நாடகமே உலகம்...!

"இப்படித்தாங்க ஏன் செய்யிறோம்? எதுக்குச் செய்யிறோம்? அப்படின்னு தெரியாமப் பலபேரு,  எல்லாரும் செய்யிறாங்களேன்னு, எத வேணாலும் செய்யிறாங்க இந்த நாட்டுல!''
நாடகமே உலகம்...!

உன்னோடு போட்டிபோடு! - 30

"என் கதையை யாரும் முடிக்க வேணாம்'' என்று புன்னகையோடு சொன்ன தமிழையா, "நம்ம கதையில தன் செம்பக் கரையில மண்ணக் குவிச்சு வச்சவன் குளிச்சிட்டு வந்து பார்த்து ஏன் மயங்கினான்னா?"' என்று அவர் மீண்டும் இழுக்க...
 "என்ன அந்தச் செம்பு தங்கச் செம்பா மாறிருச்சா?'' என்று ஒருவர் ஆவலோடு கேட்டார். 

"அட அதில்லீங்க, இவர் மண்ணக் குவிக்கிறதை ரொம்பத் தூரத்துல இருந்து பார்த்த ஒருத்தன்,  இராமேஸ்வரம் கடற்கரையில மண்ணக் குவிச்சு சாமி கும்பிடுறது ஐதீகமாக்கும்ன்னு நெனச்சு அவனும் மண்ணக் குவிச்சுருக்கான், அதப்பாத்த இன்னும் 5 பேர் மண்ணக் குவிக்க அதுக்குள்ள ஒருத்தர் அங்க வந்து,
 "இப்படித்தான் இராமாயணத்தில இராமன், இராவணனக் கொன்று ஜெயிச்சுட்டு அந்த பிரம்மகத்திய போக்குறதுக்காக இந்தக் கடற்கரையிலதான் மண்ணுல லிங்கம் செஞ்சு பூஜை செய்தாராம்'' என்று தலபுராணக் கதையைச் சொல்லத் தொடங்கினார்.

"முதல்ல தன் சொம்பவச்சு மண்ணக் குவிச்சவனுக்கு எங்க வச்சோம்ன்னு தெரியாமப் போயிருச்சாம் அவன் மெதுவாப்போயி ஒரு மண்ணுக்குவியல லேசாத் தோண்டிப் பார்த்திருக்கிறான்.

அப்ப "அடப்பாவி நான் செஞ்ச பூஜையை கலைக்கப் பார்க்கிறியா?'' என்று ஒருவன் ஓடி வந்து நம் செம்புக்காரனை "பளார்'' என்று அடிக்க இன்னும் சிலபேரும் வேகமாக ஓடி வந்து இதுவும் ஒரு நேர்த்திக்கடன்தானோ? என்று நினைத்துத் தங்கள் பங்குக்கு அவனை அடித்தார்களாம்.

இவன் செம்புக்குச் செம்பும் போயி, அம்புட்டு அடியும் வாங்கி "ராமா இதென்ன சோதனை? என்று கவலைப்பட்டபடி செம்பில்லாமல் வீடு போய் சேர்ந்தானாம்'' என்று தமிழையா சொல்லி முடிக்க எல்லோரும் உணவு புரை ஏறச் சிரித்தோம். 

"இப்படித்தாங்க ஏன் செய்யிறோம்? எதுக்குச் செய்யிறோம்? அப்படின்னு தெரியாமப் பலபேரு,  எல்லாரும் செய்யிறாங்களேன்னு, எத வேணாலும் செய்யிறாங்க இந்த நாட்டுல!'' என்று ஆதங்கப்பட்டார் மீசைக்காரர்.

அப்போது தமிழ் மணி தன் பங்குக்கு ஒரு செய்தியைச் சொல்லத் தொடங்கினார். "இங்கிலாந்துல "ஷேக்ஸ்பியர் நாடங்களுக்கு ஒரு தனிமரியாதை எப்பவுமே உண்டு. சினிமா, டி.வி, லேப்டாப், டேப்லட் என்று எத்தனை விஞ்ஞானப் புதுமைகள் வந்தாலும் அந்த நாட்டுல நாடகங்களுக்கு இன்றைக்கும் தனி மரியாதைதான். மர்ம நாவல்களை எழுதுன "அகதா கிறிஸ்டி' என்ற எழுத்தாளரோட ஒரு நாடகம், அது எழுதப்பட்ட காலத்திலிருந்து இன்றைக்கு வரைக்கும் தொடர்ந்து நடந்துக்கிட்டே இருக்காம். அந்த நாடகத்தோட பேரு தெரியுமா?''  என்று கேட்டார். எல்லோரும் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அவரையே பார்த்தோம். 
"தி மெளவுஸ் ட்ராப்'' என்று சத்தமாக பேத்தி சொல்ல "சபாஷ்'' என்றார் தமிழ்மணி. 

