குருவிக்கு ஏற்ற இராமேஸ்வரம்...

நதிகளைப் பற்றிக் கூறும்போது, சிந்து, கங்கை, கோதாவரி, காவேரி, வையை என்று பெண்களின் பெயராலேயே குறிப்பிடுகிறோம். காரணம் என்ன தெரியுமா? அனைவரையும் தாங்கும் பூமி நம் அன்னை போன்றவள்.
குருவிக்கு ஏற்ற இராமேஸ்வரம்...

உன்னோடு போட்டிபோடு! - 24

"மேற்கில் மறையும் செந்நிறச் சூரியன் பூமிப்பெண்ணின் காதுகளில் தங்கத் தோடாகவும், கிழக்கில் உதயமாகும் முழுநிலவான பூரணச்சந்திரன் வெள்ளித் தோடாகவும் ஜொலிப்பதாக இந்த மணிமேகலையில் வருகின்ற பாடல் குறிப்பிடுகிறது'' என்று தமிழையா விளக்கம் சொன்னபோது, மீசைக்காரர் ஒரு கேள்வியைக் கேட்டார். நாங்கள் அதிர்ந்து போனோம்.
"என் வணக்கத்திற்குரிய ஐயாமார்களே, பெண்கள் என்று சொன்னாலே, அவர்கள் தோடு போடுவார்கள், தலையில் பூச்சூடுவார்கள்... அழகானவர்கள் என்றுதான் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டுமா? பூமிப்பெண், காதுகளில் தோடு, மேகம் போன்ற கூந்தல்... ஏன் அப்பெண்கள் அறிவாளிகளாக... நாடாள்பவர்களாக, அறிவியலாளர்களாகக் கூறக் கூடாதா?'' என்று ஒரு குட்டி சொற்பொழிவே நிகழ்த்திக் காட்டினார் நம் மீசைக்காரர்.
அவரின் பேச்சைப் புன்னகையோடு ஏற்றுக்கொண்ட நாங்கள், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். இந்தப் பார்வைக்கு என்ன பொருள் என்றால்... இவரின் கேள்விக்கு விடை யார் சொல்வது? என்பதுதான்.
பிறகு நானே தொடங்கினேன். "நீங்கள் சொல்வது உண்மைதான் ஐயா. நாம் நிலத்தை பூமித்தாய் என்கிறோம்.  நதிகளைப் பற்றிக் கூறும்போது, சிந்து, கங்கை, கோதாவரி, காவேரி, வையை என்று பெண்களின் பெயராலேயே குறிப்பிடுகிறோம். காரணம் என்ன தெரியுமா? அனைவரையும் தாங்கும் பூமி நம் அன்னை போன்றவள். அனைவரின் தாகத்தையும் தீர்க்கும் நதி கருணை மிக்கவள். இப்படி இயற்கையைத் தாயாக, காதலியாகக் காணும் நாம், அப்பெண்ணுக்கு அழகு பூட்டிப் பார்ப்பதற்காகவே நிலவையும், சூரியனையும் இணைத்துப் பார்க்கிறோம்'' என்று நான் சொல்லி முடித்தேன்.
"நாங்கள் மட்டும் சொல்லவில்லை ஐயா! நம் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடிய மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையவர்களும் எப்படிப் பாடுகிறார் தெரியுமா?'' என்று கேட்ட தமிழையா, ஹெட்போன் பாட்டியைப் பார்க்க, அவர் தமிழ்மணியைப் பார்க்க, இரண்டு பேரும் பேத்தியைப் பார்த்தவுடன், அந்தப் பேத்தியும் "அட்டென்ஷனில்' நின்றுகொண்டு 
"நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக்கெழில் ஒழுகும்' என்று கணீரென்று பாட நாங்களும் சேர்ந்து பாடி மகிழ்ந்தோம். ஆங்காங்கே நின்று கொண்டிருந்தவர்கள் எல்லாரும் வியப்போடு எங்களைப் பார்த்தார்கள்.
"பார்த்தீர்களா? கேட்டீர்களா? மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை அவர்களும் "நிலமடந்தை' என்று பூமியைப் பெண்ணாகத்தான் பாடியிருக்கிறார்'' என்று தமிழையா சொன்னார்.
