கடல் மீன்களும்... விண்மீன்களும்...

மேடையை அரங்கமேடைபோல அமைக்காமல் வட்ட வடிவ மேடைபோல் மாற்றினார்கள். சுற்றிலும் ஆட்கள் உட்கார்ந்து பார்ப்பதற்கான மேடையாக அது அமைந்தது.
கடல் மீன்களும்... விண்மீன்களும்...

உன்னோடு போட்டிபோடு! - 25

மணிமேகலை  காப்பியத்தில் கூறப்பட்டுள்ள இரவு நேர இயற்கை வருணனையைத் தமிழய்யா பாடிக் காட்டிக் கொண்டிருந்தபோது, அத்தீவின் கரையோரம் வந்த படகிலிருந்து பத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கம்புகளோடு கரையில் குதித்து எங்களை நோக்கி ஓடி வர,  "அட ராமா இதென்ன கூத்து இவனுக எதுக்குக் கம்போட இங்க வர்ரானுக''... என்று ஒரு பெரியவர் பதறினார்.
 அவர்களைப் பார்த்த தமிழ்மணி மகிழ்வோடு, "வாங்க, வாங்க அத்தனை பேரும் வந்தாச்சா? இன்னிக்கு இரவு பூராவும் உங்களை நம்பித்தான் இருக்கிறோம். எங்கே நம்ப இசைக் குழு?'' என்று கேட்டார்.
"அதோ அந்தப் படகில வர்றாங்க. R.S. மங்களம் கொட்டுக்கார கோஷ்டி, பட்டணம்காத்தான் சின்னராசு, உச்சிப்புளி முத்தம்மா, அப்பிடின்னு மொத்தமா அத்தனை பேரும் வர்றாக'' என்று குதூகலமாகச் சொன்னார் முன்னால் வந்த இளைஞர்.
"இதெல்லாம் என்ன?'' என்று நாங்கள் கேட்கும் முன்னே, "ஐயா, இரவு இங்கேயே தங்கறதுன்னு எப்ப முடிவு செஞ்சமோ அப்பவே, இரவு உணவோடு, செவிக்கினிய நாட்டுப்புற இசை, சிலம்பம், தீப்பந்தங்களைச் சுத்தும் வீர விளையாட்டுன்னு ஜமாய்ச்சிட வேண்டியதுதானே? அதுக்குத்தான் நம்ப கிராமியப் பண்பாட்டுக் குழுவை உடனே வரச் சொன்னேன்'' என்று அதே உற்சாகத்தோடு சொன்னார் தமிழ்மணி. சற்று நேரத்தில் அந்த இடமே சுறுசுறுப்பாக மாறியது. அங்கிருந்த மணல் மேட்டை, நாடக மேடைக்குரிய மேடைபோல் சிலர் மாற்றினார்கள்.
மேடையை அரங்கமேடைபோல அமைக்காமல் வட்ட வடிவ மேடைபோல் மாற்றினார்கள். சுற்றிலும் ஆட்கள் உட்கார்ந்து பார்ப்பதற்கான மேடையாக அது அமைந்தது.
"இந்த மேடை என்ன வட்டவடிவமாக இருக்கிறதே?'' என்று ஒருவர் கேட்க, "ஆமாம் நம் பழைய நாடக மேடை இப்படித்தான் இருந்திருக்க வேண்டும். கிரேக்க நாட்டு நாடக மேடைகள் வட்ட வடிவமான பள்ளத்தில் அமைந்திருக்க, பார்வையாளர்கள் சுற்றிலும் அமர்ந்துதான் பார்ப்பார்கள் என நான் படித்திருக்கிறேன்'' என்று ஒருவர் சொன்னார்.
 உடனே நம் தமிழையா இடைமறித்து, "ஐயா, கிரேக்க நாட்டு நாடக மேடை வட்ட வடிவில் இருந்திருக்கலாம். ஆனால் நம் நாட்டு நாடக மேடைகளைப் பற்றி சிலப்பதிகாரம் மிக அழகாக எடுத்துரைக்கின்றது எப்படி என்றால்...'' என அவர் ஆரம்பிக்கும் முன்னம்,
 "ஐயா எல்லா நல்ல விசயங்களையும் இரவில்தான் பேச வேண்டும் என்று அப்போதே முடிவெடுத்து விட்டோம். அதனால் சிறிது காலார இந்தத் தீவின் பகுதிகளுக்குச் சென்று வாருங்கள். இன்னும் சிறிது நேரத்தில் அனைவரும் ஒன்று கூடுவோம்...'' என்று தமிழ்மணி அன்பான வேண்டுகோள் விடுத்தார்.