"பார்த்தீர்களா அந்தக் காலத்துல நமக்குத் தெரியாத விஷயத்தப் பெரியவங்கக்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்குவோம். ஆனா இன்னிக்கிப் பெரியவங்களுக்குத் தெரியாத விஷயத்தக் கூடக் குழந்தைங்கள்தான் நல்லாத் தெரிஞ்சு வச்சுருக்காங்க'' என்று பாராட்டிய தமிழ்மணி, "அந்த நாடகத்தப் பத்தி உனக்கு வேற ஏதாவது தெரியுமா?'' என்று அந்தப் பேத்தியிடம் கேட்டார். 

"எக்ஸாட்லி இந்த டிராமாவ அந்த "ரைட்டர்' எழுதுனப்ப முதல்ல 1947இல்ல ரேடியோ டிராமவத்தான் "ப்ளே'  பண்ணாங்களாம். வெஸ்டர்ன் தியேட்டர்ல 1952இல்ல இருந்து  "தட் டிராமா'  இன்னிக்கி வரைக்கும் நடந்துக்கிட்டு இருக்கு. இப்பவும்  ஹவுஸ்புல்  தான்'' என்று அந்தப் பேத்திச் சொல்லச் சொல்ல ஹெட் போன் பாட்டியின் முகத்தில் அப்படி ஒரு மின்னல் புன்னகை. 

"இப்ப இந்தச் சின்னப்பொண்ணு சொன்னத யாராவது நம்ம இராமேஸ்வரம் தமிழ்ல சொல்லுங்களேன்'' என்று ஒருவர் அப்பாவியாய்க் கேட்க, "யோவ் நம்மூரு இங்கிலீஷ்... பேக்கரியில  "கேக்'  வாங்கித் திங்கிறப்ப அது பேரு தெரிஞ்சா கேக்கிற, திங்கிற? பேசாமக் கேளு'' என்று மற்றொருவர் மடக்கினார்.

"இப்படி ஆளாளுக்கு பேசிக்கிட்டு இருந்தா சொல்ல வந்தவருக்கு விஷயம் ஞாபகம் இருக்குமா? அல்லது கேட்டுக்கிட்டு இருந்த நமக்குத்தான் ஞாபகம் இருக்குமா? வாய மூடிக்கிட்டு சாப்பிடுங்கய்யா'' என்று ஒருவர் சத்தம் போட, 
"வாய மூடிக்கிட்டு எப்படி சாப்பிடுறது? எங்க டீச்சரம்மா இப்பிடித்தான் சொல்லும் வாய மூடு, பதிலச் சொல்லு... அது மாதிரில்ல இருக்கு'' என்று இன்னொருவர் சொல்லும் போதே, தமிழ்மணி தான் சொல்ல வந்த செய்தியை விட்ட இடத்திலிருந்தே தொடங்கினார்.

"ஒரு காரியத்த ஏன் செய்யிறோம்ன்னு தெரியாமலே ரொம்ப நாளா செஞ்சுக்கிட்டு இருப்போம். அதுக்கான காரணம் தெரிஞ்சுட்டா நமக்கே சிரிப்பு வந்திடும்.

"ஷேக்ஸ்பியரோட' புகழ்பெற்ற வரலாற்று நாடகத்துல ஒரு கேரக்டர்,  அதாவது ஒரு பாத்திரம். வசனம் பேசிக்கிட்டே மேடையோட வலது பக்கத்துக்கோ, இடது பக்கத்துக்கோ போயிட்டு போயிட்டு வருவாராம். அப்படி அவர் போகிற போதும், வருகிற போதும் நடக்கிற நடைக்காகவும், அவருடைய வசன உச்சரிப்புக்காகவும் பார்வையாளர்கள் கைதட்டி கரகோஷம் செய்வார்களாம்''  என்று அவர் சொல்லிக்கொண்டு வரும்போதே,
"பழைய திருவிளையாடல் படத்துல மீனவரா வர்ற நம்ம  சிவாஜி, "சாவித்திரிய' நோக்கி ஒரு நட நடந்து வருவாரே! அத மாதிரியா?'' என்று ஒரு கிழவர் மகிழ்ச்சியோடு கேட்டார். "அதுக்குப்பிறகு இவர் படமே பாக்கல போல!..'' என்று ஒரு இளைஞன் பக்கத்துல இருந்த தன் நண்பனிடம் கிசுகிசுத்தான். 