"தமிழ்மணி ஐயா இந்தச் சிறுபெண் பெரும்பாலும் ஆங்கிலம் கலந்து பேசுவதைத்தான் நான் கேட்டுக்கொண்டிருந்தேன். ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும்போது தன் இனிய குரலால், நேர்கொண்ட பார்வையால் நம்மைப் பெருமிதம் கொள்ளச் செய்துவிட்டதை நினைத்துப் பெருமை அடைகிறேன். குழந்தாய் நீ நம் தமிழ்மொழிபோல் வாழ்க... வளர்க'' என்று வாழ்த்தினேன்.
"ஐயா கூறுவது உண்மைதான். நம் இளைய தலைமுறையினர், வாட்ஸ் அப் பார்க்கிறார்கள், முகநூலில் காலம் போக்குகிறார்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஒன்றுபட வேண்டிய நேரம் வந்தால் "ஜல்லிக்கட்டுக் காளை' போல துள்ளிக் கொண்டு வந்து போராடுகிறார்கள். வெற்றி பெறுகிறார்கள்.  வாழ்க நம் இளைய தலைமுறை'' என்று தமிழ்மணியும் வாழ்த்திவிட்டு, தன் நண்பர்களை வரவழைத்து எல்லோருக்கும் வறுத்த நிலக்கடலைப் பொட்டலங்களையும் அச்சு வெல்லத்தையும் தருமாறு கூறினார்.
அந்தச் சூடான கடலையை, நாங்கள் உண்ணத் தொடங்கியபோது, "ஏன் ஐயா நம் புராண காலத்திலேயே இந்த நிலக்கடலை இருந்ததா?'' என்று ஒருவர் சந்தேகத்தை எழுப்பினார்.
"நோ, நோ கடலை நம் நாட்டுப் பயிரே இல்லை'' என்று ஒருவர் ஆணித்தரமாக மறுத்தார்.
"அப்புறம் எப்பிடி அகத்திய மாமுனிவர் கடலை உண்டார்?ன்னு நேத்துக் கோயில்ல பேசுற ஒருத்தர் சொன்னார்?'' என்று ஒருவர் அப்பாவியாகக் கேட்டார்.
அவர் அப்படிக் கேட்டதும் அங்கிருந்த பல பேர் சிரித்துவிட்டார்கள். "ஐயா அகத்திய முனிவர் இதோ இருக்கிறதே இந்தக் கடல் இதற்குள் ஓர் அரக்கன் ஒளிந்து கொள்ள அவனைத் தேடத்தான் கடல்நீர் முழுவதையும் வற்றிப் போகுமாறு குடித்தாராம். அதனால் அவருக்குக் "கடலை உண்ட மாமுனி' என்ற பெயர் உண்டு. இந்தக் கடலை வேறு அந்தக் கடல் வேறு'' என்று நானும் சிரித்துக்கொண்டே பதில் சொன்னேன்.
"இப்படித்தான் நம்மவர்கள் எதையும் முரண்பாடாகப் புரிந்து கொள்கிறார்கள்... இன்றைய நிலையில் பழமொழிகள்கூட குழப்பமாகத்தான் புரிந்து கொள்ளப்படுகின்றன'' என்று கவலையோடு சொன்னார் தமிழையா.
"ஆமய்யா நேத்துக்கூட எங்க  வீட்டுக் கிழவி "ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டை குருவிக்கு ஏத்த ராமேஸ்வரம்'னு பழமொழி சொல்லிச்சு. அதில எனக்குப் பாதிதான் புரிஞ்சுச்சு. ஏழைக்கு இருக்கிற வசதிக்கு எள்ளுருண்டைதான் வாங்கிச் சாப்பிட முடியும். ஆனா குருவிக்கேத்த ராமேஸ்வரம்தான் எனக்குப் புரியலை. நம்ம ராமேஸ்வரத்துக்கு எதுக்குக் குருவி வரணும்?'' என்று ஒருவர் கேட்டார்.
அங்கிருந்த பலபேர் "அதானே' என்று பின்பாட்டுப் பாடினார்கள். இப்போது, தமிழையா தொண்டையைச் செருமிக்கொண்டு தொடங்கினார் "ஐயாமார்களே நீங்க கேட்டது நியாயம்தான். குருவிக்கும், இராமேஸ்வரத்திற்கும் தொடர்பில்லைதான். ஆனால் இராமனுடைய சரத்திற்கும் (அம்பிற்கும்) இராமேஸ்வரத்திற்கும் தொடர்பு உண்டல்லவா? அந்தப் பழமொழி உண்மையில் என்ன தெரியுமா?  "குறிவைத்தால் தப்பாது இராம'சரம் என்பதுதான். இந்தச் சொல்தான் மருவி, அதாவது பேச்சுவழக்கில் சுருங்கிக் குருவிக்கேத்த ராமேஸ்வரம்னு' ஆகிப்போச்சு'' என்றார் வருத்தத்தோடு.
