே ஓர் ஆச்சர்யத்தைப் பார்த்தீர்களா! இந்தச் சிறுபெண்(பேத்தியைக் காட்டி) மண்ணைக் குவித்த உடன் அத்தனை பேரும் குவித்தார்கள். எனக்கு உடனே ஒரு கதை ஞாபகம் வந்தது'' என்றார். ""சாப்பாட்டுக்கு முந்திக் கேட்கணுமா?  

சாப்பாட்டுக்குப் பிந்தி கேட்கணுமா?'' என்று கேட்டார் மீசைக்காரர். ""ஐயா

சொல்லப்போற கதையென்ன மாத்திரையா? சாப்பாட்டுக்கு முந்தியா?பிந்தியான்னு கேட்டுக்கிட்டு அவர் சாப்பிட்டுக்கிட்டே சொல்லட்டும் நம்மளும் சாப்பிட்டுக்கிட்டே கேட்போம்'' என்று ஹெட்போன் பாட்டி சொன்னார்.
தமிழையா கதையைத் தொடங்க அத்தனை பேரும் சாப்பிட்டுக்கொண்டே அதைக் கேட்கத் தொடங்கினார்கள்.

 ""அந்தக் காலத்துல ஒருவன் "தேசாந்திரம்' (தேசத்தைச் சுற்றிப்பார்க்க)கிளம்பினான்.

வடநாட்டிலிருந்து புறப்பட்ட அவன் ஊர் ஊராப் போயிட்டுக் கடைசியா இராமேஸ்வரத்திற்கு வந்தானாம்.

கடல்ல குளிக்க நினைச்ச அவன் கையில இருக்கிற செம்பை என்ன   செய்யிறதுன்னு நெனச்சு  கடற்கர மணல்ல வைக்கப் பயந்து சின்னதா குழி தோண்டி அதுல செம்ப வச்சு அது மேல சின்னதா கோபுரம் மாதிரி மண்ண குவிச்சுட்டு கடல்ல போய் நிம்மதியா நீராடினானாம். ஒரு மணி நேரம் கழிச்சு குளிச்சுட்டு கடற்கரைக்கு வந்தவனுக்கு மயக்கமே வந்துருச்சாம் ஏன் தெரியுமா?'', என்று அவர் கதையை பாதியில் நிறுத்திக் கேட்டார்.

கேழ்வரகு(கேப்பக்களி) களியை கருவாட்டுக் குழம்போடு கண்களில் ஆனந்தக் கண்ணீர் வர சாப்பிட்டுக்கொண்டிருந்த மீசைக்காரர்,  தமிழையா கதையைப் பாதியிலே நிறுத்தி விட்டுக் கேள்வி கேட்டவுடன் சற்று திடுக்கிட்டுப்போனார்.

இந்தக் கேள்வியை கவனித்த தமிழையா, ""இந்தக் குதிரவாலிச் சோத்துக்கும், நெத்திலிமீன்குழம்புக்கும் என்ன ஒரு பொருத்தம் பாருங்கள்.  

இப்பிடி ருசியோடு சாப்பிட நம் தமிழ்நாட்டுகாரங்களுக்குத்தான் தெரியும்'' என்று சொன்னார். அதற்குள் ஹெட்போன் பாட்டி, ""இதோ பாருங்க, ஏன் இந்த வரகரிசிச் சோறும், பருப்பு உருண்டைக் குழம்பும் என்ன ருசி என்ன ருசி'' என்று மகிழ்ச்சியோடு நாக்கைச் சப்புக்கொட்ட, ""அட உங்க சாப்பாட்டு பட்டிமன்றத்த கொஞ்ச நேரம் நிறுத்துங்கய்யா... தமிழையா கதையை முதல்ல முடிப்போம்'' என்று ஒரு பெரியவர் ஆவேசமாய்ச் சொன்னார்.

""என் கதையை யாரும் முடிக்க வேணாம்'' என்று புன்னகையோடு சொன்ன தமிழையா, ""நம்ம கதையில தன் செம்ப கரையில மண்ணக் குவிச்சு வச்சவன் குளிச்சிட்டு வந்து பார்த்து ஏன் மயங்கினான்னா?'' என்று அவர் மீண்டும் இழுக்க...
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com