 உடனே நாங்கள் எல்லோரும் சுந்தரராமசாமியின் நாவல் தலைப்பைப்போல "குழந்தைகள், பெண்கள், ஆண்கள்' எனத் தனித்தனியே பிரிந்து பேசிக் கொண்டே நடக்கத் தொடங்கினோம்.
 நாங்கள் இருந்த தீவு தெற்கு, வடக்காக அமைந்திருந்ததால் தீவின் கிழக்குப் பக்கமும், மேற்குப் பக்கமும் இரண்டு உலகங்களைப்போல தெரிந்தன. கிழக்கே தோன்றிய பூரணச் சந்திரன் அலைகடலுக்கு மேலே மெதுவாக உயர்ந்து கொண்டு வர வரச் செந்நிறம் மாறித் தன்பால் வெண்மைக் கதிர்களால் பூமியைக் கடலை ஒளிரச் செய்தது.
 எங்களோடு வந்த சிலர் ஏதேதோ பேசிக்கொண்டே வர, நானும் தமிழையாவும் சற்றே தயங்கி நின்று அந்த வெண்ணிலவைப் பார்த்து நிற்கவும், அவர்களும் நின்றார்கள்.
 "ஐயாமார்கள் நிலாவைப் பார்க்கிற பார்வையைப் பார்த்தால் நிலாவிற்கே போய் விடுவார்கள் போலிருக்கிறதே'' என்று ஒருவர் ஆர்வமாய்க் கேட்டார்.
 "அதெல்லாம் அமெரிக்காக்காரன்தான் போவான். நம்ம, நிலாவில பாட்டி வடை சுட்டா, ஆப்பம் சுட்டான்னு சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்'' என்று மீசைக்காரர் முணுமுணுத்தார்.
 "அப்படிச் சொல்லாதீர்கள் ஐயா. அமெரிக்கர் நிலாவிற்குச் சென்றதும், கொடிநாட்டியதும் உண்மைதான். ரஷ்யர்கள் முதன்முதலில் "ஸ்புட்னிக்' எனும் செயற்கைக் கோளில் உலகைச் சுற்றி வந்ததும் உண்மைதான். ஆனால் அந்த நிலவில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்பதை நம் நாட்டு விஞ்ஞானியான மயில்சாமி அண்ணாதுரை போன்றவர்கள்தானே சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்?'' என்று எடுத்துச் சொன்னார் கடல்சார் பொறியியல் பேராசிரியர்.
 "அதுமட்டுமில்லைங்கோ, தன் தாய் தந்தையரிடம் ஞானப்பழத்தைப் பெறுவதற்காக இந்த உலகத்தை முதன்முதலில் மயில்மீது சுற்றி வந்தவர் பேரும் மயில்சாமி (முருகன்) தானே?''
என்று ஒரு பெரியவர் கேட்க நாங்கள் சந்தோசமாக "அருமை' "அருமை' என்று வியந்தோம்.
 பின்னர் அவரவர் மாலைக் கடன்களை முடித்துக்கொண்டு வட்ட வடிவ நாடக மேடையை நோக்கி விரைந்தோம். எல்லோரும் வந்து விட்டார்களா? என்பதை உறுதி செய்து கொண்ட தமிழ்மணி "எல்லாருக்கும் இரவு நேர முழு நிலவு வணக்கம். இன்றைய நிகழ்ச்சி நிரலை இப்போது இவர் வாசிப்பார்'' என்று பேத்தியைக் காட்டியவுடன், அந்தப் பெண்ணும் தன்னுடைய ஐபேடைக் கையில் வைத்துக் கொண்டு பேசத் தொடங்கியது.
 "பர்ஸ்ட் அப் ஆல்... எல்லோருக்கும் குட் ஈவினிங் அல்லது இரவு வணக்கம். முதல்ல இந்த நிலா பத்திப் பேசுறோம். தென் நிலா பத்திப் பாடுறோம். அன்தென், நிலா வெளிச்சத்தில் ஆடுறோம். அட்லாஸ்ட் எ வெரிகுட் டின்னர்... வித் ஸீ ஃபுட்' என்று சொல்லி முடிக்கப் பலர் படபடவென்று தட்டி மகிழ்ந்தார்கள்.
 சில பெரியவர்கள் இந்தக் குழந்தை என்ன பேசியது என்று யோசித்தார்கள். அதில் ஒருவர், "டின்னர்ல பூடெல்லாம் சாப்பிட்டா ராத்திரியில நெஞ்சு எரியாதா?'' என்று கவலையாகக் கேட்டார்.