"நீங்கள் சொல்றது சரிதான் பெரியவரே, நான் சொன்ன  "ஷேக்ஸ்பியர்'  நாடகத்தைத் தொடர்ந்து நடிச்ச நடிகர்கள் எல்லோரும் முதலில் நடித்த நடிகரைப் போலவே மேடையின் இருபுறமும் நடந்து நடந்து கைதட்டல் வாங்கத்  தொடங்கினார்களாம்.  பிறகுதான் ஒரு உண்மை கண்டுபிடிக்கப்பட்டதாம் என்று அவர் நிறுத்த, 
"அந்த உண்மை என்னான்னு மட்டும் கேட்டுறாதீங்க... உண்மையிலேயே எனக்குத் தெரியாது'' என்று ஒருவர் கவலையோடு சொன்னார். அவர் சொன்னதை புன்சிரிப்போடு ஏற்றுக்கொண்ட தமிழ்மணி, "லண்டன் பல்கலைக்கழகத்தில் "ஷேக்ஸ்பியர்' நாடகங்களை ஆராய்ச்சி செய்த மாணவி ஒருவர் பல்லாண்டு காலம் ஷேக்ஸ்பியரின் நாடகங்களை படித்தும், பார்த்தும், அதில் நடித்த நாடக நடிகர்களைப் பேட்டி கண்டும் ஒரு உண்மையைக் கண்டுபிடித்திருந்தார். அதாவது ஷேக்ஸ்பியரின் மறைவுக்குப் பின் அவரது நாடகங்களை நடிக்கத் தொடங்கிய பல குழுவினர் தங்களது  சிறந்த நடிப்பாற்றலால் அந்தந்த கதாபாத்திரங்களை கண்முண்ணே கொண்டுவந்து நிறுத்துவார்களாம். ஆரம்ப காலங்களில் கிங்லியர், ஒத்தல்லோ, மெர்ச்ண்ட் ஆஃப் வெனிஸ் போன்ற நாடகங்களில நடித்துப் புகழ்பெற்ற நடிகர் ஒருவருக்குப் புகையிலைப் போடும் வழக்கம் இருந்ததாம். நம்மூரில் வெற்றிலை போடும் பழக்கம் போல அப்படி புகையிலையை வாயில் ஒதுக்கிக்கொண்டே நடித்த அந்நடிகர் புகையிலை எச்சிலைத் துப்புவதற்காக மேடையின் இருபுறமும் போய் போய் வருவது வழக்கமாம். இந்த விஷயம் பற்றித் தெரியாத, பின் வந்த நடிகர்கள் பலரும் அந்தப் பாத்திரத்துக்கு ஏற்ப இருபுறமும் நடக்க வேண்டும் போல என்று நினைத்துக்கொண்டு நடந்து கைதட்டு வாங்கினார்கள் என்றால் எப்படி என்று பாருங்கள்?

அந்த ஆராய்ச்சி மாணவி அந்தப் புகையிலை போட்ட நாடக நடிகரின் டைரிக் குறிப்பு, அக்கால நாடக ஓவியங்கள் இவற்றையெல்லாம் தேடிப்பிடித்து அருங்காட்சியத்தில் (மியூசியம்) ஆதாரங்களைத் திரட்டி தன் ஆராய்ச்சிக் கட்டுரையில் இதனை வெளியிட்டாராம்'' என்று தமிழ்மணி புன்னகையோடு சொல்லி முடித்தார். 

"அதுனாலதான் நம்மூருல பொம்பள சிரிச்சாப்போச்சு, புகையிலை விரிச்சாப் போச்சுன்னு சும்மாவா சொல்லியிருப்பாங்க?'' என்று கேட்க,
"சும்மா சொல்லியிருக்க மாட்டாங்க, அதையும் புகையிலை போட்டுட்டுதான் சொல்லியிருப்பாங்க! நாடகமே உலகம்... நாளை நடப்பதை யாரறிவர்?'' என்று இன்னொருவர் முடித்து வைத்தார். 

"அது சரி, இம்புட்டு ஆராய்ச்சி செஞ்சு இதத்தான் கண்டுபிடிப்பாங்களா? இதென்னவோ மலையைப் பேத்து, எலியப் பிடிக்கிறது மாதிரில்ல இருக்கு? இதுனால யாருக்கு என்ன லாபம்?'' என்று மீசைக்காரர் எப்பொழுதும் போல  கேட்டார். 

"அப்படி இல்லீங்க, ஒரு செய்தியைச் சொல்வதற்கு முன்பாக அதன் உண்மைகளை, பின்புலத்தைக் காரணத்தை ஆராய்ந்து, தேர்ந்து, தெளிந்துதான் முடிவு சொல்ல வேண்டும் அதற்குப் பெயர்தான் ஆராய்ச்சி.  இப்படி இருக்கலாம், அப்படி இருக்கலாம் என்று ஊகித்து புனை கதை போல ஆராய்ச்சியில் முடிவுகளைச் சொல்லக்கூடாது.  "பத்மஸ்ரீ கமலஹாசன்'  அவர்களின்  "விருமாண்டி'  படம் பார்த்திருக்கிறீர்களா?'' என்று நான் கேட்டேன். 

"பல தடவ பார்த்திருக்கிறேன், அதுல எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லுவேன் கேளுங்க'' என்று ஒரு இளைஞர் வேகமாக ஜல்லிக்கட்டில் மாடுபிடிக்கப் போவதைப் போல எழுந்தார். 
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com