வறுத்த கடலையும், அச்சுவெல்லமும் அத்தனை பேரையும் அசை போட வைக்க.... மெதுவாக எங்கும் இருள் படரத் தொடங்கியது.
"ஏன் ஐயா மாலை நேரத்தைப் பற்றி இவ்வளவு நேரம் பேசினீர்களே, இந்தா ராத்திரி வரப் போகுது. இந்த இருளைப் பற்றி யாரும் பாடலையா? எல்லோரும் சூரியனைச் சந்திரனை, வெளிச்சத்த, ஒளியப் பத்தித்தான் பாடியிருக்காங்களா?'' என்று மீசைக்காரர் கேட்டார்.
"இரவைப் பற்றிப் பாடாத கவிஞர்கள் யார் இருக்கிறார்கள்? நாம் சற்று முன்னர் பேசிய மணிமேகலை காப்பியத்தில் பூம்புகார் நகரத்திற்குள் இருள் படர்கின்ற அழகை சீத்தலைச்சாத்தனார் எப்படி வருணனை செய்கிறார் தெரியுமா?'' என்று தொடங்கிய நான் விரித்துச் சொல்லத் தொடங்கினேன்.
"இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இதேபோன்ற பூம்புகார் கடற்கரை நகரத்தை நம் கண்முன்னே கொண்டு வந்து காட்டுகிறார் அதன் ஆசிரியர். 
"மாலை நேரத்தில் அன்னப்பறவைகள் தங்கள் துணையோடு தென்னை மரத்தின் மட்டைகளில் ஏறி அமர, கானகத்தில் மேய்வதற்காகச் சென்ற மாடுகள் தங்கள் வீடுகளை நோக்கிவர, அதனால் பூமியில் புழுதி கிளம்பிப் புகைமண்டலம் எழுந்ததாம்...''
"பாகுபலி-2 இல் குதிரைப்படை வரும்போது புழுதி எழுமே அதைப்போல'' என்று ஹெட்போன் பாட்டி பேத்திக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
"அந்தப் பகுதி எப்படி அடங்கியது தெரியுமா? அந்த மாடுகள் தங்கள் கன்றுகளின் "அம்மா' என்ற குரலைக் கேட்டவுடன் தங்கள் மடுவிலிருந்து பாலைச் சொரிய அந்தப் பால், அங்கே எழுந்த புழுதி மண்டலத்தை அடக்கியதாம்... 
அதாவது வாசலில் எழும் புழுதியை வாளியில் தண்ணீர் தெளித்து அடக்குவதைப்போல...
அம் மாடுகளோடு வந்த கோவலர்கள் தங்கள் புல்லாங்குழலில் முல்லைப் பண்ணை வாசித்தார்களாம்.
அப்போது, "போர்க்களத்தில் தன் கணவனை இழந்த பெண்ணொருத்தி, அடைக்கலம் வேண்டித் தன் தமயன்மார், உறவினர் வீட்டில் தயக்கத்தோடு நுழைவதைப்போல, பூம்புகார் நகரத்திற்குள் இரவாகிய இருள் நுழைந்ததாம்'' என்று சொல்லி முடித்தேன்.
"குவளை மேய்ந்த குடகாட் சேதா
முலைமொழி தீம்பால் எழும்துகள் அவிப்ப
கன்று நினைகுரல் மன்றுவழிப் படர...
கோவலர் முல்லைக் குழல்மேற் கொள்ள
அமரகம் மருங்கிற் கணவனை இழந்து
தமரகம் புகூஉம் ஒருமகள் போல...''
என்று மணிமேகலையின் பாடல் வரிகளைக் கணீரென்ற குரலில் பாடிக் காட்டினார் தமிழையா.
அப்போது அத்தீவின் கரையோரம் வந்த படகில் இருந்து பத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கம்புகளோடு கரையில் குதித்து எங்களை நோக்கி ஓடிவரத் தொடங்கினார்கள்.
"அட ராமா' இதென்ன கூத்து... இவனுக இங்க எதுக்குக் கம்போடு வர்ரானுக'' என்று ஒரு பெரியவர் பதறினார்...
(தொடரும்) 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com