 அதற்குள் ஹெட்போன் பாட்டி உள்ளே புகுந்து, தன் பேத்தி சொன்னதைத் தெளிவுபடுத்திவிட்டு,
 "ஐயா, அவ சொன்னது "ஸீ ஃபுட்' அதாவது கடல் உணவு. வெள்ளப்பூண்டு இல்லை. கவலைப்படாதீர்கள் சரி, இப்போ, நிலாவைப் பத்திப் பேசத் தொடங்குவோம்'' என்று தொடங்கி வைத்தார்.
 "கொஞ்ச நேரத்திற்கு முந்தி இந்தப் பக்கமா நாம எல்லோரும்  நடந்து போனப்ப நிலாவைப் பார்த்து அப்படியே நின்னு யோசிச்சீங்களே, அப்பத் தோணுன விசயத்தை இப்பச் சொல்லுங்களேன்...!'' என்று மீசைக்காரர் எடுத்துக் கொடுத்தார்.
 உடனே நான் தொடங்கினேன். "இந்த நிலாவைப் பாடாத கவிஞர்கள் யார் இருக்கிறார்கள்? அதிலும் சங்க இலக்கியத்தில் பாரிமகளிர் பாடிய நிலவுப் பாட்டிற்கு ஈடு இணை ஏதும் உண்டா?'' என நான் கேட்டேன்.
 அதற்குத் தமிழையா, "ஐயா அந்தப் பாடலை நாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம். மகாபாரதக் கதையில் நிலவினை வில்லிபுத்தூர் ஆழ்வார் பாடியிருக்கும் செய்தியைச் சொல்லுங்களேன்'' என்று ஆர்வமாய் எடுத்துக் கொடுத்தார்.
 "உண்மைதான் ஐயா, காப்பியம் பாடுகின்ற புலவர்கள், நாட்டுப் படலம், நகரப் படலம் என்று எல்லாவற்றையும் வர்ணிப்பார்கள்.
"பெருங்காப்பிய நிலை பேசுங்காலை
வாழ்த்து, வணக்கம் வருபொருள் உரைத்தல்'
  .... எனச் சொல்லி
இருசுடர்த் தோற்றத்தையும் விவரிப்பது... வழக்கம். அதன்படி, உத்யோக பருவத்தில் கண்ணபெருமான் பாண்டவர் ஐவருக்காகத் தூது செல்லும்போது, அஸ்தினாபுர நகரத்திற்குச் சற்று முன்னே உள்ள கானகத்தில் தங்கியிருந்தாராம். அப்போது ஆகாயத்தில் நிலவு தோன்றியதாம்'' என்று நான் சொல்லிவிட்டுத் தமிழையாவைப் பார்த்தேன்.
அவரும் மெல்லிய புன்னகையோடு தம் இனிய குரலில் பாடலைத் தொடங்கினார்...
"கானெலாம் மலர்ந்த முல்லை ககன மீது எழுந்ததென்ன
வானெலாம் வயங்குதாரை நிரைநிரை மலர்ந்து தோன்ற
வேனிலா விழவின்வைத்த வெள்ளி வெண் கும்பமென்ன
தூநிலா மதியம் வந்து குணதிசை தோன்றிற்று அம்மா'
இப்பாடலை அவர் இசையோடு பாடியபொழுது அந்தக் கடற்கரை இரவு இசை அலைகளால் பொங்கி வழிந்தது.  அந்தப் பாடல் பலரின் செவிகளில் இன்பத் தேனாகப் பாய்ந்தாலும் அந்தப் பாடலுக்கான முழுப்பொருளும் தெரியாது பலர் யோசிக்க, நானும் சட்டென்று அந்தப் பாடலுக்கான விளக்கத்தைத் தொடங்கினேன்.
 "இரவு நேரத்தில் ஆகாயமெங்கும் நட்சத்திரங்கள் மின்மினுக்கின்றன. அவை பகல் நேரத்தில் இக்கானகத்தில் பூத்த முல்லைப் பூக்களைப்போல ஆகாயத்தில் காட்சியளிக்கின்றன...'' என்று நான் சொல்லிக் கொண்டுவரும் போது,
 "கடல் மேலே மீன் பிடிக்க நான் வலையோடு வந்தபோது...
  படைபடையாய் விண்மீனும் கண்விழித்துப் பார்ப்பதென்ன'... என்று கடல்பகுதியில் மீன்பிடிப் படகிலிருந்து ஒரு பாட்டு காற்றைக் கிழித்துக்கொண்டு எங்கள் காதுகளில் விழ, நான் பேச்சை சற்றே நிறுத்தி அந்த திசையை நோக்கிப் பார்த்தேன்.
என்ன அழகான காட்சி அங்கே!
(தொடரும்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com